search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கடம்பூர் ராஜூ
    X
    அமைச்சர் கடம்பூர் ராஜூ

    திமுக-பா.ஜனதா இடையே 2வது இடத்துக்குதான் போட்டி: அமைச்சர் கடம்பூர் ராஜூ

    தமிழகத்தில் அதிமுக என்றும் முதலிடத்தில் உள்ளது, திமுக-பா.ஜனதா இடையே 2-வது இடத்துக்குதான் போட்டி நிலவுகிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு வண்டானத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. தொடர்ந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார்.

    அதேபோன்று தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள பா.ஜனதாவுக்கு எதிர்க்கட்சியாக வர வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.தான் என்றும் முதலிடம். தி.மு.க.-பா.ஜனதா இடையே 2-வது இடத்திற்கு வருவதற்குதான் போட்டி நிலவுகிறது.

    தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறுவார்கள் என்று மு.க.அழகிரியும் கூறி உள்ளார். தி.மு.க.வில் நடப்பது குடும்ப அரசியல். கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.வின் குடும்ப அரசியலை எதிர்த்து, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்து வெற்றி கண்டார்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஏற்று கொள்ளும் மனநிலையில் கனிமொழி எம்.பி. இல்லை. கனிமொழியை ஏற்று கொள்ளும் மனநிலையில் மு.க.ஸ்டாலின் இல்லை. எனவேதான் அவர் தன்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலினை அனைத்து இடங்களிலும் முன்னிலைப்படுத்தி வருகிறார். இதனால்தான் வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றோர் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு சென்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×