என் மலர்
தலைப்புச்செய்திகள்
- லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
- பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் மை ஷோ செயலியில் புக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணலில் பிருத்விராஜ் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " எம்புரான் திரைப்பட ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் பெரும்பாலான பணத்தை படத்தின் உருவாகத்திற்கு மட்டுமே செலவு செய்துள்ளோம். இப்படத்திற்கு மோகன்லால் சம்பளமாக ஒரு ரூபாய் கூட பெறவில்லை. மற்ற திரைப்படங்களைப் போல் 80 சதவீத பணத்தை படக்குழுவின் சம்பளத்திற்கும் 20 சதவீத பணத்தை ப்ரொடக்ஷன் செலவுகளில் ஈடுப்படும் திரைப்படம் இது இல்லை.
அதேப்போல் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுக்கோள் படத்தின் இறுதி வரை பாருங்கள். படத்தின் எண்ட் கார்ட் டைட்டிலுக்கு பிறகு பாகம் 3-க்கான ஒரு முன்னோட்டத்தை வைத்துள்ளோம்." என கூறியுள்ளார்
- திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான் கோவில் அமைந்துள்ளது.
- கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை பூசாரி சிவ்பால் அணைத்துள்ளார்.
ராஜஸ்தானில் கோவில் பூசாரி பூஜை செய்வது தொடர்பான தகராறில் சக பூசாரியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா (Dausa) மாவட்டத்தில் லால்சோட் எல்லைக்கு உட்பட திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான்கோவில் அமைந்துள்ளது. இங்கு பரசுராம் தாஸ் மகாராஜ் (60 வயது).மற்றும் சிவ்பால் தாஸ் ஆகியோர் பூசாரிகளாக உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவிலில் சாமி சிலைக்கு ஆரத்தி காட்டுவது தொடர்பாக இருவரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிவ்பாலை பரசுராம் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி சிவ்பால் தாஸ், பரசுராமை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
கோவிலுக்குள் பூசாரி உடல் கிடப்பதை அறிந்து உள்ளூர் மக்கள் திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தப்பியோடிய பூசாரி சிவ்பால் கோவிலுக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் காயமுற்ற நிலையில் போலீசிடம் பிடிபட்டார். அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை சிவ்பால் அணைத்துவிட்டு அதன் பின் கொலை செய்ததும் தெரியவந்தது. கோவில் பூசாரி சக பூசாரியால் கோவிலில் வைத்தே கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காசா மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
- இதனைத் தொடர்ந்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வார போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவில்லை.
இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்னும் அதிகரிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலின் மெடுலா நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை வானில் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தது. எச்சரிக்கை விடுத்த நிலையில் லெபனான் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் 2023ஆம் அண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான்- இஸ்ரேல் எல்லையில் உள்ள இஸ்ரேல் நகரங்கள் மீது லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட், ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா சண்டையில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
லெபனான்- இஸ்ரேல் இடையே கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது ஜனவரி மாதம் இறுதிக்குள் லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது, பின்னர் பிப்ரவரி 18-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தங்கள் நாட்டில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற உத்தரவிடக்கோரி லெபனான் ஐ.நா. உதவியை நாடியுள்ளது.
- சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
- இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குக்கிறார்
அண்மையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கலந்துக் கொண்ட நேர்காணலில் STR49 படத்தை குறித்து சில தகவல்களை கூறியுள்ளார் அதன்படி " இந்த படத்திற்காக பல இயக்குனர்களை நாங்கள் தேடினோம். அப்பொழுது நடிகர் சிம்பு தான் இயக்குனர் ராம்குமாரை பரிந்துரைத்தார். இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும். முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இது இருக்கும்" என கூறியுள்ளார்.
சிம்பு தற்பொழுது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி வருகின்றனர்.
- ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநா தெரிவித்திருந்தது.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இரண்டு வருட போருக்குப் பிறகு, சூடானின் தலைநகர் கார்ட்டூமில் உள்ள அதிபர் மாளிகையை பாராளுமன்ற படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக சூடான் ராணுவம் அறிவித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) கார்ட்டூமில் RSF கட்டுப்பாட்டில் இருந்த அதிபர் மாளிகையை சூடான் ராணுவம் முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் தொலைக்காட்சி மற்றும் இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி, மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சூடான் இராணுவம் இப்போது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்நாட்டு போரில் கடந்த 2 வருடமாக நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.

கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் சூடானில் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை மதிப்பிடுகிறது .
- இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள்.
- 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்,
நீதிபதிகள் வருகை
மணிப்பூரில் இனக் கலவரத்தால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியை மதிப்பிடுவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஐந்து மூத்த நீதிபதிகளுடன் இன்று (சனிக்கிழமை) மணிப்பூர் வந்தடைந்தார்.
தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) நீதிபதிகளின் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சட்ட உதவி மையங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள். அங்கு இடம்பெயர்ந்த மக்களுடன் உரையாடி, அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதை மேற்பார்வையிடுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கல் உள்ளிட்ட செயல்பாடுகளையும் நீதிபதிகள் தொடங்கி வைகின்றனர்.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தேய் சமூகத்தினர் பழங்குடியின அந்தஸ்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை எதிர்த்து மலைப்பிரதேச மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையிலான பிரச்சனை 2023 இல் வன்முறையாக மாறியது. மே மாதம் பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், கொலை வெறியாட்டங்களும் அரங்கேறின. 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கலவரம் தாற்காலிகமாக அடங்கியபோதிலும் ஆயுதமேந்திய குழுக்களால் இன்று வரை மணிப்பூரில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. வீடுகளை இழந்த பல குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றன.

ஜனாதிபதி ஆட்சி
கடந்த வருட இறுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டபோது மீண்டும் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்டியதாக மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங் தொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.
இதனால் அவர் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது . இதற்கிடையே வெளிநாடுகளுக்கு தொடர்ந்து பயணிக்கும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு இதுநாள் வரை சென்று பாதிப்புகளை பார்வையிடாதது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
மோடி எப்போ வருவார்?
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மணிப்பூர் பயணத்தை வரவேற்றுள்ள காங்கிரஸ் மோடியை மீண்டும் விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிப்பூருக்குச் சென்ற ஆறு நீதிபதிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். கடந்த 22 மாதங்களில், நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், சுமார் 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர், இன்றும் கூட, மணிப்பூரில் உள்ள சமூகங்களிடையே அச்சமும் சந்தேகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது.

பிப்ரவரி 13 அன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, ஆனால் ஆகஸ்ட் 1, 2023 அன்று உச்ச நீதிமன்றமே மணிப்பூரில் உள்ள அரசியலமைப்பு முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறிய பிறகும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த 18 மாதங்கள் ஏன் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்றது நல்லது, ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால், பிரதமர் எப்போது அங்கு செல்வார்? என்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.
- ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார்
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் டெண்டிகோ என்ற சிங்கள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் இளங்கோ ராமே இயக்கியுள்ளார்.
இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது.
படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்தியில் ஹன்சல் மேத்தா இயக்க சாகில் சைகல் படத்தை தயாரிக்கவுள்ளார்.படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை. இதுக்குறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- தங்கள் மகள்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுக்கிறது.
- பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சுகிறார்கள்.
ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளாக தினமும் 3 குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக அம்மாநில அரசின் தரவறிக்கை தெரிவிக்கிறது.
அரசு தரவுகளின்படி மட்டுமே, 2019 முதல் 2025, பிப்ரவரி வரை ஒடிசா முழுவதும் 8,159 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 30 மாவட்டங்களை கொண்ட ஒடிசாவில் அதிகபட்சமாக நபரங்பூரில் 1,347 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன.
பழங்குடி பழக்கவழக்கங்கள், வரதட்சணை, தொழிலாள வர்க்க குடும்பங்களின் இடம்பெயர்வு மற்றும் தங்கள் மகள்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுப்பதாக அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
குழந்தை திருமணத்தைத் தடுக்க, ஒடிசா அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பஞ்சாயத்து, தொகுதி மற்றும் அங்கன்வாடி மட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இது தவிர, குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுக்களின் கூட்டங்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நடத்தி வருகிறது.
"குழந்தை திருமணத்தை ஒரே இரவில் முற்றிலுமாக நிறுத்த முடியாது. பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க, அவர்களுக்கு ஒரு சூழலையும் சமூகத்தையும் நாம் உருவாக்க வேண்டும் . இவ்வகை திருமணங்கள் பழங்குடியினரின் பாரம்பரிய நடைமுறையாகவும் உள்ளது" என்று சமூக ஆர்வலர் நம்ரதா சத்தா கூறுகிறார்.

வாழ்வாதாரத்திற்காக வேறு இடங்களுக்கு தொடர்ந்து புலம்பெயரும் பெற்றோர்கள் தங்கள் பெண்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும், புலம்பெயர்ந்த இடத்தில் அவள் யாருடனாவது ஓடிப்போய், குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். மேலும் பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சி இளவயதிலேயே அவர்களை திருமணம் செய்து தந்துவிடுகின்றனர்
இளவயது திருமணத்துடன், குழந்தைத் தொழிலாளர் முறையின் சவாலையும் ஒடிசா எதிர்கொள்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், தொழிலாளர்களாக வேலை செய்த 328 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1986 இன் கீழ், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீது இதுவரை 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இரண்டு அணிகளும் சமமான ஸ்கோரை பெற்றால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.
- சூப்பர் ஓவரில் வெற்றி பெறும்வரை தொடர்ந்து நடத்தப்படும்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் நிர்வாகம் 10 அணி கேப்டன்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியது. அதன்பின் ஐபிஎல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு போட்டியின்போது 2-வது இன்னிங்சில் 10 ஓவருக்குப் பிறகு புதிய பந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக பந்து ஈரமாகிவிடுதால் பந்து வீச்சாளர்கள் பந்து வீச சிரமப்படுவதாக கூறியதன் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஓவர் குறித்து ஐபிஎல் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு அணிகளும் சமமான ஸ்கோர் எடுத்திருந்தால் போட்டி டை என அறிவிக்கப்பட்டு, சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டும். இதில் ஒவ்வொரு அணியின் 3 பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய முடியும். 6 பந்துகள் வீசப்படும். இரண்டு விக்கெட் இழந்தால் அணியின் பேட்டிங் முடிவுக்கு வரும்.
ஒருவேளை சூப்பர் ஓவரின்போது இரண்டு அணிகளும் சமநிலையான ஸ்கோரை பெற்றால், மீண்டும் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். இப்படி ஒரு வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் சென்று கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் சூப்பர் ஓவருக்கு ஒரு மணி நேரம்தான் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை முறை வேண்டுமென்றால் சூப்பர் ஓவர் விளையாட முடியும் எனத் தெரிவித்துள்ளது.
- கொல்கத்தா அணி ரகானே தலைமையில் களம் இறங்குகிறது.
- ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது.
இன்றிரவு நடக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தற்போது மெகா ஏலத்துக்கு பிறகு ஒவ்வொரு அணிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சமநிலையான ஆடும் லெவன் அணியை தேர்வு செய்ய இரண்டு அணிகளுக்கும் ஒருசில போட்டிகள் தேவைப்படும். கொல்கத்தா அணி கேப்டனாக ரகானேவும் ஆர்சிபி அணி கேப்டனாக ரஜத் படிதாரும் உள்ளனர்.
இந்த போட்டிக்கு வருண பகவான் வழியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் இன்று கொல்கத்தாவில் பரவலாக மழை பெய்யும். அதுவும் போட்டி நடைபெறும் நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நேற்றிரவு கொல்கத்தா நகரில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் தற்போது வரை மழை பெய்யவில்லை. போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை நிலவரம் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் போட்டி மழை குறுக்கீடு இல்லாமல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இன்றைய போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கொல்கத்தா அணி:-
ரகானே, டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மேன் பொவேல், மணிஷ் பாண்டே, லவ்னித் சிசோடியா, ரிங்கு சிங் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர், வெங்கடேஷ் அய்யர், அனுகுல் ராய், மொயீன் அலி, ராமன்தீப் சிங், அந்த்ரே ரசல், அன்ரிச் நோர்ஜே, வைபவ் ஆரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சக்காரியா
ஆர்சிபி அணி;-
ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வாஸ்திக் சிகாரா, லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, மனோஜ் பாண்டேஜ், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், ரஷிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ரதீ, யாஷ் தயால்.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
டிரெய்லர் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது மேலும் படத்தின் கால அவகாசம் 2.30 மணி நேரமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்து கொண்டார்.
- அவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக அரசு வெற்றி பெற்றது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி பாஜக சார்பில் டெல்லியில் ரம்ஜான் மாத இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்து கொண்டார்.
மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பல பாஜக தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களுக்கு ரேகா குப்தா பேட்டி அளித்தார். அப்போது, இஸ்லாமியர் பண்டிகையான ரம்ஜான் (RAMZAN) என்பதில் ராம் (RAM) என்ற இந்து பெயரும், இந்துக்கள் பண்டிகையான தீபாவளி(DIWALI) என்பதில் அலி (ALI இஸ்லாமிய பெயரும் இருப்பதாக ரேகா குப்தா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையே இப்தார் நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரேகா குப்தா, "இப்தார் நிகழ்வில் அனைத்து சகோதர சகோதரிகளுடனும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
நமது கலாச்சாரம், பரஸ்பர மரியாதை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாகும். இது போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.






