என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • கடும் சூறாவளி காற்று வீசுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தெற்கு பிரேசிலில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை நேற்று வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் கீழே விழுந்து நொறுங்கியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    குவைபா நகரில் பரபரப்பான சாலையில் வாகனங்கள் தொடர்ந்து பயணிக்கும் நேரத்தில் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    முன்னதாக கடும் சூறாவளி காற்று வீசுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலையை அதே இடத்தில் நிறுவவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 



    • ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
    • பிரிஸ்பேன் டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட நாதன் லயனும் அணியில் இடம்பிடித்துள்ளார்

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த், பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.

    கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் காணும் இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சுக்கு பதிலாக ஜோஷ் டாங்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் முதல் இரு டெஸ்டை தவற விட்ட ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க் மிரட்டும் நிலையில், கம்மின்சின் வருகை பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.

    இதே போல் பிரிஸ்பேன் டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனும் அணியில் இடம்பிடித்துள்ளார்

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:

    டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டு, மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (WK), ஜோஷ் இங்லிஸ், பாட் கம்மின்ஸ்(C), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்,

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • நடுக்கத்தில் தான் அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.
    • இன்றைக்கு தி.மு.க. சுவாசம் இல்லாத கட்சியாக உள்ளது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், அ.தி.மு.க நிர்வாகிகள் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், தங்கள் பெயரிலும் விருப்ப மனுவை அளிக்க வைகை எக்ஸ்பிரசில் புறப்பட்டு சென்றனர்.

    முன்னதாக ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 54 ஆண்டுகளில் தேர்தல் களத்தில் முதன்மை இயக்கமாக, தேர்தலில் முதல் துவக்கமாக எம்.ஜி.ஆர். காலம் தொட்டு, அம்மா காலம் வரை அ.தி.மு.க. இருந்து வந்தது. இன்றைக்கு இந்த இருபெரும் தலைவர்களின் மறுவடிவமாக உள்ள எடப்பாடி பழனிசாமி காலத்தில் தற்போது தேர்தல் பணியில் துள்ளி குதித்து வருகிறது.

    தேர்தல் பிரச்சாரத்தை முதலில் தொடங்கி 175 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். 12,000 கிலோமீட்டர் பச்சை பேருந்து மூலம் பச்சை தமிழராய் ஒரு கோடி மக்களை சந்தித்தார். இந்த சரித்திர சாதனையை யாரும் முறியடிக்க முடியாது.

    அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வழங்கும் முதல் நாளில் 1,237 மனுக்கள் பெறப்பட்டு அதில் 234 தொகுதிகளில் தனி தொகுதியை தவிர 349 தொண்டர்கள் தங்கள் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை அளித்தனர்.

    தற்பொழுது அம்மா பேரவையின் சார்பில் மதுரை மாவட்டத்தில் தனி தொகுதி தவிர உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட 9 தொகுதிகளில் மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நிற்க வேண்டும் என்று விருப்ப மனு அளிக்க உள்ளோம். மதுரையில் எந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நின்றாலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்.

    தற்போது நடைபெற்று வரும் தி.மு.க.வின் சர்வாதிகார, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வெற்றி மகுடம் சூட்ட தயாராகிவிட்டனர்.

    குமரி முதல் இமயம் வரை வெற்றி வரலாறு படைக்கும் வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ளது. குறிப்பாக இந்த கூட்டணி குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயக ஆட்சியை மலரச் செய்யும். அதனால் தான் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை கண்டு ஸ்டாலினும், உதயநிதியும் இன்றைக்கு நடுங்கி போய் உள்ளார்கள்.

    நடுக்கத்தில் தான் அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் இன்றைக்கு தி.மு.க. சுவாசம் இல்லாத கட்சியாக உள்ளது. செயற்கையாக சுவாசத்தை கொடுக்க விளம்பரங்களை செய்து வருகிறார்கள்.

    தி.மு.க.வின் தோல்வியை பற்றி உளவுத்துறை மூலம் அறிந்த ஸ்டாலின் தற்போது மகளிர் உரிமைத் தொகை கூடுதலாக வழங்கப்படும் என்று கூறுகிறார். இந்த ஆட்சி முடிய 3 மாதம் உள்ளது. இப்போது அறிவித்து என்ன பயன்? இதை எல்லாம் மக்கள் நம்பப் போவதில்லை தி.மு.க. வுக்கு மக்கள் ரெட்கார்டு போட்டு விடுவார்கள்.

    எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள், ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இணைவதை உறுதி செய்யும் வகையில் தான் பொதுக்குழு தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிச்சயமாக அது நிறைவேறும், தை பிறந்தால் வழி பிறக்கும்.

    யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது. தி.மு.க. வை எதிர்த்து அரசியல் செய்பவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து மக்கள் அவர்களை வரவேற்க தயாராக உள்ளார்கள்.

    அ.தி.மு.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். 54 வருடங்களாக எங்களுக்கு எதிரி தி.மு.க. தான். சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்றுதான் பார்ப்பார்கள். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார். 

    • அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியில் 13 வீரர்களை எடுக்க வேண்டும்
    • குறைந்த பணம் வைத்துள்ள மும்மை ரூ.2.75 கோடியில் 5 வீரர்களை எடுக்க வேண்டும்

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் இன்று (16-ந் தேதி) அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பித்தன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

    ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியில் 13 வீரர்களை எடுக்க வேண்டிய நிலையில், குறைந்த பணம் வைத்துள்ள மும்மை ரூ.2.75 கோடியில் 5 வீரர்களை எடுக்க வேண்டும்

    சென்னை அணி ரூ.43 கோடியில் 9 வீரர்களையும் ஐதராபாத் அணி ரூ.25 கோடியில் 10 வீரர்களையும் லக்னோ அணி ரூ.22 கோடியில் 6 வீரர்களையும் டெல்லி அணி ரூ.21 கோடியில் 8 வீரர்களையும் பெங்களூரு அணி ரூ.16 கோடியில் 8 வீரர்களையும் ராஜஸ்தான் அணி ரூ.16 கோடியில் 9 வீரர்களையும் குஜராத் அணி ரூ.12 கோடியில் 5 வீரர்களையும் பஞ்சாப் அணி ரூ.11 கோடியில் 4 வீரர்களையும் எடுக்கவேண்டும்.

    இந்த மினி ஏலத்தில் கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறக்க முயற்சித்தார்.
    • விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

    உலகம் முழுவதும் நடக்கும் விபத்துகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் சாலை விபத்துகள் மறுபுறம், ரெயில் விபத்துக்கள் மற்றும் விமான விபத்துகளும் நடக்கின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.

    அந்த வகையில், தற்போது மெக்சிகோவில் நிகழ்ந்த தனியார் விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இரண்டு ஊழியர்கள் மற்றும் எட்டு பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறக்க முயற்சித்தார். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தானது டோலுகா விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், மெக்சிகோ நகரத்தில் இருந்து மேற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள சான் மேடியோ அட்டென்கோவில் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏழு உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக மெக்சிகோ மாநில சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

    இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 130 பேர் வெளியேற்றப்பட்டதாக மேயர் அனா முனிஸ் தெரிவித்தார். விபத்துக்கான காரணங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



    • டர்போ-பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
    • மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதுவரவு மாடலான சியரா விலை குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளது. ஏற்கனவே இந்த காரின் சில வேரியண்ட்களின் விலை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரு வேரியண்ட்களின் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சியரா அக்கம்ப்ளிஷ்டு (Accomplished) மற்றும் அக்கம்ப்ளிஷ்டு+ (Accomplished +) வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலை முறையே ரூ. 17.99 லட்சம் மற்றும் ரூ. 20.29 லட்சம் ஆகும்.

    அக்கம்ப்ளிஷ்டு மற்றும் அக்கம்ப்ளிஷ்டு + ஆகிய இரண்டு வகைகளும் டாடாவின் டைரக்ட் இன்ஜெக்டெட் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் வழங்கப்படுகின்றன. டீசல் என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அதே நேரத்தில் டர்போ-பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

    கூடுதலாக, அக்கம்ப்ளிஷ்டு வேரியண்ட் வாங்குபவர்களுக்கு 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வடிவத்தில் மூன்றாவது பவர்டிரெயின் ஆப்ஷனும் வழங்குகிறது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

     

    இந்த டாப் வேரியண்ட்கள், குறைந்த வேரியண்ட்களில் இருந்து தனித்து நிற்கும் பிரீமியம் வசதி மற்றும் சவுகரிய அம்சங்களை உள்ளடக்கிய விரிவான உபகரணப் பட்டியலில் இருந்தும் பயன் அடைகின்றன. உபகரணங்களைப் பொறுத்தவரை, லெவல் 2 ADAS, 12-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டம், மெமரி செயல்பாட்டுடன் கூடிய பவர்டு டிரைவர் இருக்கை, பவர்டு டெயில்கேட், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் iRA கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இதில் அடங்கும்.

    இந்திய சந்தையில் புதிய டாடா சியரா மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி விக்டோரிஸ், ஸ்கோடா குஷாக், டொயோட்டா ஹைரைடர் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுக்கு போட்டியாக அமைகிறது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • மதியத்துக்கு பின்னர் தங்கத்தின் விலை 2-வது தடவையாக மீண்டும் உயர்ந்தது.
    • வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

    தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவின் மீது தொடுத்த வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

    இதேபோல அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை கணிசமாக குறைத்துவிட்டு, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை திசை திருப்ப தொடங்கி உள்ளனர்.

    பெரும்பாலானோர் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு மதிப்புமிக்க மஞ்சள் உலோகமான தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை உலக அளவில் கணிசமாக அதிகரிக்க செய்துள்ளது.

    தேவை அதிகமாக இருப்பதால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் சென்றது.

    இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ரூ.96 ஆயிரம் வரை சென்றது. அதன்பிறகு விலை சற்று தணிய தொடங்கியது. அதாவது, 'முழம் ஏறி சாண்' சறுக்கியது.

    கடந்த சில மாதங்களாக சீரான இடைவெளியில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தங்கம் விலை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலையில் நிலையற்றத்தன்மை காணப்பட்டது.

    தொடர்ந்து உச்சத்துக்கு சென்று கொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாத கனியாகவே மாறிவிட்டது. குறுகிய காலத்தில் தங்களது சேமிப்பை அதிகரிக்கும் எண்ணத்தில் சிலர் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

    கடந்த 9-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்துக்கும், சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. அதன்பிறகும் படிப்படியாக தங்கம் விலை ஏறுமுகம் கண்டு வருகிறது.

    அதன்பின்னர் கடந்த 13-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது.

    இதற்கிடையே நேற்று காலை ரூ.90 அதிகரித்து கிராம் ரூ.12 ஆயிரத்து 460-க்கும், ரூ.720 அதிகரித்து சவரன் ரூ.99 ஆயிரத்து 680-க்கும் விற்கப்பட்டது.

    நல்ல வேளையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டவில்லை என்று நினைத்தவர்களுக்கு சில மணி நேரங்களிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மதியத்துக்கு பின்னர் தங்கத்தின் விலை 2-வது தடவையாக மீண்டும் உயர்ந்தது.

    அதாவது மேலும் ரூ.55 அதிகரித்து கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், 440 அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.145-ம், சவரனுக்கு ரூ.1,160-ம் உயர்ந்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது இல்லத்தரசிகள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிய நிலையில் இன்று ஏறிய வேகத்தில் குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,350-க்கும் சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.98,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 211 ரூபாய்க்கும் கிலோவுக்கு நான்காயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 2 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.100,120

    14-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    13-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    12-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    11-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-12-2025- ஒரு கிராம் ரூ.215

    14-12-2025- ஒரு கிராம் ரூ.210

    13-12-2025- ஒரு கிராம் ரூ.210

    12-12-2025- ஒரு கிராம் ரூ.216

    11-12-2025- ஒரு கிராம் ரூ.209

    • ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.
    • தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார்.

    வேலூர்:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக வேலூர் நகரம் மற்றும் குறிப்பாக தங்கக்கோவில் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் யாரேனும் தங்கி உள்ளார்களா? சந்தேகப்படும் நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப்படை போலீசாரும் வேலூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான குழுவினர் கோவில் சுற்று வட்டாரப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

    ஸ்ரீபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

    ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. ஜனாதிபதி நாளை காலை 11.05 மணிக்கு திருப்பதியில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் வர உள்ளதால் அவருடன் கூடுதலாக 2 ஹெலிகாப்டர்களும் பாதுகாப்பு கருதி வர உள்ளது. அந்த 2 ஹெலிகாப்டர்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் பயணம் செய்ய உள்ளனர்.

    தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மதியம் 12.30 மணி அளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    அவர் வருகை தரும் நேரத்தில் ஸ்ரீபுரம் -ஊசூர் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட உள்ளது.

    அவரது வருகையை ஒட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு நாளை காலை வருகை தர உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஹெலிகாப்டர் சோதனை ஓட்டமும், பாதுகாப்பு ஒத்திகையும் நடந்தது.

    • ஆல்-ரவுண்டர் வில் ஜாக்சை சுழலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்த அணி நிர்வாகம் கருதுகிறது.
    • காயத்தால் முதல் இரு டெஸ்டை தவற விட்ட ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்புகிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த், பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.

    கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் காணும் இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சுக்கு பதிலாக ஜோஷ் டாங்கு சேர்க்கப்பட்டுள்ளார். ஆடுகளம் வேகம் குறைந்த பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தாலும் பிரதான சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீருக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஆல்-ரவுண்டர் வில் ஜாக்சை சுழலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்த அணி நிர்வாகம் கருதுகிறது.

    இங்கிலாந்தை பொறுத்தவரை பேட்டிங் சீரற்றதாக இருக்கிறது. நடப்பு தொடரில் அந்த அணியில் ஜோ ரூட் மட்டும் சதம் அடித்துள்ளார். வீரர்கள் இன்னும் அதிகமாக போராட வேண்டும் என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    காயத்தால் முதல் இரு டெஸ்டை தவற விட்ட ஆஸ்திரேலிய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்புகிறார். ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க் மிரட்டும் நிலையில், கம்மின்சின் வருகை பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதே போல் பிரிஸ்பேன் டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனும் கைகோர்க்கிறார். இதனால் மைக்கேல் நேசர், பிரன்டன் டாக்கெட், ஸ்காட் போலன்ட் ஆகியோரில் இருவரது இடம் காலியாகி விடும்.

    மற்றபடி பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டு, ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி வலு சேர்க்கிறார்கள். அதிலும் டிராவிஸ் ஹெட் அடிலெய்டில் கடைசியாக ஆடிய 3 டெஸ்டிலும் சதம் விளாசி இருப்பது கவனிக்கத்தக்கது.

    அடிலெய்டு மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ராசியானது. கடைசியாக இங்கு விளையாடிய 14 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு நடந்த இரண்டு டெஸ்டிலும் எதிரணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது. இந்த டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் ஆஸ்திரேலியா வரிந்து கட்டும். அவர்களின் வீறுநடைக்கு இங்கிலாந்து முட்டுக்கட்டை போடுமா? அல்லது மறுபடியும் சரண் அடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
    • திருமலை மற்றும் திருப்பதிக்கான தங்குமிட ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

    திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட் 18-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் இந்தச் சேவைகளுக்கான மின்னணு குலுக்கல் முறைக்கு (இ-டிப்) 20-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

    ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அதே சமயம் திருமலை மற்றும் திருப்பதிக்கான தங்குமிட ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் அர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
    • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.

    16-ந் தேதி (செவ்வாய்)

    * கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம்.

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    17-ந் தேதி (புதன்)

    * பிரதோஷம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந் தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    * பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு.

    19-ந் தேதி (வெள்ளி)

    * அமாவாசை.

    * அனுமன் ஜெயந்தி.

    * திருவரங்கம் நம்பெருமாள் திருநெடுந்தாண்டவம்.

    * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றியருளல்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    20-ந் தேதி (சனி)

    * விஷ்ணு ஆலயங்களில் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந் தேதி (ஞாயிறு)

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.

    * திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் பகற்பத்து உற்சவம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    22-ந் தேதி (திங்கள்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காளிங்க நர்த்தன காட்சி.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    ×