என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 32). கடந்த 27-ந் தேதி மழை பெய்த போது வீட்டருகே உள்ள மின் கம்பி உரசி தூக்கி வீசப்பட்டார். ஆபத்தான நிலையில் அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கோவிந்த சாமி இறந்தார்.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தாம்பரத்தில் இருந்து கோவளத்துக்கு இன்று காலை 9.30 மணியளவில் மாநகர பஸ் (எண் 517) சென்றது. டிரைவர் விஜயகுமார் பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக சுரேஷ் இருந்தார். பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பெருங்களத்தூர் மேம்பாலத்தில் இறங்கியபோது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பினார்.
கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பாலத்தில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு வெளியே வந்து சரிந்தது. இதில் அங்கு வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகையும் உடைந்தது.
மோதிய வேகத்தில் பஸ்சின் டேங்க் உடைந்து டீசல் கொட்டியது. அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் டீசல் முழுவதும் வெளியேறி நின்றதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். பஸ்சின் கண்ணாடி உடைந்ததில் டிரைவர் விஜயகுமாருக்கு காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த டிரைவர் விஜயகுமாருக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராட்சத கிரேன் மூலம் விபத்துக்குள்ளான பஸ்சை அகற்றிய பின்னரே போக்குவரத்து நெரிசல் சீரானது.
மேம்பாலம் முடியும் இடம் அருகே பஸ் சரிந்ததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர் தப்பி உள்ளனர்.
இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தவர்கள் கல்யாண் (வயது 18), உபேந்திரா (18). இருவருக்கும் ஆந்திர மாநிலம் வாரங்கல் சொந்த ஊர் ஆகும்.
நேற்று மாலை 2 பேரும் உடன் படிக்கும் மாணவர்கள் 10 பேருடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தனர்.
அப்போது கல்யாண், உபேந்திரா ஆகிய இருவரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
சிறிது நேரத்தில் கல்யாண் பிணமாக கரை ஒதுங்கினார். உபேந்திராவை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை புலிக்குகை கடற்கரையில் உபேந்திரா உடலும் கரை ஒதுங்கியது.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு ஜெ.சி.கே. நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன் (37). டிரைவர். இவர் செங்கல்பட்டு டவுன் மேட்டுத் தெருவில் உள்ள நாராயணன் என்பவரின் காரை ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு நாராயணன் வீட்டில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் முருகன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கத்திக்குத்து இருந்தது. மேலும் அவரது கண்ணில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டு இருந்தன.
இது பற்றி தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. மதிவாணன் மற்றும் செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக நாராயணன், அவரது மனைவி மற்றும் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
கொலையுண்ட முருகன், கார் உரிமையாளர் நாராயணனிடம் சுமார் 5 ஆண்டுக்கும் மேலாக வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் முருகனை, நாராயணன் தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.
இந்த கொலைக்கு அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா? கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாராயணன் மீது ஏற்கனவே அ.தி.மு.க. பிரமுகர் மகனை கொலை செய்த வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுராந்தகம்:
செய்யூர் அருகே உள்ளது கடப்பாக்கம் குப்பம், ஆலம் பரகுப்பம். இந்த இரு கிராமத்தினர் இடையே சினிமா சூட்டிங் எடுக்கும் குழுவினர் கொடுக்கும் பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று அதிகாலை இது பயங்கர மோதலாக வெடித்தது. 2 மீனவ கிராமத்தினரும் பயங்கர ஆயுதங்களால் மோதிக் கொண்டனர்.
இதில் கடப்பாக்கத்தை சேர்ந்த சேகர்(35), ராம கிருஷ்ணன்(34) ஆகிய 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
மேலும் அதே கிராமத்தை சேர்ந்த ராஜாராம், மதன், குமார் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மோதலில் 50-க்கும் மேற்பட்ட படகுகள், மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஏராளமான வீடுகளும் நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ஆலம்பர குப்பத்தை சேர்ந்த தங்கபாபு, சரவணன், சிவா, சுரேஷ், ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 10- க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இச்சம்பவத்தால் கடப்பாக்கம், ஆலம்பர குப்பம் பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலைநீடித்து வருகிறது. டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மீனவ கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மோதலால் பாதிக்கப்பட்ட 2 கிராமங்களிலும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஏராளமானோர் வீடுகளை காலி செய்து வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று உள்ளனர். வெளி நபர்கள் யாரையும் மீன வர்கள் கிராமத்துக்கு நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் மீனவர் கிராமங்களில் பரபரப்பான நிலையே நீடித்து வருகிறது.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பா.ஜ.க. சார்பில் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என கல்லூரி மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மத்திய ஜவுளி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு விழாவை தற்போது நாடு கொண்டாடி கொண்டிருக்கின்றது. 75 ஆண்டுகளுக்கு முன் இந்த காலக்கட்டத்தில்தான் நாட்டின் சுதந்திரத்திற்காக மாணவர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அன்றைய வலிமை வாய்ந்த பிரிட்டிஷ் அரசை எதிர்த்து குரல் கொடுத்தனர். அவை அனைத்துமே நம் இந்திய தேசத்தின் விடுதலை என்ற ஒரே குறிக்கோளை நோக்கி இருந்தது.
உறுதியும், கடின உழைப்பும் இருந்தால் அடிமட்டத்தில் இருப்பவர்கள் உயர்ந்த இடத்தை அடைவார்கள் என்பதற்கு நமது பிரதமர் மோடியே சிறந்த உதாரணம். இது தான் இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு.
குஜராத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவரை அவரது தாயார் வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு ஆளாக்கினார்.
‘டீ’ விற்பனையாளராக இருந்த அவர் உறுதியாலும் கடின உழைப்பாலும் நாட்டின் பிரதமராக உயர்ந்திருக்கிறார் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். இதேபோல் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோரும் இந்திய ஜனநாயகத்தின் சிறப்பால் சாதாரண நிலையில் இருந்து உயர்ந்த பதவியை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கின்றனர்.
75 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் புகழை நாம் காக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் நாட்டின் சட்டத்திட்டத்திற்கு கட்டுப்பட்டு சிறந்த குடிமகனாக வாழ்வோம் என்ற உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உறுதிமொழியை வாசிக்க மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலைக்கழகவேந்தர் ஐசரிகணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மதுராந்தகம்:
செய்யூரை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் கடப்பாக்கம், தண்டு மாரியம்மன் குப்பம், ஊத்துக்காட்டான் குப்பம் மீனவ கிராமங்கள் உள்ளன.
ஊத்துக்காட்டான் குப்பத்தில் உள்ள புராதன சின்னமான ஆலமரக்கோட்டை பகுதியில் அடிக்கடி சினிமா சூட்டிங் நடப்பது வழக்கம்.
சினிமா சூட்டிங் குழுவினர் ஊத்துக்காட்டான் குப்பத்துக்கு குறிப்பிட்ட தொகை பணம் கொடுத்து வந்தனர். அதனை அவர்கள் அருகில் உள்ள தண்டு மாரியம்மன் குப்பத்தினருடன் பிரித்து கொண்டனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊத்துக்காட்டான் குப்பத்தில் மீண்டும் சினிமா சூட்டிங் நடைபெற்றது. அப்போது சினிமா குழுவினர் கொடுக்கும் பணத்தை தங்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் என்று கடப்பாக்கம் குப்பத்தினர் கேட்டதாக தெரிகிறது. இதனால் கடப்பாக்கம் குப்பத்தினருக்கும், ஊத்துக்காட்டான் குப்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக அவர்களுக்குள் சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
இதையடுத்து இன்று இரண்டு மீனவ கிராமத்தினர் இடையே சமாதான பேச்சு நடத்த கிராம தலைவர்கள் முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் ஊத்துக்காட்டான் குப்பத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கத்தி, அரிவாள், உருட்டு கட்டையுடன் கடப்பாக்கம் கிராமத்துக்குள் புகுந்தனர்.
அவர்கள் அங்கிருந்த மீனவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர். படகுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த கடப்பாக்கம் குப்பத்தினர் ஏராளமானோர் ஒன்று திரண்டனர். உடனே மோதலில் ஈடுபட்ட ஊத்துக்காட்டான் குப்பத்தினர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த கடப்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் (வயது28) சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் ராமகிருஷ்ணன் (26), கிறிஸ்டோபர், சக்திவேல், ராஜாராம், முருகன், மாயகிருஷ்ணன், குமார், செல்வம், அருள்தாஸ், விக்னேஷ், இசைவாணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
மேலும் கிறிஸ்டோபர், சக்திவேல் ஆகியோரது நிலைமை மோசமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மோதலில் கடப்பாக்கத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள், படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்து உள்ளன.
இதேபோல் ஊத்துக்காட்டான் குப்பத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன. இரு சக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது.
கடப்பாக்கம் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் மோதலில் ஈடுபட்டு சூறையாடியதாக ஊத்துக்காட்டான் குப்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
மீனவ கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, போலீஸ் சூப்பிரண்டு சாந்திமதினி ஆகியோர் மீனவ கிராமங்களில் ஆய்வு செய்தனர். மோதலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மோதலை தடுக்க மீனவ கிராமங்கள் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
காஞ்சீபுரம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்கிறது.
காஞ்சீபுரம் பகுதியில் இன்று காலை 6 மணிமுதல் மழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம் பஸ் நிலையம், மேட்டுதெரு, கீரைமண்டபம், சங்கரமடம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
திடீர் மழையால் மாணவ- மாணவிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். இதேபோல் மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி உத்திரமேரூர் 51 மி.மீ., காஞ்சீபுரம் 22.3 மி.மீ., தாம்பரம் 13 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூரில் இன்று காலை 9 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழையாக கொட்டியது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பேரம்பாக்கம், பூந்தமல்லி, பொன்னேரி உள்ளிட்ட பகுதியிலும் மித மான மழை பெய்தது. மழை காரணமாக குளுமையான வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊத்துக்கோட்டை நாகலாபுரம் ரோட்டை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 90). இவர் அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
பழைய போலீஸ் நிலையம் எதிரே சாலையோரத்தில் மழைநீர் தேங்கி இருந்தது. அதனை கடந்து செல்லும் போது அவர் தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆதிலட்சுமி இறந்தார்.
இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக் டர் ரவீந்தரகுமார் விசாரணை நடத்தி வருகிறார். மாமல்லபுரம் பகுதியில் காலை முதல் சாரல் மழை பெய்தது. கோவளம், நெம்மேலி, பட்டிப்புலம், தேவநேரி, வெண்புருஷம், கொக்கில்மேடு, புதுப்பட்டினம் கடலோர பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. தொடர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் நள்ளிரவில் கடலுக்குமீன் பிடிக்க சென்றிருந்த மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினார்கள்.
சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கிழக்கு கடற் கரை சாலையில் மாமல்லபுரம் வழியாக அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று சென்னையை நோக்கி அதிவேகத்தில் வந்தது.
பூஞ்சேரி என்ற இடத்தில் 2 பஸ்களும் வந்தபோது கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் நாகப்பட்டினத்துக்கு சென்ற பஸ் பள்ளத்தில் இறங்கி ஒரு குடிசை மீது மோதி நின்றது. அதேபோல் சென்னை சென்ற புதுச்சேரி பஸ் இடது பக்கத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் 2 பஸ்களில் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி:
அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து ஒரு அணியாகவும், டி.டி.வி. தினகரன் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
நிர்வாகிகள் நீக்கம் மற்றும் புதிய பொறுப்பால் அ.தி.மு.க.வில் தற்போது உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வண்டலுர் அருகே உள்ள கிளம்பாக்கத்தில் இன்று நடக்கிறது. இதில் முதல்- அமைச்சர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கட்டாய அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நேற்றே மாணவர்களின் பெற்றோர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு உள்ளன.
10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இது மாணவர்களின் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து இன்று காலை 8 மணி முதலே விழா நடைபெறும் இடத்துக்கு மாணவ- மாணவிகள் பஸ், வேன் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தனியார் பள்ளி மாணவ- மாணவிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும் போது, “விழாவில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் காலையிலேயே மாணவர்களை பள்ளியில் இருந்து விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வந்து விட்டனர்.
இதுபோன்ற விழாக்களில் மாணவ- மாணவிகளை பங்கேற்க வைக்காமல் கல்வி பயில்வதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.
காஞ்சீபுரம்:
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடக்கிறது. இதையொட்டி காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விழா நடைபெறும் இடத்தில் குவியத் தொடங்கினர்.
விழாவில் பங்கேற்க இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு படப்பையில், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் மற்றும் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.
பின்னர் வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகே காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கொடி கம்பத்தில் கட்சி கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதைத் தொடர்ந்து காஞ்சீபுரம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஞ்சீபுரம் தேரடியில் மலர் அலங்காரங்களுடன் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் பூச்செண்டு அளித்தும், பொன்னாடை போர்த்தியும் முதல்-அமைச்சரை வரவேற்றனர்.
பின்னர் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய நில அளவீட்டு அலுவலக கட்டிடத்தினையும், ஓரிக்கை பகுதியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கல்வெட்டினையும் திறந்து வைத்து அ.தி.மு.க. கொடியினை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.
முன்னதாக காஞ்சீபுரம் மாவட்ட எல்லையில் கலெக்டர் பொன்னையா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தார்.
நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுகுன்றம் ஆறுமுகம், அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் அத்திவாக்கம் ரமேஷ், நிர்வாகிகள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளி நாயகம், காஞ்சிபன்னீர் செல்வம், தும்ப வனம் ஜீவானந்தம், அக்ரி நாகராஜன், டி.தணிகைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி படப்பையில் இருந்து ஓரகடம், வாலாஜாபாத், கலெக்டர் அலவலக சாலை மற்றும் ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் வழிநெடுகிலும் அதிமுக கொடிகளுடன் தோரணங்களும், பிரம்மாண்ட அலங்கார வளைவுகளும், வண்ணப்பதாகைகளும் அமைக்கப்பட்டிருந் தன.
இன்று மாலை கிளாம் பாக்கத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். விழாவையொட்டி கிளாம்பாக்கம் பகுதி முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கேரளா மாநிலம் வடகாரா பகுதியை சேர்ந்த முகம்மது அப்துல் நியாஸ் வைத்திருந்த கேனில் தண்ணீரின் நிறம் வித்தியாசமாக இருந்தது. இது பற்றி அதிகாரிகள் அவரிடம் கேட்ட போது, தைலம் என்று தெரிவித்தார்.
சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்த போது தங்கத்தை ரசாயனம் கலந்து உருக்கி தண்ணீரில் கரைத்து கொண்டு வந்திருப்பது தெரிந்தது.
அவற்றை தனியாக பிரித்தெடுத்தனர். மொத்தம் 700 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.24 லட்சம். இதையடுத்து முகம்மது அப்துல் நியாசை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பாஷா என்பவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, தங்கத்தை உருக்கி கம்பிகளாக கடத்தி வந்தது தெரிந்தது. மொத்தம் 510 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.16 லட்சம். பாஷா கைது செய்யப்பட்டார்.
துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த அக்பர் என்பவரது சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 2 கிலோ தங்கத்தை சுருள் கம்பிகளாக மாற்றி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். அக்பரை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 3 விமானங்களில் மொத்தம் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






