என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமதாஸ் கெடு: பதில் சொல்லாமல் மவுனத்தை கடைபிடிக்க அன்புமணி முடிவு
- தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி வருகிற 10-ந் தேதிவரை விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- அன்புமணி மீது அடுத்த வாரம் நடவடிக்கை பாயலாம் என்று பா.ம.க. தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிா்வாகக்குழுக் கூட்டம் நேற்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவுரவத் தலைவா் ஜி.கே. மணி, பொதுச்செயலாளா் முரளி சங்கா், வன்னியா் சங்கத் தலைவா் பு.தா. அருள் மொழி, பா.ம.க. நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஸ்ரீகாந்தி, எம்.கே. ஸ்டாலின் உள்பட 20 போ் பங்கேற்றனா்.
இக்கூட்டத்துக்குப் பின்னா் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணி, கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதன் தொடா்ச்சியாகவே 22 போ் கொண்ட கட்சி நிா்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தி, அன்புமணி மீதான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளோம். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி வருகிற 10-ந் தேதிவரை விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதமும் கட்சியின் பொதுச்செயலா் வழியாக அன்புமணிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்தக் கடிதத்துக்கும் அவா் உரிய காலத்துக்குள் பதிலளிக்காவிடில் நிர்வாகக் குழுவின் முடிவின் படி, அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் டாக்டர் அன்புமணி மீது அடுத்த வாரம் நடவடிக்கை பாயலாம் என்று பா.ம.க. தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆனால் டாக்டர் ராமதாஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் எந்த கடிதத்துக்கும் பதில் அளிக்க கூடாது என்று டாக்டர் அன்புமணி தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பதில் சொல்லாமல் தொடர்ந்து மவுனத்தை கடைப்பிடித்து அதையே டாக்டர் ராமதாசுக்கு பதிலாக தெரிவிக்கவும் அன்புமணி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக பா.ம.க. விவகாரம் கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு மாறும்.
அந்த சமயத்தில் சட்ட ரீதியாக அனைத்து சவால்களையும் சந்திக்கலாம் என்று டாக்டர் அன்புமணி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.






