என் மலர்
செய்திகள்

கீரப்பாக்கம் அருகே ரவுடி வெட்டிக் கொலை
திருப்போரூர்:
துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது 24). ரவுடி. இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர் துரைப்பாக்கத்தை அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு வந்து இருந்தார். நேற்று இரவு சாப்பிட்டு முடிந்ததும் வீட்டின் வெளியே சிறிது தூரம் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் வீரமணியை வழிமறித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர்.
கழுத்து, தலையில் பலத்த காயம் அடைந்த வீரமணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே கொலை கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காயார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையுண்ட வீரமணி ஒரு கொலை வழக்கில் கைதாகி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்து இருந்தார். எதிரிகள் அவரை தீர்த்து கட்ட நோட்டமிடுவது தெரிந்ததும், அவர் கீரப்பாக்கத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி இருந்தார். அங்கு வந்ததும் வீரமணியை எதிர் தரப்பினர் கொலை செய்து விட்டனர்.






