என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே காரில் கடத்திய ரூ. 10 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது
    X

    பண்ருட்டி அருகே காரில் கடத்திய ரூ. 10 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

    பண்ருட்டி அருகே காரில் கடத்திய ரூ. 10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து புதுவை வாலிபர்கள் 2 பேரை கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை போலீஸ்காரர் தயாளன் வழிமறித்தார். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. சந்தேகம் அடைந்த அவர் ஏட்டு முருகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று அந்த காரை மின்னல் வேகத்தில் விரட்டி சென்றார்.

    பண்ருட்டி சாலையில் உள்ள வங்கி அருகில் கார் சென்ற போது அதை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 2 வாலிபர்கள் இருந்தனர். காரை சோதனை செய்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட போதை பொருளான ’ஹான்ஸ்‘ அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இது குறித்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அதில் காரில் போதைப்பொருட்களை கடத்தி வந்தவர்கள் புதுவை கோவிந்த சாலையை சேர்ந்த அல்சப்பா (வயது 23) மற்றும் ஜாகித் (22) என்பதும், அவர்கள் 2 பேரும் ஆரணியில் இருந்து புதுப்பேட்டை, பண்ருட்டி வழியாக புதுவைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. மேலும் கடலூரில் குடோன் அமைத்து அங்கிருந்து பேக்கிங் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அல்சப்பா மற்றும் ஜாகித் ஆகிய 2 பேர் மீதும் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள், அவர்கள் ஓட்டி வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த போதை பொருட்கள் கடத்தல் சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆரணி, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். அங்கு போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போதைபொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து அதிரடியாக கைது செய்த புதுப்பேட்டை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டரகோட்டை சோதனை சாவடியில் பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இப்போது போதைப்பொருட்கள் கடத்தல் நடந்துள்ளது பண்ருட்டி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×