என் மலர்
சென்னை
- வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.
- அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி உள்பட சிலருக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணைக்கு பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பா.ஜ.க.வின் இந்த பாசிச செயல்திட்டத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.
- வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வி.சி.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியா முழுவதும் சுமார் 1.20 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் வக்பு வாரியங்களில் உள்ளன. அந்தச் சொத்துகள் இஸ்லாமிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இஸ்லாமியர்கள் அல்லாவின் பெயரால் தானமாக வழங்கிய சொத்துகள் ஆகும். அவற்றை நிர்வகிப்பதற்கு 'வக்பு கவுன்சில்' , 'வக்பு வாரியம்' ஆகிய அமைப்புகள் உள்ளன.
இதுவரை இருந்த சட்டத்தின்படி அந்த அமைப்புகளை இஸ்லாமியர்களே நிர்வகித்து வந்தனர். தற்போது அந்த நிர்வாக அமைப்புகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களைப் பெரும்பான்மையான எண்ணிக்கையில் உறுப்பினர்களாக நியமித்து அதன் மூலம் வக்பு சொத்துகளை அபகரிப்ப தற்கு பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மதங்களின் சொத்துகளை அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்கள் தான் நிர்வகித்து வருகின்றனர். இந்துக் கோவில்களின் சொத்துகளை இந்துக்கள்தான் நிர்வகிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட இந்துக்களை மட்டுமே கொண்ட குழுக்கள் தான் நிர்வகிக்கின்றன.
சீக்கியர்களின் குருத்துவாராக்களை சீக்கியர்களைக் கொண்ட குழு நிர்வாகிக்கிறது. தேவாலயங்களைக் கிறித்தவர்களே நிர்வாகம் செய்கின்றனர். அப்படி இருக்கும்போது முஸ்லிம்களின் சொத்துகளை மட்டும் முஸ்லிம் அல்லாத மற்றவர்களையும் கொண்டு நிர்வாகம் செய்ய இந்த அரசு முயற்சிப்பது ஏன்? அவர்களிடம் இருக்கும் சொத்துக்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு அவர்களைப் பொருளாதார தற்சார்பு அற்றவர்களாக ஆக்கி அடிமைப்படுத்தி இரண்டாம்தர குடிமக்களாக்க வேண்டும் என்பதே பாஜகவின் உள்நோக்கம் ஆகும். பா.ஜ.க.வின் இந்த பாசிச செயல்திட்டத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.
இந்நிலையில் வெகு மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஏப்ரல் 8-ந்தேதி அன்று மாவட்டந் தோறும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளோடு அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டுமாறு அழைக்கிறோம்.
அத்துடன், வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வி.சி.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வருகிற 6-ந்தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
- ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய பா.ஜ.க. அரசு பிரதமர் மோடி தலைமையில் அமைந்து கடந்த 11 ஆண்டுகளாக இந்துத்துவா கொள்கையை பரப்புகிற நோக்கத்தில், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்துமே தென் மாநிலங்களில் குறிப்பாக, தமிழகத்தின் நலன்களுக்கு விரோதமாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டுகால தமிழக விரோத போக்கை கண்டிக்கிற வகையில், தமிழகம் வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக வருகிற 6-ந்தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், எனது தலைமையில் காலை 9.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடிக்கு எதிராக எழுப்பப்படுகின்ற கண்டனக் குரல், தலைநகர் டெல்லியில் எதிரொலிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வருகிற 10-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கனமழை பெய்யும் மழை 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மதிய வேளைகளில் 36 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வருகிற 10-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்.
- விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை.
- நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கிறது. மழையில் நனைந்ததால் நெல் மூட்டைகளின் விலை வீழ்ச்சியடையும் என்றும், அதைப் பாதுகாக்க குடோன்கள் இல்லாததால் வெட்டவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்ததால் மழையில் நனைந்து சேதமடைந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இதைப்போல் கோடைக்காலத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் இந்த நேரத்தில் கலப்பட சாயம் கலந்தாக ஒரு சர்ச்சையை எழுப்பி அதை மக்களும் நம்பி தர்பூசணி பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தையும், வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபோல ஒரு சர்ச்சையை எழுப்பி மக்களையும் குழப்பி ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிப்படையச் செய்வது ஏற்புடையது அல்ல.
விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளுக்குத் துணை நிற்போம் அவர்களை காப்போம். மேலும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் நேசக்கரம் நீட்டும் நிலையில் கேரளா மட்டும் வன்மத்துடன் செயல்படுவது ஏன்?
- தமிழர்களை இழிவுபடுத்தினால் எந்த எல்லைக்கும் செல்வேன்.
எம்புரான் படத்தில் இடம் பெற்ற முல்லைப் பெரியாறு வசனம் தொடர்பாக காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து சட்டசபையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முல்லைப் பெரியாறு குறித்த காட்சி நீக்கப்பட்டு விட்டதாக முதலமைச்சர் கூறி உள்ளார்.
* தமிழகம் நேசக்கரம் நீட்டும் நிலையில் கேரளா மட்டும் வன்மத்துடன் செயல்படுவது ஏன்?
* எங்கள் கட்சியினர் தற்போது படம் பார்க்க சென்றுள்ளனர்.
* முல்லைப் பெரியாறு குறித்த காட்சி நீக்கப்படாவிட்டால் திரையரங்குகள் முற்றுகையிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழர்களை இழிவுபடுத்தினால் எந்த எல்லைக்கும் செல்வேன். ஏற்கனவே வெடிகுண்டு வீசியதாக கைதானதை சுட்டிக்காட்டி மலையாள திரையுலகினருக்கு வேல்முருகன் எச்சரிக்கை விடுத்தார்.
- மேகதாது அணைக்கு அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடகம் வலியுறுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
- மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் ஆகியோர் தில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் கர்நாடகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதைத் தடுப்பதில் தமிழகம் அலட்சியம் காட்டுவது சரியல்ல.
மேகதாது அணைக்கு அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடகம் வலியுறுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கடந்த மாதம் 7-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகத் தான் மத்திய அமைச்சரை கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சந்தித்திருப்பதைப் பார்க்க வேண்டும்.
70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகைபாலைவனமாகிவிடும். அதைத் தடுக்க வேண்டியது அவசர, அவசியத் தேவையாகும்.
மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம் காட்டுவதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போதெல்லாம், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்தக் கொம்பனாலும் மேகதாது அணையைக் கட்ட முடியாது என்று கூறி கடந்து சென்று விடுகிறது. அதுமட்டுமின்றி, கர்நாடக ஆட்சியாளர்களிடம் ஒட்டி உறவாடுகிறது. இவற்றைப் பார்க்கும் போது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் அதன் உரிமையை இழந்து விடுமோ? என்ற ஐயம் தான் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடியாது என்று உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தீர்ப்பளித்திருப்பது உண்மை தான். ஆனால், அந்தத் தீர்ப்பை மீறித்தான் 2018-ஆம் ஆண்டில் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதை வைத்துக் கொண்டு தான் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, அதனடிப்படையில் அனுமதி கோரி வருகிறது. வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய அரசு, அணை கட்டவும் அனுமதி அளிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அலட்சியமாக இருந்ததன் காரணமாகத் தான் கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல், இப்போதும் மேகதாது அணை கட்டப்படுவதற்கு தமிழக அரசின் அலட்சியம் காரணமாக இருந்து விடக் கூடாது.
மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதி செல்லுபடியாகும் வரை மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும். அதை ரத்து செய்வது தான் மேகதாது அணையை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழியாகும். எனவே, அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்யும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
- முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் என காட்சி.
- நான் அந்த படத்தை பார்க்கவில்லை என அவை முனைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
எம்புரான் படத்தில் இடம்பெற்ற முல்லைப் பெரியாறு வசனம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர், எம்புரான் பட காட்சிகளை சென்சாரில் கட் செய்யவில்லை. படம் வெளியாகி எதிர்ப்பு கிளம்பிய பிறகு தான் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது" என்றார்.
எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் என காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்தார்.
அதற்கு, நான் அந்த படத்தை பார்க்கவில்லை என அவை முனைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேலும் அவர்," அந்த படத்தை பார்த்தவர்கள் கூறியதை கேட்டதும் பயமும், கோபமும் வருகிறது. தேவையற்ற செயல் அது. அந்த திரைப்படத்தால் வேறு மாநிலங்களில் கூட பிரச்சனை வரலாம்" என்றார்.
- பிரதமர் மோடி 6-ந்தேதி பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.
- அ.தி.மு.க. இடையேயான கூட்டணியை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன்-ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட ரெயில்வே பாலம் பழுதானதையடுத்து ரூ.550 கோடியில் பாம்பன் புதிய ரெயில் பாலம் மற்றும் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதமர் மோடி வருகிற 6-ந்தேதி திறந்து வைக்கிறார். முன்னதாக இன்று 3 நாள் பயணமாக இலங்கை செல்லும் அவர் எரிசக்தி துறை உள்ளிட்ட இருநாடுகளுக்கு இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் செய்வதுடன், தொழில், வர்த்தகம், மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.
இதையடுத்து நாளை மறுநாள் (6-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் இலங்கையில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு நேரடியாக வருகிறார். இதற்காக அங்கு ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டு அதில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகையும் பார்க்கப்பட்டுள்ளது.
பின்னர் பாம்பன் சாலை பாலத்தில் இருந்தவாறு புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு அங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
ராமேஸ்வரம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் அங்கிருந்து புறப்படும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்து பின்னர் டெல்லி செல்கிறார்.
மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித் தனியே சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவைச் சந்தித்தார். அப்போது அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்மு கம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதைதொடர்ந்து அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமர் மோடியைச் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரதமர் மோடியிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாநில அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்களும் சந்தித்துப் பேச பிரதமர் அலுவலகம் சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு பா.ஜ.க., அ.தி.மு.க. இடையேயான கூட்டணியை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழக காவல் துறை ஏவல் துறையாகவே செயல்பட்டு வருகிறது.
- நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் சட்டம்-ஒழுங்கு குறித்து பேச அ.தி.மு.க.வினர் அனுமதி கேட்டனர். ஆனால் சட்டம்-ஒழுங்கு குறித்து பேச அனுமதி அளிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்கள் பிரச்சனை பற்றி பேரவையில் பேசுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் அனுமதி கேட்டு போராட வேண்டுமா என அ.தி.மு.க.வினர் முழக்கமிட்டனர்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஊடகவியலாளரான சவுக்கு சங்கர் வீட்டில் அசிங்கத்தை கொட்டி தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கீழ்தரமான செயலாகும். இந்த விவகாரம் தொடர்பாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் சபையில் விவாதிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அவை முன்னவர் இதெல்லாம் பெரிய பிரச்சனையா? என்று கேட்கிறார்.
மக்கள் பிரச்சனைகள் பற்றி சபையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது. செய்திகளை பதிவிடும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினரை கைது செய்து 15 நாள் காவலில் வைத்து விடுகிறார்கள். ஆனால் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை ஜாமினில் விட்டு விட்டனர். தமிழக காவல் துறை ஏவல் துறையாகவே செயல்பட்டு வருகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்தை போடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இப்படி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசுக்கு மக்கள் வருகிற தேர்தலில் மரண அடி கொடுப்பார்கள்.
நீட் தேர்வு பற்றி இனி மக்கள் கேள்வி கேட்பார்கள் என்கிற அச்சத்திலேயே தற்போது அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளனர். அதில் பங்கேற்பது பற்றி பின்னர் தெரிவிப்போம். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு விஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வந்த நிலையில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவது ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகரித்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
10 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இந்த மாதம் தொடர்ந்து வெப்பம் அதிகரிக்கும் என்று இருந்த நிலையில் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-
தென் தமிழகத்திலும், உள் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 20-ந்தேதி வரை கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும். மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் சூழல் ஏற்படுவதால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை அதிகம் இருக்காது. ஆனால் மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெப்ப அலை இருந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அதுபோல வெப்பத்தின் தாக்கம் இருக்காது. 44 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டு இருந்தது. இந்த மாதம் பரவலாக மழை பெய்யக்கூடும் என்பதால் வெயில் தாக்கம் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டம் ஒழுங்கு குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
- சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கின. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து, சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, நீட் தேர்வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய வரும் 9-ந்தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
இந்நிலையில், சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்
சட்டம ஒழுங்கு குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். ஆனால், சட்டம் ஒழுங்கு குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டதாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து கோஷங்களை எழுப்பு தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.






