என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டாக்டர் அன்புமணிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பட்டுள்ளது.
- அன்புமணி ராமதாஸ் டாக்டர் ராமதாசை சந்தித்து அவர் சொல்வதை கேட்டு செயல்தலைவராக செயல்படுவேன் என கூற வேண்டும்.
திண்டிவனம்:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள வந்த பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் சேலம் அருள் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
டாக்டர் அன்புமணிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் பதில் அளித்திருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் 9 பேருடன் இன்று தைலாபுரத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் 9 நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு கட்சியின் நிறுவன தலைவர் ராமதாசிடம் ஒப்படைத்த பின்னர் அவர் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வரும் என்று கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு, டாக்டர் ராமதாஸ் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம். அவர் எந்த கூட்டணியில் அங்கம் வைக்க முடிவு செய்கிறாரோ அந்த கூட்டணி தான் வெற்றி பெறும். அவர்கள் தான் அடுத்து ஆட்சி அமைப்பார்கள். மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை ராமதாஸ் வைப்பார் என தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் டாக்டர் ராமதாசை சந்தித்து அவர் சொல்வதை கேட்டு செயல்தலைவராக செயல்படுவேன் என கூற வேண்டும் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் வெகு விரைவில் அது நடைபெறும் என அருள் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
- எல்லா இளைஞர்களும், கோபாலபுரம் குடும்பத்தினரைப் போல, எந்தத் தகுதியும் இன்றி மேலே வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல.
- கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத் தேர்வாவது, பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, TNPSC தேர்வுகளைக் குறித்த நேரத்தில் நடத்தாமலும், தேர்வு முடிவுகளை முறையாக வெளியிடாமலும், பல முறைகேடுகளாலும், குளறுபடிகளாலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு சிதைந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம், இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற TNPSC தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழி பெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, "the god of hair cutting" என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது.
அதோடு மட்டுமல்லாமல், மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, '2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை,
"It Begged the United Nations award"- பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
திமுக தலைவர்கள் காலகாலமாக, இல்லாத விருதுகளை வாங்கியதாக கூறிவருவதாலும், ஆஸ்திரியா ஸ்டாம்ப், ஆக்ஸ்போர்டு புகைப்படம் என, பணம் கொடுத்து வாங்குவதை எல்லாம் விருதுகள் என்று பொய் கூறி ஏமாற்றி வருவதாலும், இந்தக் கேள்வியைத் தயாரித்தவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
எனினும், அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்போது, இது போன்று கவனக்குறைவாக இருப்பது, திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதையே காட்டுகிறது.
எல்லா இளைஞர்களும், கோபாலபுரம் குடும்பத்தினரைப் போல, எந்தத் தகுதியும் இன்றி மேலே வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. அரசுப் பணித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை அதில் குறிப்பிட்டுள்ளார்.
- நான் துரோகியா? கட்சி கட்டுப்பாட்டை மீறினேனா?
- துரை வைகோவை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
ஒரே நாளில் விளக்க கடிதமும் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து நடவடிக்கையும் எடுக்க முடியுமா? என்னுடைய விளக்கத்தை பெறாமலேயே தற்காலிக நீக்கம் செய்திருக்கிறீர்கள். இது ஜனநாயக படுகொலை அல்லவா? மரண தண்டனை கைதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றும் முன்கால அவகாசம் வழங்கப்படும்.
ஆனால் என் பொருட்டு அந்த அவகாசம் தர ஏன் தங்களுக்கு மனம் வரவில்லை. இந்த நடவடிக்கைக்கு பின்னால் உங்கள் மகன் துரை வைகோ இருக்கின்றார் என்பது தானே உண்மை.
நான் துரோகியா? கட்சி கட்டுப்பாட்டை மீறினேனா? துரை வைகோவை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
உங்கள் மீது எவ்வளவு அவதூறுகள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது, எதையும் நாங்கள் நம்பாமல் கண் மூடித்தனமாக வாழ்வது என்றாலும் வீழ்வது என்றாலும் வைகோ ஒருவருக்காகவே என்று உங்களைப் பின்பற்றி வந்தோம்.
ஆனால் நீங்கள் எங்களைப் பற்றி யாராவது புறம் பேசினால் அதை நம்புவீர்கள். 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி சக்கையாக தூக்கி எறிய துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்க்கிறது. அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவார்கள்.
இவ்வாறு மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார்.
- டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார் வெங்கட்ராமன்.
- ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையொட்டி புதிய டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்த டிஜிபி வெங்கட்ராமனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
நேற்று அவர் டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் உயர் போலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆனால், சென்னை காவல் ஆணையர் அருண், வெட்கட்ராமன் பொறுப்பேற்றபோது நேரில் செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பொறுப்பு டிஜிபி வெங்கடராமனை சென்னை காவல் ஆணையர் அருண் சந்தித்துள்ளார்.
சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் நேரில் சென்று அவர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
- ஓமசேரியை சேர்ந்த குழந்தை, அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது.
- அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 2 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் அரிய வகை நோயான அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் வாழக்கூடிய அமீபாக்கள், அதில் குளிக்கக்கூடியவர்களின் மூக்கு துவாரத்தின் வழியாக உடலுக்குள் சென்று மூளையை தாக்குவதன் மூலம் இந்த காய்ச்சல் பாதிப்பு வருகிறது.
கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி முதன் முதலாக கடந்த மாதம் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அந்த தொற்று பாதிப்பு சிறுமியின் சகோதரனான 7 வயது சிறுவன் உள்பட 8 பேருக்கு கண்டறியப்பட்டது.
அவர்களுக்கு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் 3 மாத குழந்தையும் அடங்கும். ஓமசேரியை சேர்ந்த அந்த குழந்தை, அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது. அந்த குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து ஆஸ்பத்திரியில் ஒரு மாத மாக சிகிச்சை பெற்று வந்த 52 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று இறந்தார். கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி வாந்தி-காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்த அந்த பெண், கடந்த மாதம் 4-ந்தேதி கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், உடல்நலம் தேறியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால் கடந்த மாதம் 26-ந்தேதி மீண்டும் காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டார். இதனால் மீண்டும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 3 மாத குழந்தை இன்று அதிகாலை இறந்தது. அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 2 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இறந்திருப்பது, கேரளா மாநில மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் இருவரையும் சேர்த்து அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்ற சசிகலாவின் கருத்தை வரவேற்கிறேன்.
- வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்ற சசிகலாவின் கருத்தை வரவேற்கிறேன்.
* பிரிந்து கிடக்கும் சக்தியை ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறேன்.
* வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
* சட்டசபை தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அவர் கூறினார்.
- தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெருநாய் சர்ச்சை தொடர்பான விவாதம் நடைபெற்றது.
- விவாதத்தில் நடிகர் படவா கோபி பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.
இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.
பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.
நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெருநாய் சர்ச்சை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் படவா கோபி பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தெருநாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் நடிகர் படவா கோபி மன்னிப்பு கேட்டார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "டிவி நிகழ்ச்சியில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. என் கருத்தை முழுமையாக நிகழ்ச்சியில் தெரிவிக்கவே விடவில்லை. நாய்களால் பாதிக்கப்பட்டோரின் மனநிலையிலும், நாய் அபிமானிகளின் எண்ணத்தை பிரதிபலிக்கவும் பேசினேன்" என்று தெரிவித்தார்.
- 2021–2022 மற்றும் 2022–2023 கல்வியாண்டுகளுக்கான ஒன்றிய அரசின் 60% பங்களிப்பான ரூ.342.69 கோடி இதுவரை வழங்கப்படவில்லை.
- ஒட்டுமொத்த செலவினங்களையும் தமிழக அரசே செய்துள்ளதாக தமிழக அரசு வாதம்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டிற்கு மாநில அரசு உடனே நிதியளிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நிதி வழங்குவதில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சம பங்கினைக் கொண்டுள்ளன. ஆனால், இந்த செலவினங்களுக்கு மாநில அரசாங்கமே பிரதான பங்கினை வகிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தவறானது என வாதிட்டார்.
மேலும், 2025–2026 கல்வியாண்டிற்கான முழு நிதி செலவையும் மாநில அரசே அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ஒன்றிய அரசும் இந்த செலவுகளுக்கு பங்களிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட வில்சன், 2021–2022 மற்றும் 2022–2023 கல்வியாண்டுகளுக்கான ஒன்றிய அரசின் 60% பங்களிப்பான ரூ.342.69 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அந்த கல்வியாண்டுகளுக்கான ஒட்டுமொத்த செலவினங்களையும் தமிழக அரசே செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வில்சின் வாதங்களை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த மனுவின் மீது மத்தயி அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
- அதிகபட்சமாக நெல்லையில் 333 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது.
- தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது.
சென்னை:
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்டன. இதனால் கடுமையான உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடமாநிலங்களில் செப்டம்பர் மாதம் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.
வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கடைக்கோடி தென்தீபக்கற்ப பகுதிகளை தவிர்த்து நாடு முழுவதும் பரலாக அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 209.7 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். ஆனால் 214 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 6 மில்லி மீட்டர் அதிகமாகும். மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் சராசரி மழை அளவை விட கூடுதலாக பெய்துள்ளது.
அதிகபட்சமாக நெல்லையில் 333 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது. தென்காசியில் 88 மி.மீ., கோவை 52 மி.மீ. மயிலாடுதுறை 49 மி.மீ. திருவள்ளூர் 44 மி.மீ., தேனி 41 மி.மீ., ராணிப்பேட்டை 40 மி.மீ., சென்னையில் 23 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் இயல்பைவிட மழை குறைவாக பெய்துள்ளது. இந்த மாதம் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.
இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. U/A சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது
படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது அதில் வெற்றி மாறன் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தை மூடப்போவதாக அறிவித்தார் அதில் அவர் கூறியதாவது " தயாரிப்பாளரில் வேலை மிகவும் கடினமானது, இயக்குநரின் வேலை அதை ஒப்பிடும் போதுஜ் ஜாலியாக இருக்கிறது. தயாரிப்பாளரின் பொறுப்பு மிகப்பெரியது. இதனால் நான் தயாரிக்கும் கடைசி திரைப்படமாக Bad Girl இருக்கும். அத்துடன் கிராஸ் ரூட் நிறுவனத்தில் கடையை மூடுகிறோம்" என கூறினார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
- ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்
பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றார்.
இன்று சீனாவில் தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
உச்சி மாநாட்டிற்கு பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக மாநாட்டு அரங்கில் இருந்து ஒரே காரில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்யா அதிபர் புதின் புறப்பட்ட சென்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருவதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் பதிவிட்டுள்ளது ஏற்றப்படுத்தியுள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று ரஷ்ய அதிபர் புதினுடன் பேசி வரும் நிலையில், இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
போஜ்புரி சினிமாவின் முன்னணி நடிகையான அஞ்சலி ராகவ், லக்னோவில் நடந்த ஒரு பட விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, அருகே நின்று கொண்டிருந்த நடிகர் பவன்சிங், திடீரென அவரது இடுப்பை கிள்ளினார்.
அஞ்சலியும் சிரித்தபடி சமாளித்தார். பொதுமேடையிலேயே நடிகையின் இடுப்பை கிள்ளிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இடுப்பை தொடும் நடிகரிடம் எதிர்ப்பு தெரிவிக்காமல் அஞ்சலி சிரிக்கிறாரே... அவரும் இதை ரசித்து அனுபவிக்கிறாரோ, என்னவோ... என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆவேசமடைந்த அஞ்சலி, ''இதை எப்படி ரசிப்பேன் என்று நினைக்கலாம். என் இடுப்பில் ஏதோ இருக்கிறது? என்று கூறியபடி பவன்சிங் தொட்டார். எனக்கு அதிர்ச்சி இருந்தாலும் மேடை என்பதால் காட்டிக்கொள்ளவில்லை. எந்த பெண்ணையும் அனுமதியின்றி தொடுவது தவறு. நான் அதை அனுமதிப்பதும் கிடையாது. இனி போஜ்புரி படங்களில் நான் பணியாற்ற போவதில்லை'', என்று அறிவித்தார்.
இதற்கிடையில் தனது செயல்பாடு குறித்து மன்னிப்பு கேட்டிருக்கும் நடிகர் பவன்சிங், படங்களில் நடிக்க மாட்டேன் என்ற முடிவை வாபஸ் பெறுமாறும் அஞ்சலியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






