search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி தமிழகத்தில் குடியேறினாலும் பாரதிய ஜனதாவிற்கு வாக்கு விழாது- கனிமொழி பேச்சு
    X

    பிரதமர் மோடி தமிழகத்தில் குடியேறினாலும் பாரதிய ஜனதாவிற்கு வாக்கு விழாது- கனிமொழி பேச்சு

    • தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
    • ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தின் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    விளாத்திகுளம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் விளாத்திகுளத்தில் நேற்று மாலை விளாத்திகுளம்-மதுரை சாலையில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் எல்லோருக்கும் எல்லாம் எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஒன்றிய அரசு தமிழகத்தின் மக்கள் பணத்தை ஜி.எஸ்.டி. என்ற பெயரில் வசூலித்து கொண்டு சென்று வடமாநிலங்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறது. மாறாக மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை தமிழகத்திற்கு ஒரு தலைப்பட்சமாக வழங்காமல் நிதி நெருக்கடியை உருவாக்க முயற்சி செய்கிறது.

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

    பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் கொள்ளை அடித்து இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு நிதியை பயன்படுத்தியது போன்று பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்து பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ள மாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறது.

    பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனை போன்று பிரதமர் மோடியின் தலைமையிலான மக்கள் விரோத ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு எதிர்த்து வருகிறது.

    ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தின் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய மிரட்டலுக்கு ஒருபோதும் தி.மு.க. அரசு அஞ்சுவதில்லை.

    டெல்லியில் விவசாயிகளின் வேண்டுகோளை காது கொடுத்து கேட்காத ஒன்றிய அரசு தமிழகத்திலும் சென்னை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும் மக்களின் வேண்டுகோளை காது கொடுத்து கேட்கவில்லை. வெள்ள நிவாரண நிதியையும் வழங்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் தேர்தல் பயத்தில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழகத்திலேயே குடியேறினாலும் தமிழக மக்கள் பா.ஜ.க. அரசை ஏற்க மாட்டார்கள். பாரதிய ஜனதாவுக்கு ஓட்டுகள் விழாது. நாடும் நமதே நாற்பதும் நமதே.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×