என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம்-திருவள்ளூரில் பலத்த மழை: ஊத்துக்கோட்டையில் பெண் பலி
காஞ்சீபுரம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்கிறது.
காஞ்சீபுரம் பகுதியில் இன்று காலை 6 மணிமுதல் மழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம் பஸ் நிலையம், மேட்டுதெரு, கீரைமண்டபம், சங்கரமடம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
திடீர் மழையால் மாணவ- மாணவிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். இதேபோல் மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி உத்திரமேரூர் 51 மி.மீ., காஞ்சீபுரம் 22.3 மி.மீ., தாம்பரம் 13 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூரில் இன்று காலை 9 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழையாக கொட்டியது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பேரம்பாக்கம், பூந்தமல்லி, பொன்னேரி உள்ளிட்ட பகுதியிலும் மித மான மழை பெய்தது. மழை காரணமாக குளுமையான வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊத்துக்கோட்டை நாகலாபுரம் ரோட்டை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 90). இவர் அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
பழைய போலீஸ் நிலையம் எதிரே சாலையோரத்தில் மழைநீர் தேங்கி இருந்தது. அதனை கடந்து செல்லும் போது அவர் தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆதிலட்சுமி இறந்தார்.
இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக் டர் ரவீந்தரகுமார் விசாரணை நடத்தி வருகிறார். மாமல்லபுரம் பகுதியில் காலை முதல் சாரல் மழை பெய்தது. கோவளம், நெம்மேலி, பட்டிப்புலம், தேவநேரி, வெண்புருஷம், கொக்கில்மேடு, புதுப்பட்டினம் கடலோர பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. தொடர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் நள்ளிரவில் கடலுக்குமீன் பிடிக்க சென்றிருந்த மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினார்கள்.






