என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    செம்மஞ்சேரியில் 10 ஆம்னி பஸ்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. தீவைத்து யாரும் எரித்து நாச வேலையில் ஈடுபட்டார்களா? என்று செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் ஐ.டி நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் உள்ளன.

    ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நிறுவனத்திற்கு வந்து செல்வதற்கு வசதியாக மாத ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஆம்னி பஸ்கள் ஷிப்ட் முறையில் நூற்றுக்கணக்கில் இயக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு இயக்கப்படும் பஸ்கள் மற்ற நேரங்களில் அங்குள்ள சர்வீஸ் சாலை மற்றும் காலியிடங்கள், நிறுவனத்திற்கு சொந்தமான பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம்.

    அதேபோல் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பிரபல பஸ் நிறுவனத்தின் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

    அவற்றில் பழுது அடைந்த 10 பஸ்கள் சரிசெய்வதற்காக சுமார் செம்மஞ்சேரி பெருமாள் கோவில் தெரு செல்லும் சாலையில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் ஒரு பஸ்சில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த புகை பஸ் முழுவதும் பரவி தீப்பிடித்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அதற்குள் தீ மளமளவென பக்கத்திலிருந்த பஸ்களுக்கும் பரவி அந்த பஸ்களும் தீ பிடித்து எரிந்தன. சிறுசேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அதற்குள் 10 பஸ்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீவைத்து யாரும் எரித்து நாச வேலையில் ஈடுபட்டார்களா? என்று செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதால், அவரை தனிப்பட்ட முறையில் நீக்க முடியாது என்று அ.தி.மு.க. அம்மா அணியின் மூத்த தலைவரான தம்பிதுரை கூறினார்.
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. அம்மா அணியின் மூத்த தலைவருமான தம்பிதுரை நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-



    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்து எடுத்தது பொதுக்குழு தான். அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் உள்பட எல்லோரும் கையெழுத்து போட்டு உள்ளனர். அதன்பிறகு தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பொதுக்குழு எடுத்த முடிவை தம்பிதுரை, எடப்பாடி, பன்னீர்செல்வம் போன்ற தனிப்பட்ட நபர் எப்படி மாற்ற முடியும்? சசிகலா பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதால், அவரை தனிப்பட்ட முறையில் நீக்க முடியாது.

    எனவே எந்த பிரச்சினை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்துவது மூலம்தான் தீர்வு காண முடியுமே தவிர, ஏதோ சில கருத்துக்களை மனதில் வைத்து பேசினால் சரி வராது. நேரிடையாக விவாதிக்க வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒற்றுமை உணர்வுடன் செயல்பட காத்திருக்கிறோம். சசிகலாவும், தினகரனும் சிறையில் இருப்பதால் கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமி வழி நடத்திக்கொண்டு இருக்கிறார். எதுவும் முடங்கவில்லை, செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

    இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
    தாம்பரம் ரெயில் நிலையத்தில் சிக்னல்களை கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறையில் மின் கசிவு ஏற்பட்டதால் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
    தாம்பரம்:

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் சிக்னல்களை கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்குள்ள சர்கியூட் போர்ட்டில் இன்று காலை 9 மணிக்கு மின் கசிவு ஏற்பட்டு வெடித்தது.

    இதனால் ரெயில் சிக்னல்கள் இயங்கவில்லை. இதையடுத்து தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- தாம்பரம், கடற்கரை மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்களும் நடு வழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள் பஸ்களில் ஏறி சென்றனர்.

    சிக்னலில் சர்கியூட் போர்டில் எற்பட்ட கோளாரை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு கோளாறு சரி செய்யப் பட்டது.

    சிக்னல் இயங்கிய பின் ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த கோளாறால் இன்று காலை 9.05 மணி முதல் 10.10 மணிவரை ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    தோல்வி பயத்தில் 10-வது வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவான்மியூர:

    மேடவாக்கத்தைச் சேர்ந்த ரகுவின் மகள் அன்புக்கரசி (18). இவள் 10-வது வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்தாள். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டுக்கு சென்று இருந்தாள். அப்போது இருவரும் தேர்வு எழுதியது குறித்து விவாதித்தனர்.

    அப்போது தான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமா என கூறி அன்புக்கரசி அழுதாள். அவளை தோழி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள். அவர்கள் இருவரும் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து இறங்கி வந்தனர். அப்போது தலைக்கு மேல் சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து அன்புக்கரசி தற்கொலை செய்ததாக தெரிகிறது. பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பருவமழை பொய்த்ததன் காரணமாக பாலாற்றில் ஏற்கனவே நீர்மட்டம் குறைந்து உள்ளது. தற்போது கடும் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகளில் சிறிதளவு உள்ள நீரும் வெகுவேகமாக குறைந்து வருகிறது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பெருநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது 51 வார்டுகளை கொண்டுள்ளது. தினமும் 20 லட்சம் மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பாலாற்றில் 3 கிணறுகள், இரண்டு தரைவழி கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் அளிக்கப்படுகிறது.

    இதுதவிர 10 போர்வெல்கள் மூலமும் குடிநீர் பெறப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. மேலும் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட சிறுமின்விசை பம்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதியிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பருவமழை பொய்த்ததன் காரணமாக பாலாற்றில் ஏற்கனவே நீர்மட்டம் குறைந்து உள்ளது. தற்போது கடும் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகளில் சிறிதளவு உள்ள நீரும் வெகுவேகமாக குறைந்து வருகிறது.

    இதனால் பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீரின் அளவு கடந்த சில நாட்களாக நாள்ஒன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர்கள் குறைவாக சப்ளை செய்யப்படுகிறது.

    எனவே நாளுக்குநாள் கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில் குடிநீர் சப்ளையில் பெரும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் காஞ்சீபுரம் நகரின் பல பகுதிகளில் பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.
    மாமல்லபுரத்தில் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த சிற்பகலைஞ்சரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் ஜந்துரதம் சாலையில் சிற்ப பட்டறையும் கலைக்கூடமும் நடத்தி வருபவர் விஜி. இவர் நேற்று காலை தனது கடை முன் நடனம் ஆடியபடி போவோர் வருவோரை கிண்டலடித்தபடி இருந்தார் திடீரென கடையில் இருந்த விலை உயர்ந்த சிற்பங்களை ரோட்டில் போட்டு உடைத்து மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினார்.

    வீட்டின் உள்ளே சென்று வீட்டு உபயோகப் பொருட்களையும் உடைத்த அவர் தான் வளர்த்த நாயையும் தரையில் அடித்து கொன்றார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜியை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.



    விசாரணையில் வெளிநாட்டு நண்பர்கள் சிலர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தனது கற்பனையில் உருவான சிற்பங்களை பேஸ்புக்கில் அவர்களது சிற்பங்கள் என பதிவு செய்திருந்ததாலும் ஆத்திரத்தில் இப்படி நடந்து விட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு வீடு திரும்பினார்

    பின்னர் நேற்று இரவு 10 மணிக்கு தனது பைக்கையும் வீட்டின் கூரையையும் தீயிட்டு கொழுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
    கானாத்தூரில் வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவான்மியூர்:

    நீலாங்கரை அடுத்த கானாத்தூர் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி ராணி. இவர்களது மகள் ஹேமலதாவுக்கு 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சித்ரா பவுர்ணமியை யொட்டி தாலியை பிரித்து கட்டும் நிகழ்ச்சிக்காக தாய் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று இரவு அனைவரும் திருவான்மியூர் பாம்பன் சாமி கோவிலுக்கு சென்று தங்கினர். இன்று காலை வீட்டுக்கு வந்தபோது கிரில் கேட் உடைந்து இருந்தது.

    பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ.1½ லட்சம் பணம், பட்டு புடவைகள் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் லாரி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு ஆக்கிரமிப்பு செய்து 30-க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டு இருந்தன.

    இதனால் பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் பஸ்களுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் பயணிகளும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற லாரியுடன் பஸ்நிலையத்துக்கு வந்தனர்.

    அவர்களை கண்டதும் சிறிய கடைகளை வைத்திருந்தவர்கள் தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மற்ற கடைகளை ஊழியர்கள் அகற்றி பொருட்களை லாரியில் ஏற்றினர்.



    அப்போது ஜூஸ் கடை வைத்திருந்த ராணி என்பவரது கடையையும் அகற்றினர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக சில வியாபாரிகளும் வந்தனர். ஆனாலும் கடையில் இருந்த பொருட்களை பேரூராட்சி ஊழியர்கள் எடுத்து லாரியில் போட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராணி அதே லாரியில் ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். கடையை அகற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

    அவரை பேரூராட்சி ஊழியர்கள் வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டனர். அப்போது ராணியின் மகன் பிரசாந்தும் ரகளையில் ஈடுபட்டார். அவர்களை போலீசார் அழைத்து சென்று எச்சரித்து விட்டனர்.



    இதைத் தொடர்ந்து ராணி மீண்டும் லாரியில் ஏறிக் கொண்டார். பேரூராட்சி அலுவலகம் அவரை அவர் லாரியிலேயே சென்றார். அங்கு ராணியை அதிகாரிகள் அறிவுரை கூறி அனுப்பினர். மீண்டும் பஸ் நிலையத்தில் கடை அமைக்கக்கூடாது என்று எச்சரித்து உள்ளனர்.
    காஞ்சீபுரத்தில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் சிவகாஞ்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த முத்துவை கைது செய்தனர்.

    இதேபோல சிறுகாவேரி பாக்கம் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த சங்கரனை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 24-ந் தேதி காஞ்சீபுரம் வருகிறார். அவர், காஞ்சீபுரத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் சங்கரமடத்துக்கு செல்கிறார்.
    காஞ்சீபுரம்:

    இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வருகிற 24-ந் தேதி ஒரு நாள் சுற்றுப்பயணமாக காஞ்சீபுரம் வருகிறார். இதற்காக அன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

    பின்னர் குண்டு துளைக்காத காரில் உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.



    பின்னர் சங்கரமடம் சென்று சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகியோரை சந்தித்து ஆசி பெறுகிறார். பிறகு மடத்தில் முக்தி அடைந்த காஞ்சீ மகா பெரியவர் சங்கர சேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பிருந்தாவனத்துக்கு சென்று அங்கு தரிசனம் செய்கிறார்.

    அதன்பிறகு பிற்பகலில் ஏனாத்தூரில் சங்கரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாக்களில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். அன்று மாலை ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஞ்சீபுரம் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி சவுரிராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண் தம்புராஜ், அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விஜயன் ஆகியோர் ஜனாதிபதி வந்து செல்லும் பாதைகள், கோவில்களில் நேரில் ஆய்வு செய்தனர்.

    மேலும் ஜனாதிபதி வருகையையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
    சென்னையில் இருந்து டெல்லிக்கு 342 பயணிகள் செல்லும் மிகப்பெரிய விமானத்தை இயக்க ‘ஏர்-இந்தியா’ நிறுவனம் முடிவு செய்தது.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    வழக்கமாக 168 பயணிகள் செல்லும் வகையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் முக்கிய நகரங்களில் இருந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    குறிப்பாக சென்னையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து சென்னைக்கும் அதிகளவில் பயணிகள் வந்து சென்றனர்.

    இதையடுத்து பயணிகளின் வசதிக்காக பெரிய விமானத்தை இயக்க ஏர்- இந்தியா நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 342 பேர் பயணம் செய்யும் வகையில் போயிங்-777 ரக விமானத்தை இயக்குகிறது.

    இந்த விமானம் காலை 8.30 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னைக்கு வருகிறது. மீண்டும் அதே விமானம் 9.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறது.

    இதுபோல் இரவு 8.30க்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானம் மீண்டும் 9.30 மணிக்கு டெல்லிக்கு செல்கிறது.

    ஒரே நேரத்தில் அதிகளவு பயணிகள் செல்ல முடிவதால் ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு விமான பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    காஞ்சீபுரம் அருகே லாரியின் கீழ் தூங்கிய டிரைவர் நசுங்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    அரக்கோணம் அருகே உள்ள கிருஷ்ணாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் இனாயத்துல்லா (33). லாரி டிரைவர். இவர் லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு காஞ்சீபுரத்தை அடுத்த வேளியூர் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு வந்தார். வாகனம் நிறுத்தும் இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு அதன் கீழே படுத்து தூங்கினார்.

    அப்போது மற்றொரு லாரியில் வந்த டிரைவர் இம்தியாஸ் தனது லாரியை நிறுத்த இடம் இல்லாததால் இனாயத்துல்லாவின் லாரியில் ஏறி அதனை சற்று நகர்த்தினார்.

    இதில் லாரியின் கீழ் படுத்திருந்த இனாயத்துல்லா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய இம்தியாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×