என் மலர்
தூத்துக்குடி
- இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் 4-ம் கேட் அருகே சில்வர்புரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 43).
இவர் புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை மோகன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மீளவிட்டான் சில்வர்புரம்- தூத்துக்குடி பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணி காரணமாக குறுகலான சாலையில் செல்லும் போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக திரும்பினார்.
அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- லாரியில் இருந்த கிளீனர் திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த அஜய் (வயது 24) என்பவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ் , செல்வகுமார், ராமச்சந்திரன், தலைமை காவலர் இருதயராஜ், ராமர், காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணிக்கு மினிலாரியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பைபர் படகில் சுமார் 35 கிலோ எடை கொண்ட 40 பண்டல்களில் பீடி இலைகள் கடத்தி செல்ல இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு, மினி லாரி ஆகியவற்றை கைப்பற்றினர். லாரியில் இருந்த கிளீனர் திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த அஜய் (வயது 24) என்பவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் எடை சுமார் 1400 கிலோ. இதன் மதிப்பு 20 லட்சம் ஆகும்.
- வழக்கம்போல் நேற்று இரவு கோவில் வளாகத்தில் செல்லையா படுத்து தூங்கி உள்ளார்.
- தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மேலத் தெருவை சேர்ந்தவர் செல்லையா (வயது 56). கூலித் தொழிலாளி.
இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் வெளியூரில் வசித்து வருகிறார். இதனால் செல்லையா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டை விற்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் அவர் தினமும் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவில் சாத்தான்குளத்தில் உள்ள கரையடி சுடலைமாடசாமி கோவில் வளாகத்தில் படுத்து தூங்கி வந்துள்ளார்.
வழக்கம்போல் நேற்று இரவு கோவில் வளாகத்தில் செல்லையா படுத்து தூங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை கழுத்தை அறுத்து அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஜேசுராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்லையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செல்லையாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடியில் குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள் உயிரிழப்பு.
- உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் ஆறுதல்.
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே உள்ள நீராவி குளத்தில் மூழ்கி சந்தியா, கிருஷ்ணவேணி மற்றும் செல்வன் என மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் மூவரும் உறவினருடன் குளத்தில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தை கேட்டு வருத்தமும், வேதனையும் அடைந்ததாக தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்த முதல்வர், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்த வழங்க உத்தரவிட்டுள்ளார்.
- மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென குறைத்தது.
- பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? என அவர் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மகளிர் தின பரிசாக வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென குறைத்துள்ளது. மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் வருவதாலேயே மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது என தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிலிண்டர் விலையை எப்பொழுதோ குறைத்திருக்க முடியும். தேர்தல் வரும் சமயத்தில் தான் சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளனர். அதுவும் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? பெண்கள் சமையல் அறையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயமாக இதை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
- திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி வரவேற்று பேசினார்.
- கனிமொழி எம்.பி.க்கு இணையாக எந்த எம்.பி.யும் இல்லை.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் முதலமைசசர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளரும் நகர்மன்ற துணை தலைவருமான செங்குழி ரமேஷ் தலைமை தாங்கினார். உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், ஆழ்வை மத்திய பகுதி செயலாளர் நவின்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. அமைப்பு துணை செயலாளர் தாயகம் கவி, சண்முகய்யா எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் பயன் பெறும் வகையில் பட்ஜெட் தந்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவு படுத்தி உள்ளார்.
அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் ரூ1,000, குடிசை வீடுகள் இல்லாத தமிழகம் என்ற அடிப்படையில் வீடு இல்லாதவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்.
இந்த அரசு சிறுபான்மை மக்கள் நலன் காக்கும் அரசாக உள்ளது. கனிமொழி எம்.பி.க்கு இணையாக எந்த எம்.பி.யும் இல்லை. மழை வெள்ளம் காலங்களில் அவர் சிறப்பாக பணியாற்றினார். கலைஞரின் மறு உருவமாக கனிமொழி எம்.பி மீண்டும் இந்த தொகுதியில் எம்.பி.ஆக நிற்கிறார். இந்தியா கூட்டணி வெற்றி பெறப்போகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி தான் வரப்போகிறது.
தொழிலாளர் அனைவரையும் காக்கும் ஒரு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார். நிச்சயமாக பா.ஜ.க.வை வீழ்த்தி காட்டுவார் மு.க.ஸ்டாலின். அவர் யாரை கை காட்டுகிறாரோ அவரே பிரதமராக வருவார்.
தற்போது அ.தி.மு.க. காணாமல் போய்விட்டது. இந்த தேர்தலோடு அதுவும் முடிந்துவிடும். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. இருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
- ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தின் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
விளாத்திகுளம்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் விளாத்திகுளத்தில் நேற்று மாலை விளாத்திகுளம்-மதுரை சாலையில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் எல்லோருக்கும் எல்லாம் எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஒன்றிய அரசு தமிழகத்தின் மக்கள் பணத்தை ஜி.எஸ்.டி. என்ற பெயரில் வசூலித்து கொண்டு சென்று வடமாநிலங்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறது. மாறாக மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை தமிழகத்திற்கு ஒரு தலைப்பட்சமாக வழங்காமல் நிதி நெருக்கடியை உருவாக்க முயற்சி செய்கிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் கொள்ளை அடித்து இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு நிதியை பயன்படுத்தியது போன்று பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்து பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ள மாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனை போன்று பிரதமர் மோடியின் தலைமையிலான மக்கள் விரோத ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு எதிர்த்து வருகிறது.
ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தின் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய மிரட்டலுக்கு ஒருபோதும் தி.மு.க. அரசு அஞ்சுவதில்லை.
டெல்லியில் விவசாயிகளின் வேண்டுகோளை காது கொடுத்து கேட்காத ஒன்றிய அரசு தமிழகத்திலும் சென்னை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும் மக்களின் வேண்டுகோளை காது கொடுத்து கேட்கவில்லை. வெள்ள நிவாரண நிதியையும் வழங்கவில்லை.
பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் தேர்தல் பயத்தில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழகத்திலேயே குடியேறினாலும் தமிழக மக்கள் பா.ஜ.க. அரசை ஏற்க மாட்டார்கள். பாரதிய ஜனதாவுக்கு ஓட்டுகள் விழாது. நாடும் நமதே நாற்பதும் நமதே.
இவ்வாறு அவர் பேசினார்.
- மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது தி.மு.க.
- தமிழக அரசு கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்துள்ளது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பட்ஜெட் மற்றும் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் மற்றும் தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் சிலர் பேசி வருகின்றனர். வீடு இல்லாதவர்களை கண்டறிந்து, 8 லட்சம் பேர் அடையாளப் படுத்தப்பட்டு, அவர்களில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பேருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்டுள்ள கனவு இல்லம் மூலமாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள்ளன.
இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம் என்று அண்ணாமலை கூறுகிறார். யாரோ பெத்த பிள்ளைக்கு பெயர் வைப்பது உங்கள் பழக்கம், கருணாநிதியின் கனவு இல்லம் திட்டம் என்பது தமிழக அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்களை வைத்துள்ளது. வரலாறு திருத்தப்படுகிறது. வரலாற்றை மாற்றி அழிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியை நாம் மகான் என்கிறோம். ஆனால் அவர்கள் வேறு கதை சொல்கின்றனர். பொய் சொல்லி, பிரிவு ஏற்படுத்தி, நம்மை ஏமாற்ற நினைக்கின்றனர். இங்குள்ள மக்கள் யாரும் ஏமாறமாட்டார்கள்.
எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது என்று பிரதமர் மோடி நினைக்கின்றார். தி.மு.க.வை மோடி மட்டு மல்ல, உங்க அப்பன் வந்தாலும் அழிக்க முடியாது. மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது தி.மு.க.
கல்வி கடன், விவசாய கடன், மகளிர் கடன் ஆகியவற்றை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்யவில்லை. தமிழக அரசு கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலமாக பா.ஜ.க. பெரும் ஊழல் செய்துள்ளது.
90 சதவீத நிறுவனங்கள் பா.ஜ.க.விற்கு தேர்தல் நிதி கொடுத்துள்ளது.கொரோனா தடுப்பூசி தயாரித்த ஜூரம் நிறுவனம் மட்டும் 300 கோடி ரூபாய் பா.ஜ.க.விற்கு நிதி அளித்து உள்ளது.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகம் வெற்றி பெற இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
- முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
திருச்செந்தூர்:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமான மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி திருச்செந்தூரில் சட்டமன்ற அலுவலகம் முன்பு நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான போட்டி திருச்செந்தூர் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம் வழியாக சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவிலும், பெண்களுக்கு திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வரையிலான சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் நடைபெற்றது.
கனிமொழி எம்.பி. கொடி அசைத்து மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன்-சூர்யா தம்பதியினர் வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து வெற்றி பெற்ற தம்பதியினருக்கு முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
2-வது பரிசாக 75 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 50 ஆயிரம் உட்பட 10 பரிசுகள் தலா இருபாலர்களுக்கும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ், நகர செயலாளர் சுடலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அய்யா வைகுண்டர் 192-வது அவதார தின விழா.
- அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் 192-வது ஆண்டு அவதார தின விழா நேற்று தொடங்கியது.
வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால் நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை தலைவர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்று வரை 2 நாட்கள் விழா நடைபெற்றது. முன்னதாக செயலாளர் பொன்னுதுரை வரவேற்றார்.
விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு அன்னதர்மம், பகல் 12மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, மதியம் 1மணிக்கு அன்னதர்மம், இரவு 7 மணிக்கு பணிவிடை அய்யா புஷ்ப வாகன பவனி தொடர்ந்து அன்னதர்மம் நடந்தது.
தொடர்ந்து திரு ஏடு வாசிப்பு, இரவு அகில திரட்டு அம்மானை கருத்துரைகள்,18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அய்யா வைகுண்டர் அவதார மகிமை, துவையல் தவசு, அகில திருட்டில் வாழ்வியல் கருத்து ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியும், இரவு சிவசந்திரன் வழங்கிய இன்னிசை கச்சேரியும் நடந்தது.

2-ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்ந்தால், அபயம் பாடுதல், 6.28 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதம் இட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வள்ளியூர் அய்யாவழி அகிலதிருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், துணைத் தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால் நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை தலைவர் பால்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவதார தின விழா பணிவிடை,அன்ன தர்மம், இனிமம் வழங்குதல் நடந்தது. விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர் செய்து வருகின்றனர்.
- நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
- அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் வள்ளுவர் நகரை சேர்ந்த கண்ணன் இருவரும் தோனுகாலில் உள்ள ஒரு எந்திர தீப்பெட்டி ஆலை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.
அந்த ஆலையில் பணியாளர்கள் நேற்று வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். இரவில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவில் ஆலையில் உள்ள எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறி தீயணைப்பு படை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ தொடர்ந்து எரிந்ததால் தீயை அணைப்பதற்கு டிராக்டர் மூலமும் தண்ணீர் கொண்டு வந்து தீயணைக்கும் பணி நடைபெற்றது.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.
சம்பவ இடத்தை கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாள், வருவாய் ஆய்வாளர் ராம மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க. பலமாக இருப்பதால் தான் பா.ஜ.க. நம்மை தேடுகிறது.
- தி.மு.க. கூட்டணியில் 2 கட்சிகள் அதிருப்தியில் உள்ளது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும், அதனை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 4-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாக நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெருமாள், சின்னப்பன், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது:-
இன்னும் 10 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிமிடம் வரை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க. தவம் கிடக்கிறது. கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர். அ.தி.மு.க. பலமாக இருப்பதால் தான் பா.ஜ.க. நம்மை தேடுகிறது.

தி.மு.க. கூட்டணியில் 2 கட்சிகள் அதிருப்தியில் உள்ளது. தூத்துக்குடி தொகுதியை பொருத்தவரை இந்த முறை அ.தி.மு.க. தான் களமிறங்குகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு ஏறக்குறைய வேட்பாளரை பொதுச்செயலாளர் தேர்வு செய்துவிட்டார். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றால் அ.தி.மு.க. தான் முழுகாரணம். நிலத்தினை கையகப்படுத்தி கொடுத்த ஆட்சி அ.தி.மு.க. தான். இந்த திட்டத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டதை மக்களிடம் தெரிவித்தால் போதும். மோடியை மக்கள் பார்ப்பார்கள். ஆனால் வாக்களிக்கமாட்டார்கள். தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் அதிகபட்சம் 5 சதவீத வாக்குகள் தான் கிடைக்கும். திராவிட கட்சிகள் இல்லாமல் தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.






