என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • பிள்ளையார்பட்டி கோயில் தலைமை குருக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • திருக்கார்த்திகை தினத்தன்று திருக்கோவில்களில் தீபமேற்றி வழிபடுவதுதான் வழக்கம்.

    கார்த்திகை தீபத்தன்று தவிர இதர நாட்களில் கோயில்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது என பிள்ளையார்பட்டி கோயில் தலைமை குருக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவாகமங்களில் கூறியபடி திருக்கார்த்திகை தினத்தன்று திருக்கோவில்களில் தீபமேற்றி வழிபடுவதுதான் வழக்கம் என்பதையும் இதர நாட்களில் இவ்வழிபாடு செய்வது வழக்கத்திற்கு மாறானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

    முன்னதாக, கார்த்திகை தீபத்தை தவிர்த்து பிற நாட்களில் தீபமேற்றுவது நல்லதல்ல என்றும், இதர நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது எனவும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அர்ச்சகர்கள், கோயில் செயல் அலுவலருக்கு கடிதம் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொடைவள்ளல் தந்த கழகத்தை, அரண்போல் காத்து நின்ற நம் அம்மாவின் வழி நடக்க உறுதி ஏற்கிறோம்.
    • 2026-ல், கோட்டையிலே நமது வெற்றிக்கொடி பறக்கட்டும், கொள்கையிலே நமது முழக்கம் தொடரட்டும் என்று சூளுரைப்போம்.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கருப்பு சட்டை அணிந்திருந்தார்.

    முன்னதாக அங்கு முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

    காலை 10.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி அங்கு வந்தார். அப்போது தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.

    அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடியே எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவிடத்தை அடைந்தார். அங்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் உறுதி மொழி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கொடைவள்ளல் தந்த கழகத்தை, அரண்போல் காத்து நின்ற நம் அம்மாவின் வழி நடக்க உறுதி ஏற்கிறோம்.

    திராவிட மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். கழகம் காப்போம். வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம்.

    தமிழ்நாடு சிறக்க, தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம். 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்று திக்கெட்டும் வெற்றியைப் படைத்திடுவோம். திசையெட்டும் வெற்றியை அடைந்திடுவோம்.

    அதற்காக, அயராது உழைப்போம். மீண்டும் கழக ஆட்சி அமைந்திட வெற்றிச் சங்கொலி முழங்குவோம். வீர சபதமேற்கிறோம். 2026-ல், கோட்டையிலே நமது வெற்றிக்கொடி பறக்கட்டும், கொள்கையிலே நமது முழக்கம் தொடரட்டும் என்று சூளுரைப்போம்.

    சட்டமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. இந்திய அரசியல் வரலாற்றில், தொடர்ந்து 3 முறை ஆட்சியைத் தந்தவர் எம்.ஜி.ஆர். இந்திய அரசியல் வரலாற்றில், ஆளும் கட்சியை தொடர்ந்து 2-வது முறையாக, ஆளுகின்ற இயக்கமாக்கி நம் கழகத்திற்கு, பெருமையைத் தேடித் தந்தவர் அம்மா.

    ''எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்'' என்று சூளுரைத்த, நம் அன்புத் தாயின் சபதத்தை நிறைவேற்றிடும் வகையில் 2026-ல் நடைபெற உள்ள, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வகுத்த பாதையில், அம்மா கொள்கை வழியில் நின்று இரவு, பகல் பாராமல் அரும்பணியாற்றி, தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் கழக ஆட்சியை அமைத்திடுவோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.

    இந்த உறுதியை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், தம்பிதுரை, நத்தம் விசுவநாதன், பொன்னையன், செம்மலை, விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜு, ரமணா, பா.வளர்மதி, கோகுலஇந்திரா, வாலாஜா பாத் கணேசன், நடிகை கவுதமி, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதிராஜாராம், கே.பி.கந்தன், ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்தியா, வி.எஸ்.பாபு, அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோகர், இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர், பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர், முன்னாள் மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் வக்கீல் ஆ.பழனி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் பி.சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி மின்சார சத்திய நாராயண மூர்த்தி, டாக்டர் சுனில், வழக்கறிஞர் சதாசிவம், வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, ஏ.எம்.காமராஜ், ஷேக் அலி, குமரி சந்தோஷ், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, வேல் ஆதித்தன், ஆயிரம் விளக்கு டி.ஈஸ்வரன், சைதை சொ.கடும்பாடி, ராணி அண்ணாநகர் கோவிந்தன், பி.டி.சி.முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
    • நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

    இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், சென்னை உள்பட பயணிகள் விமான நிலையத்தில் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதன்படி, சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.20,599 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.14,961ஆக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமான கட்டணம் ரூ.6,805-ல் இருந்து ரூ.34,403 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமான கட்டணம் ரூ.5,980-ல் இருந்து ரூ.42,448 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமான கட்டணம் ரூ.7,746-ல் இருந்து ரூ.32,782 வரை உயர்ந்துள்ளது.

    • மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது.
    • பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது.

    சென்னை :

    திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம் என்று கூறியுள்ளார். 



    • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து எடுத்துரைத்தேன்.
    • தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பின்னர் செங்கோட்டையனுடன் பேசவில்லை.

    சென்னை:

    மறைந்த ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * தனிக்கட்சியை தொடங்க இருப்பதாக நான் எங்கேயும் எந்த சூழலிலும் சொல்லவில்லை.

    * டெல்லிக்கு சென்று மரியாதை நிமித்தமாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன்.

    * பிரிந்து இருப்பவர்கள் ஒன்றுபட வேண்டும் என நோக்கத்தில் தான் அமித்ஷாவை சந்தித்தேன்.

    * பிரிந்து இருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என அமித்ஷாவிடம் கூறினேன்.

    * மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து எடுத்துரைத்தேன்.

    * தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பின்னர் செங்கோட்டையனுடன் பேசவில்லை என்றார். 

    • அரசியலில் இரும்புப் பெண்மணியாக இருந்து, அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்றவர்.
    • ஜெயலலிதா மேற்கொண்ட உறுதிமிக்க அரசியல் பயணம் என்றென்றும் அவர் புகழைப் பறைசாற்றும்.

    சென்னை:

    ஜெயலலிதா நினைவு நாளையொட்டி தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு உள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    அரசியலில் இரும்புப் பெண்மணியாக இருந்து, அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்று, மக்கள் இதயங்களில் இன்றுவரை நீங்காத இடம் பெற்றிருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளில் அன்னாரை நினைவு கூர்கிறேன்.

    பெண்கள் முன்னேற்றம், தமிழக நலன், ஒன்றுபட்ட இந்தியா என்று பல வகைகளில் அவர் மேற்கொண்ட உறுதிமிக்க அரசியல் பயணம் என்றென்றும் அவர் புகழைப் பறைசாற்றும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காவல் நிலையத்திலேயே தலைமைக்காவலருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிக்கிறது.
    • தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்குள் நேற்றிரவு நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் முருகன் என்பவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல் நிலையத்திலேயே தலைமைக்காவலருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    அதே தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி என்ற வழக்கறிஞர் நேற்று முன்நாள் காலை அவரது அலுவலகத்தில் அமர்ந்து வழக்கு தொடர்பான கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு கும்பல் சரமாரியாக படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளது. திமுகவைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டு 3 நாள்களாகும் நிலையில் அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பதைக் கூட காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக நிர்வாகி ஹரிஷ் என்பவர் ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கொலைகள் எவ்வளவு மலிவானவையாகி விட்டன என்பதற்கு அடுத்தடுத்து நடந்த இந்தக் கொலைகள் தான் சான்றாகும்.

    தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தி மக்களை பாதுகாக்க வேண்டியவர்கள் காவல்துறையினர், சட்டத்தைப் பாதுகாத்து நீதியை நிலை நிறுத்த வேண்டியவர்கள் வழக்கறிஞர்கள். ஆனால், காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்குமே பாதுகாப்பற்ற நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர். கொள்ளைகளும் பெருகி விட்டன. ஆனால், அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. ஊழல்களைத் தவிர வேறு எதிலும் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. திமுக அரசு உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • தமிழகத்தின் பல்வேறு கோயில்களைச் சேர்ந்த குருக்கல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • இதர நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது என கருத்து.

    கார்த்திகை தீபத்தை தவிர்த்து பிற நாட்களில் தீபமேற்றுவது நல்லதல்ல என்றும், இதர நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது எனவும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அர்ச்சகர்கள், கோயில் செயல் அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவாகமங்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது விஷேடமான முறையில் அதிவாசங்களுடன் கூடிய தீபத்தை திருக்கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், பிரகாரங்கள், சொல்லப்பட்டிருக்கின்றது.

    அத்தகைய திருக்கார்த்திகையன்று திருக்கோவில் சமீபத்தில் உள்ள மலைகள், கிரிவலப் பாதைகள் ஆகிய இடங்களில் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களாக அமைகின்றது. மேலும் கார்த்திகை மாதம் வருகின்ற கார்த்திகை நட்சத்திரத்திலோ அல்லது பௌர்ணமியிலோ தீபம் ஏற்றுவது உத்தர காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

    இதர நாட்களில் செய்யப்படுவது விஷேடமாக சொல்லப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.
    • திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா அன்று, மலையில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

    உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவு நேற்று முன்தினம் நிறைவேற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக உடனடியாக அதே நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. மத்திய படை பாதுகாப்புடன் மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்று தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவில், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல யாருக்கும் போலீசார் அனுமதி அளிக்காததால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

    நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அதை நேற்று அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் தனது உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என்பது குறித்து விசாரிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த விவகாரத்தை நேற்று மாலை மீண்டும் எடுத்தார். அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் ஜோதி ஆஜராகி வாதிட்டார்.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த ஐகோர்ட் மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது. எனவே அதுவரை உரிய அவகாசம் வழங்க வேண்டும் என வாதாடினார்.

    அதற்கு நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க கோவில் செயல் அலுவலர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தேன். அவர் இப்போது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

    மேலும் நீதிபதி கூறுகையில், இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் உடனடியாக காணொலியில் ஆஜராக வேண்டும் என்றார்.

    அதன்படி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நீதிபதி முன்பு காணொலியில் ஆஜர் ஆனார்.

    அவரிடம் நீதிபதி, "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரர் உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிட்டு இருந்தேன். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களை தீபம் ஏற்ற அனுமதிக்க மறுத்தது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு போலீஸ் கமிஷனர், "திருப்பரங்குன்றம் மலையை சுற்றிலும் பகலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தோம். அந்த நேரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவை அனுப்பி இருந்தார். அதை அமல்படுத்தும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கும் வகையிலும் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை" என்றார்.

    இதைக்கேட்ட நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை சுற்றுப்பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தி உள்ள 144 உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் இன்று (அதாவது நேற்று) இரவு 7 மணிக்குள் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் குழுவினரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும்.

    தீபம் ஏற்றிய பின்பு, கோர்ட்டின் உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் இன்று நேரில் ஆஜராகி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஐகோர்ட் மதுரைக்கிளை இவ்வாறு உத்தரவிட்டதும் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பரங்குன்றம் மலையில் இரவு 7 மணிக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.

    இதற்கிடையே ஐகோர்ட் மதுரைக்கிளையின் உத்தரவு நகலுடன் வக்கீல்கள், மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் வந்தனர். ஆனால், போலீசார், மலைக்கான படிப்பாதையை குறுக்காக மறித்து போலீஸ் வாகனத்தை கொண்டு சென்று நிறுத்தினர். இரும்பு தடுப்புகளையும் ஏற்படுத்தினர். யாரையும் முன்னேறிச் செல்ல அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து 2-வது நாளாக நேற்று தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதற்கிடையே ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,

    நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு மற்றும் காவல்துறை செயல்படுவதாக தெரிவித்த மனுதாரர், மத்திய உள்துறை அமைச்சகத்தை இணைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

    மனு மீதான கோரிக்கையை விரிவாக்க வேண்டாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். என்ன நடந்தது என்பது குறித்து CISF அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

    சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • திராவிட மாடல் அரசு வேகமாக செயல்பட்டு முதலீடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
    • எலெக்ட்ரானிக்ஸ் துறையின் தலைநகரம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

    காஞ்சிபுரம்:

    அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் கைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட 'கார்னிங் கொரில்லா கண்ணாடி உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். ஆப்டிமஸ் இன்பிராகாம் நிறுவனம், இந்தியாவில் செல்போன் உபரி பொருள்கள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.

    பாரத் இன்னோவேட்டிவ் கண்ணாடி டெக்னாலஜீஸ் நிறுவனம், கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் ஆப்டிமஸ் இன்பிராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.

    இந்நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1003 கோடி முதலீட்டில் 840 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் முன்-கவர் கண்ணாடி உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இத்திட்டத்தில் உருவாக்கப்படும் பொருட்கள் நாட்டிலேயே முதன் முறையாக உயர் தொழில் நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.

    இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டு அதே ஆண்டு ஜூன் மாதம் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி வைத்த 17 மாதங்களில் இத்திட்டத்தின் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் வணிகம் புரிதலுக்கான சூழலமைப்பு சிறப்பு உள்ளதற்கு இது சிறந்த சான்றாகும்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * திராவிட மாடல் அரசு வேகமாக செயல்பட்டு முதலீடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

    * ஆயிரத்துக்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டது.

    * எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் 41 சதவீதம் பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம்.

    * எலெக்ட்ரானிக்ஸ் துறையின் தலைநகரம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

    * செமி கண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு துறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    * தொலைநோக்கு சிந்தனையுடன் கொள்கைகளை உருவாக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    * முதலீட்டாளர்களுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பை தந்து தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன் பரசன், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குனர் அலர்மேல்மங்கை, கார்னிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் ஆன்ட்ரூ பெக், கரர்னிங் நிறுவனத் தின் சர்வதேச துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் கோகன் டோரான், ஆப்டிமஸ் இன் பிராகாம், நிறுவனத்தின் தலைவர் அசோக்குமார் குப்தா, கார்னிங் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், சுதிர் பிள்ளை, கார்னிங் நிறுவனத்தின் வணிக இயக்குனர் ஜோய் லீ, கார்னிங் கொரில்லா கண்ணாடி ஆசியா நிறுவனத்தின் சர்வதேச தலைவர் ஜூம் எஸ்.கிம், பிக்டெக் நிறுவனத்தின் திட்டத் தலைவர் டாக்டர் ரவி கட்டாரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தி.மு.க.வினர் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
    • ஜெயலலிதா அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவுத:-

    தமிழக முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் நினைவு தினம் இன்று.

    சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவர்தம் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இதையடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×