search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா
    X

    அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா

    • செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா தொடங்கியது.
    • விழா நாட்களில் மானாமதுரையில் இருந்து ஏனாதி செங்கோட்டைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் ஏனாதி செங்கோட்டையில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளாக நடந்த கொடியேற்ற உற்சவத்தை முன்னிட்டு கோவில் முன் மண்டபத்தில் கலச நீர் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் காலை 6மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டு பின்னர் கொடி மரத்திற்கு தர்ப்பைபுல் மலர் மாலைகள் சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் மற்றும் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனைகள் நடைபெற்றன. தலைமை பூசாரி சண்முகசுந்தரம் கொடியேற்ற நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து அம்மனுக்கான பூஜைகளை செய்தார்.

    கொடியேற்ற விழாவில் கோவில் குடிமக்கள் மற்றும் ஏனாதி செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர். 21-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின்போது தினமும் மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடாகி பல்வேறு மண்டகப் பணிகளில் எழுந்தருளுல் வைபவம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக 20-ந் தேதி பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது. 21-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் படைப்பு வகைகள் சாற்றி சிவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை பூசாரி சண்முகசுந்தரம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர். விழா நாட்களில் மானாமதுரையில் இருந்து ஏனாதி செங்கோட்டைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகிறது.

    Next Story
    ×