என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
    • சிறப்பு விசாரணைக் குழுவிற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. செல்லமேஸ்வர் தலைமை தாங்குவார்.

    இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் 'வந்தாரா' விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையம் குஜராத்தின் ரிலையன்ஸ் ஜாம்நகர் வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது. 2024 இல் பிரதமர் மோடி இந்த மையத்தை திறந்து வைத்தார். இதுவே உலகின் மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்கா என கருதப்படுகிறது.

    இங்கு சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் முதலைகள் என 43 வகையான இனத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளது.

    இங்குள்ள விலங்குகள் குறிப்பாக யானைகள் சட்டவிரோதமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டவை என்று பரவலாக குற்றசாட்டு எழுந்தது. விலங்குகள் நல அமைப்புகள், ஆர்வலர்கள் தரப்பில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவில் வந்தாரா மையத்தின் செயல்பாடுகள் குறித்து சுகின் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் மிதல் மற்றும் பிரசன்னா பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

    இந்நிலையில் யானைகளை சட்டவிரோதமாக சிறைபிடித்தது மற்றும் பிற குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த சிறப்பு விசாரணைக் குழுவிற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. செல்லமேஸ்வர் தலைமை தாங்குவார்.

    செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் SIT தனது அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • பொய் வழக்குப் பதிவு செய்தவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்?
    • நான் 160 நாட்கள் சிறையில் இருந்தே அரசாங்கத்தை நடத்தினேன்.

    மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த தகுதி நீக்க மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் இருந்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறுகிறது.

    சிறையில் இருந்து யாரும் ஆட்சி செய்ய கூடாது என்பதே இதன் நோக்கம் என  அமித் ஷா பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 

    இந்நிலையில் இந்த மசோதா குறித்து அமித் ஷாவிடம் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பிய கேள்வி கவனம் பெற்று வருகிறது.

    கெஜ்ரிவால் தனது எக்ஸ் பதிவில், "கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை, ஊழல் தலைவர்களை தங்கள் கட்சியில் சேர்த்துக்கொண்டு, அவர்களின் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து, அவர்களை அமைச்சராகவோ, துணை முதல்வராகவோ அல்லது முதலமைச்சராகவோ ஆக்கினால், அத்தகைய அமைச்சர், பிரதமர் தனது பதவியை விட்டு விலகுவார்களா? அத்தகைய நபர் எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்?

    ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டால், அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்தவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

    மற்றொரு பதவில், "அரசியல் சதித்திட்டத்தின் கீழ் ஒரு பொய் வழக்கில் மத்திய அரசு என்னை சிறைக்கு அனுப்பியபோது, நான் 160 நாட்கள் சிறையில் இருந்தே அரசாங்கத்தை நடத்தினேன்.

    கடந்த ஏழு மாதங்களில், டெல்லியின் பாஜக அரசாங்கம் டெல்லியை மிகவும் மோசமாக்கியுள்ளது. இன்று டெல்லி மக்கள் சிறையில் அடைக்கப்பட்ட அந்த அரசாங்கத்தை மிஸ் செய்கிறார்கள்.

    குறைந்தபட்சம் சிறை அரசாங்கத்தின் போது, மின்வெட்டு இல்லை, தண்ணீர் கிடைத்தது, மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் கிடைத்தன, இலவச பரிசோதனைகள் நடத்தப்பட்டன, ஒரு மழைக்குப் பிறகு டெல்லி இவ்வளவு மோசமான நிலையில் இல்லை, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாகச் செயல்படவும், குண்டர்கள் ஆதிக்கமும் அனுமதிக்கப்படவில்ல" என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த வருடம் ஜனவரியில் மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யபட்டு திகார் சிறையில் இருந்தபடி டெல்லி முதலமைச்சராக செயல்பட்டார். செப்டம்பரில் ஜாமீன் பெற்று வெளிவந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

    • மிகப்பெரிய நாளுக்கான ஆயத்தம் என இந்த படங்கள் பகிரப்பட்டன.
    • ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தரிசனம் செய்தனர்.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.

    அதற்கான பணிகளில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 26) தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் இந்த  தொடக்க விழா பணிகளை ரவி மோகன் உடன் இருந்து மேற்பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

    மிகப்பெரிய நாளுக்கான ஆயத்தம் என இந்த படங்களை ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த விழாவுக்கு நடிகர் கார்த்தியை நேரில் சென்று ரவி மோகன் அழைத்த வீடியோவும் வெளியாகி உள்ளது. 

    இதற்கிடையே ரவி மோகன் மற்றும் காதலி கெனிஷா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தரிசனம் செய்தனர்.

    இவர் ஈஞ்சம்பாக்கத்தில் முன்னாள் மனைவி ஆர்த்தியுடன் வாழந்த சொகுசு பங்களாவுக்கு கடந்த 10 மாதமாக EMI கட்டாமல் உள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்ஷிதா (20).
    • இதில் தர்ஷிதாவின் முகம் சிதைந்து, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்ஷிதா (20). இவரது கணவர் வெளியூரில் பணியாற்றி வருகிறார்.

    தர்ஷிதாவுக்கு தனது உறவினர் சித்தராஜுவுடன் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருந்தது.

    சமீபத்தில், தர்ஷிதா தனது மாமியார் சுமதாவின் வீட்டில் இருந்து 30 சவரன் தங்கம் மற்றும் ரூ.4 லட்சம் பணத்தைத் திருடி, சித்தராஜுவுடன் கர்நாடகாவுக்குத் தப்பிச் சென்றார்.

    கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெர்யா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தர்ஷிதாவும் சித்தராஜுவும் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தனர்.

    இந்நிலையில் திருடப்பட்ட பணத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று (திங்கள்கிழமை) லாட்ஜ் அறையில் வைத்து கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோபத்தில், சித்தராஜு, சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து குச்சியை தர்ஷிதாவின் வாயில் அடைத்து அதை வெடிக்கச் செய்தார்.

    இதில் தர்ஷிதாவின் முகம் சிதைந்து, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    அவரது மொபைல் போன் வெடித்ததால் தான் இறந்ததாக லாட்ஜ் இருதவர்கள் மற்றும் அக்கபக்கத்தினரை சித்தராஜு நம்ப வைக்க முயன்றார்.

    இருப்பினும், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சித்தராஜுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • விசாரணையில், அவர் நாய்களை மிகவும் நேசித்தது T
    • கூகிள் பே மூலம் ராஜேஷுக்கு ரூ.2,000 அனுப்பிய ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரும் அடங்குவார்.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கடந்த ஆகஸ்ட் 20 காலையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அவரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குற்றம்சாட்டப்பட்டவர் குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டி ராஜேஷ்பாய் சகாரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    அவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நாய்களை மிகவும் நேசித்ததாகவும், டெல்லியில் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் கோபமடைந்து இந்த தாக்குதலை செய்ததாவும் தெரியவந்தது.

    ராஜேஷ் டெல்லிக்கு வந்தபோது, அவரது நகரத்தைச் சேர்ந்த ஐந்து பேருடன் தொடர்பில் இருந்தார். டெல்லி காவல்துறை குழு ராஜ்கோட்டில் ஐந்து பேரை விசாரித்தது. இதில் கூகிள் பே மூலம் ராஜேஷுக்கு ரூ.2,000 அனுப்பிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரும் அடங்குவார். அந்த ஓட்டுனரையும் ஞாயிற்றுக்கிழமை போலீஸ் காவலில் எடுத்து.

    இந்நிலையில் ராஜேஷ் ரேகா குப்தாவை கொலை செய்யும் திட்டத்துடன் டெல்லி வந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

    சம்பத்தன்று ராஜேஷ் முதல்வரின் வீட்டிற்கு கத்தியை கொண்டு வந்துள்ளார். ஆனால் போலீஸ் பாதுகாப்பைக் கண்டதும், அவர் கத்தியை சிவில் லைன்ஸ் பகுதியில் வீசினார். அது தற்போது போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

    • MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
    • விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் MiG-21 விமானத்தை ஓட்டினார்.

    60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப்படையில் பெரும்பங்காற்றிய MiG-21 போர் விமானங்கள் விடைபெற உள்ளன.

    விமானப்படையில் தற்போது இரண்டு படைப்பிரிவுகளில் 36 MiG-21 விமானங்கள் உள்ளன. செப்டம்பர் 26 ஆம் தேதி சண்டிகரில் நடைபெறும் விழாவில் இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும். 

    நேற்று ராஜாஸ்தானின் பிகானரில் உள்ள நல் விமானப்படை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பிரியாவிடை விழாவில் விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் MiG-21 விமானத்தை ஓட்டினார்.

    சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.

    இது 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.

    தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000க்கும் மேற்பட்ட MiG-21 விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    MiG-21

     

    1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போர்கள், 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் மற்றும் 2019 ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதல் ஆகியவற்றில் MiG-21 விமானம் முக்கிய பங்காற்றியது.

    இருப்பினும், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் MiG-21 விமானத்திற்கு பாதகமாக அமைந்தது.

    62 ஆண்டுகளில் MiG-21 சந்தித்த 400 விபத்துகளில் 200 விமானிகள் மற்றும் 60 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் அதிக பராமரிப்பு தேவைபடுவதால் MiG-21 கைவிடப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றுக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பான Tejas Mk2 விமானங்கள் இருக்கும். 

    • "கனமழை பெய்து வரும் சூழலில் தவீ ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்"
    • தூதரக ரீதியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் சூழலில் சிந்து நதியின் கிளையான தவீ ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டுக்கு இந்தியா எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    பாகிஸ்தான் ஊடக வட்டாரங்களின்படி, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இது குறித்துத் தெரிவித்தது.

    வழக்கமாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (IWT) கீழ் இரு நாடுகளின் ஆணையர்களிடையே இதுபோன்ற தகவல் பரிமாற்றம் நடைபெறும்.

    இருப்பினும், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

    அப்போதிருந்து, ஒப்பந்தத்தின் கீழ் எந்தத் தகவல் பரிமாற்றமும் இல்லை. இந்தச் சூழலில் தூதரகம் மூலம் எச்சரிக்கைகள் அனுப்பப்படுவது இதுவே முதல் முறை. 

    • தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
    • வெளியேற முடியாமல் பலர் ஆலையின் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் சர்ஜிக்கல் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பால் உற்பத்தி ஆலையில் நேற்று மாலை அம்மோனியா வாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆலையில் வாயு கசிந்ததை அடுத்து, அங்கிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனால் வெளியேற முடியாமல் பலர் ஆலையின் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க ஆலையின் சுவரை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கிருந்து சுமார் 30 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த சிலருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தற்போது, ஆலையின் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மேலும் கசிவு ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தகவல் ஆணையர் ஆச்சார்யலு, மோடியின் பிஏ சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
    • அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடியின் பிஏ, எம்ஏ பட்டப் படிப்பு குறித்து 2016ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார்.

    அந்த சமயத்தில் ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் மோடியின் பிஏ கல்வி சான்றிதழை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட உத்தரவிடுமாறு மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் சர்மா மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த அப்போதைய தகவல் ஆணையர் ஆச்சார்யலு, மோடியின் பிஏ சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து 2017இல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து சான்றிதழை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதன்படி, மோடியின் சான்றிதழை டெல்லி பல்கலைக்ழகம் வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. 

    • விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    • மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸின், பர்வான் தொகுதி எம்எல்ஏ ஜீபன் கிருஷ்ணா சாஹா அமலாக்கத்துறையால் இன்று கைது செய்தனர்.

    முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜீபன் கிருஷ்ணா தனது மொபைல் போன்களை வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு, சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார்.

    இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு வந்திருந்த CRPF வீரர்கள் உதவியுடன் அவரை துரைத்திச் சென்று கைது செய்தனர். பின்னர், சாக்கடையில் இருந்து தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எம்எல்ஏவை அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

    விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டு இதே வழக்கில் ஜீபன் கிருஷ்ணா சாஹாவை சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

    மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

    இந்த ஊழலில் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட பல முக்கிய நபர்களை அமலாக்கத் துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.

    • சம்பவத்தின் போது டிராக்டர்-டிராலியில் 61 பக்தர்கள் இருந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் டிராக்டர் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

    உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் இன்று காலை பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

     லாரி, பின்புறத்தில் மோதியதால் டிராக்டர் டிராலி கவிழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் தெரிவித்தார்.

    சம்பவத்தின் போது டிராக்டர்-டிராலியில் 61 பக்தர்கள் இருந்தனர். அவர்கள் ராஜஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தனர். விபத்தில் காயமடைந்த 43 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 43 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    விபத்தில் பக்தர்கள் உயிரிழந்ததற்கு உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

    • ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
    • இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே 6 பாகிஸ்தானிய டிரோன்கள் நடமாட்டத்தை அடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி, கனுயன் மற்றும் பால்ஜரோய் பகுதிகளில் இந்த டிரோன்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

    பாகிஸ்தானில் இருந்து வந்த இந்த டிரோன்கள், கட்டுப்பாட்டுக் கோடு அருகே சிறிது நேரம் காற்றில் வட்டமிட்டு பின்னர் பாகிஸ்தானுக்குத் திரும்பியதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் எச்சரிக்கப்பட்ட இந்திய ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் (பிஎஸ்எஃப்) எல்லையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

    கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இருந்து இதேபோன்ற டிரோன் ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன.

    எல்லையில் இந்திய ராணுவ தளங்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைப் பெற பாகிஸ்தான் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    ×