என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள்.
    • கணக்கெடுப்புகள் அனைத்தும் சொல்வது 60 சதவீதம் மக்கள் தே.ஜ.கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றுதான்.

    "தேமுதிக சேரும் கூட்டணியே வெற்றி பெறும்" என்றும், சரியான நேரத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், சில முரண்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்திய அரசாங்க பதவி கேட்பார்கள். அதனால் அவர்களை பாஜகவிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்வோம் என தேமுதிக குறித்து கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இதன்மூலம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக இரு கட்சிகளிடையே இழுபறி நீடிப்பது உறுதியாகியுள்ளது. 

    இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயர் நீக்கப்பட்டதற்கு தொடர்பான கேள்விக்கு,

    "விபி-ஜி ராம்-ஜி என்பது கிராம்பபுற வேலைவாய்ப்பு திட்டம் என்பதன் தமிழ் அர்த்தம்தான். அப்படி இல்லையெனில் இந்தி தெரிந்தவர்களிடம் அதன் அர்த்தம் என்னவென்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்." என பதிலளித்தார். 

    தொடர்ந்து தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு,

    "தேமுதிகவுடன் பாஜக தலைமையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர். நேற்று நடந்த பாஜக கட்சி கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டது. தேமுதிக எதிர்பார்ப்பு என்ன, அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர். மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள். நல்லபடியாக முடியும். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்

    பாஜக தானே எங்கள் கூட்டணி. சாப்பாட்டில் காய்கறி, கூட்டு வைப்பது போலத்தான் இது. யார் பேசினாலும் எங்களுடன்தானே கூட்டணி. எங்களிடம் அன்பாக இருப்பவர்களை நாங்கள் அழைத்திருப்போம். பாஜகவிடம் அன்பாக உள்ளவர்களிடம் அவர்கள் பேசுகிறார்கள். எங்களை நம்பி சிலர் வருவார்கள், அவர்களை நம்பி சிலர் வருவார்கள். பாஜக அழைத்தாலும் அதிமுக தலைமையில் இருக்கிற தே.ஜ. கூட்டணிக்குதானே வருவார்கள்" என பதிலளித்தார்.

    சில முரண்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். அதாவது சிலர் மத்திய அரசாங்க பதவி கேட்பார்கள். அதனால் அங்கே பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்வோம். ஆனால் முடிவு இந்த கூட்டணிக்கு சாதகமாகத்தான் வரும். டெல்லி சென்று கூட்டணியை பேசி முடித்தது எடப்பாடி பழனிசாமி தான். அமித்ஷா வந்து இங்கு அறிவித்தார். எங்கள் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். தலைமை அதிமுகதான்." என தெரிவித்தார். 

    தேர்தல் அறிக்கை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், 

    "நாடு முழுவதும் ஆயிரம் கட்சிகள் உள்ளன. எங்களுக்கு தெரிந்ததை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்கிறோம். கடந்த தேர்தலில் மகளிருக்கு ரூ.1500 தருகிறோம் எனக்கூறினோம், திமுக ரூ.1000 தருவதாக கூறியது. அது எடுபட்டுவிட்டது. அதனால்தான் இந்த முறை ரூ.2000 என முன்கூட்டியே அறிவித்துவிட்டோம். வேண்டுமானால் நீங்களும் (திமுக) அறிவித்துக்கொள்ளுங்கள்.

    மத்திய அரசு, மற்ற அமைப்புகள், எங்களது தனிப்பட்ட கணக்கெடுப்புகள் அனைத்தும் சொல்வது 60 சதவீதம் மக்கள் தே.ஜ.கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றுதான். பாஜக அகில இந்திய கட்சி. அதிமுக தலைமையில் இயங்குகிறோம் என சொல்லிவிட்டார்கள்." என தெரிவித்தார்.

    • அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
    • அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.

    ராயப்பேட்டை:

    சென்னை ராயப்பேட்டையில் பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    * எ.வ.வேலு அமைச்சர் கிடையாது வியாபாரி. இன்னும் 2 மாதத்தில் 1, 2, 3 என சிறையில் கம்பி எண்ணப்போகிறார்.

    * சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி உட்பட 47 தொகுதிகளை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கி உள்ளது தி.மு.க.

    * தி.மு.க.வினர் கிராமங்கள் அளவில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பணத்தை கொண்டுபோய் பதுக்கி வைத்துள்ளனர்.

    * பணத்தை மட்டுமே நம்பி தி.மு.க. இந்த சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.

    * கேடு கெட்ட தி.மு.க. ஆட்சி குறித்து வீடு வீடாக சென்று கூறுங்கள்.

    * இளைஞர்களால் எத்தனையோ பல புரட்சிகள் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற புரட்சி நடக்கும்.

    * தேர்தலில் தி.மு.க. ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெல்லும். தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளில் வெல்லும்.

    * அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

    * அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.

    * துணை பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்களுக்கு தி.மு.க. போலி வாக்குறுதி அளித்துள்ளது என்றார்.

    • எங்களது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
    • ‘பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது’ என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை தி.மு.க. அழுத்தத்தால் கொண்டு வந்தது போன்ற ஒரு மிகப்பெரிய பொய்யை கட்டமைத்துள்ளார்.

    அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக, மாணவர்களோ, பெற்றோர்களோ, எதிர்க்கட்சியினரோ கோராதபோது, எனது மனதில் உதித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்ற, கவர்னரின் ஒப்புதலுக்கு காலதாமதமானதால், அந்த நடப்பு கல்வி ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று, அரசியலமைப்புச் சட்ட ஷரத்தில் உள்ள உரிமையை பயன்படுத்தி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டேன்.

    'சத்துணவு திட்டம் என்றால் புரட்சித் தலைவர்' 'தொட்டில் குழந்தை திட்டம் என்றால் புரட்சித் தலைவி அம்மா' '7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்றால் எனது தலைமையிலான அரசு' என்று எங்களது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    ஏற்கனவே நான் முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் அமல்படுத்தினோம். இந்தத் திட்டத்தையே உல்டாவாக்கி முதலமைச்சர், தான் புதிதாகக் கொண்டு வந்ததுபோல் தம்பட்டம் அடித்து வருகிறார்.

    வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக்கொண்டு செயல்படும் ஸ்டாலினின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது.

    'பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது' என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது. இனியாவது இதுபோன்ற பொய்யை கட்டமைப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?
    • ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறதா?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் , நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும் குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திமுக ஆட்சியில், அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ கூட இல்லாத அரசுப்பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம்.

    மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ?

    சுவர் தன் மீது விழுந்துவிடுமோ?

    தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ?

    போன்ற அச்சங்களுக்கு நடுவே தான் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருக்கிறது.

    இதற்கு நடுவே, கள்ளகுறிச்சி, ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழத்தேனூர் அரசுப்பள்ளியில் உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக வருகின்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது…

    இதற்கு கூட ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறதா?

    அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?

    மாணவர்களின் பாதுகாப்பை Compromise செய்து இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது குற்றம் என்பதை இந்த விடியா திமுக அரசு உணருமா?

    இந்த நிலைக்கு அரசுப்பள்ளிகளைத் தள்ளிவிட்ட திமுக அரசு, "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என ஆடம்பர மேடை அமைத்து, போலியான சுய விளம்பரம் செய்துகொள்வது வெட்கக்கேடானது.

    பள்ளிகளின் பராமரிப்பை, சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டிய தனது தலையாய பணியை தூக்கி எறிந்துவிட்டு, ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது என போட்டோஷூட் எடுப்பது மட்டுமே இருக்கும் ஒருவர், Group II போன்ற அதிமுக்கிய தேர்வுகளைக் கூட முறையாக நடத்த தெரியாதவர், தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு.

    விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன்.

    • மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரே வரும் 16-ந்தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடவும், மானாமதுரை அரசு மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக சரிசெய்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் வருகிற 16-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணியளவில், மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமையிலும்; சிவகங்கை மாவட்டக் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், முன்னிலையிலும் நடை பெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல் உற்பத்தியில் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்டியது தி.மு.க அரசு.
    • தி.மு.க அரசு அமைந்ததற்கு பிறகு நெல் கொள்முதல் எவ்வளவு?

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி, தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கிற பணிகளைச் செய்து கொண்டிருந்தாலும், இன்றைய தினம் முதலமைச்சருடைய கருணை உள்ள திட்டமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் தொடங்கி இருக்கிறார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த நலத்திட்டம் மூலம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்குப் பணியாற்றுகிற உறுப்பினர்கள், ஓட்டுநர்கள் பயன்பெறுவர்.

    இந்த மகிழ்வான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கு 'வயிற்றில் பால் வார்த்ததை போல' என்று சொல்லுவார்கள். பால் வார்க்கவில்லை, உணவையும் வழங்கி அந்த மக்களுடைய உழைப்பின் திறனை ஊக்குவிக்கிற முயற்சி எடுத்திருக்கிற முதலமைச்சருக்கு அனைத்து தரப்பு மக்கள் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியை, பாராட்டை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    நேற்று எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் நெற்பயிர்கள் காய்கிறது என்று கூறியது வடிகட்டிய பொய். வடிகட்டிய பொய் என்று சொல்லுவதை விட வடிகட்டியதிலும் வடிகட்டிய பொய் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். நெல் உற்பத்தியில் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்டியது தி.மு.க அரசு.

    வேண்டுமென்றால் அ.தி.மு.க ஆட்சியில் நெல் கொள்முதல் எவ்வளவு? தி.மு.க அரசு அமைந்ததற்கு பிறகு நெல் கொள்முதல் எவ்வளவு? அ.தி.மு.க ஆட்சியில் விளைவிக்கப்பட்ட நெல் அளவு எவ்வளவு? தி.மு.க அரசு அமைந்த பிறகு நெல் பயிரிடப்பட்ட அளவு எவ்வளவு? என்பதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் அபரிமித வளர்ச்சி அடைந்து தஞ்சை மாவட்டம் நெல் உற்பத்தியில் சாதனை படைத்திருக்கிறது என்பது தெரியும்.

    இந்தத் தருணத்தில் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பது வடிகட்டிய பொய். இதனை விவசாயிகளும், பொதுமக்களும் நம்ப மாட்டார்கள். பொய்யையே சொல்லிப் பழக்கப்பட்ட பழனிசாமி வேறு விதத்தில் பொய் சொல்லலாம். ஆனால் விவசாயிகளை ஏமாற்ற முடியாது என்றார். 

    • தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை பெற முடியவில்லை.
    • தமிழ்நாட்டிற்கு இன்னும் முழுநேர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை.

    திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வை முறையாக நடத்த முடியாத அவலம் தி.மு.க. ஆட்சியில் உள்ளது.

    * முதல்வர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை பெற முடியவில்லை.

    * தமிழ்நாட்டிற்கு இன்னும் முழுநேர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை.

    * தி.மு.க. - காங்கிரஸ் இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.

    * தமிழ்நாடு அரசின் அலட்சியத்தின் காரணமாக திட்டங்கள் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு உற்றதோழனாக இருந்து காப்பாற்றியது அ.தி.மு.க. அரசு.
    • கொரானா காலக்கட்டத்தில் நிதிநெருக்கடியிலும் விலைவாசி உயரவில்லை.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவையாறில் நடந்த கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்த விழா நமது குடும்பவிழா. இதில் கலந்து கொண்டு வாழ்த்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொருவருக்கும் பொன்னான நாள் என்றால் அது திருமண நாள் தான். அ.தி.மு.க. ஒரு வலிமையான இயக்கம். டெல்டா மாவட்டங்கள் விவசாயம் நிறைந்த மாவட்டம். தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அ.தி.மு.க. அரசு துணை நின்றது.

    இங்கு மீத்தேன், ஈத்தேன் திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வந்தது. அப்போது விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். ஆனால் இந்த திட்டங்களை எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தியதோடு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. அது மட்டுமின்றி குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

    ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு உற்றதோழனாக இருந்து காப்பாற்றியது அ.தி.மு.க. அரசு. விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள், விலையில்லா ஆடு, மாடுகள் கொடுத்து உதவினோம்.

    தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. அங்கு கருணாநிதி குடும்பத்தினர் தான் தலைமை பொறுப்புக்கு வருவார்கள். ஆனால் அ.தி.மு.க. தொண்டர்களுக்கான கட்சி. இங்கு கடைகோடி தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வர முடியும். எத்தனையோ சோதனைகளை எல்லாம் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சாதனைகளாக மாற்றினார்கள்.

    கொரானா காலக்கட்டத்தில் நிதிநெருக்கடியிலும் விலைவாசி உயரவில்லை. அப்போது தமிழக அரசுக்கு வரிவருவாய் கிடையாது. இருப்பினும் சிறப்பான நிர்வாக திறமையால் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் கடந்த 4½ ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இது தான் தி.மு.க. அரசின் சாதனை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சனிபகவானை கும்பிட்டு தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்கும்.
    • தமிழகத்தை அ.தி.மு.க. ஆள வேண்டும் என்பது மக்கள் எண்ணமாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம கூறியதாவது:-

    மார்ச் 6-ந் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் தேர்தல் பணிகள் இருப்பதினால் முன்னதாகவே சனிபகவானை தரிசிக்க வந்தேன்.

    சனிபகவானை கும்பிட்டு தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்கும்.

    தமிழகத்தை அ.தி.மு.க. ஆள வேண்டும் என்பது மக்கள் எண்ணமாக உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தான் என மக்கள் பேச தொடங்கி விட்டனர். புதுவையிலும் இந்த பேச்சு தொடங்கி விட்டது. அற்புதமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் செல்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியமைக்கும். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு குற்ற சம்பவங்கள் அதிகரித்து தான் உள்ளது.
    • சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    மதுரை:

    மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் தென்மண்டல மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக உள்ளார்கள். தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் போது தி.மு.க. அரசு புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவது தொடர் கதையாகி வருகிறது. புதிய அறிவிப்புகளை வெளியிடுவது மக்களை முகம் சுழிக்கும் அளவில் தான் உள்ளது.

    தமிழக மக்கள் மீண்டும் தி.மு.க.விடம் ஏமாற மாட்டார்கள் என்று நினைக்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு குற்ற சம்பவங்கள் அதிகரித்து தான் உள்ளது. விஜயின் த.வெ.க.வுக்கு கட்சிக்கு ஒவ்வொரு வரும் ஒவ்வொரு சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என சொல்லி வருகிறார்கள். யாரும் 10 சதவீதம் குறைவாக சொல்லவில்லை.

    சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணியில் தலைமை வகிக்கும் கட்சி தான் எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். தேசிய அளவில் மோடி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜக, த.மா.க உள்ளிட்ட கட்சிகள் உள்ளது அவ்வளவு தான் வித்தியாசம் என்றார்.

    • நகரில் உள்ள 66 பூத்துகளில் கூடுதலாக 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும்.
    • ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 1500 பேர் அந்த கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தலைமையில் இணைந்தனர்.

    விழாவில் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. சுயமரியாதை உள்ள இயக்கம். இந்த இயக்கத்தில் உழைப்பவர்களுக்கு மதிப்பு உண்டு. அதனால் மாற்றுக்கட்சிகளில் இருந்தவர்கள் இன்று அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளீர்கள். இந்த கட்சியில் வாரிசு அரசியல் கிடையாது. நீங்கள் எல்லாம் இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளதால் கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வின் வாக்கு மேலும் உயரும்.

    நகரில் உள்ள 66 பூத்துகளில் கூடுதலாக 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

    அதன்படி குலவிளக்கு திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், டவுன் பஸ்களில் ஆண்களுக்கும் கட்டணமில்லாத பயணம் திட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம்.

    ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மகளிருக்கு ஸ்கூட்டி வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் என 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்க நடவடிக்கை, இல்லத்தரசிகளுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை, மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இவ்வாறு தேர்தல் வாக்குறுதிகளாக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பேசினார். 

    • விடுதி மற்றும் டைனிங் ஹால் முதல்கட்டமாக ஒப்படைக்கப்படும்.
    • அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் எடப்பாடி பழனிசாமியும், பிரதமரும் இணைந்து திறந்துவைப்பர்.

    திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வும், மதுரை மாவட்ட அதிமுக மூத்த தலைவருமான வி.வி.ராஜன் செல்லப்பா இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

    "கட்டிட பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 2500 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வளவு விரைவாகவும், வேகமாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகள் மார்ச் இறுதியில் முடிவடையும். விடுதி மற்றும் டைனிங் ஹால் முதல்கட்டமாக ஒப்படைக்கப்படும். விமர்சிப்பவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெறுகிறது.



    மதுரைக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இந்த எய்ம்ஸ். 2028க்குள் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வாய்ப்பு உள்ளது. நிதிக்கு முதலில் தாமதம் ஆனது. முழுமையாகத் தயாராக உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமரும், அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து திறந்துவைப்பர். " என தெரிவித்தார். 

    மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கியது. 

    பிப்ரவரி 28, அன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தந்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளைத் திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் முதற்கட்ட பணிகள் மார்ச் இறுதியில் முடிவடையும் என ராஜன் செல்லப்பா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


    ×