search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான சேவை"

    • துபாயில் மழை ஓய்ந்ததால் வெள்ளம் வடிந்தது.
    • விமான நிலையத்தில் ஓடு பாதைகள் சரி செய்யப்பட்டு விமான போக்குவரத்துக்கு தயாரானது.

    சென்னை:

    துபாயில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் துபாய் நகரம் வெள்ளத்தில் சிக்கி தவித்தது. வரலாறு காணாத மழை காரணமாக துபாய் விமான நிலையம் பாதிப்புக்குள்ளானது. விமான ஓடுதளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் இருந்து துபாய்க்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் துபாயில் மழை ஓய்ந்ததால் வெள்ளம் வடிந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் ஓடு பாதைகள் சரி செய்யப்பட்டு விமான போக்குவரத்துக்கு தயாரானது. அதன் பிறகு துபாய்க்கு விமான போக்குவரத்து தொடங்கியது.

    சென்னையில் இருந்து துபாய்க்கு இன்று விமான போக்குவரத்து தொடங்கியது. சென்னையில் இருந்து இன்று காலை துபாய்க்கு விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 267 பயணிகள் பயணம் செய்தனர்.

    • கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவையை மீண்டும் தொடங்கியது.
    • டெல் அவிவ் நகருக்கான விமான சேவை வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது. 5 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா மீண்டும் விமான சேவையை தொடங்கி இருந்தது.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

    ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்லவேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வாரம் நான்கு விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது.
    • டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவையை நிறுத்தியது.

    இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு செல்லும் விமான சேவையை ஏர் இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    அதன்படி டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு செல்லும் நேரடி விமானங்கள் அனைத்தும் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லி மற்றும் டெல் அவிவ் இடையில் ஒவ்வொரு வாரம் நான்கு விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது.

    இஸ்ரேல் நகரின் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது.

    அதன்பிறகு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இடைவெளிக்கு பிறகு, கடந்த மார்ச் 3 ஆம் தேதி தான் டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவைகளை மீண்டும் துவங்கியது. 

    • பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது.
    • ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. வருமானம் குறைவாக வந்ததால் விமான சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் மீண்டும் விமான சேவையை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 3 1/2 மாதங்கள் கழித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு மீண்டும் அக்டோபர் மாதம் முதல் விமானம் இயக்கப்பட்டு வந்தது.

    அதன்படி, தினமும் மதியம் 10.25 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.10 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. மதியம் 12.35 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.35 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.

    மதியம் 2.10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு 3.15 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. அதன் பிறகு, மாலை 3.40 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு ஹைதராபாத் சென்றடைகிறது.

    இந்நிலையில் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் செலவை ஈடுசெய்யும் வகையில் கூட டிக்கெட் முன்பதிவாக இல்லை.

    விமானத்தில் உள்ள 78 இருக்கைகளில் போதிய அளவு பயணிகள் இல்லாமல் தினமும் புதுவையில் இருந்து பெங்களூருக்கும். ஹைதராபாத்துக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வருகிற 31-ந் தேதி முதல் விமான சேவையை முழுமையாக நிறுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதை உறுதி செய்யும் விதமாக வருகிற 31-ந் தேதி முதல் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கான விமான டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

    • விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது.
    • அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு 23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி அயோத்திக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டது.

    சென்னையில் இருந்தும் இன்று முதல் அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3.15 மணிக்கு அயோத்தி சென்றடையும். அதேபோல மறு மார்க்கமாக அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.20 மணிக்கு சென்னை வந்து சேரும்.

    இந்த விமானத்தில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது.

    முன்பதிவு தொடங்கியபோது நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், நேரம் செல்லச்செல்ல முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சில மணி நேரங்களில் விமான கட்டணம் பல மடங்கு எகிறியது.

    அதன்படி இன்று அயோத்திக்கு சென்று வர நபர் ஒருவருக்கு ரூ.52,134 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த கட்டணத்தில் பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • ராமர் கோவிலுக்கு கடந்த 23ம் தேதி முதல் பொது மக்கள் செல்ல அனுமதி.
    • அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    ராமர் கோவிலுக்கு கடந்த 23ம் தேதி முதல் பொது மக்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.

    இதனையொட்டி சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதற்கான விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே தொடங்கியது. சென்னையில் இருந்து அயோதிக்கு விமான சேவை கட்டணம் ரூ.6,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12:40-க்கு புறப்படும் விமானம் மாலை 3:15-க்கு சென்றடையும். அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6:20-க்கு சென்னை வந்து சேரும்.

    இதேபோல், மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.

    மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.


    • 4 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 2- ஆம் தேதியில் இருந்து சேவை தொடங்குகிறது.
    • விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜநிலை திரும்பியபின் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் , 4 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 2- ஆம் தேதியில் இருந்து 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மீண்டும் சென்னை- ஹாங்காங் இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கபட்ட சென்னை - ஹாங்காங் நேரடி விமான சேவை, 4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கப்படுவது தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது இணைப்பு விமானமாக இருக்கும்.

    அதேபோல, சென்னை-மொரீஷியஸ் இடையே 'ஏர் மொரீஷியஸ்' ஏர்லைன்ஸ் விமான சேவை வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோான பரவல் அதிகரித்த போது சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. பின்னர் நிலைமை சீரானதும் சென்னைக்கு விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள், மீண்டும் படிப்படியாக விமான சேவைகளை தொடங்கின. ஆனால் ஹாங்காங், மொரிஷியஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் ஹாங்காங்- சென்னை- ஹாங்காங், இடையே இயக்கப்பட்டு வந்த, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விமான சேவையை, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து, இயக்க உள்ளது. முதலில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும், இந்த விமான சேவைகள், பயணிகள் வரவேற்பை பொறுத்து, வாரத்தில் 7 நாட்களும், தினசரி இயக்கப்பட இருக்கிறது.

    இதேபோல் சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு, ஏர் மொரிஷியஸ் விமான சேவைகளும் மீண்டும் இயக்கப்பட உள்ளன. வாரத்தில் 2 நாட்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்கள் இயக்கப்பட்ட இந்த விமான சேவைகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த விமான சேவையை தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹாங்காங், மொரிஷியஸ் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட இருப்பது பயணிகளுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். குறிப்பாக ஹாங்காங் விமான சேவை, தொழில்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவைகளாக விளங்கி இருந்தது. அதோடு ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு, இணைப்பு விமானமாகவும் செயல்பட்டு வந்தது. இதனால் தொழில் துறையினர் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைப்போல் ஏர் மொரிஷியஸ் விமானம், மாணவ மாணவிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவையாக செயல்பட்டது. மொரிசியஸ் நாட்டில் பல்வேறு மருத்துவ கல்லூரிகள் மற்றும் உயர் படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், ஏராளமான மாணவ மாணவிகள், மொரிஷியசில் மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக, விமான சேவைகள் இல்லாததால், இந்த மாணவ மாணவிகள், மும்பை அல்லது துபாய் சென்று மொரிசியஸ் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அதிகம் பண செலவு, பயண நேரம் ஏற்பட்டு மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
    • மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 572.90 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது வளமான மழை அளவான 111.6 மில்லி மீட்டர் விட 413.4 சதவீதம் கூடுதல் ஆகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வாலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதே சமயத்தில் 47.11 சதவீதம் தண்ணீர் இருந்தது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 255 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன.

    விற்பனை மையத்தில் உள்ள 1,456 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்ட தரம் குறைந்த விதைகள் 36.58 மெட்ரிக் டன் கண்டறியப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.41.56 லட்சம் ஆகும்.

    நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் பெய்த அதிக கனமழையில் 19 ஆயிரத்து 306.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் 192 குளங்களும், 142 கால்வாய்களும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளால் உடைப்பு ஏற்பட்ட குளங்களை ரூ.19 கோடி மதிப்பீட்டில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது.
    • சென்னையில் இருந்து லட்சத்தீவுக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளது.

    சென்னை:

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ந்தேதி நடக்கிறது. நாடு தழுவிய அளவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதனையொட்டி சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரூ.6,499 என்ற கட்டணத்தில் விமான சேவை முன்பதிவு தொடங்கியது.

    சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12:40-க்கு புறப்படும் விமானம் மாலை 3:15-க்கு சென்றடையும். அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6:20-க்கு சென்னை வந்து சேர உள்ளது.

    இதற்கான விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது. வரும் பிப்.1 முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

    மேலும் சென்னையில் இருந்து லட்சத்தீவுக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கும் அடுத்த மாதம் முதல் கூடுதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளதால் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
    • மீட்பு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17-ந் தேதி பெய்த வரலாறு காணாத மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    நெல்லை மாவட்டத்திலும் கனமழை பெய்ததால் அணைகளில் இருந்து சுமார் 1.5 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு குளங்களில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித் தீவுகளாகின. பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டதால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் பொது மக்கள் அவதி அடைந்தனர். ஏராளமான குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

    தற்போது மீட்பு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். எனினும் சில இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனை அகற்றும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு அதிகாரிகள் கூறியதாவது:-

    கனமழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து கடந்த 18,19-ந் தேதிகளில் தாமிரபரணியில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தின் கடைசி அணைக்கட்டிற்கு 1.65 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

    மழை வெள்ளத்தால் 7,417 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதே போல் 2,785 மாடுகள் உள்ளிட்ட 1 லட்சத்து 7 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இதே போல் 2 லட்சத்து 34 ஆயிரத்து 602 ஏக்கர் நிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 20 நிவாரண மையங்களில் 6,500 பேர் தற்போதும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளதால் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில கிராமங்களில் ரூ.1,000-மும் நிவாரணம் வழங்கப்படுகிறது.
    • பொதுமக்கள் ஏராளமானோர் இன்று அங்குள்ள ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திசையன்விளை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்படைந்த தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று முதல் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகாவில் சில பகுதிகளில் மட்டும் அதிகம் பாதிக்கப்பட்டதாக அறிவித்து ரூ.6 ஆயிரமும், சில கிராமங்களில் ரூ.1,000-மும் நிவாரணம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் தாலுகாவிற்கு உட்பட்ட முதுமொத்தான்மொழி பஞ்சாயத்து மக்கள் இன்று அங்குள்ள ரேஷன் கடை முன்பு தங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    இதேபோல் தாலுகாவுக்கு உட்பட்ட சுவிஷேசபுரம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆனைக்குடியில் பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் திசையன்விளை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் சில கிராமங்களில் பொது மக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் தலா ரூ.1000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கயத்தாறு தாலுகா ஆத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று அங்குள்ள ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திகுளம் பகுதி மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்களின் உடமைகளும் சேதம் அடைந்துள்ளது. எனவே அதிகம் பாதிப்பு ஏற்பட்ட பகுதியாக அறிவித்து எங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கூறினர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தாலுகா அலுவலகத்தில் முறையாக மனு வழங்கும் படியும் பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×