search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத், கர்நாடகா, கோவா தேர்தலில் பா.ஜ.க. சாதிக்குமா?
    X

    குஜராத், கர்நாடகா, கோவா தேர்தலில் பா.ஜ.க. சாதிக்குமா?

    • பா.ஜ.க கடந்த தேர்தலைப் போலவே சாதிக்குமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    திருப்பதி:

    குஜராத், கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.

    குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    கோவாவில் உள்ள 2 தொகுதியில் ஒரு தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தலைப் போலவே சாதிக்குமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் எம்.பி.யும் மத்திய மந்திரியுமான புருஷோத்தம் ரூபாலா ராஜபுத்திரர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

    இந்த கருத்து அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. ராஜபுத்திர பெண்கள் ஒன்றாக பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க போவதாகவும் எச்சரித்தனர்.

    குஜராத் மாநிலத்தில் ராஜபுத்திரர்கள் 17 சதவீதம் வரை உள்ளனர். அவர்கள் எதிர்ப்பை பா.ஜ.க.வால் சமாளிக்க முடியாது என்பதால் பிரதமர் மோடி நேரடியாக அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

    மேலும் பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு எதிராகவும் சில வேட்பாளர்களை பா.ஜ.க தலைமை களமிறக்கி உள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது. அப்போது 25 இடங்களில் வெற்றியை எட்டியது. தற்போது கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

    அவர்கள் பெண்களுக்கு என பல்வேறு திட்டங்களை அறிவித்தும் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். இது காங்கிரசுக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளது.

    கோவாவில் வடக்கு மற்றும் தெற்கு கோவா தொகுதிகள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி இங்கு தனித்து போட்டியிட்டதால் பா.ஜ.க.வுக்கு நல்ல பலன் கிடைத்தது. இதனால் வடக்கு கோவாவில் பா.ஜ.க எளிதாக வெற்றி பெற்றது. தெற்கு கோவாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம் இருப்பதால் காங்கிரஸ் அங்கு வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.

    இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆம் ஆத்மி மற்றும் கோவா பார்வர்டு கட்சி ஆதரவளித்து உள்ளன.

    கோவாவில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் 3 அம்சங்கள் பா.ஜ.க.வுக்கு தொந்தரவாக மாறி உள்ளன. விறுவிறுப்பான வாக்குப்பதிவும் நடந்து வருகிறது.

    தேர்தல் முடிவுக்கு பிறகு தான் இந்த பிரச்சினைகளால் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டதா என்பது தெரியவரும் என அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×