search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking water shortage"

    • டெல்லி மாநில மந்திரி அதிஷி அரியானா அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி காலைவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
    • டெல்லியில் நிகழும் தண்ணீர் தட்டுப்பாட்டு விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கண்டித்து பா.ஜ.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

    இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அம்மாநில அரசு அண்டை மாநிலங்களான இமாச்சல பிரதேசம், அரியானாவில் இருந்து டெல்லிக்கு கூடுதல் நீர் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இமாச்சல பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வரும் நீரை தடுக்கக்கூடாது என அரியானா மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

    இருப்பினும் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. பல்வேறு பகுதியில் குடிநீர் லாரிகள் மூலம் வாரத்தில் இரண்டு நாள், மூன்று நாள் என மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல பகுதிகளில் மக்கள் தண்ணீருக்காக அல்லல்படும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

    இதனிடையே, டெல்லி மாநில மந்திரி அதிஷி அரியானா அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி காலைவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

    இந்த நிலையில், டெல்லியில் நிகழும் தண்ணீர் தட்டுப்பாட்டு விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கண்டித்து பா.ஜ.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் டெல்லியில் நேற்று பா.ஜ.க. தலைவர் ரமேஷ் பிதுரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    அப்போது போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பீரங்கிகளை பயன்படுத்தினர். கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிவரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பீரங்கிகளை பயன்படுத்தியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • குடிநீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
    • கார் கழுவுதல், வீடுகளில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுதல் போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அரியானா மாநிலம் டெல்லிக்கு திறந்து விடும் தண்ணீரை நிறுத்தியுள்ளது நிலைமையை மேலும் மோசமாகியுள்ளது.

    டெல்லியில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் என மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முன்னதாக அறிவித்திருந்தார். இதையடுத்து மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதனிடையே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் குடிநீரை வீணாக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குடிநீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

    கார் கழுவுதல், வீடுகளில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுதல் போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், பொதுமக்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால், தேசிய தலைநகரின் பல பகுதிகளில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.



    • வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • வாகனங்களை கழுவவும், தோட்டங்களுக்கு குழாய் வழியாக வரும் தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள்.

    சென்னையில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பும் குறைந்து வருகிறது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வெறும் 5 ஆயிரத்து 665 மி. கன அடி மட்டுமே உள்ளது.

    இதில் பூண்டி, சோழவரம் ஏரிகள் வறண்டு விடும் நிலைக்கு சென்று விட்டன.

    எனினும் தற்போது போதுமான அளவு குழாய் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. இதில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் தினந்தோறும் 10.86 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.


    இதில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள போர்வெல் தண்ணீரையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் போர்வெல்களில் நீர் மட்டம் குறைந்து தண்ணீர் வறண்டு வருவதால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வாகனங்களை கழுவவும், தோட்டங்களுக்கு குழாய் வழியாக வரும் தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மெட்ரோ வாட்டார் அதிகாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்கள் குழாய் மூலம் வரும் தண்ணீரை குடிக்கவும் பயன்படுத்த வேண்டும். போர்வெல்களில் நீர் மட்டம் குறைந்து வருவதால் மற்ற தேவைகளுக்கு இந்த தண்ணீரையே பயன்படுத்துகின்றனர். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றனர்.

    • பவானி ஆற்றில் தண்ணீர் வற்றியதால் ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
    • தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஆலாங்கொம்பு பகுதியில் காலை 6 மணியில் இருந்து போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சி மக்களுக்கு மூலையூர் குடிநீர்த் திட்டத்தின் மூலமும், ஜடையம்பாளையம் தனி குடிநீர்த் திட்டத்தின் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே திருப்பூர் 2-ஆவது கூட்டு குடிநீர்த் திட்டத்துக்காக கடந்த 2 மாதங்களாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடுப்பணை ஏற்படுத்தப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் மற்ற குடிநீர்த் திட்டங்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

    இதனிடையே பவானி ஆற்றில் தண்ணீர் வற்றியதால் ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. குடிநீர் வழங்காததைக் கண்டித்து ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஆலாங்கொம்பு, தண்ணீர்தடம், வீராசாமி நகர், காந்திபுரம், கோழிப்பண்ணை, சவுடேஸ்வரி நகர், பழையூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேட்டுப்பாளையம்- சிறுமுகை சாலையில் ஆலாங்கொம்பு பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் திருப்பூர் 2-ஆவது குடிநீர் திட்டத்தில் மீதமாகும் 27 எம்.எல்.டி தண்ணீரில் 1 எம்.எல்.டி தண்ணீரை ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு வழங்க வேண்டுமென தெரிவித்தனர்.குடிநீர் வழங்கக்கோரி நள்ளிரவிலும் தொடர்ந்து பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஆலாங்கொம்பு பகுதியில் காலை 6 மணியில் இருந்து போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ், காரமடை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் டி.கே.வி பழனிசாமி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனால் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் 2-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி வந்த வாகனங்கள் வெள்ளிக்குப்பம் பாளையம், குமரன் குன்று வழியாக திருப்பி விடப்பட்டன. இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை நோக்கி சென்ற வாகனங்கள் ஓடந்துறை வச்சினாம்பாளையம் வழியாக திருப்பி அனுப்பப்பட்டன.

    • எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக குரங்கு முயற்சி செய்யும் காட்சிகளும், மற்றொரு குரங்கு சமையல் அறையின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் உள்ளன.
    • பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது பரவி வரும் இந்த வீடியோ பேசுபொருளாகி உள்ளது.

    கொளுத்தும் கோடை வெயிலில் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் தாகத்தால் மிகவும் தவிக்கின்றனர். இந்நிலையில் தாகத்தில் இருந்து நிவாரணம் தேடி ஒரு வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்த குரங்கு அங்கிருந்த சுத்திகரிப்பு எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிக்க முயற்சிக்கும் வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரை சேர்ந்த அக்ஷத் என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு வீட்டின் ஜன்னல் திறந்து கிடக்கும் நிலையில், அதன் வழியாக குரங்குகள் வீட்டின் சமையல் அறைக்குள் செல்கின்றன. அதில் ஒரு குரங்கு சமையல் அறையில் உள்ள சுத்திகரிப்பு எந்திரத்தை நோக்கி செல்கிறது. பின்னர் எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக குரங்கு முயற்சி செய்யும் காட்சிகளும், மற்றொரு குரங்கு சமையல் அறையின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் உள்ளன.

    பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது பரவி வரும் இந்த வீடியோ பேசுபொருளாகி உள்ளது.


    • ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே கூ.கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அருகேயுள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர் கொளஞ்சியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். தேர்தல் முடிந்தவுடன் சரி செய்வதாக பொதுமக்களிடம் அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து 2 நாட்கள் ஆகியும், குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கையை ஊராட்சி தலைவர் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று காலை 7 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் கொளஞ்சி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக திட்டியதாகவும், சாலையில் இருந்த காலிக்குடங்களை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்த போதும் பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற திருநாவலூர் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், பிரபு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஊராட்சி செயலாளரையும் அங்கு வரவழைத்தனர். 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.
    • கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பெருநகர பகுதியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அங்கு குறைந்துள்ளது. இதனால் குடியிருப்புகளுக்கு குடிநீர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் கிடைக்க பொதுமக்கள் சுமார் 5 நாட்கள் வரை காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. 5 ஆயிரம் லிட்டர் டேங்கர் குடிநீர் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது

    இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.

    இதே நிலை நீடித்தால் கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள பெரும் பணக்காரர்கள் கூட உடற்பயிற்சி மையம், பெரிய வணிக வளாகங்களில் உள்ள கழிவறைகளிலும் குளித்து வருகின்றனர்.

    அதே நிலை விரைவில் ஐதராபாத்தில் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • இலவடி அணை அருகே உறை கிணறு அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வந்தது.
    • உறை கிணறு பயன்பாட்டுக்கு வராததால் குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு நகராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், பொது மக்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பொதுநல அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதையடுத்து களக்காடு நகராட்சி சார்பில், சிதம்பர புரம் ஊருக்கு மேற்கே மலையடிவாரத்தில் உள்ள இலவடி அணை அருகே புதிதாக உறை கிணறு அமைத்து களக்காடு நகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி இலவடி அணை அருகே உறை கிணறு அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வந்தது. தற்போது உறை கிணறு அமைக்கும் பணிகள் முடி வடைந்துள்ளது. கிணற்றில் மோட்டார் பொருத்தப் பட்டுள்ளது.

    அதுபோல உறை கிணற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்ய குழாய்கள் பதிக்கும் பணி களும், மின் இணைப்பு பணி களும் நிறைவடைந்துள்ள தாக கூறப்படுகிறது. பணிகள் முடிவடைந்து, கிணற்றில் இருந்து நீர் எடுத்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு 2 மாதங்களை கடந்தும் இன்னும் உறை கிணறு பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. உறை கிணறுக்கு வழங்கப் பட்டுள்ள மின் வினியோக குறைபாட்டால் உறை கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

    மேலும், உறை கிணறு பயன்பாட்டுக்கு வராததால் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. வீடுக ளுக்கு புதிய குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படவில்லை. இந்த உறை கிணறு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் களக்காடு நகராட்சி பகுதிக்கு தினசரி குடிநீர் வழங்கலாம் என்றும், தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும் என்றும் பொது மக்கள் கூறுகின்றனர். எனவே மின் வினியோக குறைபாட்டை சரி செய்து, உறை கிணற்றை பயன் பாட்டுக்கு கொண்டு வந்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.
    • மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    கூடலூர்

    கூடலூர் பகுதியில் மே மாத இறுதியில் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்வது வழக்கம். நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்தது. இந்தநிலையில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    தொடர்ந்து கடந்த மாதமும் மழை பெய்ய வில்லை. தினமும் மாலை நேரத்தில் பரவலாக சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் வறட்சியால் காய்ந்து கிடந்த வனப்பகுதிகள் பசுமையாக மாறியது. காலை முதல் மாலை வரை மிதமான வெயிலும், அதன் பின்னர் சாரல் மழையும் இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. ஆனால் பருவமழை தீவிரம் அடைய வில்லை.

    இதனால் கூடலூர் பகுதியில் உள்ள மாயாறு, பார்வுட் ஆறு உள்பட அனைத்து நீர் நிலைகள் வறண்ட நிலையில் காட்சி அளிக்கிறது. எப்போது தண்ணீர் ஓடி கொண்டிருக்கும் நீரோடைகள், தண்ணீர் இன்றி வெறுமனே காணப்படுகிறது.

    மேலும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் தடுப்பணைகளிலும் தண்ணீர் வரத்து மிக குறைவாகவே உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் பருவமழை சரியாக பெய்யாமல் உள்ளதால் குறுமிளகு உள்ளிட்ட பணப்பயிர்களின் விளைச்சலும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் மட்டுமே அந்தந்த காலநிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் நடவு செய்ய முடியும். மேலும் குறுமிளகு உள்ளிட்ட பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே விளைச்சல் பாதிக்காமல் இருக்கும். தற்போது பரவலாக சாரல் மழை மட்டுமே பெய்வதால் தேயிலை செடிகளுக்கு மட்டுமே உகந்ததாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாபநாசம் அணையின் மூலமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
    • பெரும்பாலும் 15 அடி வரை சகதி இருக்கும் என்ற நிலையில், இன்னும் 20 அடி வரை மட்டுமே அணையில் நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய பிரதான அணையாக பாபநாசம் அணை விளங்குகிறது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் மூலமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

    மழை குறைவு

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள 692 கால்வரத்து குளங்கள், 404 மானாவாரி குளங்கள் என்று மொத்தம் உள்ள 1,096 குளங்கள் உள்ளன. இதன் மூலமும் விவசாயம் நடைபெறும். இந்நிலையில் மழைகுறைவால் இவற்றில் பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டுவிட்டன.

    வழக்கமாக மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 814.8 மில்லிமீடடர் இயல்பாக மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு இயல்பைவிட குறைவாக அதாவது 722.32 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்திருந்தது. தற்போது கடந்த 2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இயல்பைவிட 48.32 சதவீதம் குறைந்துள்ளது.

    38 அடியானது

    இதன்காரணமாக அணைகள் மற்றும் குளங்கள் வேகமாக வறண்டு வருகின்றன. மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, நம்பியாறு, பச்சையாறு, மணிமுத்தாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளின் மொத்த கொள்ளளவு 12 ஆயிரத்து 882 மில்லியன் கனஅடியாகும். தற்போது அவற்றில் நீரின் இருப்பு 2 ஆயிரம் மில்லியன் கனஅடியை நெருங்கிவிட்டது.

    பாபநாசம் அணையில் 5,500 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்கமுடியும். ஆனால் தற்போது அணையில் 522 மில்லியன் கனஅடிநீர் மட்டுமே இருக்கிறது. அணை நீர்மட்டம் 38 அடியாக குறைந்துவிட்டது. பெரும்பாலும் 15 அடி வரை சகதி இருக்கும் என்ற நிலையில், இன்னும் 20 அடி வரை மட்டுமே அணையில் நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    மின்னழுத்த குறைபாடு காரணமாக கோத்தகிரி சக்திமலை சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அளக்கரை கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சுமார் ரூ.10.60 கோடியில் கொண்டுவரப்பட்டது. இதற்காக அளக்கரை பகுதியில் செல்லும் ஓடையை மறித்து, அந்த தண்ணீரை சேமித்து வைப்பதற்காக பிரமாண்டமான தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. அங்கிருந்து கோத்தகிரி பகுதி வரை பெரிய குழாய்கள் பதித்து 7 பகுதிகளில் நீர் உந்து மோட்டார் அறைகளும் கட்டப்பட்டன. மேலும் கோத்தகிரியில் உள்ள உயரமான பகுதியான சக்திமலைப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு, தலா 8 லட்சம் லிட்டர் என மொத்தம் 16 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விநியோகத்திற்கு தேக்கி வைக்க 2 நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன.

    இதுமட்டுமின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு வசதியாக கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில் வறட்சி நிவாரண நிதியின் கீழ் ரூ.50 லட்சம் செலவில், நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டு, குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் தொடங்கியது.

    ஒவ்வொரு நீர் உந்து அறையிலும் 60 குதிரைதிறன் கொண்ட மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டன. இந்த 7 மின் மோட்டார்களும் ஒரே நேரத்தில் இயங்கினால் மட்டுமே, சக்திமலை சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வந்து சேரும்.

    இந்தநிலையில் நீர் உந்து அறைகள் அமைந்துள்ள ஒரு சில பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்கள் அங்கு நிலவும் மின்னழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி பழுதடைந்து வந்தன. இதனால் அளக்கரையிலிருந்து கோத்தகிரிக்கு தண்ணீரைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கோடநாடு அருகே உள்ள ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் கோத்தகிரி பகுதி மக்களுக்கு அந்த தடுப்பணை நீரை பேரூராட்சி நிர்வாகம் தடையின்றி விநியோகித்து வருகிறது. ஆனால் கோடை காலங்களில் ஈளாடா தடுப்பணை நீர் கோத்தகிரி பகுதி குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்வதற்கு போதுமானதாக இருக்காது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வரும் கோடை காலம் தொடங்குவதற்கு முன், மின்னழுத்த குறைபாடு உள்ள பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைத்து, தடையின்றி குடிநீரை விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
    மாநிலம் முழுவதும் அடுத்த 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான தண்ணீர் தமிழக அணைகளில் இருப்பதாக குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் பருவமழை பொய்த்து உள்ளதால், ஏரிகளில் போதுமான தண்ணீர் இல்லை. எனவே மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் தற்போது அதிகம் பேசப்படும் வார்த்தை ‘குடிநீர் தட்டுப்பாடு’ என்பது தான்.

    ஆனால் மாநிலம் முழுவதும் சுமார் 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) தேவையான குடிநீர் வழங்குவதற்கு போதுமான நீர் தமிழக அணைகளில் இருப்பதாக மாநில குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பாக வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் கூறியதாவது:-

    சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மேட்டூர் அணை மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு தினசரி 1,016.07 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தினசரி ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    93 ஆயிரத்து 470 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 16 ஆயிரத்து 172 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் காவிரி மூலம் 120 நாட்களும், கொள்ளிடம் ஆறு மூலம் நூறு நாட்களுக்கும் குடிநீர் வினியோகிக்க முடியும்.

    மேலும் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சிறுவாணி அணை மற்றும் பில்லூர் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் சோலையாறு அணையில் 255 மில்லியன் கன அடியும், பரம்பிக்குளம் அணையில் 2 ஆயிரத்து 204 மில்லியன் கன அடியும், ஆழியாறு அணையில் 575 மி.க.அடியும், திருமூர்த்தி அணையில் 309 மி.க.அடியும், சிறுவாணியில் 22.04 மில்லியன் கன அடியும், பில்லூர் நீர்த்தேக்கத்தில் 1,182 மி.க.அடியும் தண்ணீர் உள்ளது.

    பரம்பிக்குளத்தில் இருந்து 150 நாட்களுக்கும், சிறுவாணியில் இருந்து 90 நாட்களுக்கும், பில்லூர் நீர்தேக்கத்தில் இருந்து 170 நாட்களுக்கும் குடிநீர் வழங்க முடியும். இதைப்போல சாத்தனூர் அணையில் 825 கனஅடி தண்ணீர் உள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அடுத்த 120 நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×