என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருக்கழுக்குன்றம்:

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேர் திருவிழா நடந்தது.

    இதையொட்டி வேதகிரீஸ்வரர் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடைபெற்றது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு எதிரே ஆங்காங்கே பக்தர்கள் புளியங்காய், காய்கறிகளை கொட்டியும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நான்கு மாடவீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமிகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. பகல் 12½ மணியளவில் தேர் நிலைக்கு வந்தது.

    விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
    நீலாங்கரை அருகே அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவான்மியூர்;

    நீலாங்கரையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிராஜின் தெருவை சேர்ந்தவர் குப்பு சாமி (26). இவர் தி.நகரில் உள்ள ஒரு தனியார் நிறு வனத்தில் மானேஜர் ஆக பணிபுரிகிறார்.

    இவரது மனைவி மேடவாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று இருந்தார். எனவே குப்புசாமி வீட்டை பூட்டி விட்டு அலுவலகம் சென்று இருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இன்று காலை செங்கல்பட்டு ஜெயிலில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்கல்பட்டு:

    சென்னை கோவிலம் பாக்கத்தைச் சேர்ந்தவர் துரை(37).

    சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் செங்கல்பட்டு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயிலில் சமையல் பிரிவில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். சிறையில் இருக்கும் அவரை மனைவி, உறவினர்கள் யாரும் பார்க்க வரவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தார்.

    இன்று காலை துரை சமையல் அறைக்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன், டி.எஸ்.பி. மதிவாணன், சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை கிடைக்கும்வரை உள்ளாட்சி தேர்தல் நடக்காது என்று திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் நடை பெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    கூட்டத்திற்கு பின் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இரட்டை இலை சின்னத்தை மீட்கும்வரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாது.

    ஓ.பி.எஸ்.யுடன் பி.ஜே.பி. இணைந்து செயல்படுகிறது என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலோ, பொதுத் தேர்தலோ எது நடந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளோம் என ஓபிஎஸ் பேசி இருப்பது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட சவால்.


    இலங்கை தமிழர்களுக்கு எதிராக பாதுகாப்பு சட்டத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கு எதிரான சட்டம். ஐ.நா. சபை இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மே தினம் என்பது உழைக்கும் வர்க்கத்தினர் தினம். உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிய கூலி, உரிமை வழங்க வேண்டும். பல நிறுவனங்கள் இதை சரியாக பின்பற்றுவது இல்லை. அதனால் மத்திய, மாநில அரசுகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

    அ.தி.மு.க.வுக்கு டாக்டர் வெங்கடேஷ் தலைமை ஏற்க வேண்டும் என்று காஞ்சீபுரம் நகரம் முழுவதும் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    காஞ்சீபுரம்:

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வினர் சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் உள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வுக்கு டாக்டர் வெங்கடேஷ் தலைமை ஏற்க வேண்டும் என்று காஞ்சீபுரம் நகரம் முழுவதும் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    அந்த போஸ்டரில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மலர்தூவி டாக்டர் வெங்கடேசை வாழ்த்துவது போன்ற படத்துடன் ‘‘பாசறைக்கு தலைமை வகித்தவரே கழகத்திற்கும் தலைமை ஏற்க வாருங்கள். ஒன்றரைகோடி தொண்டர்களை வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் நீங்கள் தான். நீங்கள் தலைமை ஏற்க வேண்டும் என்பதே ஒன்றரைகோடி தொண்டர்களின் விருப்பம்’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த போஸ்டர் புல்லட் பரிமளம் என்பவர் பெயரில் ஓட்டப்பட்டு இருக்கிறது. காஞ்சீபுரம் நகர மன்றத்தில் இரண்டுமுறை அ.தி.மு.க. கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் புல்லட் பரிமளம். இவர் முன்னாள் அதிமுக நகர செயலாளராகவும், முன்ளாள் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராகவும் பதவி வகித்தவர்.

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது காஞ்சீபுரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்பே நகரின் முக்கிய பகுதியான காந்திரோட்டில் அதிமுக வேட்பாளர் 1 லட்சத்து 69 ஆயிரத்து 099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பேனர் வைத்து பரபரப்பினை ஏற்படுத்தியவர்.

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது காஞ்சீபுரத்தில் அரசு பேருந்தினை எரித்ததாக புல்லட் பரிமளம், அவரது மனைவி உமா மகேஷ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சி மோதலால் புல்லட் பரிமளம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் எலக்ட்ரீசியன் பழனிமுருகன் ஆக்கிரமிப்பு கூரைகளை அகற்றியபோது கடைக்கு மேலே சென்ற மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி அவர் பலியானார்.
    தாம்பரம்:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் பழனிமுருகன் (வயது 32). இவர் குரோம்பேட்டை ராதாநகரில் தங்கியிருந்து எலக்ட்ரிக்கல் வேலை செய்துள்ளார்.

    குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டது.

    அப்போது நிஜாமுதீன் என்பவருக்கு சொந்தமான கடையையும் அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முன் வந்தனர். அப்போது நிஜாமுதீன் தானே ஆட்களை வைத்து ஆக்கிரமிப்பு பகுதியை அகற்றி விடுவதாக தெரிவித்தார்.

    அதன்படி எலக்ட்ரீசியன் பழனிமுருகன் ஆக்கிரமிப்பு கூரைகளை அகற்றிக் கொண்டிருந்தார். கூரையின் மீது நின்று ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது கடைக்கு மேலே சென்ற மின்கம்பி அவர் மீது உரசியது. இதில் பழனிமுருகன் மீது மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுமாப்பிள்ளையான பழனி முருகனுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகிறது. அவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார்.

    போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மீண்டும் குரோம்பேட்டையில் தொடங்கியது.
    தாம்பரம்:

    போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சவார்த்தை கடந்த மார்ச் 7-ந் தேதி குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடந்தது.

    இதில் 48 தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மீண்டும் குரோம்பேட்டையில் தொடங்கியது.

    இதில் போக்குவரத்து துறை செயலாளர் சந்திரகாந்த் தாம்லே, நிதித்துறை துணை செயலாளர் வெங்கடேசன் மற்றும் போக்குவரத்து கழக 9 மண்டல மேலாண்மை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களில் இருந்தும் தலா 2 பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
    சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை லண்டன் புறப்பட இருந்த விமானத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து லண்டனுக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னையை சேர்ந்த மகின் அபுபக்கர், தேவக்கோட்டையை சேர்ந்த ரஜூல்தீன் ஆகியோரின் சூட்கேசை சோதனை செய்த போது தலா ஒரு கிலோ போதைப்பொருள் (பிரவுன்சுகர்) மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 4 கோடி ஆகும்.

    இதைத்தொடர்ந்து போதைப்பொருளுடன் மகின் அபுபக்கர், ரஜூல்தீன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
    அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    இஸ்ரோ தலைவர் கிரண்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பூமியின் தட்பவெப்பம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்ய ஜிசாட் 9 செயற்கை கோள் நாளை (5-ந்தேதி) மாலை 4.57 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும். மேலும் செயற்கை கோளில் மனிதர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னை கோயம்பேடு, தி.நகர், பாரிமுனை ஆகிய பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்துக்கு இயக்கப்பட்டு வந்த சென்னை மாநகர ஏ.சி. பஸ்கள் போதிய பராமரிப்பும், வருவாயும் இல்லாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன.
    மாமல்லபுரம்:

    சென்னை கோயம்பேடு, தி.நகர், பாரிமுனை ஆகிய பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்துக்கு விடுமுறை நாட்களில் மட்டும் சென்னை மாநகர ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    போதிய பராமரிப்பும், வருவாயும் இல்லாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவை நிறுத்தப்பட்டன.

    இதனால் கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் ஏ.சி. பஸ்கள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    இதே போல் கத்திரி வெயில் அதிகமானதால் ஏ.சி. பஸ்களில் செல்லலாம் என்று காத்திருந்த பயணிகளும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.

    இது குறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் இருந்து முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கு மட்டும் விரைவில் ஏ.சி. பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    கத்திரி வெயில் இன்று துவங்கி விட்டதால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஏ.சி. பஸ்சில் பயணம் செய்ய ஆர்வத்துடன் உள்ளனர்.

    தாம்பரம் விமான படை தளத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பள்ளிக்கரணை:

    உத்தரப்பிரதேச மாநிலம் ‌ஷம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குல்பீர்சிங் (வயது23). இவர் விமானப்படை பிரிவில் கடந்த 2013ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

    அசாமில் வேலை பார்த்து வந்த குல்பீர்சிங்கை 6 மாத பயிற்சிக்காக தாம்பரம் விமானப்படை தளத்துக்கு மாற்றினர்.

    இங்கு வந்த குல்பீர்சிங் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். நேற்று இரவு அவருக்கு விமானப்படை தள ஓடு பாதையில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது.

    துப்பாக்கியுடன் குல்பீர் சிங் நடந்தபடி பாதுகாப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இரவு 7.30 மணிக்கு திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது குல்பீர்சிங் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.


    இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தக்கு வந்து குல் பீர்சிங் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் தங்கியிருந்த அறையில் கடிதம் ஏதாவது எழுதி வைத்து உள்ளாரா? என்று சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

    குல்பீர்சிங்கின் செல்போனை கைப்பற்றி யார்- யாரிடம் பேசினார் என்று விசாரிக்கிறார்கள்.
    பரங்கிமலை அருகே சிக்னலை மீறி வேகமாக சென்ற சொகுசு காரால் ஏற்பட்ட விபத்தில் 5 கார்கள் சேதம் அடைந்தன. மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் படுகாயம் அடைந்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் முரளி (வயது 36), கார் டிரைவர். இவர், நேற்று மாலை சொகுசு காரை ஓட்டிக்கொண்டு சென்னை விமான நிலையம் நோக்கி வந்தார். பரங்கிமலையை தாண்டி பழைய விமான நிலையம் நோக்கி சென்ற போது சிக்னல் போடப்பட்டது. அதற்குள் சிக்னலை கடந்து சென்று விடுவதற்காக காரை முரளி வேகமாக ஓட்டிச்சென்றார்.

    ஆனால் அதற்குள் பச்சை விளக்கு சிக்னல் விழுந்து விட்டதால் மீனம்பாக்கத்தில் இருந்து பழவந்தாங்கல் நோக்கி சென்ற கார் மீது சொகுசு கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் முரளி ஓட்டி வந்த சொகுசு கார், பழவந்தாங்கலில் இருந்து பரங்கிமலை நோக்கி செல்ல சிக்னலுக்காக காத்திருந்த மேலும் 3 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் முரளி ஓட்டி வந்த சொகுசு கார் உள்பட 5 கார்களும் சேதம் அடைந்தன. சிக்னலுக்காக மோட்டார் சைக்கிளில் நின்று இருந்த அஸ்தினாபுரத்தை சேர்ந்த கணபதி (60) என்பவர் இதில் படுகாயம் அடைந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது.

    நொடிப்பொழுதில் நடந்து முடிந்த இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சொகுசு கார் டிரைவரான முரளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×