என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள்.
- 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்,
நீதிபதிகள் வருகை
மணிப்பூரில் இனக் கலவரத்தால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியை மதிப்பிடுவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஐந்து மூத்த நீதிபதிகளுடன் இன்று (சனிக்கிழமை) மணிப்பூர் வந்தடைந்தார்.
தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) நீதிபதிகளின் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சட்ட உதவி மையங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள். அங்கு இடம்பெயர்ந்த மக்களுடன் உரையாடி, அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதை மேற்பார்வையிடுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கல் உள்ளிட்ட செயல்பாடுகளையும் நீதிபதிகள் தொடங்கி வைகின்றனர்.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தேய் சமூகத்தினர் பழங்குடியின அந்தஸ்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை எதிர்த்து மலைப்பிரதேச மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையிலான பிரச்சனை 2023 இல் வன்முறையாக மாறியது. மே மாதம் பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், கொலை வெறியாட்டங்களும் அரங்கேறின. 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கலவரம் தாற்காலிகமாக அடங்கியபோதிலும் ஆயுதமேந்திய குழுக்களால் இன்று வரை மணிப்பூரில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. வீடுகளை இழந்த பல குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றன.

ஜனாதிபதி ஆட்சி
கடந்த வருட இறுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டபோது மீண்டும் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்டியதாக மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங் தொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.
இதனால் அவர் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது . இதற்கிடையே வெளிநாடுகளுக்கு தொடர்ந்து பயணிக்கும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு இதுநாள் வரை சென்று பாதிப்புகளை பார்வையிடாதது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
மோடி எப்போ வருவார்?
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மணிப்பூர் பயணத்தை வரவேற்றுள்ள காங்கிரஸ் மோடியை மீண்டும் விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிப்பூருக்குச் சென்ற ஆறு நீதிபதிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். கடந்த 22 மாதங்களில், நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், சுமார் 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர், இன்றும் கூட, மணிப்பூரில் உள்ள சமூகங்களிடையே அச்சமும் சந்தேகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது.

பிப்ரவரி 13 அன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, ஆனால் ஆகஸ்ட் 1, 2023 அன்று உச்ச நீதிமன்றமே மணிப்பூரில் உள்ள அரசியலமைப்பு முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறிய பிறகும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த 18 மாதங்கள் ஏன் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்றது நல்லது, ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால், பிரதமர் எப்போது அங்கு செல்வார்? என்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.
- ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார்
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் டெண்டிகோ என்ற சிங்கள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் இளங்கோ ராமே இயக்கியுள்ளார்.
இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது.
படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்தியில் ஹன்சல் மேத்தா இயக்க சாகில் சைகல் படத்தை தயாரிக்கவுள்ளார்.படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை. இதுக்குறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- தங்கள் மகள்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுக்கிறது.
- பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சுகிறார்கள்.
ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளாக தினமும் 3 குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக அம்மாநில அரசின் தரவறிக்கை தெரிவிக்கிறது.
அரசு தரவுகளின்படி மட்டுமே, 2019 முதல் 2025, பிப்ரவரி வரை ஒடிசா முழுவதும் 8,159 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 30 மாவட்டங்களை கொண்ட ஒடிசாவில் அதிகபட்சமாக நபரங்பூரில் 1,347 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன.
பழங்குடி பழக்கவழக்கங்கள், வரதட்சணை, தொழிலாள வர்க்க குடும்பங்களின் இடம்பெயர்வு மற்றும் தங்கள் மகள்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுப்பதாக அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
குழந்தை திருமணத்தைத் தடுக்க, ஒடிசா அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பஞ்சாயத்து, தொகுதி மற்றும் அங்கன்வாடி மட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இது தவிர, குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுக்களின் கூட்டங்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நடத்தி வருகிறது.
"குழந்தை திருமணத்தை ஒரே இரவில் முற்றிலுமாக நிறுத்த முடியாது. பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க, அவர்களுக்கு ஒரு சூழலையும் சமூகத்தையும் நாம் உருவாக்க வேண்டும் . இவ்வகை திருமணங்கள் பழங்குடியினரின் பாரம்பரிய நடைமுறையாகவும் உள்ளது" என்று சமூக ஆர்வலர் நம்ரதா சத்தா கூறுகிறார்.

வாழ்வாதாரத்திற்காக வேறு இடங்களுக்கு தொடர்ந்து புலம்பெயரும் பெற்றோர்கள் தங்கள் பெண்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும், புலம்பெயர்ந்த இடத்தில் அவள் யாருடனாவது ஓடிப்போய், குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். மேலும் பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சி இளவயதிலேயே அவர்களை திருமணம் செய்து தந்துவிடுகின்றனர்
இளவயது திருமணத்துடன், குழந்தைத் தொழிலாளர் முறையின் சவாலையும் ஒடிசா எதிர்கொள்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், தொழிலாளர்களாக வேலை செய்த 328 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1986 இன் கீழ், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீது இதுவரை 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இரண்டு அணிகளும் சமமான ஸ்கோரை பெற்றால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.
- சூப்பர் ஓவரில் வெற்றி பெறும்வரை தொடர்ந்து நடத்தப்படும்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் நிர்வாகம் 10 அணி கேப்டன்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியது. அதன்பின் ஐபிஎல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு போட்டியின்போது 2-வது இன்னிங்சில் 10 ஓவருக்குப் பிறகு புதிய பந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக பந்து ஈரமாகிவிடுதால் பந்து வீச்சாளர்கள் பந்து வீச சிரமப்படுவதாக கூறியதன் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஓவர் குறித்து ஐபிஎல் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு அணிகளும் சமமான ஸ்கோர் எடுத்திருந்தால் போட்டி டை என அறிவிக்கப்பட்டு, சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டும். இதில் ஒவ்வொரு அணியின் 3 பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய முடியும். 6 பந்துகள் வீசப்படும். இரண்டு விக்கெட் இழந்தால் அணியின் பேட்டிங் முடிவுக்கு வரும்.
ஒருவேளை சூப்பர் ஓவரின்போது இரண்டு அணிகளும் சமநிலையான ஸ்கோரை பெற்றால், மீண்டும் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். இப்படி ஒரு வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் சென்று கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் சூப்பர் ஓவருக்கு ஒரு மணி நேரம்தான் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை முறை வேண்டுமென்றால் சூப்பர் ஓவர் விளையாட முடியும் எனத் தெரிவித்துள்ளது.
- கொல்கத்தா அணி ரகானே தலைமையில் களம் இறங்குகிறது.
- ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது.
இன்றிரவு நடக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தற்போது மெகா ஏலத்துக்கு பிறகு ஒவ்வொரு அணிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சமநிலையான ஆடும் லெவன் அணியை தேர்வு செய்ய இரண்டு அணிகளுக்கும் ஒருசில போட்டிகள் தேவைப்படும். கொல்கத்தா அணி கேப்டனாக ரகானேவும் ஆர்சிபி அணி கேப்டனாக ரஜத் படிதாரும் உள்ளனர்.
இந்த போட்டிக்கு வருண பகவான் வழியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் இன்று கொல்கத்தாவில் பரவலாக மழை பெய்யும். அதுவும் போட்டி நடைபெறும் நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நேற்றிரவு கொல்கத்தா நகரில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் தற்போது வரை மழை பெய்யவில்லை. போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை நிலவரம் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் போட்டி மழை குறுக்கீடு இல்லாமல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இன்றைய போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கொல்கத்தா அணி:-
ரகானே, டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மேன் பொவேல், மணிஷ் பாண்டே, லவ்னித் சிசோடியா, ரிங்கு சிங் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர், வெங்கடேஷ் அய்யர், அனுகுல் ராய், மொயீன் அலி, ராமன்தீப் சிங், அந்த்ரே ரசல், அன்ரிச் நோர்ஜே, வைபவ் ஆரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சக்காரியா
ஆர்சிபி அணி;-
ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வாஸ்திக் சிகாரா, லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, மனோஜ் பாண்டேஜ், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், ரஷிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ரதீ, யாஷ் தயால்.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
டிரெய்லர் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது மேலும் படத்தின் கால அவகாசம் 2.30 மணி நேரமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்து கொண்டார்.
- அவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக அரசு வெற்றி பெற்றது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி பாஜக சார்பில் டெல்லியில் ரம்ஜான் மாத இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்து கொண்டார்.
மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பல பாஜக தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களுக்கு ரேகா குப்தா பேட்டி அளித்தார். அப்போது, இஸ்லாமியர் பண்டிகையான ரம்ஜான் (RAMZAN) என்பதில் ராம் (RAM) என்ற இந்து பெயரும், இந்துக்கள் பண்டிகையான தீபாவளி(DIWALI) என்பதில் அலி (ALI இஸ்லாமிய பெயரும் இருப்பதாக ரேகா குப்தா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையே இப்தார் நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரேகா குப்தா, "இப்தார் நிகழ்வில் அனைத்து சகோதர சகோதரிகளுடனும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
நமது கலாச்சாரம், பரஸ்பர மரியாதை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாகும். இது போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.
- "இதயம் முரளி" படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
- படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், "இதயம் முரளி" படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் "இதயம் முரளி" படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures. "இதயம் முரளி" படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலுக்கு இதயா என்ற தலைப்பை வைத்துள்ளனர். பாடல் மிகவும் மெலடியாக அமைந்துள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் தமன் மற்றும் விஷால் மிஷ்ரா இணைந்து பாடியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
- சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 171 இன்னிங்சில் 4687 ரன்கள் அடித்துள்ளார்.
- எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார்.
18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ரெய்னா படைத்துள்ள சாதனையை எம்.எஸ். தோனி முறியடிக்க உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.
ரெய்னாவின் சாதனையை இந்த சீசனில் தோனி முறியடிக்க உள்ளார். அதற்கு அவருக்கு இன்னும் 19 ரன்களே தேவை. எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும்.
ஜடேஜா இன்னும் 8 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் கைப்பற்றிய சி.எஸ்.கே. வீரர் என்ற பெருமையை பெறுவார். பிராவோ 140 விக்கெட் (116 போட்டி) வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்சிஸ் வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா 172 போட்டியில் 133 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த சீசனில் சில போட்டிகளில் ஆட வில்லை. அவர் 6 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற சாதனையை பெறுவார். மலிங்காவை (170 விக்கெட்) முந்துவார். பும்ரா 165 விக்கெட் எடுத்துள்ளார்.
- கூட்டுக்குழுவில் பங்கேற்று பேசிய அனைவரின் குரலும் ஒத்த கருத்துடையதாகவே இருந்தது.
- அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்றம்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவடைந்தது.
இதையடுத்து தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைவரும் ஒத்தக்கருத்தை முன்வைத்துள்ளனர்.
* கூட்டுக்குழுவில் பங்கேற்று பேசிய அனைவரின் குரலும் ஒத்த கருத்துடையதாகவே இருந்தது.
* கூட்டு நடவடிக்கை குழுவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.
* முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.
* 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியே அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.
* பாராளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும்.
* அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்றம்.
* தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிலுவைக்கு வரும்.
* பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை விரைவில் நடக்கும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.
* தெளிவை ஏற்படுத்தாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக மத்திய அரசின் அறிவிப்பு உள்ளது.
* அழைப்பு விடுத்ததில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் நேரில் பங்கேற்க முடியவில்லை, மற்ற அனைவரும் பங்கேற்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கனவே கூறியது போல அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.
- தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகிறார்.
கோவை:
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் இருப்பு உள்ளது. புதிதாக 7000 தெர்மல் பிளான்ட் மூலம் மின்சாரம் உற்பத்தி, 14 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி, 2000 பேட்டரி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. 2030-ம் ஆண்டு வரை பிரச்சனை இருக்காது.
எங்காவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்பட்ட மின்தடை உடனே சரி செய்யப்பட்டு இருக்கும்.
பொதுமக்கள் இதுகுறித்து உடனே புகார் கூறினால் மின்சார வாரிய ஊழியர்கள் வந்து நடவடிக்கை எடுத்து சரி செய்வார்கள். இதற்காக மின்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சிலர் இந்த அரசு குறித்து ஏதையாவது தெரிவித்து, இவர்கள் கீழே விழமாட்டார்களா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நடக்காது. தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலமைச்சர் எடுத்து வரும் சீரிய திட்டங்களால் தமிழகம் விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கனவே கூறியது போல அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி. இதை வெல்ல தமிழக முதலமைச்சர் மாநில முதல்-மந்திரிகள், அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். இதிலும் வெற்றி பெறுவோம்.
மதுவிலக்கு பொறுத்தவரை ஒரு தலைவர் 2023-ம் ஆண்டில் கூறிய கருத்தையும், இப்போது அவர் கூறிய கருத்தையும் நாம் பார்த்து வருகிறோம். அடிக்கடி பேச்சை மாற்றிக் கொள்ளக் கூடாது.
இன்று நடைபெறும் போராட்டம் குறித்து கேட்கிறீர்கள். கோமாளிகள் செயல்களுக்கு நான் பதில் கூற முடியாது. அரசு நிகழ்ச்சி இதில் அரசியல் பேச வேண்டாம்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகிறார். கோவை வனத்துறை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.108 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.67 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 39 ஆயிரத்து 494 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் பவன் குமார், மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 6 வயது சிறுமி ரோகித் சர்மாவை போல் புல்ஷாட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பயனர்கள் பலரும் சிறுமி சோனியா கானின் திறமையை பாராட்டி பதிவிட்டனர்.
கிரிக்கெட் விளையாட்டு சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த சோனியா கான் என்ற 6 வயது சிறுமி ரோகித் சர்மாவை போல் புல்ஷாட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், சிறுமிக்கு ஒருவர் பந்து வீசுகிறார்.
அப்போது சோனியா கான் ரோகித் சர்மாவை போலவே புல்ஷாட் அடிக்கிறார். இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 12 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.
பயனர்கள் பலரும் சிறுமி சோனியா கானின் திறமையை பாராட்டி பதிவிட்டனர். ஒரு பயனர், சோனியா கான் ஒரு தொழில்முறை நிபுணரை போல விளையாடுகிறார் என பதிவிட்டார்.






