search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Frost"

    • கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் சீதோசன நிலை மாறி மாறி வருகிறது.
    • வாகனங்கள் அனைத்தும் சாலையில் மிகவும் ஊர்ந்தபடியே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவும், மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது.

    இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுவதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் சீதோசன நிலை மாறி மாறி வருகிறது. இதில் இன்று அதிகாலை 5 மணியிலிருந்து காலை 8 மணி வரையிலும் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

    கடும் குளிர் நிலவி வருவதால் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் குடியிருப்புகள் மற்றும் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர்.

    மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நீலகிரிக்கு வந்தவர்கள் நேற்று மாலை முதல் சமவெளி பகுதிகளுக்கு திரும்பி கொண்டு வருகின்றனர். இன்று காலையும் ஏராளமானோர் ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்தன. கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

    முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே வாகனங்களை இயக்கி செல்கிறார்கள். வாகனங்கள் அனைத்தும் சாலையில் மிகவும் ஊர்ந்தபடியே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உறைபனி அதிகமாக உள்ளது. இன்றும் உறைபனி அதிகமாக காணப்பட்டது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உறைபனி கொட்டி புல்தரை முழுவதும் மறைந்து, வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காணப்பட்டது.

    இதுதவிர கார், வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களிலும் உறைபனி கொட்டி இருந்தது. அதனை பொது மக்கள் அகற்றி விட்டு தங்கள் பணிக்கு சென்றனர்.

    இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலையாக 23.07 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து காத்து கொள்ள குல்லா, சுவர்ட்டர் போன்ற ஆடைகளை அணிந்து வருகின்றனர்.

    ஆங்காங்கே தீ மூட்டியும் மக்கள் குளிர் காய்ந்து வருகிறார்கள். ஊட்டியில் கொட்டி வரும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    அவர்கள் சுவர்ட்டர் அணிந்து கொண்டும், தலையில் குல்லா அணிந்து சென்றதையும் காணமுடிந்தது.

    தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

    • 6.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
    • 50 நாட்களுக்கு பின் நேற்று ஊட்டியில் உறைபனி கொட்டியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை பனிக்காலம் ஆகும்.

    மிச்சாங் புயல் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக நவம்பரில் துவங்க வேண்டிய பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது.

    மழை முற்றிலும் குறைந்துவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அத்துடன் உறைபனியும் கொட்டுகிறது.

    50 நாட்களுக்கு பின் நேற்று ஊட்டியில் உறைபனி கொட்டியது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம், படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் உள்ள புல் தரைகள் முழுவதும் பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போல காட்சியளித்தது.

    இதுதவிர கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் மீதும் உறைபனி கொட்டி யிருந்தது.

    நேற்று ஊட்டியில் குறைந்தபட்சமாக 7.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில் இன்று 6.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    கொட்டும் உறைபனி காரணமாக கடுமையான குளிரும் நிலவி வருகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் ஆங்காங்கே தீ மூட்டியும் குளிர் காய்ந்து வருகின்றனர். இன்னும் வரக்கூடிய நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக தேயிலை செடிகள் மட்டுமின்றி புல் வெளிகள், செடி, கொடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வருகிற நாட்களில் வெப்பநிலையானது 0 டிகிரிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது.
    • ஓரிரு நாட்களில் ஊட்டியில் வெப்பநிலையானது 0 முதல் மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவும், அதன் தொடர்ச்சியாக உறைபனியும் அதிகமாக இருக்கும்.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான உறைபனி காணப்படும். ஆனால் பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாகவே தொடங்கியது.

    தற்போது மழை குறைந்ததால் பனிப்பொழிவு குறைந்து உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக உறைபனியில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் இரவு முதல் மறுநாள் காலை வரை குளிரும் நிலவுகிறது.

    ஊட்டியில் இன்று காலை தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது. ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானம், ரேஸ்கோர்ஸ் மைதானம், காந்தல் கால்பந்து மைதானத்திலும் உறை பனி படிந்திருந்தது.

    இதுதவிர சூட்டிங்மட்டம், கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரம் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், வேன், வாகனங்களின் மீது உறைபனி கொட்டி கிடந்தது.

    அதிகாலையில் உறைபனியுடன் கடும் குளிரும் நிலவியது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள், வாகன டிரைவர்கள் வீடுகள் மற்றும் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி தோட்டங்களில் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.

    அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஸ்வெட்டர் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.

    ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, 23.7 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. இது புறநகர் பகுதிகளில் குறைந்து 2 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது.

    அதே சமயம், ஓரிரு நாட்களில் ஊட்டியில் வெப்பநிலையானது 0 முதல் மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    ஊட்டியில் கடும் உறைபனி காணப்பட்ட நிலையிலும், குளிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களில் குவிந்து இயற்கை காட்சிகளையும், மலர்களை கண்டு ரசித்தனர்.

    மேலும், பனி பொழிவால் முகம், கை கால்களில் வெடிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அதிகாலை நேரங்களில் தண்ணீர் ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளது. மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    ×