என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
    • இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல.

    புதுடெல்லி:

    போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

    இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக இந்தியாவில் வாழ வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

    • கிரெட்டா எலெக்ட்ரிக் மாடல் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • 420 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 42kWh பேக் மற்றும், 510 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 51.4kWh யூனிட் ஆகியவை அடங்கும்.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா எலெக்ட்ரிக் வரிசையில் மூன்று புதிய வேரியண்களைச் சேர்த்துள்ளது. இது மிட்ரேஞ்ச் மின்சார SUV பிரிவில் அதன் எண்ணிக்கையை விரிவுபடுத்துகிறது. புதிய வேரியண்ட்கள் Excellence (42 kWh), Executive Tech (42 kWh) மற்றும் Executive (O) (51.4 kWh) ஆகும்.

    கிரெட்டா எலெக்ட்ரிக் மாடல் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றில் 420 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 42kWh பேக் மற்றும், 510 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 51.4kWh யூனிட் ஆகியவை அடங்கும். இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் ரேஞ்ச் ARAI சான்றளிக்கப்பட்டவை ஆகும்.

    புதிய Excellence (42 kWh) வேரியண்ட் லெவல் 2 ADAS, 360-டிகிரி வியூ மானிட்டர், பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டர், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், டேஷ் கேமரா, பின்புற வயர்லெஸ் சார்ஜர், ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருக்கைகள், முன்புற இருக்கைகள் வென்டிலேஷன் வசதி மற்றும் மடிக்கக்கூடிய செட்பேக் மேசையுடன் வருகிறது.



    கிரெட்டா எலெக்ட்ரிக் Executive Tech (42 kWh) காரில் குரல்-செயல்படுத்தப்பட்ட பனோரமிக் சன்ரூஃப், இகோ-லெதர் சீட்கள், முன்புறத்தில் வென்டிலேட்டெட் இருக்கைகள் மற்றும் பின்புறம் சன்ஷேட் விண்டோ போன்ற அம்சங்கள் உள்ளன. அதே நேரத்தில் Executive (O) (51.4 kWh) காரில் நீண்ட தூர பேட்டரி மற்றும் ஸ்மார்ட் பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீமியம் அம்சங்கள் உள்ளன.

    அனைத்து கிரெட்டா எலெக்ட்ரிக் வேரியண்ட்களும் இப்போது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியை அடாப்டர் வழியாகப் பெறுகின்றன. அதே நேரத்தில் டாப் எண்ட் வேரியண்ட்களில் டேஷ் கேமரா மற்றும் வயர்லெஸ் ரியர் சார்ஜிங் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த கார்களில் ஹூண்டாய் தற்போது மேட் பிளாக் மற்றும் ஷேடோ கிரே வண்ண விருப்பங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கூலி'.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    தற்போதுவரை உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் கரியரில் மூன்றாவது ரூ.500+ கோடி படமாக இது அமைந்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    • அமித் மிஸ்ரா 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.
    • இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா (42), அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

    இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரைசதங்களும் அடித்துள்ளார்.

    அமித் மிஸ்ரா கடந்த 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். இவர் கடைசியாக 2017-ல் பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் விளையாடினார். ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்தார்.

    அமித் மிஸ்ரா ஓய்வு குறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விளையாட்டு எனது முதல் காதல், எனது ஆசான், எனது மிகப்பெரிய மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்தது. பிசிசிஐ, அரியானா கிரிக்கெட் அமைப்பு, எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் எனக்கு வலிமை அளித்த ரசிகர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

    எனது உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் உறுதியாக என் பக்கம் நின்றதற்கு எனது குடும்பத்தினற்கும் நன்றி. கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது என பதிவிட்டுள்ளார்.

    அனுஷ்கா காட்டி (Ghaati) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.

    நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "Miss ஷெட்டி MR பொலிஷெட்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

    அதைத் தொடர்ந்து அனுஷ்கா காட்டி (Ghaati) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் நாளை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக இருக்கிறது. படத்தின் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

    இந்நிலையில் படத்தின் ரிலீஸ் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • இந்த ஸ்மார்ட்போன் சூட் டைட்டானியம், சில்க் புளூ மற்றும் ஃப்ளோயிங் சில்வர் வண்ணங்களில் வருகிறது.
    • ரியல்மி 15T, ரியல்மி 15 மற்றும் 15 ப்ரோ போன்றே 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    ரியல்மி நிறுவனம், தனது ரியல்மி 15 சீரிசின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ரியல்மி 15T மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.57-இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6400 மேக்ஸ் 5ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதில் IP66/68/69 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ 6.0 ஓஎஸ் உடன் வருகிறது. மேலும் 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது.

    அளவில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் 7.79 மில்லிமீட்டரிலும் 181 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சூட் டைட்டானியம், சில்க் புளூ மற்றும் ஃப்ளோயிங் சில்வர் வண்ணங்களில் வருகிறது.

    புகைப்படங்கள் எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 50MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. மேலும் ஏஐ எடிட் ஜீனி, ஏஐ ஸ்னாப் மோட், ஏஐ லேண்ட்ஸ்கேப், ஏஐ இரேசர் மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் உள்ளிட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.

    ரியல்மி 15T, ரியல்மி 15 மற்றும் 15 ப்ரோ போன்றே 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 10W ரிவர்ஸ் சார்ஜிங்குடன் 31 நிமிடங்களில் 50% சார்ஜுக்கு 60W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ரியல்மி 15T ஸ்மார்ட்போனின் விலை ரூ. 18,999 என துவங்குகிறது. ரியல்மி 15T ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், ரியல்மி வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    8-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    10-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 8-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • ராகுல் காந்தி, 2016-ம் ஆண்டு பதிவு செய்த எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
    • ஜிஎஸ்டி விகிதத்தில் 18% உச்சவரம்பு என்பது அனைவரின் நலனுக்காகவும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

    இன்றைய காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களால் சிலருக்கு நன்மையும், சிலருக்கும் தீமையும் ஏற்படுகிறது. இது சிலரது வாழ்க்கையில் மட்டுமில்லாமல் அரசியலிலும் நிகழத்தான் செய்கிறது.

    ஆளும் கட்சி குறித்து எதிர்க்கட்சியாக இருக்கும் போது பேசும் பிரச்சனைகள், ஆளுங்கட்சியான பிறகு எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து சில சமயங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இது சிலருக்கு நன்மையாகவும் இருந்திருக்கிறது. சிலருக்கு தீமையாகவும் இருந்திருக்கிறது. அதனால் சமூக வலைத்தளங்களை கையாள்வதற்கு அரசியல் கட்சியினர் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

    இதுபுறம் இருக்க... நல்லது யார் சொன்னாலும், செய்தாலும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழையும் பொழியத்தான் செய்கிறது.



    அந்த வகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, 2016-ம் ஆண்டு பதிவு செய்த எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

    2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி ராகுல் காந்தி எக்ஸ் தள பக்கத்தில், இன்று ஜிஎஸ்டி கவுன்சில் தனது விவாதங்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஜிஎஸ்டி விகிதத்தில் 18% உச்சவரம்பு என்பது அனைவரின் நலனுக்காகவும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். அது தற்போது வைரலாகிறது.

    காரணம், நேற்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரி விகிதம் 18 சதவீதம் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது தான். 

    • மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை.
    • ஜி.எஸ்.டி. வரியை முன்பு உயர்த்தியதும் பா.ஜ.க. அரசு தான், தற்போது குறைத்ததும் பா.ஜ.க. அரசு தான்.

    கிண்டி:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் புதிதாக எந்த நோய் தொற்றும் பரவவில்லை.

    * மாஸ்க் அணிவது கட்டாயம் போன்ற பதற்றமாமன நிலை எதுவும் இல்லை.

    * சுகாதாரமற்ற நீர்நிலைகள் மூலம் கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று ஏற்படுகிறது.

    * தமிழகத்தில் தற்போது பருவமழை கால நோய் தொற்று பாதிப்புதான் உள்ளது. பதற்றம் தேவையில்லை.

    * மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை.

    * ஜி.எஸ்.டி. வரியை முன்பு உயர்த்தியதும் பா.ஜ.க. அரசு தான், தற்போது குறைத்ததும் பா.ஜ.க. அரசு தான் என்றார். 

    • சட்டசபை கூட்டம் நடந்த போதும் அவர் எடப்பாடி பழனிசாமியை கண்டு கொள்ளவில்லை.
    • அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி தவறாக வழிநடத்தி செல்கிறார் என்று அவர் தனது ஆதரவாளர்களிடமும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடமும் கூறி வந்தார்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் நாளை மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்துள்ளார். அ.தி.மு.க. தொண்டர்களின் மன நிலையை அப்போது பிரதிபலிப்பேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    அவரது இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் செங்கோட்டையன் என்ன சொல்லப்போகிறார்? என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    செங்கோட்டையன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாளை விமர்சனம் செய்து பேசுவார் என்பது அனைவரது மனதிலும் தோன்றியுள்ளது. ஆனால் அந்த விமர்சனம் எத்தகைய தன்மைக் கொண்டதாக இருக்கும் என்பதுதான் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

    இந்த அதிரடி உருவானதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. முகமாக பார்க்கப்படும் செங்கோட்டைய னுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே உரசல் இருந்து வருகிறது.

    அ.தி.மு.க. மூத்த தலைவராக இருந்த போதிலும் தன்னை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு புறக்கணிப்பதாக செங்கோட்டையன் அதிருப்தியுடன் இருந்து வருகிறார். பல தடவை தன்னை ஓரங்கட்டி விட்டதாகவும் அவர் நினைத்ததுண்டு.

    ஆனால் கட்சிக்கு எதிராக அவர் ஒருபோதும் செயல்பட்டதில்லை. இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்ட போதெல்லாம் இந்த கருத்தை செங்கோட்டையன் அழுத்தமாக கூறினார். கடந்த ஆண்டு அ.தி.மு.க.வின் 6 மூத்த தலைவர்களான செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், அன்பழகன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பது பற்றி ஆலோசித்தனர்.

    அப்போது முதல் இப்போது வரை ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க.வில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வருகிறார். இது செங்கோட்டையனுக்கு மிகுந்த அதிருப்தியை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட போது செங்கோட்டையனை மாவட்ட செயலாளர் என்ற முறையில் கலந்து ஆலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக அறிவிப்புகளை வெளியிட்டார். இது தன்னை அவமரியாதை செய்வதுபோல இருப்பதாக செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களிடம் குமுறலை வெளிப்படுத்தினார்.

    இதன் தொடர்ச்சியாகத்தான் அவர் அத்திகடவு, அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான அ.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதுபோல சட்டசபை கூட்டம் நடந்த போதும் அவர் எடப்பாடி பழனிசாமியை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் சமீபத்தில் அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் புதிய பணிகளுக்கு நியமிக்கப்பட்டனர். அப்போது ஈரோடு மாவட்ட ஐ.டி. பிரிவு செயலாளர் ஏ.வி.எம். செந்திலுக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதனால் செங்கோட்டையனின் அதிருப்தி சமீபத்தில் மேலும் அதிகரித்தது. அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி தவறாக வழிநடத்தி செல்கிறார் என்று அவர் தனது ஆதரவாளர்களிடமும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடமும் கூறி வந்தார்.

    இதன் எதிரரொலியாகத் தான் நாளை நிருபர்களை சந்தித்து தனது குமுறல்களை கொட்டித் தீர்க்க இருப்பதாக தெரிகிறது. இது அ.தி.மு.க.வில் பூகம்பத்தை ஏற்படுத்துமா? அல்லது புஸ்வானமாகுமா? என்று ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

    • நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார்.
    • நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

    நிவின் பாலி,  தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

    நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நாளை காலை 10.10 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது.

    • தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி வருகிற 10-ந் தேதிவரை விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • அன்புமணி மீது அடுத்த வாரம் நடவடிக்கை பாயலாம் என்று பா.ம.க. தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிா்வாகக்குழுக் கூட்டம் நேற்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவுரவத் தலைவா் ஜி.கே. மணி, பொதுச்செயலாளா் முரளி சங்கா், வன்னியா் சங்கத் தலைவா் பு.தா. அருள் மொழி, பா.ம.க. நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஸ்ரீகாந்தி, எம்.கே. ஸ்டாலின் உள்பட 20 போ் பங்கேற்றனா்.

    இக்கூட்டத்துக்குப் பின்னா் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணி, கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதன் தொடா்ச்சியாகவே 22 போ் கொண்ட கட்சி நிா்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தி, அன்புமணி மீதான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளோம். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி வருகிற 10-ந் தேதிவரை விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதமும் கட்சியின் பொதுச்செயலா் வழியாக அன்புமணிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

    இந்தக் கடிதத்துக்கும் அவா் உரிய காலத்துக்குள் பதிலளிக்காவிடில் நிர்வாகக் குழுவின் முடிவின் படி, அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் டாக்டர் அன்புமணி மீது அடுத்த வாரம் நடவடிக்கை பாயலாம் என்று பா.ம.க. தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆனால் டாக்டர் ராமதாஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் எந்த கடிதத்துக்கும் பதில் அளிக்க கூடாது என்று டாக்டர் அன்புமணி தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    பதில் சொல்லாமல் தொடர்ந்து மவுனத்தை கடைப்பிடித்து அதையே டாக்டர் ராமதாசுக்கு பதிலாக தெரிவிக்கவும் அன்புமணி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக பா.ம.க. விவகாரம் கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு மாறும்.

    அந்த சமயத்தில் சட்ட ரீதியாக அனைத்து சவால்களையும் சந்திக்கலாம் என்று டாக்டர் அன்புமணி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ×