என் மலர்
செய்திகள்

லண்டன் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை காஞ்சீபுரம் கொண்டு வருவதில் தாமதம்
காஞ்சீபுரம்:
லண்டன் பக்கிங் ஹாம் ஷயர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை மினி பஸ் மீது 2 கண்டெய்னர் லாரிகள் மோதியது. இந்த விபத்தில் மினி பஸ்சில் இருந்த காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் மண்டப தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (63), தங்கை தமிழ்மணி, அவரது கணவர் அருள்செல்வம் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 4 பேர், கேரள மாநிலத்தை சேர்ந்த சிரியாக் ஜோசப் ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பன்னீர்செல்வத்தின் மகன் மனோரஞ்சிதம் லண்டனில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது வீட்டுக்கு பன்னீர்செல்வம் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
மினி பஸ்சில் சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் பன்னீர் செல்வத்தின் மனைவி வள்ளி, மகன் மனோரஞ்சிதம், அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இறந்தவர்களின் உடல்களை காஞ்சீபுரம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தூதரகத்திற்கு விடுமுறை நாள் என்பதால் அவர்களின் உடல்களை கொண்டு வருவதில் நிர்வாக ரீதியாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே பலியானவர்களின் உறவினர்கள் இன்று காலை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மாநில மற்றும் மத்திய அரசின் துரித நடவடிக்கைகள் மூலம் இறந்தவர்களின் உடல்களை விரைவில் சொந்த ஊருக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






