என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவராத்திரி விழா"

    • மகா சிவராத்திரி தோன்றியதும், லிங்க வழிபாடு தோன்றியதும் திருவண்ணாமலை தலத்தில் தான்.
    • திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள்.

    சிவ பெருமான் பஞ்சபூதங்களின் வடிவில் காட்சி தரும் பஞ்சபூத தலங்களில் ஈசன் அக்னி வடிவமாக காட்சி தரும் தலம் திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் என போற்றப்படுவதும், தமிழகத்தில் உள்ள முக்தி தலங்களில் முதன்மை தலமாக போற்றப்படுவதும் திருவண்ணாமலை தான்.

    திருவண்ணாமலை தலத்தில் தான், சிவ பெருமான், பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு ஜோதி வடிவமாக காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது. இதை போற்றும் விதமாகவே திருக்கார்த்திகை தீப திருநாளில், சிவமே மலையாக காட்சி தரும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    ஜோதி வடிவமாக காட்சிதந்த சிவ பெருமான், லிங்கோத்பவராக காட்சி தந்ததும் இங்கு தான் என சொல்லப்படுகிறது. அதனால் மகா சிவராத்திரி தோன்றியதும், லிங்க வழிபாடு தோன்றியதும் திருவண்ணாமலை தலத்தில் தான்.

    அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலை, கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி மாறி வந்துள்ளது.

    "அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும், சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்." என்கின்றது அருணாசல புராணம். ஒரு சாதாரண நாளில் திருவண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் திருவண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும்.

    அதுபோல் சிவ பெருமானின் அருளை பெற விரும்புபவர்களும், பாவங்கள் நீங்கி வளமான வாழ்வு பெற விரும்புபவர்களும் மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் செல்வது சிறப்பாகும்.

    திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அமாவாசை அன்று அண்ணாமலை யாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்று, பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்துள்ளார்கள். இதனால், சக்தி அதிர்வலைகள் அதிகமான இந்த மலையைச் சுற்றி வருவதால் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் ஆசிகளை பக்தர்கள் பெறுகின்றனர் என்பது ஐதீகம். மற்றும் திருவண்ணாமலையை கிரிவலம் சுற்றி வரும்போது சக்தி மிக்க மூலிகைச் செடிகொடிகளின் காற்றை சுவாசிப்பதால் உடலும் உள்ளமும் நலம் பெறுகிறது.

    பொதுவாக ஞாயிறு கிரிவலம் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சூரிய பகவான் பூவுலகிற்கு ஏதேனும் ஒரு வடிவில் வந்து திருவண்ணாமலையைக் கிரிவலம் செய்வதாகக் ஐதீகம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிவராத்திரி என்பதால் கிரிவலம் செல்பவர்கள் சிவலோகமாம் திருக்கயிலாயத்தில் தேவர்களாய் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்களாம். குடும்பப் பிரச்சினை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஞாயிறு கிரிவலம் செய்தால் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ வழி பிறக்கும் என்கின்றனர்.

    சிவராத்திரி இரவு கண் விழித்து சிவனைத் தொழுவார்கள். உறங்காமல் இருப்பது என்றால் ஆன்மா விழித்திருப்பது என்று பொருள். அன்றிரவு முழுவதும் மலையை வலம் வந்தால் கண் விழித்த பலனும் உண்டு. இறைவனை இடைவிடாது தொடர்ந்து தொழுத பலனும் உண்டு. சிவராத்திரி அன்று கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கக் கோவில்களிலும் அந்தந்த ஜாமங்களில் அபிஷேகம் நடப்பதை கிரிவலம் செய்யும்போதே தரிசிக்கலாம்.

    திருவண்ணாமலை கிரிவலத்தை முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் மலையின் காவல் தெய்வமான பூத நாராயணரை வணங்கி, மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கி தொடங்க வேண்டும். அடுத்து இடையூறு இல்லாமல் கிரிவலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு கிரிவலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    கிரிவலத்தை முடித்தப் பின்னர், கோவிலில் மூலவரின் உள்பிரகாரத்தில் இருக்கும் துர்வாசமகரிஷியை வணங்கவேண்டும். அவரிடம் முறைப்படி கிரிவலம் முடித்துவிட்டு வந்துள்ளதாக மானசீகமாகத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அண்ணாமலையாரையும், உண்ணா முலையம்மாளையும் தரிசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் ஈசன் அருளுடன் துர்வாசரின் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த கிரிவலப்பயணம் முழுவதும் எவரிடமும் பேசாமலும், விடாமல் ஓம் சிவ சிவ ஓம் என ஜபித்தவாறும் சென்றால் நமது எண்ணிக்கை நிச்சயமாக ஒரு லட்சத்தைத் தொட்டுவிடுகிறது. இப்படி ஜபித்துவரும்போது நாம் இந்த மந்திரத்தை எண்ண வேண்டிய அவசியமில்லை.

    அசாத்தியமான மன வலிமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி 14 கி.மீ.தூரமும் மவுனமாக வர முடியும். அப்படி ஒரே ஒரு முறை கிரிவலம் மவுனமாக ஓம் சிவ சிவ ஓம் ஜபித்தவாறு வந்துவிட்டாலே மறுநாளே நமது கடுமையான பிரச்சினை ஒன்று தீரும் அல்லது அதற்கான சூழ்நிலை உருவாகிவிடும் என்கின்றனர் பக்தர்கள்.

    • மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.
    • சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

    மலையே சிவன். சிவனே மலை. ''வானனை, மதி சூடிய மைந்தனை, தேனனை, திருவண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புர மூன்றெய்த ஆனனை, அடியேன்மறந்து உய்வனோ?" என்று உருகுகிறார் நாவுக்கரசர். நெருப்பு தலமான இங்குதான் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதும் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி நாளிலேயே குபேரன் கிரிவலம் வந்து, அனைத்து செல்வங்களையும் பெற்றதாக சொல்லப்படுகிறது.

    மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது. சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

    மகா சிவராத்திரியின் போது, கோவில் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் மலையைச் சுற்றி வருகிறார்கள். சிவராத்திரி விழா உருவானதும் இங்கு தான் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

    • மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும்.
    • பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும்.

    சிவராத்திரி 5 வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை: மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி.

    மாக சிவராத்திரி:

    மாக சிவ ராத்திரியே 'மகா சிவராத்திரி' என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு 'வருஷ சிவ ராத்திரி' என்ற பெயரும் உண்டு.

    யோக சிவராத்திரி:

    யோக சிவ ராத்திரியில் நான்கு வகை உண்டு. திங்கள்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல் - இரவு சேர்ந்த அறுபது நாழிகையும் (24 மணி நேரம்) அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி. திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் அன்று இரவு 4 ஜாமமும் (12 மணி நேரம்) தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரி. திங்கட் கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணியிலிருந்து 6 மணி வரை உள்ள நேரத்தில்), அமாவாசை அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தாலும் அன்று யோக சிவராத்திரிதான்.

    திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால் அன்றும் யோக சிவராத்திரி.

    இந்த நான்கு 'யோக' சிவராத்திரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்தாலும், அதற்கு 'மூன்று கோடி சிவராத்திரி' விரதம் கடைப்பிடித்த பலன் கிடைக்கும்.

    மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தசி, திருவாதிரை நட்சத் திரத்துடன் வந்தாலும், மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும், அந்தச் சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்குச் சமம் என்பார்கள்.

    நித்திய சிவராத்திரி:

    வருடத்தின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறைகளின் சதுர்த்தசி திதி இடம்பெறும் 24 நாள்களும் நித்திய சிவராத்திரி.

    பட்ச சிவராத்திரி:

    தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, 13 நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, 14-ம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.

    மாத சிவராத்திரி:

    பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும். ஆனால் இந்த `மாத சிவராத்திரி' என்பது, மாதத்தின் மற்ற திதி நாள்களிலும் வரும். மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, பங்குனி மாத வளர்பிறை திருதியை, சித்திரை மாதத் தேய்பிறை அஷ்டமி, வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி, ஆனி மாத வளர்பிறை சதுர்த் தசி, ஆடி மாதத் தேய்பிறைப் பஞ்சமி, ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி, புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி, ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி, மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தசி- தேய்பிறை சதுர்த்தசி, தை மாத வளர்பிறை திருதியை ஆகிய இந்த 14 நாட்களும் மாத சிவராத்திரி எனப்படும்.

    • கடந்தாண்டு 9 கோவில்களில் விழா நடைபெற்ற நிலையில் இந்தாண்டு 12 கோவில்களில் சிவராத்திரி விழா!
    • ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், திருநாகேஸ்வரம் கோவில் உள்ளிட்ட 12 கோவில்களில் நடைபெறும் விழா!

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத் துறை தொன்மை வாய்ந்த கோவில்களுக்கு பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளோடு, கோவில்கள் சார்பில் கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர், சிவவாக்கிய சித்தர், பதஞ்சலி சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், அருட்பிரகாச வள்ளலார், தெய்வப்புலவர் சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினைத் தொகுத்தவரான ஸ்ரீமத்நாத முனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தார் ஆச் சாரியார், 63 நாயன்மார்களில் நந்தனார், காரைக்கால் அம்மையார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்தும் சிறப்பு செய்து வருகிறது.

    மேலும், கடந்த ஆண்டு 9 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவும், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை, மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

    ஆடல் வல்லான் சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும் படி கடந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோவில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், பேரூர், பட்டீசுவரர் கோவில், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோவில், திருவாரூர், தியாகராஜசுவாமி கோவில், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரசுவாமி கோவில் ஆகிய 9 கோவில்களின் சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    2025-2026-ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி, "9 கோவில்களின் சார்பாக மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினை பெற்றதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கூடுதலாக, ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் ராமேசுவரம், அருள்மிகு ராமநாதசுவாமி கோவில், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களுடன் ஏற்கனவே மகாசிவராத்திரி விழா நடத்தப்பட்டு வரும் 9 கோவில்களையும் சேர்த்து மொத்தம் 12 கோவில்கள் சார்பில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

    • செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா தொடங்கியது.
    • விழா நாட்களில் மானாமதுரையில் இருந்து ஏனாதி செங்கோட்டைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் ஏனாதி செங்கோட்டையில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளாக நடந்த கொடியேற்ற உற்சவத்தை முன்னிட்டு கோவில் முன் மண்டபத்தில் கலச நீர் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் காலை 6மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டு பின்னர் கொடி மரத்திற்கு தர்ப்பைபுல் மலர் மாலைகள் சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் மற்றும் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனைகள் நடைபெற்றன. தலைமை பூசாரி சண்முகசுந்தரம் கொடியேற்ற நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து அம்மனுக்கான பூஜைகளை செய்தார்.

    கொடியேற்ற விழாவில் கோவில் குடிமக்கள் மற்றும் ஏனாதி செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர். 21-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின்போது தினமும் மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடாகி பல்வேறு மண்டகப் பணிகளில் எழுந்தருளுல் வைபவம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக 20-ந் தேதி பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது. 21-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் படைப்பு வகைகள் சாற்றி சிவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை பூசாரி சண்முகசுந்தரம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர். விழா நாட்களில் மானாமதுரையில் இருந்து ஏனாதி செங்கோட்டைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகிறது.

    • இந்த வருடத்தின் மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது.
    • சர்வ மங்களங்களையும் அருளும் அற்புதமான திருநாள்.

    தருமபுரி,

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக மகா சிவராத்திரி உள்ளது. இதையடுத்து இந்த வருடத்தின் மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது.

    வருடத்தில் எத்தனையோ ராத்திரிகள் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது.

    அதனால் இன்று முழுவதும் (இரவு 12:00 முதம் 6:00 வரை) ஒருவர் விழிப்புடன் இருந்தால் இயற்கையாகவே நம்மில் இருக்கும் உயிர்சக்தியும் மேல்நோக்கி நகர்ந்திடும் என்று ஆன்மீகவாதிகளும், சித்தர்களும் கூறி உள்ளனர்.

    இன்று சிவனுக்கு பிடித்த மந்திரமான "ஓம் நமசிவாய" மந்திரம் ஜபித்து முக்கண் முதல்வனை வணங்கினால் நாம் நினைத்ததை பெறலாம் என்பது ஐதீகம். சிவம் என்றால் மங்களம் என்று பொருள். சர்வ மங்களங்களையும் அருளும் அற்புதமான திருநாள், சிவராத்திரி என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.

    சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம், பெறலாம் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது நம்பிக்கை.

    சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவதே இந்த நாளின் விஷேசம் ஆகும்.

    சிவராத்திரியை முன்னிட்டு தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில், புகழ்பெற்ற தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சுவாமி கோவில், தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவா ணேஸ்வரர் கோவிில், குமார சாமிப் பேட்டை சிவகாம சுந்தரி உடனா கிய ஆனந்த நடராஜர் கோவிில், ஆத்துமேடு சர்வாங்க சுந்தரி அம்பாள் உடனாகிய ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவிில், சித்தி லிங்கேஸ்வரர் கோவில், பழைய தருமபுரி கருணை நாதர் கோவில், புட்டி ரெட்டிபட்டி சோமநாதர் கோவில், சவுலுப்பட்டியில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஓசூர் அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில், ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில், ஆவல்நத்தம் காசீஸ்வரர் மற்றும் பசுவேஸ்வரர் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

    • பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
    • 1,008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்ய னடைப்பு சித்தர் நகரிலுள்ள பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில், சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வராக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.

    ஆன்மிக சிறப்புபெற்ற குருமகாலிங்கேஸ்வரருக்கு சனிப்பிரதோஷம் மற்றும் சிவராத்திரி விழா சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    காலை 10 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலெட்சுமி ஹோமத்துடன் சிவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மகாபூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து இரவு 9மணிக்கு முதல்கால யாக பூஜைகளுடன் சிவராத்திரி வழிபாடு பூஜைகள், சிவ பெருமானுக்கு 1,008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தமிழ்மறையில் தேவாரம், திருவாசக பாராய ணத்துடனும், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரா தனை நடைபெற்றது.

    இரவு 10மணிக்கு பேராசிரியர் செபாஸ்டின் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும் அபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணம் நடந்தது.

    இன்று அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால யாக பூஜை சதுர்வேத பாராயணத்துடனும் நடை பெற்றது. காலை 4மணிக்கு 4-ம் கால யாக பூஜை, சிறப்பு அபிஷேம், அலங்கார தீபாராதனைகளுடன் கோலாகலமாக நடை பெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமி சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • இரவு 12 மணிக்கு கூட்டு தியானம் நடந்தது
    • 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூரில் ஈஷா யோக மையம் சார்பில் சிவராத்திரி விழா நடந்தது.வேலூர் ராணி மகாலில் நேற்று மாலை நடந்த சிவராத்திரி விழாவை ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    ஆப்கா இயக்குனர் சந்திரசேகரன் அன்னதான நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.

    விழாவிற்கு வந்த பொது மக்களுக்கு இலவசமாக ருத்ர தீட்சை வழங்கப்பட்டது.

    இரவு முழுவதும் கோவை ஈஷா மையத்தில் நடந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் சிவலிங்கத்திற்கும், லிங்கபைரவிக்கும் பொதுமக்கள் மலர்களை சமர்பித்து வணங்கினர். இரவு 12 மணிக்கு கூட்டு தியானம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை ஈஷா யோக மைய வேலூர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு, தன்னார்வலர்கள் மணிவண்ணன், சரவணன், சதீஷ், விஜயகுமார், குணசீலன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்வின்போது அனைத்து சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்படுகிறது.
    • சரவணம்பட்டியில் வசிக்கும் மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் சிவஞானன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'கோவை வெள்ளியங்கிரி பகுதியில் ஈஷா யோகா மையம் மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான விதிமீறல்கள் உள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய நடைபெறும் இந்த நிகழ்வால் வெள்ளியங்கிரி வனப்பகுதியில் உள்ள இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள 45 'டெசிபல்' ஒலி அளவைவிட மகாசிவராத்திரி விழாவின்போது வனப்பகுதியில் கூடுதல் ஒலி மாசு ஏற்படுத்தப்படுகிறது. லட்சக்கணக்கானோர் கூடுவதால் கழிவுநீர் தேங்கி விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

    எனவே வனப்பகுதியில் ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தும் ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுக்கு அனுமதி வழங்கக்கூடாது'' என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர், 'சிவராத்திரி நிகழ்வின்போது மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ''ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்வின்போது அனைத்து சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்படுகிறது. குறி்ப்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த பகுதியில் மாசற்ற சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் மாசு கட்டுப்பாட்டு விதிகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும்'' என்று கூறப்பட்டிருந்தது.

    அதற்கு மனுதாரர் தரப்பில், ''விதிகளை மீறி விடிய, விடிய ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் பயன்படுத்தப்படுகிறது. இது ஒலி மாசு இல்லையா? ஈஷாவில் 3 புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. மகா சிவராத்திரி விழாவுக்கு 7 லட்சம் பேர் வருவார்கள். அவர்களுக்கு இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் போதுமானது கிடையாது'' என்று வாதிடப்பட்டது. அதற்கு ஈஷா தரப்பில், 'ஈஷா வளாகத்தில் உள்ள கல்வி நிறுவன கட்டிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள 70 ஏக்கர் நிலப்பரப்பில்தான் இந்த சிவராத்திரி விழா நடைபெறுகிறது. சரவணம்பட்டியில் வசிக்கும் மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்'' என்று கூறப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் ஒலி மாசுவை கட்டுப்படுத்தவும், கழிவுநீர் சுத்திகரிப்புக்கும் போதிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவி்க்கப்பட்டு உள்ளதால், மகா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க முடியாது'' என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி 

    • நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சாமி தரிசனம் செய்ய அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் (முதல் ஜாமம் பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9மணி வரை-இரண்டாம் ஜாமம் பூஜை இரவு 9 மணி முதல் 12 மணி வரை-மூன்றாம் ஜாமம் பூஜை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை-நான்காம் ஜாமம் பூஜை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை) 4 கால பூஜைகள் நடைபெறும்.

    பக்தர்கள் வாங்கிக் கொடுக்கும் அபிஷேக பொருட்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஜாமத்திலும் அபிஷேகங்கள் செய்யப்படும். விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


    மகா சிவராத்திரி விழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோவை பட்டீஸ்வர சாமி கோவில், நெல்லையப்பர் கோவில், ஸ்ரீரங்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


    விடிய விடிய நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அனைத்துக் கோவில்களிலும் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ×