என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
- பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை.
சென்னை :
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவது ஒழுக்கமே என்று சொன்னால் அது மிகையாகாது. 'ஒழுக்கம் விழுப்பம் தரும்', 'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை' போன்ற சான்றோர் வாக்குகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. உலகப் பொதுமறையாம் திருக்குறளில் ஒழுக்கமுடைமை, அறன் வலியுறுத்தல், சான்றாண்மை போன்ற அதிகாரங்களில் ஒழுக்கத்தை வலியுறுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். ஆனால், ஒழுக்கம் என்றால் என்ன விலை? என்று கேட்கக்கூடிய அவல நிலை தமிழ்நாட்டில் தற்போது நிலவுகிறது.
நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 17-வயது சிறுமி எழு கல்லூரி மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள நிலையில், நேற்று திருப்பூர் மாவட்டத்தில், சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு செல்வதற்காக கணவன் மற்றும் குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தவர்களை, பனியன் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கை வார்த்தைக்கூறி அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று கத்திமுனையில் அந்தப் பெண்ணை மிரட்டி, அவரது கணவர் மற்றும் குழந்தை கண் முன்னே மூன்று வட மாநில வாலிபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும், பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆசிரியர்களே மாணவியரை வன்கொடுமை செய்யும் கொடுமைகள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்குக் காரணமாக விளங்குவது ஒழுக்கமின்மை. இந்த ஒழுக்கமின்மைக்கு முக்கியக் காரணம் அமோக மது விற்பனையும், அளவுக்கு அதிகமான போதைப் பொருட்கள் நடமாட்டமும் தான். மது விற்பனை படிப்படியாக குறைக்கப்படும் என்று சொல்லிக் கொண்டு மதுவை ஊக்குவிக்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. மது விலக்குத் துறையை மது ஊக்குவிப்புத் துறையாக தி.மு.க. அரசு மாற்றிவிட்டது. இது தவிர, போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிறமையற்ற அரசாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. யார் எப்போது தாக்கப்படுவார்கள் என்று தெரியாத அலங்கோல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. மக்களுக்கான பாதுகாப்பினை, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. பெண் காவலர்களே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் கொடூரம் தமிழ்நாட்டில் இருக்கிறது.
சட்டம் -ஒழுங்கை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர், இனியாவது பாராட்டு மழையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, கள யதார்த்தம் என்ன என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டு, தமிழ்நாட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை வேரோடு அழிக்கவும், மது விலக்கை நடைமுறைப்படுத்தவும், பாலியல் வன்கொடுமையாளர்கள்மீது பாரபட்சமின்றி உறுதியான நடவடிக்கை எடுக்கவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
- மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து முறைகேடு செய்ததாக வழக்கு நடந்து வருகிறது.
- கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.
இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
எனவே இந்த மூன்று வழக்குகளையும், ஒரே அமர்வில் விசாரிக்க நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நியூயார்க் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணையின்போது, அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த உதவுமாறு இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சக அதிகாரிகளின் உதவியை கோரியுள்ளதாக அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.
மேலும் கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மீதான விசாரணையை தொடர தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக நியூயார்க் நீதிமன்றத்தில் பங்கு பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது.
- ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- வணிகர் சங்க நிர்வாகிகள், மூன்றாம் பாலினத்தவர் அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.
சென்னை:
2025-26-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு நிதி நிலை தயாரிப்பு தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்களுடன் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து இன்று சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் அந்த துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோருடன் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள் கீதா ஜீவன், மூர்த்தி, பி.கே.சேகர்பாபு, நாசர், மெய்யநாதன், மதிவேந்தன், ராஜேந்திரன் உள்ளிட்டோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், வணிகர் சங்க நிர்வாகிகள், மூன்றாம் பாலினத்தவர் அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.
- வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
சென்னை:
தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை திணிக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக அயப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் ஏற்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கோலமிட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதில், 'இந்தியை திணிக்காதே! தமிழர்களை வஞ்சிக்காதே! மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே!' உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை எழுதி மக்கள் கோலமிட்டனர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், மும்மொழிக்கொள்கையை திணிக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் முன் கோலமிட்ட வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை
ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
- காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- 2-வது முறையாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர் அந்தோணி ஆரோன் என்பவருக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சுமார் 20 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக ஜான் போஸ் மற்றும் சுதன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளில் இருந்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), அந்தோணி ஆரோன் உள்பட 14 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
பின்னர் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 14 பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் அந்த மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 14 பேரில் 12 மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் படகோட்டியான ஜான் போஸ் என்பவருக்கு அதிகபட்சமாக இலங்கை மதிப்பில் ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல் இரண்டாவது முறையாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர் அந்தோணி ஆரோன் என்பவருக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் கைதாகி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
வருகிற 28-ந்தேதி முதல் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் கைதானவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளில் 3.16 சதவிகித பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாய பாடமாக இருக்கிறது.
- இருமொழி கொள்கையின்படி தாய் மொழி தமிழோடு, ஆங்கிலம் என இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளில் 3.16 சதவிகித பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாய பாடமாக இருக்கிறது. மீதியுள்ள அனைத்து பள்ளிகளிலும் 1968-ல் தி.மு.க. ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இருமொழி கொள்கையின்படி தாய் மொழி தமிழோடு, ஆங்கிலம் என இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் படிக்கிற 43 லட்சம் மாணவர்கள் மீது இந்த இருமொழிக்கு விரோதமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதை எதிர்த்து தான் தமிழ்நாட்டில் இன்றைக்கு கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது.
தமிழகத்தின் மீது மும்மொழி திட்டத்தின்படி இந்தியை திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்யுமேயானால் ஏற்கனவே படுகுழியில் வீழ்ந்துவிட்ட பா.ஜ.க., அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டு அதனுடைய எதிர்காலமே சூனியமாகி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சீமானுக்கு எதிரான வழக்கை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.
- கேவலமான எண்ணம் படைத்த மனிதராய் இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜரானார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சீமானுக்கு எதிரான வழக்கை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.
நான் என் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தரம் தாழ்ந்த தகவல்களை சீமான் தரப்பு பரப்பி வருகிறது.
கேவலமான எண்ணம் படைத்த மனிதராய் இருக்கிறார். தரம் தாழ்ந்த தகவல்களை பரப்புவதை தவிர மைக் புலிகேசியால் வேறு என்ன செய்துவிட முடியும்? என்று அவர் கூறினார்.
- மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
- மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மிஸ்டர் எக்ஸ் (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
கச்சிதமான உடல் அமைப்பில் இருக்கும் ஆர்யா இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், மிஸ்டர் எக்ஸ் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது.
- தெலுங்கானா காங்கிரஸ் அரசு உத்தரவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.
ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்களுக்குப் பணி நேரத்தைக் குறைத்து ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது.
எனவே மார்ச் 2 முதல் மார்ச் 31 வரை புனித ரம்ஜான் மாதத்தில் தேவையான பிரார்த்தனைகளைச் செய்ய, மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த, அவுட்-சோர்சிங், வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் 1 மணி நேரம் முன்னதாக மாலை 4.00 மணிக்கு தங்கள் அலுவலகங்கள், பள்ளிகளை விட்டு வெளியேறி வீடு திரும்பலாம் என்று ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு இதே உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் தற்போது அதைப் பின்பற்றி ஆந்திரப் பிரதேச அரசும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் அரசு உத்தரவுக்கு அம்மாநில பாஜக கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகாஷ் 106 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- விதர்பா அணி தரப்பில் பார்த் ரேகாடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நாக்பூர்:
ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மும்பை- விதர்பா அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் நாக்பூரில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. யாஷ் ரதோட் 54 ரன்களிலும், அக்ஷய் வாத்கர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஆகாஷ் ஆனந்த் நிலைத்து விளையாட மறுமுனையில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இழந்த வண்ணம் இருந்தது.
முன்னணி வீரர்களான ரகானே 18 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே இருவரும் டக் அவுட் ஆனதும் மும்பை அணிக்கு பின்னடைவை கொடுத்தது. 2-வது நாள் ஆட்ட முடிவில் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுடன் தடுமாறியது. ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும், தனுஷ் கோட்டியான் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து இன்று 3-நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகாஷ் ஆனந்த் சதம் விளாசி அசத்தினார். அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 92 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 113 ரன்கள் விதர்பா அணி முன்னிலையி உள்ளது.
- கட்சியின் விசுவாசமிக்க தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர்.
- ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை.
கோவை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் எதையும் எதிர்பார்க்காமல் எம்ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைப்பவர். கட்சிக்காக பல நிலைகளில் இருந்து நானும், அவரும் இணைந்து பணியாற்றி உள்ளோம். அந்த வகையில் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்கு உழைக்க கூடிய ஒரு உன்னத தொண்டராக தான் அவர் இருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போன்றவர்களுக்கு எல்லாம் எந்த நேரத்திலும் நான் பதில் சொல்ல தேவையில்லை. அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதனை மக்கள் கவனித்து கொள்வார்கள்.
கட்சி இணைய வேண்டும் என்பது அனைவருடைய கருத்தாகவும் இருக்கிறது. அ.தி.மு.க.வில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் விசுவாசமிக்க தொண்டர்கள், கட்சி இணைய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். கட்சி மீண்டும் இணைந்தால் தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நாட்டுக்கு செய்த சேவையை, நலப்பணிகளை எண்ணி பார்க்கிறார்கள். மக்களும் அ.தி.மு.க. இணைய வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வாக்குகளை பெற தவறி விட்டார்கள். 7 தொகுதிகளில் டெபாசிட் தொகை இழந்தனர். 13 தொகுதிகளில் 3-ம் இடத்தில் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமையை மீட்கின்ற குரலாக இருக்கின்ற நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று விசுவாசமிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் மக்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக தான் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடும் சூழல் ஏற்பட்டது. அந்த தொகுதியில் என்னை யாரெல்லாம், எப்படியெல்லாம் தோற்கடிப்பதற்கு சதி செய்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு 3 லட்சத்துக்கும் மேல் வாக்குகளை மக்கள் எனக்கு அளித்தனர். பதிவான வாக்குகளில் 33 சதவீத வாக்குகள் எனக்கு கிடைத்தது.
இதில் இருந்து மக்களும், தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து இருக்கிறோம். அவர்கள் இன்றைக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வுடன் இருக்கிறார்கள். பிரிந்து இருக்கின்ற அ.தி.மு.க. சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது தான் உண்மையான கருத்து ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி என கூறிய நிலையில் தற்போது பேரிடர் நிவாரண நிதியும் அறிவிக்கப்படவில்லை.
வெள்ள நிவாரண நிதியாக 5 மாநிலங்களுக்கு கூடுதல் நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்துள்ளது. தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி என கூறிய நிலையில் தற்போது பேரிடர் நிவாரண நிதியும் அறிவிக்கப்படவில்லை.
தேசிய நிவாரண நிதியிலிருந்து தொகை விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி அரசு ஒரு அரணாக உள்ளதாக பதிவிட்டு பேரிடர் நிதி அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.






