என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahashivaratri Festival"

    • கடந்தாண்டு 9 கோவில்களில் விழா நடைபெற்ற நிலையில் இந்தாண்டு 12 கோவில்களில் சிவராத்திரி விழா!
    • ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், திருநாகேஸ்வரம் கோவில் உள்ளிட்ட 12 கோவில்களில் நடைபெறும் விழா!

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத் துறை தொன்மை வாய்ந்த கோவில்களுக்கு பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளோடு, கோவில்கள் சார்பில் கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர், சிவவாக்கிய சித்தர், பதஞ்சலி சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், அருட்பிரகாச வள்ளலார், தெய்வப்புலவர் சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினைத் தொகுத்தவரான ஸ்ரீமத்நாத முனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தார் ஆச் சாரியார், 63 நாயன்மார்களில் நந்தனார், காரைக்கால் அம்மையார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்தும் சிறப்பு செய்து வருகிறது.

    மேலும், கடந்த ஆண்டு 9 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவும், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை, மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

    ஆடல் வல்லான் சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும் படி கடந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோவில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், பேரூர், பட்டீசுவரர் கோவில், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோவில், திருவாரூர், தியாகராஜசுவாமி கோவில், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரசுவாமி கோவில் ஆகிய 9 கோவில்களின் சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    2025-2026-ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி, "9 கோவில்களின் சார்பாக மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினை பெற்றதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கூடுதலாக, ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் ராமேசுவரம், அருள்மிகு ராமநாதசுவாமி கோவில், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களுடன் ஏற்கனவே மகாசிவராத்திரி விழா நடத்தப்பட்டு வரும் 9 கோவில்களையும் சேர்த்து மொத்தம் 12 கோவில்கள் சார்பில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

    • கபிலேஸ்வரா் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • இரவு 10 மணி வரை சிறப்பு நந்தி வாகன சேவை நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதி கபிலேஸ்வரா் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (வெள்ளிக்கிழமை) மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு வரிசைகள், சாமியானா பந்தல்கள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    நாளை அதிகாலை 2.30 மணியில் இருந்து 4.30 மணி வரை மகான்யாச ஏகாதச ருத்ராபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை தேரோட்டம் (போகித்தேர்) காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சிறப்பு நந்தி வாகன சேவை நடக்கிறது.

    நாளை காலை 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவ அபிஷேகம் நடக்கிறது.

    அதையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்மபிரசார பரிஷத், எஸ்.வி.சங்கீத், நிருத்ய கலாசாலா ஆகியவை ஏற்பாட்டில் பக்தி இசை மற்றும் கலா சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    மகாசிவராத்திரிக்கு மறுநாள் (சனிக்கிழமை) சிவன்-பார்வதி திருக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது. இந்தத் திருக்கல்யாண மகோற்சவம் அன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஆர்ஜித சேவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • பேரூர் மற்றும் சிரவை ஆதினங்கள் தொடங்கி வைத்தனர்.
    • சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை இந்தாண்டு 30,000 கி.மீ பயணிக்க உள்ளது.

    இதையொட்டி, கோவை ஆதியோகி முன்பு நேற்று (டிசம்பர் 22) நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் ஆரத்தி எடுத்து தொடங்கி வைத்தனர்.


    ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே ஆதியோகியை தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

    அந்த வகையில் இந்தாண்டு ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளில் பயணிக்க உள்ளன. மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் இந்த ரதங்கள் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன.

    இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற பேரூர் ஆதீனம் அவர்கள் நிகழ்வில் பேசுகையில், "மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறோம். இவ்விழா நம் திருக்கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை மக்களின் விழாவாக, மக்களின் வழிபாட்டு நிகழ்வாக மாற்றிய பெருமை ஈஷா யோக மையத்தையே சாரும்.

    ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இருந்து பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இவ்விழாவில் கலந்து கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆதியோகி ரதங்கள் இங்கிருந்து புறப்பட்டு கிராமங்கள் மற்றும் நகரங்கள்தோறும் பயணிக்க உள்ளன.

    கோவில்களில் மூலவர் இருப்பதை போல் ஆதியோகி இங்கு இருந்து கொண்டு அருள் பாலிக்கிறார். இந்த ரதங்களில் உள்ள ஆதியோகி திருமேனிகள் உற்சவ மூர்த்திகளை போல் ஊர்தோறும் பயணித்து பக்தர்களுக்கு அருள்பாலிகின்றனர். அதன் நல்ல தொடக்க விழா இன்று தொடங்குகிறது.

    ஈஷா மையத்தின் பணிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே வருகிறது. ஈஷாவின் சமயப் பணிகளும் சமுதாயப் பணிகளும் மேலும் சிறந்த விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.

    இதற்கு முன்னதாக, கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

    ×