என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே இன்று காலை பா.ம.க. பேனரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். பேனருக்கு தீ வைத்தவர்களை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் காட்டுரோட்டில் பா.ம.க. சார்பில், விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டை வரவேற்று பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

    இன்று காலை அங்கு வந்த மர்ம நபர்கள் பேனருக்கு தீ வைத்து தப்பி சென்று விட்டனர். இதில் பேனர் முழுவதும் எரிந்து சாம்பலானது.

    இதுபற்றி அறிந்ததும் பா.ம.க. வினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பேனருக்கு தீ வைத்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர், பூந்த மல்லி- அரக்கோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    காஞ்சீபுரம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலரின் கையெழுத்தினை போட்டு ரூ.39 லட்சம் முறைகேடு செய்த ஊராட்சி செயலரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் லத்தூர் ஒன்றியத்திற் குட்பட்ட பச்சம்பாக்கம் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் பொன்னையா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலரின் கையெழுத்தினை போட்டு 39.25 லட்ச ரூபாய் வங்கியில் இருந்து முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் ஊராட்சி செயலர் சந்தோஷ்குமார் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சந்தோஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    மாமல்லபுரத்தில் பின்லாந்து நாட்டு பெண்ணை கற்பழிக்க முயன்ற ஆட்டோ டிரைவர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    பின்லாந்து நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண் மாமல்லபுரத்தில் தங்கி தனியார் தொண்டு நிறுவனத்தில் மனிதவள ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 8-ந்தேதி இரவு அவர் கேளம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஆட்டோவில் வந்தார். பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது ஆட்டோவில் இருந்த மற்ற பயணிகள் இறங்கி விட்டனர். பின்லாந்து இளம்பெண் மட்டும் இருந்தார்.

    இதனை பயன்படுத்தி டிரைவர், ஆட்டோவை மறைவான இடத்துக்கு ஓட்டிச்சென்று இளம் பெண்ணை கற்பழிக்க முயன்றார். அவனிடம் இருந்து தப்பிய இளம்பெண் இதுகுறித்து தூதரகத்தில் புகார் செய்தார். இதுபற்றி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து மாமல்லபுரம், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டிவரும் டிரைவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சந்தேகத்திற்கிடமாக ஒருவரை போலீசார் பிடித்து சென்று உள்ளனர்.
    மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் எலக்ட்ரீஷியன் பரிதாபமாக இறந்தார். அவருடைய 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.
    மதுராந்தகம்,

    காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவருடைய மகன் முரளி(வயது 23). எலக்ட்ரீஷியன். இவர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அவருடைய நண்பர்களான விக்னேஷ், வல்லரசு ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் நேத்தப்பாக்கத்தில் இருந்து சித்தாமூருக்கு சென்றனர்.

    மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் அருகே சென்ற போது எதிரே புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், 3 பேரையும் மீட்டு மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை முரளி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர்களான விக்னேஷ், வல்லரசு இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சித்தாமூர் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன்(பொறுப்பு) பலியான முரளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இது குறித்து சித்தாமூர் சப்–இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த புள்ளலூர் என்ற இடத்தில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பாலாற்றில் இருந்து புள்ளலூர் வழியாக மணல் கடத்தியது தெரியவந்தது. உடனே தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் 10 வாகனங்களை போலீசாருடன் சுற்றி வளைத்தார். அதில் வந்த 7 லாரிகளில் 4 லாரிகளில் மணல் இருந்தது. 3 லாரிகள் மணல் கடத்துவதற்கு காலியாக சென்றது.

    இதையொட்டி மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 7 லாரிகள், 2 கார், 1 மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

    இதையொட்டி குண்ணவாக்கத்தை சேர்ந்த சேகர் (வயது 34), சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த சதீஷ்குமார் (31), திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த வசந்த் (24), சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் (34), நீர்வள்ளூரை சேர்ந்த பழனி (32), சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த வேணுகோபால் (40), சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த தண்டபாணி (37), சென்னை திருவேற்காட்டை சேர்ந்த சதீஷ்குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சசிகுமார் (28), சென்னை திருவேற்காட்டை சேர்ந்த எழிலரசன் (33), வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த தட்சணா (42), காஞ்சீபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் (38), வாலாஜாபேட்டையை சேர்ந்த ராஜபிரகாஷ் (42), சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (42), சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த கவியரசு (18), ரவி (33), சென்னை கொளத்தூரை சேர்ந்த புருஷோத்தமன் (46) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
    மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் நரேஷ் (21). மயிலாப்பூரில் உள்ள கல்லூரியில் பி.காம். 3-வது ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை அவர் நண்பர்களுடன் மாமல்லபுரத்துக்கும் சுற்றுலா வந்தார். பின்னர் அனைவரும் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலை நரேசை கடல்லுக்குள் இழு ந்து சென்றது.நண்பர்கள் அவரை காப்பற்ற முயன்றும் முடியவில்லை.

    தண்ணீரில் நரேஷ் மூழ்கினார். அவரை நண்பர்கள் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று காலை நரேசின் உடல் அதே பகுதியில் பிணமாக கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடிகர் சூர்யாவுக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும் என தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இன்றைய கால கட்டத்தில் நீட் தேர்வு குறித்து தமிழக மாணவர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியமாக இருக்கிறது. நேற்று தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். அந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் நாட்டில் எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு மருத்துவ இடங்கள் கிடைத்து இருக்கிறது என்று ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    அப்படி பேசி இருந்தால் அந்த கூட்டத்திற்கே அவசியம் இல்லாமல் போய் இருக்கும். தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து தமிழக மக்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து தங்களது அரசியல் சுயலாபத்துக்காக மாணவர்களின் நலனை கெடுத்து தங்கள் அரசியல் கோட்டையை எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனாலேயே நீட்டை எதிர்க்கிறார்கள்.

    பா.ஜனதா இதற்கு ஒரு போதும் அனுமதிக்காது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நமது மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள் அப்படி இருந்தும் ஏன் நீட் தேர்வில் முதல் 25 இடங்களில் வரவில்லை என்று கேட்கிறார். ஏனென்றால் திறமை சாலியான மாணவர்கள் முதலிடத்தில் வர முடியாததற்கு காரணம், உங்களுடைய கல்வி தரம் அப்படி இருக்கிறது. நமது கல்வித்தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனி நீட் தேர்வை நீங்கள் எதிர்க்க முடியாது. நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது ஒன்றே வழி.

    தி.மு.க. வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்துங்கள். வருகிற 13-ந்தேதி கூட போராட்டத்தை அறிவித்து இருக்கிறார். அந்த போராட்டம், இந்த போராட்டம் என்று பயமுறுத்தி மாணவர்களை தவறாக வழி நடத்துகிறார்.

    நீட் தேர்வு பற்றி என்னவென்றே தெரியாத 5-ம் வகுப்பு மாணவர்களை ரோட்டில் நிறுத்தி கம்யூனிஸ்டுகாரர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இது மன்னிக்க முடியாதது.

    வேலூர் சி.எம்.சி.யில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதற்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால் நீட் எதிர்ப்பு என்று சொல்கிறார்கள். சி.எம்.சி. மீது பல வழக்குகள் உள்ளது. அங்கு 80 சதவீதம் இடங்கள் சிறுபான்மையினருக்குத்தான் கொடுக்கிறார்கள். 80 சதவீதம் பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அப்படியானால் பெரும் பான்மையினருக்கு அங்கு மறுக்கப்படுகிறதா?

    இன்று நடிகர்கள் எல்லாம் படிப்பவர்களைப் பற்றி பேசுகிறார்கள். அது மகிழ்ச்சிதான். ஆனால் நீட் தேர்வு பற்றி தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள். நடிகர் சூர்யாவுக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும்.

    இவர்கள் எல்லாம் பல கோடிக்கு நடித்துக் கொண்டு இருக்கும்போது நாங்கள் எல்லாம் தெருக்கோடியில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். இவர்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பதிய வைக்க முயற்சிக்கிறார்கள். அதனால்தான் சொல்கிறேன், அனிதாவை கொன்றது நீட் அல்ல. நீட் அரசியல். பணத்தின் மீது நடந்த அரசியல், இன்று பிணத்தின் மீது நடக்க ஆரம்பித்து இருக்கிறது.

    ஏழை மாணவர்களின் கல்வியைப் பற்றி பேசுகிறீர்களே?. இத்தனை ஆண்டுகள் எவ்வளவு ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்கள் என்ற கணக்கு யாரிடமாவது இருக்கிறதா? இதை திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் விளக்குவோம்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    உள்ளாட்சி தேர்தல் வரும் போது பாரதிய ஜனதாவுடன் கூட்டணி குறித்து பரிசீலனை செய்வோம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து வேலூருக்கு புறப்பட்டு சென்றார்.

    காஞ்சீபுரம் மாவட்ட எல்லையான ராஜகுளம் பகுதியில் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு கல்வெட்டை திறந்து வைத்து வரவேற்பை பெற்று கொண்டார்.

    அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைப்பீர்களா?

    பதில்:- இன்னும் தேர்தலே வரவில்லை. தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து பரிசீலனை செய்வோம். எனவே இப்போது கூட்டணி குறித்து எதுவும் கூற முடியாது.

    கே:- 12-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்குமாறு வெற்றிவேல் எம்.எல்.ஏ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளாரே?

    ப:- உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இது பற்றி கருத்து கூற முடியாது.

    கே:- அ.தி.மு.க. ஆட்சி பெரும்பான்மை இல்லாததால் அதை அகற்ற வேண்டும் என்று எதிர் கட்சியினர் குரல் கொடுத்து வருகிறார்களே?

    ப:- 134 எம்.எல்.ஏ.க்களுடன் நாங்கள் பெரும்பான்மையுடன் இருக்கிறோம். தமிழ் நாட்டில் மெஜாரிட்டியுடன் தான் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது.

    கே:- நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நீடித்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் போராட்டத்திற்கு தடைவிதித்து உள்ளதே?

    ப:- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

    கே:- தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழும் என்று தொடர்ந்து கூறி வருகிறாரே?

    ப:- அவர் ஆரம்பத்தில் இருந்து இதையேதான் சொல்லி வருகிறார். நாங்கள் கடந்த 7 மாதமாக நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறோம். மக்களுக்கான திட்டங்களும் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் தான் முதல்-அமைச்சர் பழனிசாமி. சசிகலா ஆதரவு வாபஸ் பெறப்பட்டதால் முதல்-அமைச்சர் பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும் என்று சுப்பிரமணியசாமி கூறினார்.
    ஆலந்தூர்:

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசுக்கு ஆதரவு வாபஸ் என தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கூறியிருந்தால் கவர்னர் சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும். ஆனால் முதல்-அமைச்சர் அகற்றப்பட வேண்டும் என மனு கொடுத்திருந்தால் கவர்னர் எதுவும் செய்யமுடியாது.

    சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் தான் முதல்-அமைச்சர் பழனிசாமி. சசிகலா ஆதரவு வாபஸ் பெறப்பட்டதால் கட்சியின் ஒற்றுமைக்காக அ.தி.மு.க. இணைந்து செயல்படவும், தி.மு.க.வுக்கு வாய்ப்பு தரக்கூடாது என்ற எண்ணத்திலும் முதல்-அமைச்சர் பழனிசாமியே ராஜினாமா செய்யவேண்டும். வேறு யாரையாவது முதல்-அமைச்சராக சசிகலா நியமிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்திற்கு நல்ல சூழ்நிலை ஏற்படும்.

    தமிழகத்தில் நடக்கும் குழப்பங்களால் தனி கவர்னர் நியமிக்கப்பட உள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தவறு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் பிற்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குரோம்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே சுடுகாடு அருகே உள்ள வீட்டில் வசிக்கும் ரூபன்பாபு என்பவர் குரோம்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டில் இருந்த மனைவி கவுரிக்கு போன் செய்து வீட்டுக்கு வர வேண்டாம்.

    நான் எனது நண்பருடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்து விட்டோம். உடலை மாடியில் இருந்து சுடுகாட்டில் வீசினோம். வீட்டில் ரத்த கறையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கவுரி வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரத்த கறையாக இருந்தது. இது குறித்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    எனவே ரூபன்பாபுவும், அவரது நண்பரும் சேர்ந்து வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்து வீசி இருப்பது தெரிய வந்தது.

    கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் அருகே ஓட்டுனர் உரிமம் கிடந்தது. அதில் லியாகத்அலி, பல்லா வரம் என்று முகவரி இருந்தது. ஆனால் இறந்தவர் லியாகத்அலிதானா? என் பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

    தலைமறைவாக உள்ள ரூபன்பாபு, அவரது நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    காஞ்சீபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனுக்கு வைர கிரீடத்தை காஞ்சீ சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.
    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காஞ்சீ காமாட்சி அம்மன் கோவில் உற்சவர் காமாட்சி அம்மனுக்கு வைர கிரீடத்தை காஞ்சீ சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.

    இந்த வைர கிரீடமானது சுமார் 500 கிராம் தங்கத்தில் 14 கேரட்டாலான 213 வைர கற்கள், 7½ கேரட்டால் ஆன ஒரு பெரிய கெம்ப் கல், 2.75 கேரட்டாலான ஒரு மரகதக்கல் பதிக்கப்பட்டு உள்ளது.
    ஆதம்பாக்கத்தில் மின்வாரிய ஊழியர் வீடு- விநாயகர் கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர் விரிவாக்கத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் மின்வாரிய ஊழியர்.

    நேற்று இரவு அவர் வீட்டின் முதல் மாடியில் குடும்பத்துடன் தூங்கினார். இன்று அதிகாலை எழுந்த போது வீட்டுக்கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

    பீரோவில் இருந்த 20 பவுன் நகையை காணவில்லை. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    ஆதம்பாக்கம், ராம கிருஷ்ணாபுரம், 3-வது தெருவில் விநாயகர் கோவில் உள்ளது. கோவிலுக்குள் புகுந்த மர்மகும்பல் உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச் சென்று விட்டனர். மெயின் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்த பொருட்கள் தப்பியது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 பவுன் நகை கொள்ளை போனது. கொள்ளையர்கள் இதுவரை சிக்கவில்லை. தொடரும் கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    கொருக்குப்பேட்டை மேயர் பாசுதாவ் தெருவில் வசித்து வருபவர் பானுமதி. இவரது வீட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகை மாயமானது. பீரோ உடைக்கப்படவில்லை.

    எனவே வீட்டுக்குள் வந்து சென்ற யாரேனும் நகையை திருடி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×