என் மலர்
கடலூர்
நெய்வேலி அடுத்த மந்தாரகுப்பம் அருகே உள்ள ஏ.குறவன்குப்பம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 70) விவசாயி.
இவர் நேற்று மாலை சைக்கிளில் தனது விவசாய நிலத்துக்கு சென்று கொண்டிருந்தார். சேப்ளாநத்தத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றார்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சின்னதுரையின் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சின்னதுரை சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து மந்தாரகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் முத்துவரதன்(வயது 40). விவசாயி. இவர் நேற்று திடீரென்று மதுவில் விஷத்தை கலந்து குடித்தார். மயங்கி விழுந்த அவரை புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை முத்துவரதன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முத்துவரதன் மனமுடைந்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தற்கொலை செய்து கொண்ட முத்துவரதனுக்கு 2 மகன்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கடலூர் நடுவீரப்பட்டு அருகே உள்ள சிலம்பிநாதன்பேட்டை மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 41). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கடலூர் பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
கதிர்வேல் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். பாதிரிக்குப்பம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென வழிமறித்து கதிர்வேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதில் கதிர்வேலுக்கு இடது கை மற்றும் வலது தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் கதிர்வேலு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் காரணமாக சிலம்பிநாதன் பேட்டையை சேர்ந்த முரளி என்பவர் தன்னை வழிமறித்து அரிவாளால் வெட்டியதாக கதிர்வேல் தெரிவித்தார்.
இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கணேசன்-பவானி தம்பதியரின் மகன் என்ஜீனியர் வெங்கடேசனுக்கும், பாண்டியன்-வளர்மதி தம்பதியரின் மகள் பூங்காவனத்திற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களது திருமணம் விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள ராணி மகால் எதிரே உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
திருமண நிகழ்ச்சியில் அரசியல் பேசலாமா? என்கிறார்கள். நான் இங்கு வந்து என்ன பேசப்போகிறேன் என்று மக்களும் குறிப்பாக பத்திரிகையாளர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
விமானத்துக்கு செல்லும் போதும், வரும்போதும் விமான நிலையத்திலேயே பேட்டி கொடுப்பது என்பது பாரதிய ஜனதாவை சேர்ந்த அம்மையார் ஒருவர் பணியாக வைத்துள்ளார். அவர் திராவிட கட்சியை அழிப்பதாக கூறி வருகிறார்.
திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
மக்கள் பிரச்சனையை மறந்து முதல்-அமைச்சர் தனது பதவியை மட்டுமே தக்க வைக்க துடிக்கிறார். விவசாயிகள் டெல்லியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கதிராமங்கலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் பிரச்சனைகளை பற்றி சிந்திக்காமல் ஆட்சியில் இருப்பவர்கள் உள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
அ.தி.மு.க. தற்போது பெரும்பான்மை குறைந்து மைனாரிட்டி ஆட்சியாக மாறிவிட்டது.

பிரதமர் மோடி தமிழகத்தில் கட்டபஞ்சாயத்து நடத்தி வருகிறார். துணை முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு வந்திருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் கையை பிடித்து இணைத்து வைத்து விட்டு செல்கிறார்.
ஆனால் பெரும்பான்மை குறித்து அவரிடம் புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வால் தமிழகத்தில் யாரும் மருத்துவ படிப்பு படிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக உரிமையை டெல்லியில் அடகு வைத்து விட்டார்கள்.
மக்கள் எப்போது விடிவு காலம் வரும் என கேட்கிறார்கள்? அந்த விடிவு காலம் விரைவில் வரும். துரைமுருகன் தலைமையில் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கவர்னரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனு குறித்து ஜனநாயக முறைப்படி கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆட்சி முறைகேடுகள், ஊழல் குறித்து பேசினேன். தடை செய்யப்பட்ட குட்கா, திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது என பேசியதற்கு ஆளுங்கட்சியினர் ஆதாரம் கேட்டனர். ஆதாரத்துக்காக எடுத்து காட்டினோம். காட்டியது தவறா? குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் செய்து விட்டார் என தற்போது செய்திகள் வருகிறது. நான் சொன்ன போது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் 40 நாட்கள் கழித்து குட்கா விவகாரத்தில் தற்போது நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு மட்டுமே வெளிவருகிறது.
தற்போது அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தங்களுக்கு பெரும்பான்மை குறைந்து விட்டதால் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கினால் தப்பித்து விடலாம் என நினைக்கின்றனர். அப்படி நீக்கினால் நீதிமன்றத்தை நாடுவோம்.
தற்போது நடக்கிற ஆட்சியை கவிழ்க்க அ.தி.மு.க.வினரே தயாராக உள்ளனர். விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
பண்ருட்டி:
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை போலீஸ்காரர் தயாளன் வழிமறித்தார். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. சந்தேகம் அடைந்த அவர் ஏட்டு முருகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று அந்த காரை மின்னல் வேகத்தில் விரட்டி சென்றார்.
பண்ருட்டி சாலையில் உள்ள வங்கி அருகில் கார் சென்ற போது அதை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 2 வாலிபர்கள் இருந்தனர். காரை சோதனை செய்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட போதை பொருளான ’ஹான்ஸ்‘ அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இது குறித்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் காரில் போதைப்பொருட்களை கடத்தி வந்தவர்கள் புதுவை கோவிந்த சாலையை சேர்ந்த அல்சப்பா (வயது 23) மற்றும் ஜாகித் (22) என்பதும், அவர்கள் 2 பேரும் ஆரணியில் இருந்து புதுப்பேட்டை, பண்ருட்டி வழியாக புதுவைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. மேலும் கடலூரில் குடோன் அமைத்து அங்கிருந்து பேக்கிங் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அல்சப்பா மற்றும் ஜாகித் ஆகிய 2 பேர் மீதும் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள், அவர்கள் ஓட்டி வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த போதை பொருட்கள் கடத்தல் சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆரணி, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். அங்கு போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைபொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து அதிரடியாக கைது செய்த புதுப்பேட்டை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டரகோட்டை சோதனை சாவடியில் பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இப்போது போதைப்பொருட்கள் கடத்தல் நடந்துள்ளது பண்ருட்டி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை கொத்தப்புரி நத்தம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 52). இவரது மனைவி ஆரியம்மா (47). இவர்கள் நேற்று இரவு ஒரு வேனில் 22 பேர் கோவிலுக்கு புறப்பட்டனர். வேனை புதுவையை சேர்ந்த விக் னேஷ் (32) ஓட்டிச்சென்றார்.
நள்ளிரவு 1 மணி அளவில் அந்த வேன் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் காந்திநகர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது.
திடீரென்று அந்த லாரியை டிரைவர் பெட்ரோல் பங்க்குக்கு திருப்ப முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.
இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து ரோட்டில் கவிழ்ந்தது. உள்ளே இருந்தவர்கள் கூச்சலிட்டு அலறினர்.
இந்த விபத்தில் வேனில் இருந்த பார்த்தீபன், அவரது மனைவி ஆரியம்மா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வேனுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 20 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அனிதா (27), சின்னையன் (70), மல்லீஸ்வரன் (2) ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த வேன் டிரைவர் விக்னேஷ், அஸ்வின், சுரேஷ்குமார், புஷ்பா, சங்கராதேவி, பூங்கொடி உள்பட 17 பேர் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்தால் ராமநத்தம் பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவையில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தினகரனுக்கு ஆதரவாக 21 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவு அளிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,
அருண்மொழித்தேவன் எம்.பி. பேசியதாவது:
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் தற்போது இணைந்து சிறப்பாக செயல்படுகின்றன. இந்த சூழ்நிலையில் ஆட்சியிலும் கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தினகரன் அத்துமீறி செயல்படுகிறார். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை தினகரன் நீக்கி வருகிறார். நானே ராஜா நானே மந்திரி என்ற ரீதியில் செயல்பட்டு வரும் அவர் நல்ல மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்.
அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 தாண்டாது. மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி பதவி தருவதாகவும் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறுகிறார். ஆனால், யாரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம். எம்.எல்.ஏ. முருகுமாறன் பற்றி ஊடகங்களில் தவறான செய்திகள் வெளிவருகின்றன.

கட்சியின் பொதுச்செயலாளர் விஷயத்தில், அன்றைய சூழ்நிலையில் சசிகலாவை ஆதரித்தோம். இல்லை என்று சொல்லவில்லை. அதை தினகரன் இப்போது சொல்லிக் காட்டவேண்டிய அவசியம் இல்லை. சசிகலா, அம்மாவைப் போல் தன்னை நினைத்துக்கொண்டு முதலமைச்சராக நினைத்தார். அந்த முடிவை அவர் எடுத்தபோது அவரது சுயரூபம் தெரிந்துவிட்டது.
அவர் ஏதோ எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது போல் பேசுகிறார். மக்களை சந்தித்து வாக்கு கேட்டு, முதலமைச்சர் ஆக்கியதுபோல் அவரும் அவரது குடும்பத்தினரும் சொல்கின்றனர். அவர் சிறைக்கு செல்ல நேரிட்டதால், வேறு வழியில்லாமல், யாரையாவது முதலமைச்சர் ஆக்கவேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கினார்.
இப்போது, சாதி அரசியலை முன்னிலைப்படுத்துவதற்காக தனபாலை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று கட்சியில் அம்மாவால் நீக்கப்பட்ட, மீண்டும் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படாத திவாகரன் சொல்கிறார். இதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதை பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கட்சி நிர்வாகிகளை தினகரன் தொடர்ந்து நீக்கி வருகிறார். அதுவும் சசிகலாவிடம் ஒப்புதல் பெற்றுவிட்டு நீக்குவதாக சொல்கிறார். இது கேலிக்கூத்தாக உள்ளது. மக்கள் பணியாற்றுவதற்கு கட்சியையும் ஆட்சியையும் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசுக்கலை கல்லூரி உள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிப்பதற்கு விடுதி உள்ளது.
கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கப்பட்டது. மாணவர்கள் விடுதியில் புதியதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்ததாக சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ராமு தலைமையில் அதிகாரிகள் விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
இது குறித்து அலுவலர் ராமு கூறியதாவது:-
கடலுர் தேவனாம்பட்டினம் அரசுக்கல்லூரி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் மாணவர்கள் ராக்கிங் செய்ததாக புகார் வந்தது. இது சம்பந்தமாக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
புதியதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களிடம் சமையல்காரர் ஆல்பர்ட் பணம் வசூல் செய்து பிரியாணி செய்துள்ளார். இது சம்பந்தமாக விசாரணை அறிக்கையை கலெக்டர் ராஜேஷிடம் வழங்கினோம்.
கலெக்டர் ராஜேஷ் உத்தரவின்பேரில் சமையல்காரர் ஆல்பர்ட் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். மேலும் இதனை கண்காணிக்க தவறிய வார்டன் (பொறுப்பு) சிகாமணியை வேறு இடத்துக்கு பணிமாறுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதுபோல தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும். அதற்கு முன் 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை 2016 ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும்,
சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கொண்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் போராட்டம், பேரணி போன்றவை நடத்தப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் மாதம் 7–ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிட அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 22–ந்தேதி (அதாவது நேற்று) ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஜக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் இவர்களது போராட்டம் நடந்தது.
கடலூர் மாவட்டத்திலும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். இதனால் நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர்.
மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரையில், தற்போது கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வரும் மாணவர்கள் ஏற்கனவே அங்கு பயிற்சியில் இருந்து வருகிறார்கள். இவ்வாறு பயிற்சியில் உள்ள ஆசிரியர்களை கொண்டு நேற்று வகுப்புகள் நடத்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதேபோன்று வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலைத்துறை, வணிக வரித்துறை, புள்ளியியல் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை என்று பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள், பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடிய கிடந்தது. அரசு பணிகளில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் கடலூர் மாவட்டம் முழுவதும் தாலுகா அளவில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கடலூரில் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் ஜனார்த்தனன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். ஜக்டோ–ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எல்லப்பன், அரிகிருஷ்ணன், உத்தராமச்சந்திரன், சுந்தரராஜன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் அரசு பணியாளர்கள் சங்க மாநில துணைதலைவர் நல்லதம்பி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் இளங்கோவன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் ஹென்றி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஜக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன் கூறுகையில், கோரிக்கைளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த போராட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 17 ஆயிரம் பேரில் சுமார் 15 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் முழுவதுமாக பணிக்கு செல்லவில்லை. அதாவது 90 சதவீதம் பேர் பணிக்கு செல்லவில்லை. இதன் மூலம் நேற்று மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் பணிகள் முடங்கி போய்விட்டன.
தொடர்ந்து செப்டம்பர் மாதம் 7–ந்தேதி நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக ஆயத்த மாநாடு கடலூரில் வருகிற 26–ந்தேதி(சனிக்கிழமை) ஜக்டோ–ஜியோ சார்பில் நடைபெற இருக்கிறது என்று அவர் கூறினார்.
இதேபோன்று மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகாக்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட எல்லையான கண்டரக்கோட்டையில் போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. இன்று அதிகாலை போலீசார் அங்கு வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது சென்னையில் இருந்து வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரில் 4 பேர் இருந்தனர். அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர்.
ஆனால், அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இது குறித்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் இது குறித்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.
இதற்கிடையே அந்த மர்ம கார் நேர் வழியாக செல்லாமல் குறுக்கு வழியாக மேல்கவரம்பட்டு என்ற இடத்துக்கு சென்றது. அந்த பகுதியில் செடிகள் அதிகமாக வளர்ந்திருந்தது. காரில் வந்தவர்கள் அங்கு இறங்கினார்கள். காரின் பின்பகுதியில் இருந்த சாக்கு மூட்டையை எடுத்து அருகில் இருந்த புதரில் மறைத்து வைத்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் இதைப்பார்த்தார். உடனே அங்கு நின்றவர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறினர். இதனால் முருகானந்தம் அவர்களை பிடிக்க முயன்றார். அப்போது 3 வாலிபர்கள் திடீரென்று காரில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். ஒருவரை மட்டும் ஊர்க்காவல் படை வீரர் மடக்கி பிடித்தார்.
பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். புதரில் வீசப்பட்ட மூட்டையை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் 100 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
மேலும் பிடிபட்ட வாலிபரை பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரம்-கடலூர் மாவட்ட போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிய வந்தது. உடனே அவர் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சையைச் சேர்ந்த மலைச்சாமி என்பதும், கஞ்சாவை ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கடத்தி கொண்டு வந்ததாகவும், அதன் பின்னர் காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது.
மேலும் தப்பி ஓடிய 3 பேர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே காரில் தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் தப்பி ஓடி விட்ட 3 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கஞ்சா கடத்தல் காரரை மடக்கி பிடித்த ஊர்க்காவல்படையை சேர்ந்த முருகானந்தத்தை டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டினார்.
விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சசிகலா (வயது 28). இவர்களுக்கு கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மணிகண்டனுக்கு அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரியுடன் (18) கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமறைவாகி வசித்து வருகின்றனர். தனது கணவர் மணிகண்டன் தன்னை விட்டு பிரிந்ததால் சசிகலா மனவேதனை அடைந்தார்.
அவர் ஜெகதீஸ்வரியின் தந்தை ஜெகதீசன் வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்த ஜெகதீசன், அவரது மனைவி சரோஜா ஆகியோரிடம், என் கணவர் மணிகண்டன் உங்கள் மகளுடன்தான் சென்றுள்ளார். அவரை நீங்கள் தான் கண்டுபிடித்துத்தர வேண்டும் என்று கூறினார். மேலும் ஜெகதீஸ்வரியின் கள்ளக்காதலை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஜெகதீசன், தனது மனைவி சரோஜாவுடன் சேர்ந்து சசிகலா மீது திடீரென மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் சசிகலா உடல் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அலறினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சசிகலாவை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சசிகலா விருத்தாசலம் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் ஜெகதீசன், மற்றும் சரோஜா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜெகதீசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம், திட்டக்குடி, ராமநத்தம் மற்றும் அதை சுற்றிஉள்ள பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளிகாற்று வீசியது. சிறிது நேரத்தில் மழை கொட்ட ஆரம்பித்தது. தொடர்ந்து சில மணி நேரம் கனமழை நீடித்தது.
இதனால் பெண்ணாடம் மற்றும் திட்டக்குடியில் உள்ள சாலை மற்றும் முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த சூறாவளிகாற்றுடன் மழை தொடர்ந்து பெய்ததால் திட்டக்குடியை அடுத்த அரங்கூர் பஸ் நிறுத்தம் அருகே திட்டக்குடி- ராமநத்தம் சாலையோரம் நின்ற 60 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடிய வில்லை. இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரமும் தடைபட்டது.
தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.






