என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இரட்டை வேடம் போடும் கட்சி தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
- தமிழக காவல் துறை ஏவல் துறையாகவே செயல்பட்டு வருகிறது.
- நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் சட்டம்-ஒழுங்கு குறித்து பேச அ.தி.மு.க.வினர் அனுமதி கேட்டனர். ஆனால் சட்டம்-ஒழுங்கு குறித்து பேச அனுமதி அளிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்கள் பிரச்சனை பற்றி பேரவையில் பேசுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் அனுமதி கேட்டு போராட வேண்டுமா என அ.தி.மு.க.வினர் முழக்கமிட்டனர்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஊடகவியலாளரான சவுக்கு சங்கர் வீட்டில் அசிங்கத்தை கொட்டி தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கீழ்தரமான செயலாகும். இந்த விவகாரம் தொடர்பாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் சபையில் விவாதிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அவை முன்னவர் இதெல்லாம் பெரிய பிரச்சனையா? என்று கேட்கிறார்.
மக்கள் பிரச்சனைகள் பற்றி சபையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது. செய்திகளை பதிவிடும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினரை கைது செய்து 15 நாள் காவலில் வைத்து விடுகிறார்கள். ஆனால் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை ஜாமினில் விட்டு விட்டனர். தமிழக காவல் துறை ஏவல் துறையாகவே செயல்பட்டு வருகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்தை போடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இப்படி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசுக்கு மக்கள் வருகிற தேர்தலில் மரண அடி கொடுப்பார்கள்.
நீட் தேர்வு பற்றி இனி மக்கள் கேள்வி கேட்பார்கள் என்கிற அச்சத்திலேயே தற்போது அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளனர். அதில் பங்கேற்பது பற்றி பின்னர் தெரிவிப்போம். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு விஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






