என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் புழக்கத்துக்கு வந்த 50 ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்கள் வங்கியில் பெற்று சென்றனர்.
    கடலூர்:

    புதிதாக 50, 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகள் சென்னையில் மட்டும் முதலில் புழக்கத்துக்கு வந்தது. தற்போது மற்ற மாவட்டங்களுக்கும் ரிசர்வ் வங்கி அனுப்பி வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கிகளுக்கு ரூ.50 லட்சம் புதிய 50 ரூபாய் நோட்டுகள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள் மாவட்டத்தில் உள்ள 39 இந்தியன் வங்கி கிளைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

    அந்த நோட்டுகள் நேற்று முதல் கடலூரில் புழக்கத்துக்கு வந்தது. இதை வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பெற்று சென்றனர்.
    இன்றைய அரசியல் சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் வந்தால் ஒரு பஞ்சாயத்தில் கூட அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது என்று நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில தலைவரும், நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சி வளர்ச்சிக் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அவர் நேற்று கடலூரில் வர்த்தக பிரிவு நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். முன்னதாக கடலூர் டவுன்ஹால் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு வசந்தகுமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதைத்தொடர்ந்து வசந்தகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய அரசியல் சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் சக்தி அ.தி.மு.க.வுக்கு இல்லை. உள்ளாட்சி தேர்தல் வந்தால் ஒரு பஞ்சாயத்தில் கூட அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது. தேர்தல் வந்தால், மக்களை, விவசாயிகளை அவர்கள் சந்திக்க வேண்டும். அப்போது அ.தி.மு.க.வின் தவறுகள் வெளிப்படும். இதனால் அவர்கள் தேர்தலை தள்ளி வைக்க முயற்சி செய்வார்கள். நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வரமாட்டார்கள்.

    நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தி விட்டு தான் தேர்வு வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டாக்டர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் நன்றாக படித்து பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அனிதா, நீட் தேர்வால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மத்திய அரசு அதிரடியாக அறிவித்து வரும் திட்டங்களால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தையும் மத்திய அரசு மீட்கவில்லை. அ.தி.மு.க.வில் 3 அணியாக இருந்தவர்கள், தற்போது 2 அணியாக உள்ளனர். தமிழகத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சியில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு சொல்வதை தான் மாநில அரசு கேட்கிறது.

    மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் மாநில அரசு திறந்து இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் இல்லாமலேயே ஆட்சியை நடத்தலாம்.

    இவ்வாறு வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
    மாணவி அனிதாவின் சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் சிதம்பரம்- கடலூரில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், அனிதாவின் சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் மற்றும் கலைத்துறை மாணவ-மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் சிலை அருகே ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று காலை கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரி வளாகத்தில் நீட் தேர்வை ரத்துசெய்யகோரி போராட்டங்களை நடத்தினர்.

    மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. தகவல் அறிந்து வந்த தேவனாம்பட்டினம் போலீசார் போராட்டம் நடத்திய மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டியில் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள வேலன் குப்பம் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை கடந்த சிலநாட்களாக காணவில்லை.

    இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவி பண்ருட்டி பஸ் நிலையத்தில் போலீசாரால் மீட்கப்பட்டார்.

    போலீசார் நடத்திய விசாரனையில் அந்த மாணவியை பண்ருட்டி அருகே உள்ள வேலன் குப்பம் பகுதியை சேர்ந்த மணி என்கிற மணிவண்ணன் ( 24) என்ஜீனியர் என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    அதன் பின்னர் மாணவியை பண்ருட்டி பஸ் நிலையத்தில் விட்டு விட்டு இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் மாணவியின் பெற்றோரை அழைத்து நடந்த சம்பவத்தை கூறி மாணவியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து என்ஜினீயர் மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரியலூர் மாணவி அனிதா தற்கொலையை கண்டித்து கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கடலூர்:

    நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

    இதையொட்டி மத்திய, மாநில அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் முல்லை வேந்தன் தலைமையில் நிர்வாகிகள் கடலூர் திருப்பாதிரிப் புலியூர் உழவர் சந்தை அருகே திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கடலூர் திருப்பாதிலிப்புலியூர் அண்ணாபாலம் அருகே சென்று சாலை மறியல் செய்தனர்.

    போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று போலீசார் கூறினார்கள். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் நடத்திய 40 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

    இந்த சாலைமறியலால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    விக்கிரவாண்டியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக பஸ்நிலையம் வந்தனர். அங்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியல் செய்தனர். இதையொட்டி 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் சேரலாதன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

    செய்தி தொடர்பாளர் தமயந்தி, தொகுதி செயலாளர் தமிழ்மாறன், தொகுதி துணை செயலாளர் பெரியார், நகர செயலாளர் சரவணன், இரணியன், முகாம் அமைப்பாளர் காசிலிங்கம் மற்றும் நிர்வாகிகள் திலீபன், இரணியன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
    அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டற்கு இரங்கல் தெரிவித்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.

    இந்த மருத்துவக்கல்லூரியில் மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    இதை கண்டித்து கடந்த 2 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாகவும் நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி முன்பு மாணவ-மாணவிகள் திரண்டனர். அவர்கள் அரியலூர் மாவட்டம் செந்தூர் அருகே உள்ள குழுமூர் காலனியை சேர்ந்த மாணவி அனிதா (வயது 17) நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டற்கு இரங்கல் தெரிவித்தனர்.

    பின்னர் அவர்கள் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
    புவனகிரி அருகே தந்தை மற்றும் இரண்டு மகள்களை அரிவாளால் வெட்டி விட்டு, வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(வயது 45). கொத்தனார். இவரது மனைவி மங்கையர்கரசி கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்துவிட்டார். செந்திலுக்கு சுவேதா(18), நிவேதா(16) ஆகிய 2 மகள்களும், அசோக்(28) என்ற மகனும் உள்ளனர் அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை.

    அசோக் நேற்று இரவு வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று விட்டார். செந்தில் அவரது மகள்கள் சுவேதா, நிவேதா ஆகியோர் இரவு வீட்டில் படுத்து தூங்கினார்கள். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். செந்தில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த செந்தில், நிவேதா, சுவேதா ஆகிய 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். பின்னர் மர்மகும்பல் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். வீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் வீடு தீப்பற்றி எரிந்தது. உடனே செந்தில் ரத்தகாயங்களுடன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தன்னையும் தன் மகள்களையும் மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு வீட்டுக்கு தீ வைத்ததாக கூறினார்.

    பொதுமக்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். படுகாயம் அடைந்த சுவேதா, நிவேதா, செந்தில் ஆகியோரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் நிவேதாவின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது. அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வீட்டுக்கு தீ வைத்து தந்தை, மகள்களை அரிவாளால் வெட்டிய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கள்ளக்காதல் தகராறில் வாலிபர் தைல மரம் காட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வடலூர், ஆக. 31-

    கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தானபுரம் இளவரசன்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 36). இவரது மனைவி சூர்யா (24). இவர்களுக்கு வாசுதேவன் (3) என்ற மகன் உள்ளான்.

    ஆனந்தராஜ் கடந்த 24-ந் தேதி வயலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த உறவினர்கள் ஆனந்தராஜை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை.

    இதைத்தொடர்ந்து ஆனந்தராஜின் சகோதரர் சிவசங்கர் (40) வடலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆனந்தராஜை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆபத்தானபுரம் அருகே உள்ள தைல மரக்காட்டில் ஆனந்தராஜ் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு ஆனந்தராஜின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் உடல் முழுவதும் அழுகிய நிலையில் காணப்பட்டது. துர்நாற்றமும் வீசியது.

    ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்ட தகவல் அவரது மனைவி சூர்யா மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இதை கேட்டதும் கதறி அழுதனர்.

    ஆனந்த ராஜின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் ஆனந்தராஜுக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அந்த பெண்ணின் கணவர் அறிந்து ஆனந்தராஜை கண்டித்தார்.

    ஆனால், அவர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஆனந்தராஜின் தலையை துண்டித்து கொடூர கொலை செய்து பிணத்தை தைல மரம் காட்டில் வீசி சென்றுள்ளார்.

    இதைத்தொடர்ந்து கொலையாளியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தைல மரம் காட்டில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிதம்பரத்தில் எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் பொன்னம்பல நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர், தனது வீட்டிலேயே மருந்து கடை நடத்தி வந்தார். இவர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்து வருவதாக சென்னை மருத்துவ இணை இயக்குனர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன.

    இதன்அடிப்படையில் சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தமிழரசன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சரவணனின் மருந்துக் கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அதில் அவர் எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தது தெரிந்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் அவரை பிடித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தார். மேலும் மருந்து கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திய மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கடலூரில் ஆசிட் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    கடலூர்:

    சிதம்பரத்தில் இருந்து ஆசிட் நிறப்பிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்து கொண்டிருந்தது.

    அந்த லாரி செம்மங்குப்பத்தில் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் டிரைவர் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். மேலும் லாரியில் இருந்த ஆசிட்டும் கசிய தொடங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் லாரியில் ஏற்பட்ட கசிவை சரிசெய்து ஆசிட்டை மற்றொரு லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    விருத்தாசலத்தில் குடிபோதையில் பள்ளியில் படுத்து தூங்கிய ஆசிரியரை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோவிலானூரை சேர்ந்தவர் வேல்குமார் (வயது 44). இவர் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை வழக்கம் போல் வேல்குமார் பள்ளிக்கு வந்தார். மதியம் 12 மணி அளவில் அவர் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு சென்றார். பின்னர் அவர் அங்கேயே படுத்து தூங்கினார்.

    அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் திடீரென்று பள்ளிக்கு வந்தார். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்துகிறார்களா? என்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு சென்றார். அப்போது அங்கு ஆசிரியர் வேல்குமார் குடிபோதையில் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனே வேல்குமாரை எழுப்பி பணியின்போது ஏன் குடித்துவிட்டு வந்தீர்கள் என கேட்டார். மதுபோதையில் இருந்த வேல் குமார் அதிகாரியை ஆபாசமாக பேசினார்.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து மதுபோதையில் இருந்த ஆசிரியர் வேல்குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இது தொடர்பாக மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி முருகன் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கல்வி அதிகாரியை ஆபாசமாக திட்டியது மற்றும் பணியின்போது குடிபோதையில் இருந்ததாக போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரியர் வேல்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    இதையடுத்து ஆசிரியர் வேல்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டார்.

    மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்பிக்க வேண்டிய ஆசிரியரே பள்ளியில் குடிபோதையில் படுத்து தூங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவரது மனைவி லட்சுமி (55). இவர்களது மகள் பிரியா (28). சண்முகம் விருத்தாசலம் நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ளார். லட்சுமி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    இன்று காலை சண்முகம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கதவை திறந்து வீட்டினுள் சென்று பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன.

    பீரோவை பார்த்த போது அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஒரு ஏ.டி.எம். கார்டு ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து சண்முகம் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் புருனே வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    நகை, பணம் கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
    ×