என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தேசிய கட்சிகள் தொடங்கி ஆளுங்கட்சி வரை செங்கோட்டையனை இழுக்க முயற்சி செய்தார்கள்.
    • அண்ணன் செங்கோட்டையன் எடுத்த முடிவுகளில் முக்கியமான ஒரு முடிவு த.வெ.க.வில் இணைந்தது.

    பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    அப்போது பேசிய தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:

    * தேசிய கட்சிகள் தொடங்கி ஆளுங்கட்சி வரை செங்கோட்டையனை இழுக்க முயற்சி செய்தார்கள்.

    * அண்ணன் செங்கோட்டையன் எடுத்த முடிவுகளில் முக்கியமான ஒரு முடிவு த.வெ.க.வில் இணைந்தது.

    * த.வெ.க.வு.க்கு 20% வாக்குகள் தற்போதே உறுதியாகி விட்டது.

    * எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக ஜெயலலிதாவுடன் இணைந்து மாற்றம் கொண்டு வந்தவர் அண்ணன் செங்கோட்டையன்.

    * வெற்றி, தோல்வி, பல இழப்புகளின் போதும் கட்சியுடன் துணைநின்ற அனுபவத்துடன் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன்.
    • கட்சிக்கு மரியாதை, தொண்டர்களின் அரவணைப்பு இதுதான் செங்கோட்டையனின் இலக்கணம்.

    பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:

    * அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி.

    * த.வெ.க. எனும் கொள்கை கூட்டத்தில் முக்கியமான மாமனிதர் சேர்ந்திருக்கிறார்.

    * கட்சிக்கு மரியாதை, தொண்டர்களின் அரவணைப்பு இதுதான் செங்கோட்டையனின் இலக்கணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற காவியா என்ற ஆசிரியை கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியை காவியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் காவியாவை காதலித்து வந்ததாகவும், ஆனால், காவியாவுக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த அஜித்குமார் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவியாவை வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்திருக்கிறார்.

    தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை; யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பது ஆசிரியை காவியா படுகொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.

    இதே தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி என்ற ஆசிரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி மதன் என்பவரால் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் வீராவேசம் காட்டினார்கள். ஆனால், சரியாக ஓராண்டு கழித்து தஞ்சாவூரில் இன்னொரு ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க திமுக அரசால் முடியவில்லை.

    தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மட்டும் 7 ஆயிரம் படுகொலைகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பதைத் தேடினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.

    ஆனால், இது குறித்த கவலைகள் எதுவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. தம்மைச் சுற்றிலும் உண்மைத் தடுப்பு வேலியை அமைத்துக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உன்னத ஆட்சி நடைபெறுவதாக வீண்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தினமும் அனுபவிக்கும் கொடுமைகளை பார்க்க வேண்டும். ஆட்சியில் இருக்கப் போகும் இன்னும் சில நாள்களுக்காவது தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 



    • இன்றைய நாள் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.
    • 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி பெற்று, விஜய் தலைமையில் ஆட்சி அமையும்.

    பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    அப்போது கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறியதாவது:

    * அரை நூற்றாண்டு அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

    * இன்றைய நாள் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.

    * செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு வரப்போவதை அறிந்து பல கட்சிகள் பதறின.

    * 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி பெற்று, விஜய் தலைமையில் ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
    • வரும் திங்கட்கிழமை பாராளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    வரும் திங்கட்கிழமை பாராளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. 

    • நான் என்ற ஆணவத்தில் இருப்பவர்களை ஆண்டவன் தண்டிப்பான்.
    • ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு.

    மதுரை:

    சென்னையில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் பேசும்போது, நான் என்ற ஆணவத்தில் இருப்பவர்களை ஆண்டவன் தண்டிப்பான் என்றும், மற்றவர்கள் ஆளக்கூடாதா? என்றும் கூறியிருந்தார்.

    இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. அவர்களது கருத்தில் மற்றவர்கள் தலையிட முடியாது. அவர் (செங்கோட்டையன்) தற்போது அ.தி.மு.க.வில் இல்லை. எனவே அவரது கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று என்றார்.

    • அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.
    • 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சென்னை:

    சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவியும், அதே குடியிருப்பில் வசித்த சதீசும் காதலித்து வந்தனர். இந் நிலையில், பெற்றோர் எதிர்ப்பு காரணமாக சதீஷுடன் பேசுவதை மாணவி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

    கடந்த 2022 அக்டோபர் 13-ந்தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரெயில் நிலையம் வந்த மாணவியை, மின்சார ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி தீர்ப்பளித்தது.

    மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே போல சதீஷ் தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. சதீஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல். இது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல. மரண தண்டனை விதிக்கத்தக்க, இது அரிதிலும் அரிதான வழக்கல்ல என வாதிட்டார்.

    சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் அசன்முகம்மது ஜின்னா, காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல் அல்ல. இது ஒரு திட்டமிட்ட செயல். இரண்டு நாட்களாக நோட்டமிட்டு, 3-வது நாள் ரெயில் வரும் வரை காத்திருந்து, ரெயில் அருகில் வந்தவுடன் தள்ளிவிட்டு உள்ளார் என்பதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதால், தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சதீஷுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர். மேலும், 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல என்பதால் தான் த.வெ.க.வில் இணைந்தேன்.
    • மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தூய்மையான ஆட்சியை கேட்கிறார்கள்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் த.வெ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் த.வெ.கவில் இணைந்தனர்.

    தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் செங்கோட்டையன் பனையூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் இருந்தனர்.

    அப்போது செங்கோட்டையன் கூறியதாவது:

    * தன்னை விடாமல் பின் தொடர்ந்து ஊடகப் பணியாற்றியதற்காக நிருபர்களுக்கு பாராட்டுகள்.

    * ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஊடகப் பணியை செய்தனர்.

    * அ.தி.மு.க.வில் புரட்சி தலைவரால் அடையாளம் காட்டப்பட்டவன் நான்.

    * எம்.ஜி.ஆர்.-ஆல் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தவன் நான்.

    * எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது 100 நாள் கூட இந்த படம் ஓடாது என விமர்சித்தார்கள். பின்னர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர்.

    * அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது ஜெயலலிதா தலைமையில் பணியை மேற்கொண்டேன்.

    * ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 3 கூறுகளாக அ.தி.மு.க. என்ற இயக்கம் பிரிந்தது.

    * ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கருத்தை செயல்படுத்த இயலவில்லை.

    * அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன்.

    * பசும்பொன் சென்று திரும்பிய பின், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டேன்.

    * என்னை சார்ந்து இயங்கியவர்களும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.

    * அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என நான் கெடு விதிக்கவில்லை. எனது பேட்டியை மீண்டும் ஒரு முறை கேளுங்கள்.

    * என்னை கட்சியில் இருந்த நீக்கும் எண்ணத்தில் தான் நான் கெடு விதித்ததாக அவதூறு பரப்பினார்கள்.

    * அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று தான் நான் கூறினேன். கெடு விதிக்கவில்லை.

    * தெளிவாக முடிவு எடுத்தபின், பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தேன்.

    * தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல என்பதால் தான் த.வெ.க.வில் இணைந்தேன்.

    * தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வேண்டும்.

    * தமிழகத்தில் தூய்மையான ஒரு அரசியலை விஜய் முன்னெடுத்துள்ளார்.

    * மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தூய்மையான ஆட்சியை கேட்கிறார்கள்.

    * அன்பிற்கினிய இளவல் விஜய் வெற்றி பெறுவார்.

    புனித ஆட்சியை விஜய் கொடுப்பார் என செங்கோட்டையன் கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய செங்கோட்டையன்,

    * அ.தி.மு.க. ஆட்சி புனித ஆட்சி இல்லை என்று நான் கூறினேனா?

    * ஜெயலலிதா ஆட்சியை புனிதமான ஆட்சி இல்லை என்று கூறவில்லையே.

    * தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து யாரும் என்னை அணுகவில்லை.

    * சட்டைப் பையில் இருந்து ஜெயலலிதாவின் படத்தை எடுத்து விட்டால் விமர்சிக்க மாட்டீர்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் ஓட்டலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
    • இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    மதுரை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் முன்கூட்டியே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. 4 முனை போட்டி உருவாகும் என்ற கருத்து நிலவி வரும் நிலையில் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரலாம் என்றும், அதுதொடர்பான இறுதி முடிவு வருகிற ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி திருமண விழா மதுரையில் இன்று நடந்தது. சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த அவரது திருமணத்தை நடத்தி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    இதையடுத்து வெளியே வந்த அவரிடம், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகையில், செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இல்லை. அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. என்னிடம் கேள்வி கேட்காதீர்கள், அவரிடமே சென்று கேளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    பின்னர் தனியார் ஓட்டலில் தென்மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் தென்மாவட்ட செயலாளர்கள், அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் தென் மாவட்டங்களில் கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த போதிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளில் கூடுதல் பணியாற்றி அதனை அ.தி.மு.க. வசமாக்க வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி பலத்தையும், தி.மு.க. அரசின் மீதான மக்கள் விரோத போக்கினை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    அதேபோல் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

    • காவ்யா, அஜித் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
    • காவியாவுக்கு அவரது பெற்றோர் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூரை அடுத்த மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேல களக்குடி கொத்தட்டை பரந்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி.

    இவரது மகள் காவியா ( வயது 26). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான அஜித்குமார் (26) என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காவியாவின் பெற்றோர் அவருக்கு அவரது அத்தை மகனுடன் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்தனர். ஆனால் இந்த விவரத்தை அஜித்குமாரிடம் அவர் தெரிவிக்காமல் இருந்து வந்தார். நேற்று இரவு அஜித் குமாருடன் காவியா வீடியோ காலில் பேசினார்.

    அப்போது நிச்சயதார்த்தம் செய்த போது எடுக்கப்பட்ட போட்டோக்களை அஜித் குமாரிடம் காண்பித்தார். இதனைப் பார்த்து அஜித்குமார் கடும் ஆத்திரம் அடைந்து என்னிடம் எதுவும் கூறாமல் எப்படி நீ வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யலாம்.

    என்னுடன் தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். வேறு ஒருவரை திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று கூறி போன் இணைப்பை துண்டித்தார்.

    இந்த நிலையில் இன்று காலை காவியா பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அங்கு வந்த அஜித்குமார் என்னை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யலாம் எனக் கூறி ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக காவியாவை குத்தினார். இந்தக் கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்து காவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த அந்த வழியாக சென்ற ஏராளமானோர் கூடினர். சம்பவ இடத்திற்கு பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அம்மாபேட்டை போலீசார் விரைந்து வந்தனர். காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் குமாரை கைது செய்தனர்.

    தஞ்சை அருகே பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

    தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது.
    • சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது. ஏரி, குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

    இந்நிலையில் மலாக்கா ஜலசக்தி பகுதியில் புயல் உருவானது. இது இந்தோனேசியாவில் கரையை கடந்தது. அதன் பின்னர் இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து மலாக்கா ஜலசக்தி பகுதியில் நிலவுகிறது.

    இது கிழக்கு தென்கிழக்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். அது படிப்படியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

    இந்த நிலையில் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று நள்ளிரவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

    தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த புயலுக்கு 'டிட்வா' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் அதற்கடுத்த 48 மணிநேரத்தில் (29-ந்தேதி) வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை அதிகாரி செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் வடகடலோர தமிழக மாவட்டங்களாகும்.

    புயல் உருவாவதால் இன்று (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    29-ந்தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்யும்.

    சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    30-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 1-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது பழனிசாமி எங்கிருந்தார்?
    • மதுரைக்கு எய்ம்ஸைக் கொண்டு வரத் திராணி இல்லாத பழனிசாமிதான் வெட்கப்பட வேண்டும்.

    இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கும் அடிமை பழனிசாமி, வழக்கம் போலவே உளறிக் கொட்டியிருக்கிறார். ஒன்றிய அரசு விவகாரம் என்றால், கும்பகர்ண தூக்கம் போடும் பழனிசாமிக்கு, திமுக அரசு என்றால் வீராவேசம் வந்துவிடுகிறது. பழனிசாமிக்கு வீரத்தை ஊட்டுவதே திமுகவின் செயல்பாடுகள்தான்!

    நெல்மணிகள் நனைந்துவிட்டது என ஸ்பாட்டுக்கு போய் ஓரங்க நாடகம் போட்ட பழனிசாமி, ஒன்றிய அரசு நெல் ஈரப்பத அளவினை 22 சதவிகிதமாக உயர்த்தாததைக் கண்டிக்காமல் எங்கே போனார்?

    அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது பழனிசாமி எங்கிருந்தார்? மோடி அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை ஆதரித்த பழனிசாமி, சாகுபடி, பயிர்க்காப்பீடு பற்றியெல்லாம் பேச அருகதை இருக்கிறதா? கஜா புயலின் போது பயிர்கள் எல்லாம் நாசம் ஆன நேரத்தில், மாமனார் வீட்டு விருந்தில் கொண்டாட்டம் போட்ட பழனிசாமி எல்லாம் விவசாயியா?

    நெல் கொள்முதலுக்குரிய ஈரப்பத அளவை உயர்த்தாமல் வஞ்சிப்பது ஒன்றிய பாஜக அரசு. அதை எதிர்த்துக் கேட்கத் திராணியில்லாத, தைரியமில்லாத துரோகி பழனிசாமி வீணாகத் தமிழ்நாடு அரசின் மீதும் தமிழ்நாடு முதலமைச்சர் மீதும் அவதூறை பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்களா என்ன?

    விவசாயத்தை அழித்து விவசாயிகளை விவசாயத்தை விட்டே அப்புறப்படுத்தும் நோக்கிலான மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்!

    பல்லுயிர்ப் பெருக்கத்தையும் விவசாயத்தையும் அழிக்கும் மதுரை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் காரணமான கனிம வளச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்த வரலாறு தானே உங்களுடையது.

    'மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே சொல்லியிருப்பார்கள், இந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குச் செய்தன என்னவென்று!' எனக் கேட்கிறார். 11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்கடித்து பழனிசாமிக்கு மக்கள் அளித்த பதில் தெரியவில்லையா?

    கோவை, மதுரை மெட்ரோவுக்கு வர வேண்டும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதையே பெரும் சாதனையாகத் தம்பட்டம் அடிக்கிறார் பழனிசாமி. அவர் ஆட்சியில் இருந்த போது அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸைக் கொண்டு வரத் திராணி இல்லாத பழனிசாமிதான் வெட்கப்பட வேண்டும்.

    டிவி-யை பார்த்து ஆட்சி நடத்திய கையாலாகாத, நிர்வாகத் திறனற்றவர் என்று இந்தியாவே சிரித்த முதல்வர்தானே பழனிசாமி. கால்கள் மாறுவதையும் கார்கள் மாறுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் பழனிசாமிக்கு ரோசம் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பார்த்துவிட்டு வரும் போது ஏசி காரிலும் 'குப்' என்று வேர்க்கும் அளவுக்கு கர்சீப்பை பயன்படுத்தியதை மறந்துவிட்டீர்களா பழனிசாமி?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×