என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் விழாவில் பங்கேற்க மாணவ-மாணவிகளுக்கு கட்டாய அழைப்பு?: பெற்றோர் அதிருப்தி
    X

    முதல்-அமைச்சர் விழாவில் பங்கேற்க மாணவ-மாணவிகளுக்கு கட்டாய அழைப்பு?: பெற்றோர் அதிருப்தி

    முதல்-அமைச்சர் விழாவில் பங்கேற்க மாணவ-மாணவிகளுக்கு கட்டாய அழைப்பு? பெற்றோர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கூடுவாஞ்சேரி:

    அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து ஒரு அணியாகவும், டி.டி.வி. தினகரன் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

    நிர்வாகிகள் நீக்கம் மற்றும் புதிய பொறுப்பால் அ.தி.மு.க.வில் தற்போது உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வண்டலுர் அருகே உள்ள கிளம்பாக்கத்தில் இன்று நடக்கிறது. இதில் முதல்- அமைச்சர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கட்டாய அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக நேற்றே மாணவர்களின் பெற்றோர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு உள்ளன.

    10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இது மாணவர்களின் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து இன்று காலை 8 மணி முதலே விழா நடைபெறும் இடத்துக்கு மாணவ- மாணவிகள் பஸ், வேன் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

    மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தனியார் பள்ளி மாணவ- மாணவிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும் போது, “விழாவில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் காலையிலேயே மாணவர்களை பள்ளியில் இருந்து விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வந்து விட்டனர்.

    இதுபோன்ற விழாக்களில் மாணவ- மாணவிகளை பங்கேற்க வைக்காமல் கல்வி பயில்வதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.

    Next Story
    ×