என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கைலவனம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(61). இவர் அந்த பகுதியிலுள்ள தனக்கு சொந்தமான வயலில் எள் சாகுபடி செய்திருந்தார். அதை அறுவடை செய்வதற்காக தன் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று பார்த்தார். அப்போது வயலில் அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் தன் மாட்டை மேய விட்டுக் கொண்டிருந்தாராம்.
இதைப்பார்த்த பழனிவேல் ஏன் இப்படி எள் சாகுபடி வயலில் மாட்டை விட்டு சேதப்படுத்துகிறாய் எனக் கேட்டாராம். இதில் ஆத்திரமடைந்த முத்துவேல், பழனிவேலை தரக்குறைவாக பேசி கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பழனிவேல் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் நாகை மாவட்ட அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அணி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-
தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி சசிகலாவின் பினாமி ஆட்சி. அ.தி.மு.க. தொண்டர்கள் 100-க்கு 100 சதவீதம் நம்முடைய பக்கம் தான் உள்ளனர். ஆனால் 122 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் ஆட்சியை நகர்த்தி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுக்கொண்டு அந்த நம்பிக்கையில் உள்ளனர்.
ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் இந்த கட்சி சென்றுவிடக்கூடாது என்று எண்ணி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் கட்சியை கொண்டு செல்லவில்லை. அதைத்தான் நாம் கூறுகிறோம். ஆனால் நமது அடிப்படை கோரிக்கையை நிறைவேற்றாமல் இணைவோம் என்று ஒரு பொய்யை மெய்யாக கூறுகிறார்கள். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.
மக்கள் தான் எஜமானர்கள். நல்ல தீர்ப்பை அவர்கள் வழங்குவார்கள். இந்த கூட்டத்திற்கு எத்தனையோ தடையை விதித்தார்கள். அதையும் மீறி பெண்கள் திரண்டு வந்துள்ளனர். ஜெயலலிதா 74 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ. மூலம் உரிய நீதி விசாரணை நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
ஆனால் அதை இந்த பினாமி அரசு செய்ய முன்வரவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் இது மக்கள் புரட்சியாக வெடிக்கும். உங்கள் ஆட்சி வீட்டுக்கு போகும். ஜெயலலிதா மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியதால் தான் தமிழர்களின் நெஞ்சில் இன்றும் தெய்வமாக வாழ்கிறார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும். அதற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியை விடுவிக்க வேண்டும். அதுவரை எங்கள் தர்ம யுத்தம் தொடரும். நமது அடிப்படை கோரிக்கை சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது தான். ஆனால் அவர்கள் அதை விடுத்துவிட்டு இணைவோம் என்று தவறான தகவலை விதைக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் விரைவில் நல்ல தீர்ப்பை வழங்கும். அ.தி.மு.க. தலைமைக்கழகம், இரட்டை இலை சின்னம் நம்மிடம் வந்து சேரும். உண்மையான அ.தி.மு.க. நாம் தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கும். அதன் பின்னர் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும்.
ஜெயலலிதாவின் திட்டங்களை முடக்கியதோடு, எதையும் செயல்படுத்த முடியாத அரசாக இந்த அரசு உள்ளது. மக்களின் எந்த பிரச்சினையையும் அரசு கவனிக்கவில்லை. விரைவில் தேர்தல் வரும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு. தேர்தல் வந்தால் தான் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும். அது நடைபெறும் காலம் வெகுதொலைவில் இல்லை.
தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழக மக்களின் எதிர்பார்ப்பை, உரிமையை நிறைவேற்றவில்லை. காவிரி நீர் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் நீதிமன்றம் மூலம் நமது உரிமையை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. இலங்கையில் போர் நடந்தபோது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி, மத்திய அரசிலும் அங்கம் வகித்தார்.
ஆனால் போர் நிறுத்தத்துக்காக எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. மு.க.ஸ்டாலின் காண்பது பகல் கனவு. அதை அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி முறியடிக்கும். சசிகலாவை பொதுச்செயலாளராகவோ, முதல்- அமைச்சராகவோ ஆக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஒருபோதும் கூறியது இல்லை. மக்கள் ஆதரவோடு, பெண்கள் ஆதரவோடு தர்மயுத்தம் வெல்லும். ஜெயலலிதா ஆட்சி அமையும். அதை தமிழக மக்கள் நடத்திக்காட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாடு, எருது, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கக்கூடாது, வெட்டக்கூடாது என்று அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளிப்பாளையத்தில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு நாகை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். நகரசெயலாளர் மணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முருகன், வக்கீல் பிரிவு செயலாளர் ஆல்பர்ட்ராயன், நகர பொருளாளர் ஜோதிபாசு, நகரதுணை அமைப்பாளர் முத்துலிங்கம், நாகூர் இளம்சிறுத்தை பாசறை துணை அமைப்பாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நாகை சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் சுரேஷ், நகர துணை செயலாளர் பாண்டியன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாட்டு இறைச்சியை உண்டனர்.
சீர்காழி:
சீர்காழி திருமுல்லை வாசல் சாலையில் கீழ தென்பாதியில் மகளிர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்து மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் கல்லூரி மாணவிகள், அப்பகுதி பொதுமக்கள் பஸ்சிற்காக காத்திருக்கும் போது வெயில் மற்றும் மழையில் நனைந்து அவதிப்பட்டு வந்தனர்.
இதையொட்டி அப்பகுதி தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன் பஸ் நிலையம் அமைக்க கோரி தி.மு.க பாரளுமன்ற குழு தலைவரும், தி.மு.க மகளிர் அணி செயலாளருமான கனிமொழியிடம் மனு அளித்தார். இதை தொடர்ந்து கனிமொழி எம்.பி. பாராளுமன்ற நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை சீர்காழி திருமுல்லை வாசல் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க ஒதுக்கீடு செய்தார். இதற்கு சீர்காழி நகராட்சி மூலம் நிழற்குடை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
நாகையில் நாளை அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
நாகை மாவட்ட அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவுரித் திடலில் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர் கே.ஏ. ஜெயபால் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் வரவேற்று பேசுகிறார்.
இதில் முன்னாள் முதல்- அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேரூரையாற்றுகிறார். மேலும் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன், மா.பா. பாண்டியராஜன், எஸ்.பி. சண்முக நாதன், ராஜ கண்ணப்பன், முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், மைத்ரேயன் எம்.பி., செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
முடிவில் எஸ். நாகராஜன் நன்றி கூறுகிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள்,பேரூர், கிளை. நிர்வாகிகள் கலந்து கொள்ளும் படி நாகப்பட்டினம் மாவட்ட அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா ) சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே நடுக்கரை ஊராட்சியில் காவிரி ஆற்றின் கரையோரம் வெவ்வேறு இடங்களில் 2 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று நடுக்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த கடைகள் மூடப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடந்த 22-ந் தேதி மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் மேலப்பாதி, செம்பனார்கோவில், பரசலூர், கருவாழக்கரை, மேலையூர், கஞ்சாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது தரங்கம்பாடி தாசில்தார் முருகேசன், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்த பிரச்சினையால் மதுக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று மீண்டும் மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் சுபாநந்தினி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரத்தில் பொதுமக்கள் கடையை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும், மதுக்கடைகளை தொடர்ந்து இயக்கினால் ஜூன் 2-ந் தேதி அனைத்து கட்சியினர் மற்றும் நடுக்கரை, பரசலூர், செம்பனார்கோவில் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களை ஒன்று திரட்டி உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க 3 டி.எஸ்.பி.க்கள், தலைமையில் 8 இன்ஸ்பெக்டர் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து டாஸ்மாக்கடை மேற்பார்வையாளர் அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில் டாஸ்மாக் கடையை சூறையாடிய 98 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை எழும்பூரை சேர்ந்த கபாலி மகன் கார்த்தி (வயது 18). இவர் தனது நண்பர்களுடன் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் காண கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று புறப்பட்டார். அந்த ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து இருந்தார்.
ரெயில் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ரெயில்வே பாலம் பகுதியில் சென்றபோது கார்த்தி தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோன்மணி, சிதம்பரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக மயிலாடுதுறை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள இளைய மதுக்கூடம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கொடி கம்பத்தை நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி விட்டனர்.
மேலும் கொடி கம்பத்தில் இருந்த சிறுத்தைகள் சிலையை தூக்கி சென்று விட்டனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆத்திரம் அடைந்தனர்.
அவர்கள் திருவெண்காடு- இளைய மதுக்கூடம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ரோட்டில் முள் வேலியை தூக்கி போட்டு இந்த மறியல் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா தலைமை தாங்கினார். இதில் வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் மோகன் கண்ணன், ரவி மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் கிடைத்ததும் திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம் பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரிசங்கர் மற்றும் போலீசார் செம்பியன்கோமல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாதாகோவில் தெருவைச் சேர்ந்த அபூர்வசாமி (வயது 50), சுந்தரமூர்த்தி(வயது 38), தெற்கு தெருவைச் சேர்ந்த ரெத்தினசாமி மகன் ஜெயராமன்(வயது 52), மெயின் ரோட்டைச் சேர்ந்த ஜார்ஜ்(வயது 50) ஆகிய 4 பேரும் அவரவர் வீட்டின் அருகே புதுவை மாநில சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் அங்கு விற்பனைக்கு வைத்திருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் சிவனாகரம் கிராமம் புதுத்தெருவில் தனது வீட்டின் அருகே புதுவை மாநில சாராயம் விற்பனை செய்த சீனிவாசன் மகன் சிவராமன் (வயது 28) என்பவரையும் கைது செய்தனர்.
வேதாரண்யம் தாலுகா மருதூர் இரட்டைக்கடையடியில் மயானத்திற்கு சாலை வசதி கேட்டு இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை வகித்தார். சாலை மறியலில் மாவட்ட துணை செயலாளர் நாராயணன், விவசாய சங்கம் நாகராஜன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
தகவலறிந்து சமூகநலத்துறை தாசில்தார் ரவி, வேதாரண்யம் சரக டி.எஸ்.பி. (பொறுப்பு) ராமகிருஷ்ணன், கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் சாலை மறியல் நடத்தியவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் நான்கு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா நல்லத்துக்குடி கிராமத்தில் அம்பேத்கர் நகர், வடக்கு நகர், வி.ஐ.பி. நகர், நடுத்தெரு ஆகிய இடங்களில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் நேற்று இரவு எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் தூக்கமின்றி பெரிதும் அவதி அடைந்தனர். இரவு முழுவதும் மின் தடை இருந்ததால் பெரியவர்கள் ,குழந்தைகள், நோயாளிகள் என அனைவரும் விடிய விடிய பாதிப்பு அடைந்தனர்.
இது குறித்து மின் வாரியத்திற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். ஆனால் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் போனில் மின்தடை பற்றி புகார் கூறிய போது போனை எடுத்தவர் அனைவரும் மதுபோதையில் உள்ளனர். காலையில் புகார் செய்யுங்கள் என்று கூறியதால் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் பயன் பெறும் வகையில் விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும், ஏரி, குளங்களில் அதிக அளவில் தண்ணீரை சேமிக்கவும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் அணைகளை தூர்வாரி, தூர்வாரும் வண்டல் மண் அல்லது சவுடு மண்ணை இலவசமாக விவசாய நிலங்கள், வீட்டு பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் செய்பவர்கள் தாசில்தாரின் அனுமதியுடன் பயன் படுத்திக்கொள்ள தமிழக அரசு சமீபத்தில் ஆணையிட்டது.
இந்நிலையில் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் உள்ள புளியகுளத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணியை அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக குளத்தில் உள்ள வண்டல் மண்ணை அள்ளுவதற்கு பதிலாக, 5 அடி ஆழத்திற்கு மேல், ஜே.சி.பி. எந்திரம் கொண்டு மணலை அள்ளி விற்பனை செய்வதாக குற்றம் சாட்டு எழுந்தது. இதையடுத்து இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இப்பணியை தடுத்து நிறுத்தினர்.
தகவலறிந்து வந்த வருவாய் துறையினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் உத்திராபதி, ஒன்றிய தலைவர் மாரிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை தலைவர் அன்பழகன் மற்றும் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.






