என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்"

    • காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது.
    • சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

    நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பஸ் ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது.

    இதனால் அந்த பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    தொடர்ந்து சாலையில் கிடந்த தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு காரை வழிமறித்து நின்று வாக்குவாதம் செய்துள்ளார். உடனே காரில் இருந்து இறங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் மீது காரை ஏற்றியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.

    சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாக பரவிய அந்த வீடியோ பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறியது.

    இதனிடையே அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்தபோது அந்த வாலிபரும், சப்-இன்ஸ்பெக்டரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து துணை கமிஷனர் பிரசன்ன குமார் கூறுகையில், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது உரிய விசாரணைக்கு பின்னர் குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    புகாருக்கு உள்ளான காந்திராஜன் காவல் நிலைய பணியில் இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவருக்கு போக்குவரத்து பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் காரில் பணிக்கு சென்று வந்த நிலையில் தற்போது மதுபோதையில் வந்து ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் புகாருக்குள்ளான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது.

    • பங்காரு, ஏற்கனவே நிலப்பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
    • புகார் தொடர்பாக விசாரிக்கும்படி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கெங்கவல்லி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). லாரி டிரைவர். இதே ஊரை சேர்ந்த அவரது அத்தை பங்காரு (62). இவர்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    கடந்த 24-ந்தேதி கடம்பூரில் இருந்து பைத்தூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்ற சீனிவாசனை, பங்காருவின் உறவினர்களான ரவிச்சந்திரன், இவரது மகன்கன் மணிகண்டன், விஜி ஆகியோர் மறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை கைது செய்தனர். மணிகண்டன், விஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் பங்காரு, ஏற்கனவே நிலப்பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக விசாரிக்கும்படி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கெங்கவல்லி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி கடந்த 21-ந்தேதி கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில், கொலையுண்ட சீனிவாசன் உள்ளிட்டோரை அழைத்து விசாரித்தனர். ஆனால் பங்காருவை அழைத்து விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் புகாரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் அலட்சியமாக விசாரித்ததால் தான் இந்த கொலை நடந்ததும், முறையாக விசாரித்து இருந்தால் முன்கூட்டியே கொலையை தடுத்து இருக்கலாம் என்றும் புகார் எழுந்தது.

    இந்த விஷயம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து சிவலிங்கத்தை வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்ய போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதை ஏற்று கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர் சிவலிங்கத்தை ஊட்டிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    • ஆலங்குளம் பகுதியில் மணல் லாரி வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரிடம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றை தினேஷ் பாபு அன்பளிப்பாக வாங்கி உள்ளார்.
    • ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசுக்கு தகவல் வரவே, அவர் தினேஷ் பாபுவை அழைத்து அந்த செல்போனை வாங்கி லாரி உரிமையாளரிடமே திருப்பி கொடுத்துள்ளார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் தினேஷ் பாபு.

    இவர் அப்பகுதியில் உள்ள மணல் கடத்தல் கும்பலிடம் சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இவர் ஆலங்குளம் பகுதியில் மணல் லாரி வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரிடம் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றை அன்பளிப்பாக வாங்கி உள்ளார்.

    இதுகுறித்து ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசுக்கு தகவல் வரவே, அவர் தினேஷ் பாபுவை அழைத்து அந்த செல்போனை வாங்கி லாரி உரிமையாளரிடமே திருப்பி கொடுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் பாபு லாரி உரிமையாளர் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கருதி கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் லாரி உரிமையாளர் ஆலங்குளம் காவல் நிலைய எல்லையை விட்டு கடையம் காவல் நிலைய எல்லைக்குள் மணல் அள்ளிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    தகவல் அறிந்த தினேஷ் பாபு அங்கு சென்று லாரியை பறிமுதல் செய்து ஆலங்குளம் போலீஸ் நிலையம் கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து அந்த லாரி உரிமையாளர் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ்க்கு புகார் அனுப்பினார்.

    அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்திபெக்டர் தினேஷ் பாபுவை பணி மாறுதல் செய்ய தென்மண்டல ஐ.ஜி.க்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பரிந்துரை செய்தார். அதன் பேரில் தினேஷ் பாபு உடனடியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

    ×