search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை-புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி, உதயநிதி- அண்ணாமலை போட்டி பிரசாரம்
    X

    சென்னை-புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி, உதயநிதி- அண்ணாமலை போட்டி பிரசாரம்

    • தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிந்தது.

    தேர்தலில் போட்டியிட 39 தொகுதிகளிலும் 1,403 பேர், 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையின் போது பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்கு பிறகு அரசியல் கட்சியினர் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    வேட்புமனுவை வாபஸ் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளையே வெளியிடப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து தினமும் அவர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி அருகே தடங்கம் பி.எம்.பி. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதேபோல் அனைத்து கட்சி தலைவர்களுமே அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் முற்றுகையிட்டு போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 24-ந்தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவர் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை ஓட்டல் ஹைவே இன் அருகில் அவர் பிரசாரம் செய்கிறார். பின்னர் இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பல்லாவரம் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலை, அன்னை தெரேசா பள்ளி அருகில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்தார். இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் 11.30 மணிக்கு ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இன்று மாலையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு ஆலந்தூர் கோர்ட்டு அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு பல்லாவரம் சந்தை ரோடு பகுதியிலும், மாலை 6.30 மணிக்கு தாம்பரம், சண்முகம் சாலை, காந்தி மார்க்கெட் பகுதியிலும், இரவு 7.30 மணிக்கு மறைமலைநகர் பாவேந்தர் சாலை பகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் அண்ணாமலை பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் காலை 11 மணியளவில் சென்னை மாதவரம் நகராட்சி அலுவலகம் அருகில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இன்று பிற்பகல் 3 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் தேரடி சந்திப்பு பகுதியில் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானா தெருவில் அவர் ஓட்டு சேகரிக்கிறார். பின்னர் இரவு 7 மணியளவில் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இரவு 8 மணிக்கு வேளச்சேரி திருவள்ளுவர் நகரில் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் பிரசாரம் செய்கிறார். இன்று காலை 8 மணி முதல் அவர் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் தலைவர்கள் பலர் முற்றுகையிட்டுள்ளதால் தேர்தல் பிரசாரம், வேகம் எடுத்துள்ளது.

    Next Story
    ×