என் மலர்
தலைப்புச்செய்திகள்
- காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது.
- சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.
நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பஸ் ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது.
இதனால் அந்த பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து சாலையில் கிடந்த தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு காரை வழிமறித்து நின்று வாக்குவாதம் செய்துள்ளார். உடனே காரில் இருந்து இறங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் மீது காரை ஏற்றியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.
சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாக பரவிய அந்த வீடியோ பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறியது.
இதனிடையே அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்தபோது அந்த வாலிபரும், சப்-இன்ஸ்பெக்டரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து துணை கமிஷனர் பிரசன்ன குமார் கூறுகையில், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது உரிய விசாரணைக்கு பின்னர் குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
புகாருக்கு உள்ளான காந்திராஜன் காவல் நிலைய பணியில் இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவருக்கு போக்குவரத்து பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் காரில் பணிக்கு சென்று வந்த நிலையில் தற்போது மதுபோதையில் வந்து ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் புகாருக்குள்ளான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது.
- முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருந்தார்.
- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் அறிவித்திருப்பது, இறுதி முடிவாக இருக்காது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் விலகி உள்ளார்.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதுதொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் அறிவித்திருப்பது, இறுதி முடிவாக இருக்காது என்று தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் இணைந்தாலும் அது உடைந்த கண்ணாடி போன்று கீறல்களுடன்தான் இருக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார்.
- சட்டசபையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி.
- சபையை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி மார்ச் 12-ந் தேதி ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27-ந் தேதி வரை (13 நாட்கள்) மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
சட்டசபையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் (செப்டம்பர்) சட்டசபை கூட்டப்பட வேண்டும்.
அதன்படி புதுச்சேரி சட்டசபையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபையை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோப்புகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்கின்றனர்.
தொடர்ந்து ஜி.எஸ்.டி. திருத்த மசோதா, எளிய முறையில் தொழில் தொடங்க அனுமதி குறித்து மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இன்று ஒருநாள் மட்டுமே சட்டசபை நடைபெறும் எனத்தெரிகிறது. எத்தனை நாள் சபை நடத்தப்படும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து தெரிவிக்கப்படும்.
- நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 82,160-க்கும் விற்பனையானது.
- தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த வாரம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சற்று குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சவரனுக்கு 580 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,240-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்து ஒரு சவரன் ரூ. 82,160-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 141 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,160
16-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,240
15-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,680
14-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
13-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-09-2025- ஒரு கிராம் ரூ.142
16-09-2025- ஒரு கிராம் ரூ.144
15-09-2025- ஒரு கிராம் ரூ.143
14-09-2025- ஒரு கிராம் ரூ.143
13-09-2025- ஒரு கிராம் ரூ.143
- பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்.
பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.
அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இருநாடுகளும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இனிமேல் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இந்தியா மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- நேசம், உல்லாசம் ஆகிய 2 படங்களில் அஜித் குமாருக்கு ஜோடியாக மகேஷ்வரி நடித்திருந்தார்.
- கடைசி நாள் சூட்டிங்கின் போது அஜித்தை இனிமேல் பார்க்க முடியாதே என்று கவலையாக இருந்தேன்.
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித்தை காதலித்தேன் என்று பிரபல நடிகை மகேஸ்வரி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1997ம் ஆண்டு வெளியான நேசம், உல்லாசம் ஆகிய 2 படங்களில் அஜித் குமாருக்கு ஜோடியாக மகேஸ்வரி நடித்திருந்தார். அந்த சமயத்தில் அஜித்குமார் மீது தனக்கு கிரஷ் ஏற்பட்டது நடிகை மகேஸ்வரி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெகபதி பாபுவின் டாக் ஷோவில் கலந்து கொண்டு பேசிய மகேஸ்வரி, "அஜித் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் மீது பயங்கர கிரஷ். கடைசி நாள் சூட்டிங்கின் போது அஜித்தை இனிமேல் பார்க்க முடியாதே என்று கவலையாக இருந்தேன். அப்போது அஜித் என்னிடம் வந்து மகி, நீ எனக்கு தங்கச்சி மாதிரிமா. வாழ்க்கையில் உனக்கு என்ன தேவையாக இருந்தாலும் என்னை கூப்பிடு. நான் உனக்காக வருவேன் என்று கூறினார். அதை கேட்டதும் என் மனசே உடைச்சிடுச்சு" என்று தெரிவித்தார்.
இதை கேட்டு அருகில் இருந்த நடிகை மீனா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். மகேஸ்வரியும் மீனாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பட்டியலில் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
- போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் அந்த நாடுகளை கேட்டுக்கொண்டு உள்ளார்.
சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.
23 நாடுகளை கொண்ட அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்து இருந்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் அவற்றின் தயாரிப்பில் முக்கியமாக ஈடுபட்டுள்ள இந்த நாடுகளின் செயலால் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அந்த பட்டியலில் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த குற்றச்செயல் தடுப்பில் தவறிவிட்டதாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர் உள்ளிட்ட 5 நாடுகளை குறிப்பிட்டு இருந்த அவர், போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் அந்த நாடுகளை கேட்டுக்கொண்டு உள்ளார்.
போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்த டிரம்பின் நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
- காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.
கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவர் 6,22,338 வாக்குகள் பெற்று 4 லட்சத்துக்கு அதிகான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பிரியங்கா காந்தி வயநாடு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர்களுடன் கொட்டியம்வயலில் முன்மொழியப்பட்ட படிஞ்சரத்தாரா-பூழித்தோடு சாலைப் பகுதியைப் பார்வையிட்டார்.
பின்னர் நிலம்பூர் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை நேரில் சென்று அவர்களின் பிரச்னைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.
- வெள்ளிக்கிழமையை தவிர தினமும் 750 டோக்கன்களும், சனிக்கிழமையில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.
- பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கான டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இருந்த நடைமுறைக்குப் பதிலாக 'லக்கி டிப்' (குலுக்கல்) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் 'லக்கி டிப்' முறையால் வெளியிடப்படும். தற்போது டிசம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு இன்று முதல் 20-ந்தேதி வரை 'லக்கி டிப்' பதிவு செய்ய வேண்டும். 'லக்கி டிப்' மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கே டோக்கன்கள் ஒதுக்கப்படும். வெள்ளிக்கிழமையை தவிர தினமும் 750 டோக்கன்களும், சனிக்கிழமையில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.
பக்தர்கள் மீண்டும் இந்தச் சேவையைப் பெறுவதற்கான கால இடைவெளி 90 நாட்களுக்கு பதிலாக 180 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டி.டி.எப். வாசன் தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
- இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப். வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில், டி.டி.எப் வாசன் 5 வருடமாக காதலித்து வந்த தனது மாமன் மகளை திருமணம் செய்துள்ளார். தற்போது டி.டி.எப். வாசன் தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக மனைவியின் காலில் டி.டி.எப். வாசன் மெட்டி போடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனையடுத்து பலரும் டி.டி.எப். வாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
ரிஷபம்
பணவரவு திருப்தி தரும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பால் பெருமைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.
மிதுனம்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள். விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உண்டு.
கடகம்
சேமிப்பு அதிகரிக்கும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆபணரங்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
சிம்மம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தடைப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும்.
கன்னி
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.
துலாம்
எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். சென்ற வாரத்தில் நடைபெற வேண்டிய காரியம் இன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
விருச்சிகம்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர். வருமானம் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
தனுசு
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையலாம். சில பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவை காட்டிலும் செலவு கூடும்.
மகரம்
நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். இடம், பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். புது முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புக் கிடைக்கும்.
கும்பம்
தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்
யோகமான நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர்.






