என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செங்கோட்டையனின் நாளைய பேட்டி அ.தி.மு.க.வில் பூகம்பத்தை ஏற்படுத்துமா? - அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் எதிர்பார்ப்பு
    X

    செங்கோட்டையனின் நாளைய பேட்டி அ.தி.மு.க.வில் பூகம்பத்தை ஏற்படுத்துமா? - அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் எதிர்பார்ப்பு

    • சட்டசபை கூட்டம் நடந்த போதும் அவர் எடப்பாடி பழனிசாமியை கண்டு கொள்ளவில்லை.
    • அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி தவறாக வழிநடத்தி செல்கிறார் என்று அவர் தனது ஆதரவாளர்களிடமும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடமும் கூறி வந்தார்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் நாளை மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்துள்ளார். அ.தி.மு.க. தொண்டர்களின் மன நிலையை அப்போது பிரதிபலிப்பேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    அவரது இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் செங்கோட்டையன் என்ன சொல்லப்போகிறார்? என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    செங்கோட்டையன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாளை விமர்சனம் செய்து பேசுவார் என்பது அனைவரது மனதிலும் தோன்றியுள்ளது. ஆனால் அந்த விமர்சனம் எத்தகைய தன்மைக் கொண்டதாக இருக்கும் என்பதுதான் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

    இந்த அதிரடி உருவானதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. முகமாக பார்க்கப்படும் செங்கோட்டைய னுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே உரசல் இருந்து வருகிறது.

    அ.தி.மு.க. மூத்த தலைவராக இருந்த போதிலும் தன்னை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு புறக்கணிப்பதாக செங்கோட்டையன் அதிருப்தியுடன் இருந்து வருகிறார். பல தடவை தன்னை ஓரங்கட்டி விட்டதாகவும் அவர் நினைத்ததுண்டு.

    ஆனால் கட்சிக்கு எதிராக அவர் ஒருபோதும் செயல்பட்டதில்லை. இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்ட போதெல்லாம் இந்த கருத்தை செங்கோட்டையன் அழுத்தமாக கூறினார். கடந்த ஆண்டு அ.தி.மு.க.வின் 6 மூத்த தலைவர்களான செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், அன்பழகன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பது பற்றி ஆலோசித்தனர்.

    அப்போது முதல் இப்போது வரை ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க.வில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வருகிறார். இது செங்கோட்டையனுக்கு மிகுந்த அதிருப்தியை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட போது செங்கோட்டையனை மாவட்ட செயலாளர் என்ற முறையில் கலந்து ஆலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக அறிவிப்புகளை வெளியிட்டார். இது தன்னை அவமரியாதை செய்வதுபோல இருப்பதாக செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களிடம் குமுறலை வெளிப்படுத்தினார்.

    இதன் தொடர்ச்சியாகத்தான் அவர் அத்திகடவு, அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான அ.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதுபோல சட்டசபை கூட்டம் நடந்த போதும் அவர் எடப்பாடி பழனிசாமியை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் சமீபத்தில் அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் புதிய பணிகளுக்கு நியமிக்கப்பட்டனர். அப்போது ஈரோடு மாவட்ட ஐ.டி. பிரிவு செயலாளர் ஏ.வி.எம். செந்திலுக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதனால் செங்கோட்டையனின் அதிருப்தி சமீபத்தில் மேலும் அதிகரித்தது. அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி தவறாக வழிநடத்தி செல்கிறார் என்று அவர் தனது ஆதரவாளர்களிடமும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடமும் கூறி வந்தார்.

    இதன் எதிரரொலியாகத் தான் நாளை நிருபர்களை சந்தித்து தனது குமுறல்களை கொட்டித் தீர்க்க இருப்பதாக தெரிகிறது. இது அ.தி.மு.க.வில் பூகம்பத்தை ஏற்படுத்துமா? அல்லது புஸ்வானமாகுமா? என்று ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

    Next Story
    ×