என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு செங்காட்டில் ஒன்றிய துணை செயலாளர் தினகரன் தலைமையில் பொதுகூட்டம் நடைபெற்றது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பெரும்புதூர் செங்காட்டில் ஒன்றிய துணை செயலாளர் தினகரன் தலைமையில் பொதுகூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய பொருளாளர் பூவரசன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் தியாகராஜன், நிர்வாகிகள் கலைவடிவன், கட்சிப்பட்டு பழனி, சமத்துவன், ராமராஜன் முன்னிலை வகித்தனர். தமிழரசன், சுடர்வளவன், விஜய், இன்பசேகரன், ஒருங்கிணைத்தனர். காஞ்சீபுரம் மைய மாவட்ட செயலாளர் தமிழரசன், தொகுதி செயலாளர் மேனகா தேவி கோமகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில நிர்வாகிகள் சிபிசந்தர், நீலவானத்து நிலவன், திராவிட மணி ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் கராத்தே பாண்டி, தளபதி சுந்தர், கெளதம், சித்தார்த்தன், யோகா, தமிழ்வளவன், ஈசன், சாந்தன், வெற்றி வளவன், ரவி, ஸ்ரீதர், மணிகண்டன், துளசி, இளங்கோவன், வீரராகவன், பிரபாகரன், கிரி, முருகன், அய்யப்பன், அருண், குமார், ஈட்டி, ராஜிகுமார், முருகன், செந்தமிழன், கமல் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் விநாயகம் நன்றி கூறினார்.

    சேலையூர் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

    தாம்பரம்:

    சேலையூரை அடுத்த சந்தோசபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 31). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக இருந்தார். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    கடந்த சனிக்கிழமை ராஜன் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலையூர் போலீசார் விசாரணை நடத்திய போது ராஜன் எழுதி வைத்து இருந்த கடிதம் சிக்கியது.

    அதில், தனது தற்கொலை முடிவுக்கு மனைவி சீதாலட்சுமி, மற்றும் அவரது கள்ளக்காதலன் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் ஐவர்ராஜ் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சீதாலட்சுமி அவரது கள்ளக்காதலன் ஐவர்ராஜை கைது செய்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கைதான சீதாலட்சுமி போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில், “எனக்கும் ஐவர்ராஜிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த கணவர் ராஜன் கள்ளக்காதலை கைவிட கூறினார். இதற்கு நான் மறுத்தேன்.

    மேலும் கணவரை பிரிந்து பனையூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன்.

    இதுபற்றி நான் ஐவர்ராஜிடம் கூறினேன். அவர் கணவர் ராஜனை செல்போனில் பேசி மிரட்டினார் என்று கூறியுள்ளார்.

    மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியானதால் நீலாங்கரையில் பரபரப்பு நிலவுகிறது.

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரையை அடுத்த வெட்டுவங்கேணி கற்பக விநாயகர் நகரைச் சேர்ந்தவர் பூங்காவனம் . இவரது மகள் வெண்ணிலா (13).

    தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 3 நாட்களாக மாணவிக்கு காய்ச்சல் இருந்தது. இதற்கு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிச்சை பெற்றனர்.

    நேற்று திடீரென்று வெண்ணிலா மயங்கி விழுந்தாள். உடனே மாணவியை சென்னை ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    வெண்ணிலாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலியானதால் நீலாங்கரையில் பரபரப்பு நிலவுகிறது.

    அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதால் கொசுக்கள் தொல்லை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    கீரப்பாக்கம் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது 24). ரவுடி. இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவர் துரைப்பாக்கத்தை அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு வந்து இருந்தார். நேற்று இரவு சாப்பிட்டு முடிந்ததும் வீட்டின் வெளியே சிறிது தூரம் நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் வீரமணியை வழிமறித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர்.

    கழுத்து, தலையில் பலத்த காயம் அடைந்த வீரமணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே கொலை கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காயார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட வீரமணி ஒரு கொலை வழக்கில் கைதாகி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்து இருந்தார். எதிரிகள் அவரை தீர்த்து கட்ட நோட்டமிடுவது தெரிந்ததும், அவர் கீரப்பாக்கத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி இருந்தார். அங்கு வந்ததும் வீரமணியை எதிர் தரப்பினர் கொலை செய்து விட்டனர்.

    சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமான சேவையை வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
    ஆலந்தூர்:

    தென்மண்டல ஏர் இந்தியா விமான நிறுவன இயக்குனர் கேப்டன் அருள்மணி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்க வேண்டும், அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் நியாயமான கட்டணத்தில் விமானங்கள் இயக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனத்தின் சார்பில் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வருகிற 30-ந் தேதி முதல் தினசரி புதிய விமான சேவையை தொடங்குகிறது.

    இந்த விமான சேவையில், சிறிய ரக விமானம் இயக்கப்பட உள்ளது. இதில் 70 பயணிகள் பயணம் செய்ய முடியும்,

    சென்னையில் இருந்து திருச்சிக்கு காலை 7.35 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும். இதேபோல் திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 10.20 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையில் இருந்து விஜயவாடாவிற்கு காலை 10.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் விமானம், பகல் 1.55 மணிக்கு திரும்பி வரும். பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை சென்று விட்டு மாலை 6 மணிக்கு திரும்பி வரும். மாலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானம் இரவு 10.05 மணிக்கு சென்னை திரும்பி வரும். ஒரு நாளைக்கு ஒரு நகரத்திற்கு ஒரு முறை மட்டுமே விமான சேவை அளிக்க இயலும்.

    மேலும் சிறிய ரக விமானங்கள் வந்தபின்னர் காலை, மாலை என தினமும் 2 முறை விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதவிர தூத்துக்குடி, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கும் விமான சேவை விரிவுபடுத்தப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும். பயணம் செய்ய உள்ள தினத்தில் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும். பயணிகளின் ஆதரவை பொறுத்தே விமான சேவை அதிகரிப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சென்னை விமானநிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 16½ கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகளை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் விமானங்கள் நிறுத்தப்படும் நடைமேடை பகுதியில் நேற்று கேட்பாரற்று ஒரு மர்ம பை நீண்ட நேரமாக கிடந்தது. இதை கண்ட விமானநிலைய பாதுகாப்பு படையினர், அதில் வெடிகுண்டு இருக்குமோ என்று கருதினார்கள். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் அங்கு வந்து மர்ம பையை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.

    பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பையை பிரித்து பார்த்தபோது, அதில் தங்க கட்டிகள், நகைகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சுங்க இலாகா அதிகாரிகள் வந்து மர்ம பையில் இருந்த ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 16½ கிலோ தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றினார்கள்.

    கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது, அந்த தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகள் இருந்த பை சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் கொண்டு வரப்பட்டது என்றும், அதை 2 பேர் டிராலியில் வைத்து உள்நாட்டு முனையம் பகுதிக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து, பயணிகளின் உடைமைகளை டிராலியில் எடுத்துச் செல்லும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த தற்காலிக ஊழியர்களான குமார் (வயது 30), விஸ்கான் (32) ஆகிய இருவரை சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்கப்பூரில் இருந்து தங்க கட்டிகள், நகைகளை கடத்தி வந்து, டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல முயன்ற நபர் யார்? என்பது பற்றி சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விமானநிலையத்தில் ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள், நகைகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    காஞ்சீபுரத்தில் விநாயகர் சிலைகளை கண்காணிக்க கேமிராவை அவசியம் பொருத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட போலீசார் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு முகிலன், இன்ஸ்பெக்டர்கள் பழனி, பிரபாகர், மணிமாறன், வெற்றிச்செல்வன் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர் கூறும் போது, ‘விநாயகர் சிலை வைக்கும் இடத்தின் உரிமையாளரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

    சிலை நனையாதவாறு தகறத்தால் மேற்கூரை அமைக்க வேண்டும். சிலைக்கு இரவும், பகலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த கூடாது. சிலை பாதுகாப்பு குழுவினர் மது அருந்துபவர்களை சேர்க்க கூடாது. மேலும் சிலை வைக்கப்படும் இடத்தில் தீயணைப்பு சாதனங்கள் இருக்க வேண்டும். போலீசார் அனுமதியில்லாமல் சிலையை எடுத்துச் செல்லக்கூடாது.

    ஊர்வலத்தின்போது கலர்பொடி தூவுதல், பட்டாசு வெடித்தல், மேளம் போன்றவைகளை பயன் படுத்தகூடாது. முக்கியமாக விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கண்காணிப்பு கேமிராவை அவசியம் பொருத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் முன் எச்சரிக்கை ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சுந்தர வல்லி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச் சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சி.பி.சக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, மாசு கட்டுப்பாட்டு அலுவலர்கள் வாசுதேவன், பிகாஷ் பங்கேற்றனர்.

    காக்களூர் ஏரி (திருவள்ளூர்), எம்.ஜி.ஆர். நகர் ஏரி (திருவள்ளூர் டவுன்), கூவம் ஏரி (மப்பேடு), திருமழிசை குளம் (வெள்ளவேடு), ஊத்துக்கோட்டை குளம்,) சித்தேரி (பெரியபாளையம்), கொசத்தலை ஆறு (வெங்கல்).

    காந்தி சாலை குளண் (திருத்தணி), வண்ணான்குளம் (ஆர்.கே.பேட்டை), கரீம்பேடுகுளம் (பள்ளிப்பட்டு), பாண்டரவேடு குளம் (பொதட் டூர்பேட்டை), பராசக்தி நகர் குளம் (திருவாலங்காடு).

    கனகம்மாசத்திரம் குளம் (கனகம்மாசத்திரம்), ஏழுக்கண் பாலன் (கும்மிடிப்பூண்டி), பக்கிம்ஹாம் கால்வாய் (மீஞ்சூர்), பழவேற்காடு ஏரி (திருப்பாலைவனம்), கொசஸ்தலை ஆறு (சீமா வரம்) ஆகிய 17 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மதுராந்தகம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் மீது ரெயில் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம், வண்டிக்குப்பம் நகரை சேர்ந்தவர் தசரதன் (வயது 35). இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் வெங்கடேசபுரம் சாலையில் சென்றார்.

    அப்போது ரெயில் வருவதையொட்டி அங்குள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. ஆனால் தசரதன் மோட்டார் சைக்கிளோடு தடுப்பை தாண்டி தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தசரதன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மதுராந்தகத்தை அடுத்த மோச்சேரியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 32) கூலித் தொழிலாளி. இவர் மதுராந்தகம் - சூனாம்பேடு சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தமிழ்ச்செல்வன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அ.தி.மு.க.வை பா.ஜனதா இயக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை. அது முட்டாள்தனமானது என்று முரளிதரராவ் கூறினார்.

    ஆலந்தூர்:

    தமிழக பாரதீய ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழகம் வருகை தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரது அலுவல் காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் அவரது தமிழகம் வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    அமித்ஷா வருகையின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு நடைபெறுமா? என்பது குறித்து தெரியவில்லை.


    அ.தி.மு.க.வை பா.ஜனதா இயக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை. அது முட்டாள்தனமானது.

    தமிழகத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மாநிலத்திலும், மாநில கட்சிகளின் உள் பிரச்சினையில் பா.ஜனதா தலையிட வேண்டிய அவசியமில்லை.

    அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது என்பது அவர்களது தொண்டர்களின் விருப்பம். இணைந்தால் வெற்றியே. இல்லையென்றால் அவர்களுக்குள் சில பிரச்சினைகள் ஏற்படலாம். இதில் பாரதீய ஜனதா தலையீடு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மடிப்பாக்கத்தில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் மூவரசம் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள பால கணபதி கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை இன்று காலை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

    இதேபோல் அருகில் உள்ள அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து உள்ளனர். அதில் பணம் குறைவாக இருந்ததால் கருவரை கதவை உடைத்து அங்கு பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    விபத்தில் நஷ்டஈடு வழங்காததால் காஞ்சீபுரத்தில் அரசு பஸ்ஸை ஜப்தி செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து விரைவு பஸ்ஸை ஜப்தி செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலம் கடந்த 2002 -ம் ஆண்டு காஞ்சீபுரத்திற்கு மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை எடுத்து வந்து விற்பனை செய்துவிட்டு சிங்கில்பாடிக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிக்கரையில் வந்துகொண்டிருந்தபோது தமிழ்நாடு அரசு விரைவு பஸ் மாட்டு வண்டி மீது மோதியது. இதில் பாஞ்சாலம் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு காஞ்சீபுரம் மாவட்ட நீதிமன்றம் எண்.2-ல் விசாரணைக்கு வந்தது. கடந்த 13.2.2006ல் பாஞ்சாலத்திற்கு அரசு போக்கு வரத்து துறை ரூ.7 லட்சம் நஷ்ட ஈடுவழங்க கோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஆனால் போக்குவரத்து துறையினர் இதுவரை அந்த நஷ்ட ஈடு பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.

    இந்நிலையில் அந்த பணத்தை அசல் வட்டி சேர்த்து ரூ.14 லட்சத்து 4 ஆயிரத்து 853 வழங்க கோரி பாஞ்சாலம் காஞ்சீபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி கருணாநிதி அரசு பஸ்ஸை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

    அதையொட்டி கோர்ட் அலுவலர்கள் நேற்று மாலை 5 மணிக்கு காஞ்சீபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து விரைவு பஸ்ஸை ஜப்தி செய்தனர். இந்த பஸ்சில் இருந்த 35 பயணிகள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 28 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

    விமான ஓடு பாதையில் மழை நீர் தேங்கியதால் வெளிநாட்டில் இருந்து வந்த விமானங்கள் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து வானில் வட்டமடித்து இருந்தன.

    ஊழியர்கள் ஓடு பாதையில் தண்ணீரை அகற்றிய பிறகு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரை இறங்கின.

    மழையால் சென்னையில் இருந்து புறப்படும் விமான சேவை தாமதம் ஏற்பட்டது. சிங்கப்பூர், கொழும்பு, கோலாலம்பூர், துபாய், ஆங்காங், லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்கள், உள்நாட்டு விமானங்கள் என 28 விமானங்கள் புறப்படுவதில் 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    ×