search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு சாலைமறியல்- பொதுமக்களிடம் தகராறு செய்த ஊராட்சி தலைவர்
    X

    உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு சாலைமறியல்- பொதுமக்களிடம் தகராறு செய்த ஊராட்சி தலைவர்

    • ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே கூ.கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அருகேயுள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர் கொளஞ்சியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். தேர்தல் முடிந்தவுடன் சரி செய்வதாக பொதுமக்களிடம் அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து 2 நாட்கள் ஆகியும், குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கையை ஊராட்சி தலைவர் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று காலை 7 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் கொளஞ்சி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக திட்டியதாகவும், சாலையில் இருந்த காலிக்குடங்களை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்த போதும் பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற திருநாவலூர் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், பிரபு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஊராட்சி செயலாளரையும் அங்கு வரவழைத்தனர். 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×