என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இலவச கல்வி உரிமைச் சட்டம் நிதி: 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- 2021–2022 மற்றும் 2022–2023 கல்வியாண்டுகளுக்கான ஒன்றிய அரசின் 60% பங்களிப்பான ரூ.342.69 கோடி இதுவரை வழங்கப்படவில்லை.
- ஒட்டுமொத்த செலவினங்களையும் தமிழக அரசே செய்துள்ளதாக தமிழக அரசு வாதம்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டிற்கு மாநில அரசு உடனே நிதியளிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நிதி வழங்குவதில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சம பங்கினைக் கொண்டுள்ளன. ஆனால், இந்த செலவினங்களுக்கு மாநில அரசாங்கமே பிரதான பங்கினை வகிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தவறானது என வாதிட்டார்.
மேலும், 2025–2026 கல்வியாண்டிற்கான முழு நிதி செலவையும் மாநில அரசே அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ஒன்றிய அரசும் இந்த செலவுகளுக்கு பங்களிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட வில்சன், 2021–2022 மற்றும் 2022–2023 கல்வியாண்டுகளுக்கான ஒன்றிய அரசின் 60% பங்களிப்பான ரூ.342.69 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அந்த கல்வியாண்டுகளுக்கான ஒட்டுமொத்த செலவினங்களையும் தமிழக அரசே செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வில்சின் வாதங்களை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த மனுவின் மீது மத்தயி அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.






