என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை அருகே பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நமது நாட்டில் விமான போக்குவரத்து தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதில் பிரதமர் அறிமுகப்படுத்திய, இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யக்கூடிய விமான சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டில் இதுவரை விமான சேவை இல்லாத 70 நகரங்களுக்கு சிறிய விமான நிலையங்கள் புதிதாக அமைக் கப்பட்டு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மைசூருக்கு சென்னையில் இருந்து முதல் விமான சேவையை தொடங்கி வைத்து உள்ளேன். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து மைசூருக்கு செல்லும். பின்னர் மைசூரில் இருந்து சென்னை வந்து ஐதராபாத்துக்கு செல்லும்.

    நம் நாட்டில் சுமார் 400 விமான நிலையங்கள் உள்ளன. அதில் 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் விமான சேவை இல்லை. 100 விமான நிலையங்களுக்காவது விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமான், நிக்கோபர் தீவுகள், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் விமான சேவை தொடங்க இருக்கிறோம்.

    கடல் சூழ்ந்து, மலை பிரதேசங்களிலும் சிறிய விமானங்கள் தரை இறங்க வசதி இல்லை என்றால் அப்பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவைகளை தொடங்குவது பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

    முதல் கட்டமாக சிறிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்கியபோது முக்கிய தனியார் விமான நிறுவனங்கள் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. தற்போது விமான சேவையின் விதிமுறைகளை தளர்த்தி இருப்பதால் இரண்டாம் கட்டத்தில் பல முன்னணி விமான நிறுவனங்கள் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் 2 கோடி பயணிகளை கையாளும் வசதிகள் உள்ளன. சென்னை விமான நிலையம் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயரும் என நினைக்கிறோம். அதற்கு தகுந்தாற்போல் சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

    அதற்காக சென்னை உள்நாட்டு முனையம் மற்றும் பன்னாட்டு முனையத்தை இணைக்க வேண்டும். ஏற்கனவே பழைய முனையங்களின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு உள்ளது. இதற்கான பணி ஜனவரி மாதம் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த பணி 26 மாதங்களில் முடிக்கப்படும்.

    வருங்காலத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். சுமார் ஆயிரத்தில் இருந்து 1,200 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமை விமான நிலையம் (கீரின்பீல்டு) அமைக்க உள்ளோம். இதற்கான நிலங்களை மாநில அரசிடம் கேட்டு உள்ளோம். மாநில அரசு நிலத்தை வழங்கினால் பசுமை விமான நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

    கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களை விரிவுபடுத்தி சர்வதேச விமானங்களை கூடுதலாக இயக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த பணி செயல்பட தொடங்கினால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல் குறையும். சென்னையில் இருந்து ஓசூர், நெய்வேலி போன்ற நகரங்களுக்கு சிறிய ரக விமானங்களை இயக்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி உடன் இருந்தார்.
    நெற்குன்றத்தில் மனவளர்ச்சி குன்றிய மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போரூர்:

    நெற்குன்றம், செல்லியம்மன் நகர் கார்த்திகை தெருவில் வசித்து வருபவர் ஆதிகேசவன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் கவுசல்யா (வயது 17). மன வளர்ச்சி குன்றி இருந்தார். மகன் அஜித், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஆதிகேசவனின் மனைவி கடந்த 10 ஆண்டுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து மகன், மகளை ஆதிகேவன் கவனித்து வந்தார்.

    கவுசல்யாவுக்கு மன வளர்ச்சி குறித்த சிகிச்சை எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் ஆதிகேசவன் மன வருத்தத்தில் இருந்தார்.

    கடந்த சில நாட்களாக கவுசல்யா வீட்டில் ரகளை செய்து வந்தார். இதனால் அஜித், கடந்த 4 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் அவரை கவனித்தார்.

    இது ஆதிகேசவனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மனவளர்ச்சி குன்றிய மகளை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக இன்று காலை அவர், மகன் அஜித்தை கல்லூரிக்கு அனுப்பி விட்டார்.

    பின்னர் வீட்டில் இருந்த நைலான் கயிற்றால் கவுசல்யாவின் கழுத்தை ஆதிகேசவன் நெரித்தார். இதில் சம்பவ இடத்திலேயே கவுசல்யா பரிதாபமாக இறந்தார்.

    இதைத் தொடர்ந்து ஆதிகேசவன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப் பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மனவளர்ச்சி குன்றிய மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நேற்று சாலையோரம் துணி மூட்டையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்று அடையாளம் தெரிந்தது.

    போரூர்:

    சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நேற்று சாலையோரம் துணி மூட்டையில் வாலிபர் ஒருவர் கை, கால் கட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலில் வெட்டு காயங்கள் இருந்தது. அவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உடலை சாலையில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது. அவரது உடலை மதுரவாயல் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் கொலையுண்டது மதுரவாயல் நார்த்தமாதா 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த குணசீலன் (27) என்பதும் தெரியவந்தது. ரவுடியான இவர் 2016-ம் ஆண்டு அமைந்தகரையில் தீபக் ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஆவார்.

    அவரது கை, கால்களை கட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதால் திட்டமிட்டு பழிக்கு பழியாக தீர்த்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குணசீலன் மீது எத்தகைய வழக்குகள் உள்ளன. யார்-யாருடன் மோதலில் ஈடுபட்டு உள்ளார் போன்ற விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரியில் இன்று காலை அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    வண்டலூரை சேர்ந்தவர் காளிகேஸ்வரன் (வயது 28). மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் உடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த அழகர் கருப்புசாமியுடன் (32) மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார்.

    கூடுவாஞ்சேரி அருகே வந்த போது சரக்கு ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய 2 பேரும் தவறி கீழே விழுந்தனர்.

    அந்த நேரத்தில் பின்னால் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற அரசு பஸ் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே காளிகேஸ்வரனும், அழகர் கருப்பு சாமியும் பரிதாபமாக இறந்தனர்.

    கூடுவாஞ்சேரி போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சென்று பா.ம.க. பிரமுகர் வீட்டை சூறையாடி கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். பா.ம.க. ஒன்றிய தொழிற் சங்க தலைவராக உள்ளார். நேற்று காலை அவர் குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் 7 மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.

    திடீரென அவர்கள் பாஸ்கரின் வீட்டு மீது கற்களை வீசி தாக்கினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் வீட்டுக்கதவை உள்பக்கம் பூட்டி ஒரு அறையில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்தார்.

    ஆவேசம் அடைந்த மர்ம கும்பல் வீட்டுமுன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரின் கண்ணாடிகளை நொறுக்கினர். பின்னர் பாஸ்கருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு மண்ணூர் காட்டு கூட்டு ரோடு அருகே பா.ம.க. சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனர் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பா.மக. பிரமுகர் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குரோம்பேட்டையில் ரோட்டை கடந்த போது சரக்கு வேன் மோதியதில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தாம்பரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த உத்திரமேரூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவரது மனைவி மல்லிகா (50). இருவரும் நேற்று மாலை குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். பின்னர் இன்று அதிகாலை சொந்த ஊருக்கு செல்வதற்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பஸ் நிறுத்தத்துக்கு நடந்து வந்தனர்.

    அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி சென்ற சரக்கு வேன் திடீரென மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மல்லிகா பரிதாபமாக இறந்தார்.

    ராஜேந்திரன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டுசென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வேன் டிரைவர் ஜான் விக்ரமை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தினகரனும், மு.க.ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு மாதிரி பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
    ஆலந்தூர்:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் சந்தித்து டெல்லி பயணத்தின் நோக்கம் என்ன என்று கருத்து கேட்டார்கள்.

    அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “மத்திய - மாநில அரசுகள் இடையே பல பரிவர்த்தனைகள் நடைபெறும். அது தொடர்பான அரசு முறை பயணமாக செல்கிறேன்” என்றார்.


    அரசுக்கு எதிராக நெருக்கடி கொடுத்து வரும் தினகரன், மு.க.ஸ்டாலின் பற்றி கேட்டற்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கையில், “தினகரனும், மு.க.ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு மாதிரி பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள், அது மக்களுக்கு நன்றாக தெரியும்” என்றார்.
    கோடிகளை கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில்தான் இந்த அரசு தீவிரமாக உள்ளது. மக்களை பற்றி கவலை இல்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
    தாம்பரம்:

    திண்டுக்கல்லில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றார்.

    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி, சட்டத்தை மதிக்காத ஆட்சி. சட்டத்தை மதிக்கும் அரசு ஊழியர்களை மதிக்கிறேன், பாராட்டுகிறேன். முறையாக நோட்டீஸ் கொடுத்து போராட்டம் நடத்துகிறார்கள்.

    போராட்டம் நடத்துபவர்களை முதல்-அமைச்சரோ, துறை அமைச்சர்களோ அல்லது தலைமை செயலாளரோ அழைத்து பேசி சுமுக முடிவு எடுத்து இருக்க வேண்டும். அதை விடுத்து மிரட்டல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

    எத்தனை கோடிகள் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்கலாம் என்பதில் தான் இந்த அரசு தீவிரமாக உள்ளது. மக்களை பற்றியோ, போராட்டம் நடத்தும் ஜாக்டோ-ஜியோவினரை பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம், “கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து இருந்தால் அவர், ‘நீட்’ தேர்வை ஆதரித்து அறிக்கை விட்டு இருப்பார் என தமிழிசை சவுந்தரராஜன் பேசி உள்ளாரே?” என நிருபர்கள் கேட்டதற்கு, “தரம் தாழ்ந்து பேசுபவர்களுக்கு பதில் அளித்து என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
    சென்னைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட 3 கிலோ தங்கம் சிக்கியது, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சோதனை முடிந்த பிறகு விமான நிலைய ஒப்பந்த தற்காலிக ஊழியர் கரிகாலன் ஒரு பையை எடுத்துக் கொண்டு சென்றார்.

    அதை பார்த்து சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், அவரிடம் விசாரித்தார். அப்போது கரிகாலன், விமானத்தில் வந்த தன் உறவினர் வயதானவர் என்பதால் அவரது பையை காரில் வைக்க எடுத்து செல்வதாக கூறினார்.

    ஆனால் உறவினர் பெயர், எந்த விமானத்தில் வந்தார் என்பது குறித்து கேட்டதற்கு முன்பின் பதிலளித்தார்.

    இதையடுத்து அந்த பையை சோதனை செய்த போது அதில் தலா 1 கிலோ எடையுள்ள 3 தங்க கட்டிகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும்.

    இதையடுத்து கரிகாலனை சுங்க துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர் விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை வெளியே எடுத்து செல்வதற்கு உடந்தையாக இருந்துள்ளார். அவர் யாரிடம் தங்க கட்டிகளை வாங்கினார் என்பது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று காலை கொழும்பு செல்ல இருந்த விமானத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த முகமதுயூனிஸ், சம்சுதீன் ஆகியோரின் உடமைகளை ஸ்கேன் செய்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது.

    உடமைகளை பிரித்து பார்த்தபோது ரூ.30 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ, சிங்கப்பூர் டாலர் ஆகிய வெளிநாட்டு பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தும், நீட்தேர்வுக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளை கண்டித்தும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தாம்பரம்:

    நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தும், நீட்தேர்வுக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளை கண்டித்தும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தாம்பரம் சண்முகம் சாலையில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. எந்த போராட்டம் நட்த்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் மாற்று சக்தியாக தி.மு.க. இருக்க முடியாது. நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கலைஞர் உடல் நலத்துடன் அரசியலில் ஈடுபட்டு இருந்தால் மாணவர்களின் நலன் கருதி அவர் கண்டிப்பாக நீட் தேர்வை ஆதரித்து இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மோகன் ராஜா, தாம்பரம் தொகுதி பொறுப்பாளர் பொற்றாமரை சங்கரன்,மாநில இளைஞரணி துணைத்தலைவர் குமார், பிற மாநில பிரிவு செயலாளர் அசோக்ஜெயின், முத்துக்குமார், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தண்டையார்பேட்டை மேம்பாலம் அருகே வட சென்னை மாவட்ட பா.ஜனதா சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், தேசிய செயற்குழு உறுப்பினர் வேதா. சுப்பிரமணியன், கோபிகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் நடராஜன், வன்னியராஜன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    செங்குன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், மாவட்ட செயலாளர்கள் சிவா, செந்தில்குமார், துணைத் தலைவர் சசிதரன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    பழவந்தாங்கல் அருகே செயின் பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    பழவந்தாங்கல் அருகே மூவரசம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரத்னவேல் பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரித்த போது, பழைய பல்லாவரத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பதும், மூவரசம்பட்டி பகுதியில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்த நாள் விழாவையொட்டி காஞ்சீபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    காஞ்சீபுரம்:

    அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஞ்சீபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட கலெக்டர் பொன்னையா, மற்றும் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மரகதம் குமரவேல் எம்.பி. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வி.சோமசுந்தரம் உள்ளிட்டோர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர்சுந்தர், வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், எழிலசரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் சன்பிராண்ட் ஆறுமுகம், சிவிஎம்.அ.சேகர், சிறுவேடல் செல்வம், வி.எஸ். ராமகிருஷ்ணன் மரியாதை செலுத்தினர்.

    தே.மு.தி.க. சார்பில் நகரச் செயலாளர் சாட்சி சண்முக சுந்தரம் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    காஞ்சீபுரத்தை அடுத்த கருக்குப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்குள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் பெஞ்சமின் மாலை அணிவித்து ஏழை-எளிய மக்களுக்கு இனிப்புகளும் அன்னதானமும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், அமைப்புச் செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், நிர்வாகிகள் அக்ரி நாகராஜன், அத்திவாக்கம் ரமேஷ், குண்ணவாக்கம் கிருஷ்ண மூர்த்தி, தென்னேரி வரதராஜூலு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கருத்தியல் பரப்பு செயலாளர் ராசகுமார் மாலை அணிவித்து மரியாதை தெலுத்தினார்.
    ×