என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ஹரி பிரசாத் (வயது 16). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 28-ந் தேதி பள்ளிக்கு சென்ற ஹரி பிரசாத் வீட்டுக்கு திரும்பவில்லை.
இது குறித்து கல்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறர்கள்.
காஞ்சீபுரம்:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நாளை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர் சிலை அடுத்து அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்குகிறார்.
பின்னர் காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை கீழ்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டினை திறந்து வைத்து கழகக் கொடியினை ஏற்றி வைக்கிறார்.
பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகே ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நில அள வீட்டு அலுவலக கட்டிடத்தினை திறந்து வைக்கிறார்.
மாலை கிளாம்பாக்கம் பகுதியில் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலை வகிக்கிறார்.
விழாவில் எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தினை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கியும், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் அமைச்சர்கள் பெஞ்சமின், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் எம்.பி.க்கள் மரகதம் குமரவேல், கே.என்.ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி, மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவுக்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், அ.தி.மு.க. காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம். ராசேந்திரன், மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், மத்திய மாவட்டச் செயலாளர் திருக்குழுக்குன்றம் எஸ்.ஆறு முகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
முன்னதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தாம்பரம், வண்டலூர், படப்பை வழியாக வரும் வழியெங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகின்றது.
படப்பையில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், மதனந்தபுரம் பழனி எம்.எல்.ஏ, உள்ளிட்டோர் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.
ஆதம்பாக்கம் ஏ.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் தசரதன். ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகில் உள்ள வங்கியில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை எடுத்தார்.
பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக் கொண்டு மஸ்தான் கோரி தெருவில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்துக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை அலுவலகம் முன்பு நிறுத்தி இருந்தார்.
திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு ரூ.3.60லட்சம் கொள்ளை போயிருந்தது.
போலீசார் வாரிய அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 3 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து பணத்தை எடுத்து சென்றது பதிவாகி இருந்தது.
பள்ளிக்கரணை:
பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர், சாய் தெருவை சேர்ந்தவர். அழகப்பன் இவரது மகன் ஜெயபிரகாஷ் (வயது 20) மேடவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
ஜெயபிரகாஷ் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் 7 அரியர்ஸ் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்து படிக்கும் படி கூறிவந்தனர்.
இதில் மனவேதனை அடைந்த ஜெயப்பிரகாஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பள்ளிக்கரைணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புழல் அடுத்த கதிர்வேடு பகுதியை சேர்ந்தவர் மதியழகன் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 20) இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
நேற்று இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த புவனேஸ்வரி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார். அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று காலை புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து புழல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
லண்டன் பக்கிங் ஹாம் ஷயர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை மினி பஸ் மீது 2 கண்டெய்னர் லாரிகள் மோதியது. இந்த விபத்தில் மினி பஸ்சில் இருந்த காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் மண்டப தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (63), தங்கை தமிழ்மணி, அவரது கணவர் அருள்செல்வம் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 4 பேர், கேரள மாநிலத்தை சேர்ந்த சிரியாக் ஜோசப் ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பன்னீர்செல்வத்தின் மகன் மனோரஞ்சிதம் லண்டனில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது வீட்டுக்கு பன்னீர்செல்வம் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
மினி பஸ்சில் சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் பன்னீர் செல்வத்தின் மனைவி வள்ளி, மகன் மனோரஞ்சிதம், அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இறந்தவர்களின் உடல்களை காஞ்சீபுரம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தூதரகத்திற்கு விடுமுறை நாள் என்பதால் அவர்களின் உடல்களை கொண்டு வருவதில் நிர்வாக ரீதியாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே பலியானவர்களின் உறவினர்கள் இன்று காலை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மாநில மற்றும் மத்திய அரசின் துரித நடவடிக்கைகள் மூலம் இறந்தவர்களின் உடல்களை விரைவில் சொந்த ஊருக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த வாலாஜாபாத் திருமுக்கூடல் இருளர் காலனியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தேவகி (25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக தேவகியை 108 ஆம்புலன்சில் வாலாஜா பாத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவகிக்கு பிரசவ வலி அதிகமானது. வலியால் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்திவிட்டு அதிலிருந்த மருத்துவ உதவியாளர் கோப் பெருந்தேவி செல்போன் மூலம் டாக்டர்களின் ஆலோசனைப்படி தேவகிக்கு பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்தில் ஆம்புலன்சிலேயே தேவகிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதனால் ஆம்புலன்சில் இருந்த ஊழியர்களும், தேவகியின் உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் தாயும், சேயும் வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தற்போது தேவகியும் அவரது குழந்தையும் நலமாக உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் நோக்கி இன்று காலை தனியார் பஸ் சென்றது. ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காட்டு கூட்டு ரோடு அருகே வந்த போது, எதிரே திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி திருமண கோஷ்டியினர் வேன் வந்தது.
திடீரென வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் இதில் சிக்கிக் கொண்டார்.
வேனில் இருந்த பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் இருந்து கோயம்பேடுக்கு நேற்று இரவு அரசு பஸ் (எண்.122) வந்து கொண்டிருந்தது. தாம்பரத்தை அடுத்த நாகல்கேணி சிக்னல் அருகே வந்தபோது கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதியது. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் சேகர், கண்டக்டர் பாபு மற்றும் 16 பயணிகள் காயம் அடைந்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்து பீர்க்கங்கரையில் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் பொற்றாமரை சங்கரன் ஏற்பாட்டில் நடந்த விநாயகர் சிலை சிறப்பு பூஜை விழாவில் பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பதவியில் இருந்து தினகரன் நீக்கியது நகைச்சுவையாக இருக்கிறது. தெரு குழந்தைகள் விளையாட்டு போல் உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு மக்கள் 5 ஆண்டு ஆட்சி செய்ய வாக்களித்துள்ளனர். ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இன்னும் 4 ஆண்டு இருக்கிறது.
ஒற்றுமையாக செயல்பட்டு 5 ஆண்டு ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒ.பி.எஸ். இணைந்ததை மக்கள் வரவேற்கிறார்கள்.
தினகரன் அணி என கருதப்படுபவர்களால் வரும் பிரச்சினைகளை திறம்பட சந்திப்பார்கள் என்று கருதுகிறேன். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கோரி மனு கொடுத்துள்ளனர். அது பற்றி கவர்னர் சொன்ன பிறகுதான் தெரியவரும்.
அதிர்ஷ்டவசமாக தமிழகத்துக்கு திறமையான கவர்னர் கிடைத்து உள்ளார். அவர் நல்ல முடிவு எடுப்பார். நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவான்மியூர்:
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுரவகுமார் சர்மா. சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று விடுமுறையையொட்டி தனது நண்பர் சசிராய் உள்பட 15 பேருடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றனர். கடலில் இறங்கி குளித்தபோது கவுரவகுமார் சர்மா, சசிராய் ஆகிய 2 பேர் அலையில் சிக்கி கொண்டனர். சசிராயை நண்பர்கள் காப்பாற்றினார்கள்.
ஆனால் கவுரவகுமார் சர்மா கடலுக்குள் மூழ்கி விட்டார். இன்று காலை அவரது உடல் மெரினாவில் கரை ஒதுக்கியது. உடலை போலீசார் கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை பெருங்களத்தூரிலுள்ள அரசு பள்ளியில் எ.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடந்தது. இதை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின், திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையனிடம் நிரூபர்கள், சபாநாயகர் தனபாலை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று திவாகரன் கருத்து கூறியுள்ளாரே? சசிகலாவை நீக்க வேண்டும் என்று கூறிய வைத்தியலிங்கம் எம்.பி.யை கட்சியில் இருந்து டி.டி.வி. தினகரன் நீக்கியுள்ளாரே என்று கேள்வி கேட்டனர். அதற்கு கட்சி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று கூறி செங்கோட்டையன் பதில் அளிக்க மறுத்தார்.
பின்னர் நீட் தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து செங்கோட்டையன் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வரும் எந்தவித தேர்வையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் 54 ஆயிரம் கேள்வி பதில்கள், வரைபடங்களுடன் புத்தகமாக தயாரிக்கும் பணி நடந்துவருகிறது. உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இன்னும் 1 1/2 மாதத்தில் இந்த புத்தகம் வெளிவரும்.
மேலும் மத்திய அரசின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 450 பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக முதலில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழக மாணவர்கள் வளர்ச்சி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சோழிங்கநல்லூரை அடுத்த பனையூரில் வசித்து வருபவர் ராசூல்பேகம். இவரது வீட்டுக்கு பாண்டிச்சேரியில் வசிக்கும் அண்ணன் ஆதம் வந்து இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராசூல்பேகம் வெளியில் சென்று இருந்தார். வீட்டில் ஆதம் மட்டும் இருந்தார்.
சிறிது நேரம் கழித்து ராசூல்பேகம் வந்தபோது வீட்டில் ஆதம் இல்லை. பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 75 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை காணவில்லை.
நகை-பணத்தை கொள்ளையடித்து ஆதம் தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து கானத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம் முனுசாமி தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. ரெயில் டிக்கெட் பரிசோதகர். கடந்த 18-ந்தேதி அவரது வீட்டில் 74 பவுன் நகை கொள்ளை போனது.
இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த டோரி பாபுவை கைது செய்தனர். அவனிடம் இருந்து 74 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
மாமல்லபுரம்:
டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 19 பேர் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். இவர்களில் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. கோதண்டபாணியும் ஒருவர். அவரது வீடு மாமல்லபுரம், அம்பாள் நகரில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
அவர்கள் அம்மாள் நகரில் உள்ள கோதண்டபாணி எம்.எல்.ஏ.வின் வீட்டை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் எம்.எல்.ஏ.வின் உருவ பொம்மையையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.
இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்ட செயலாளராக கோதண்டபானி எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மேலும் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்டு உத்தரவுப்படி கோதண்டபானி எம்.எல்.ஏ. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.






