என் மலர்tooltip icon

    சென்னை

    • பாஜக தலைவர் பதவிக்கான இடத்தில் நான் இல்லை.
    • புதிய தலைவர் பதவிக்காக யாரையும் கை காட்டவில்லை- அண்ணாமலை

    2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக- அதிமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரு கட்சித் தலைவர்களின் சந்திப்பு அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.

    இதற்கிடையே தமிழக பாஜகவுக்கு புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. பாஜக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக கண்டிஷன் போட்டதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.

    இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார். இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. புதிய மாநிலத் தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. புதிய மாநிலத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். புதிய மாநிலத் தலைவர் தேர்வான பிறகு நிறைய பேசுவோம். தமிழ்நாட்டு அரசியலில் தொடர்வேன், டெல்லி செல்ல மாட்டேன். என்னுடைய அரசியல் பணி என்றைக்குமே தொடரும்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "பாஜக-வில் தேர்தல் நடைமுறை என்பது கிடையாது. மேலிடம் முடிவு செய்தவதை நாங்கள் பின்பற்றுவோம்" என்றார்.

    அடுத்த தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரம், தமிழிசை சவுந்தரராஜன், எல். முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர் பெயர் அடிபடுகிறது.

    • தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாது.
    • இது கூட்டாட்சி நியாயத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு உட்படுத்துவதாகும்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை நியாயமான முறையில் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.. தற்போது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்மாநிலங்களுக்கான பாராளுமன்ற தொகுதிகள் கணிசமாக குறையும் என்பது குற்றச்சாட்டு.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவியில் கூறியிருப்பதாவது:-

    தெற்கை (தென்இந்திய மாநிலங்கள்) அமைதியாக்குவதற்காக வடக்கு (வடமாநிலங்கள்) மக்கள் தொகை அதிகரிப்பை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முடியாது.

    தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாது. இது கூட்டாட்சி நியாயத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு உட்படுத்துவதாகும். நாங்கள் நியாயமான தொகுதி மறுவரையறையை கோருகிறோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனிநபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும் சமூகமும் பாதிப்பு.
    • ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒழுங்குப்படுத்துவது அரசின் பொறுப்பும் கூட.

    ஆன்லைன் விளையாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருமாறு:-

    * ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனிநபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும் சமூகமும் பாதிப்பு.

    * ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒழுங்குப்படுத்துவது அரசின் பொறுப்பும் கூட.

    * விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

    * கேண்டி கிரஷ் உள்ளிட்ட விளையாட்டுகளோடு ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு.

    இவ்வாறு தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    • கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது.
    • 8 முதல் 11 பேர் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவார்கள்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் பொது இடங்களுக்கு செல்லும்போது, அதிகப்படியான பொதுமக்கள் கூடுவதால் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தனர்.

    இந்த நிலையில் இன்று முதல் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. Y பிரிவின் பாதுகாப்பின்படி விஜய்க்கு 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை காமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர்.

    • மக்களவை தேர்தலின்போது தயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக வழக்கு.
    • ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் தற்போது நீட்டித்துள்ளது.

    மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது தயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு போடப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

    • ஸ்ரீமுஷ்ணத்தில் குற்றவியல் மற்றும் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
    • திருச்சியில் கூடுதலாக குடும்ப நீதிமன்றம் அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் ரகுபதி, ஸ்ரீபெரும்புதூரில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

    ஸ்ரீமுஷ்ணத்தில் குற்றவியல் மற்றும் சார்பு நீதிமன்றம், திருச்சியில் கூடுதலாக குடும்ப நீதிமன்றம் அமைக்கப்படும். சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

    மேலும் காஞ்சிபுரம், நாமக்கல், திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார். 

    • 103 கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்களும் ஆணையர் அலுவலகத்தில் ஒரு விற்பனை நிலையமும் தொடங்கப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
    • அரிய பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு இதுவரை 2 கட்டங்களாக 216 பக்தி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப்பிரிவு தொடங்கப்பட்டு, பரவசமூட்டும் பக்தி இலக்கியங்கள், தலபுராணங்கள், அருட்பணி செய்த அருளாளர்களின் வரலாறுகள், கோவில் கலை நூல்கள், சிலை நூல்கள், காவிய நூல்கள், ஓவிய நூல்கள், தொன்மை வாய்ந்த பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், இறையடியார்களின் பொன்மொழிகள், மெய்யைப் போதித்து, மெய்யைக் காக்கும் சித்தர் நூல்கள் என அரிய பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு இதுவரை 2 கட்டங்களாக 216 பக்தி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இவ்வாறு வெளியிடப்பட்ட பக்தி நூல்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 103 கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்களும் ஆணையர் அலுவலகத்தில் ஒரு விற்பனை நிலையமும் தொடங்கப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவின் 2-வது கூட்டத்தில், "இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக வெளியீடுகளை விற்பனை செய்வதற்கு 103 கோவில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், கூடுதலாக 100 கோவில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனை செயல்படுத்திடும் வகையில் 100 கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் ஹரிப்ரியா, ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • உடற்பயிற்சி அறிவியலின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் நோக்கமாக கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • பரமக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் பளு தூக்குதல் பயிற்சி மையத்தையும் திறந்து வைத்தார்.

    சென்னை:

    சென்னை நேரு விளையாட்டு அரங்கம் ஒலிம்பிக் அகாடமியில் ரூ. 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதில் விளையாட்டு செயல்திறன், உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம், உடலியல், உளவியல் மற்றும் விளையாட்டு மருத்துவம் போன்ற பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு செயல்திறனை மேம்படுத்துவதும், உடற்பயிற்சி அறிவியலின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் நோக்கமாக கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து காணொளி காட்சி வாயிலாக தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ. 5.95 கோடி மதிப்பில் நிர்வாக கட்டிடம், பயிற்றுநர் அறை, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறை, பார்வையாளர்களுக்கான இருக்கைகள், மரத்திலான தரைதளம், கையுந்துபந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, உபகரணங்களுக்கான இருப்பு அறை மற்றும் ஒளிரும் மின்விளக்கு வசதிகளுடன் புதிய பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் பளு தூக்குதல் பயிற்சி மையத்தையும் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், சரவணகுமார், முருகேசன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை தலைவர் அசோக் சிகாமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. அசோகன், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற் குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில் அளித்து கூறியதாவது:-

    சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை. புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.

    புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்திய அளவில் 64 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2-ம் இடத்தில் உள்ளது. கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலாப் பழம்-முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, பெரம்பலூர் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பாகவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூர் வெற்றிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், உடன்குடி பனங் கருப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ஆகியவற்றிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், செட்டிநாடு கைமுறுக்கு-சீடை, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டறை கருவாடு-பனங் கற்கண்டு ஆகியவற்றிற்க்கு எம்.எஸ்.எம்.இ. துறையின் மூலம் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    ஒரு பொருளுக்கு புவி சார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் .

    தீப்பெட்டி தொழிலை பொருத்தமட்டில் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் 566 நிறுவனங்களும் கோவில்பட்டியில், சுமார் 400 நிறுவனங்களும், தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

    தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த சுமார் 28 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்வதோடு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தீப்பெட்டி களின் தனித்துவத்தை உலகம் முழுவதும் அறிய செய்யவும், விற்பனையை அதிகரிக்கவும் எம்.எஸ். எம்.இ. துறையின் சார்பில் ஆல் இந்தியா சேம்பர் ஆப்-மேட்ச் பேக்டரி சிவகாசி, தமிழ்நாடு சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சிவகாசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ஆலோசனைகள் வழங்கப்பட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இதற்கான செலவினத்தில் 50 சதவிகிதத் தொகையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் மானியமாக வழங்கப்படும் என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் சங்க உறுப்பினர்கள் தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், சிவகாசி, சாத்தூர், கோவில்பெட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யபடும் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆவணங்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. எழுந்து இதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், வரலாற்று ஆவணத்தை அளித்தால் ஆய்வு செய்து, சிவகாசி தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

    • துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
    • இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

    சென்னை:

    சேலம் பெரியார் பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை அரசு நிதியில் தொடங்கியுள்ளதாகக் கூறி, துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

    இந்த புகார்களின் அடிப்படையில், துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    அந்த மனுவில், பண பரிவர்த்தனையோ, முறைகேடோ நடைபெறவில்லை என்று கூறியிருந்தனர்.

    இந்த மனுக்களை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

    • வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.
    • அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி உள்பட சிலருக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணைக்கு பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • பா.ஜ.க.வின் இந்த பாசிச செயல்திட்டத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.
    • வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வி.சி.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் சுமார் 1.20 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் வக்பு வாரியங்களில் உள்ளன. அந்தச் சொத்துகள் இஸ்லாமிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இஸ்லாமியர்கள் அல்லாவின் பெயரால் தானமாக வழங்கிய சொத்துகள் ஆகும். அவற்றை நிர்வகிப்பதற்கு 'வக்பு கவுன்சில்' , 'வக்பு வாரியம்' ஆகிய அமைப்புகள் உள்ளன.

    இதுவரை இருந்த சட்டத்தின்படி அந்த அமைப்புகளை இஸ்லாமியர்களே நிர்வகித்து வந்தனர். தற்போது அந்த நிர்வாக அமைப்புகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களைப் பெரும்பான்மையான எண்ணிக்கையில் உறுப்பினர்களாக நியமித்து அதன் மூலம் வக்பு சொத்துகளை அபகரிப்ப தற்கு பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்தியாவில் உள்ள மதங்களின் சொத்துகளை அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்கள் தான் நிர்வகித்து வருகின்றனர். இந்துக் கோவில்களின் சொத்துகளை இந்துக்கள்தான் நிர்வகிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட இந்துக்களை மட்டுமே கொண்ட குழுக்கள் தான் நிர்வகிக்கின்றன.

    சீக்கியர்களின் குருத்துவாராக்களை சீக்கியர்களைக் கொண்ட குழு நிர்வாகிக்கிறது. தேவாலயங்களைக் கிறித்தவர்களே நிர்வாகம் செய்கின்றனர். அப்படி இருக்கும்போது முஸ்லிம்களின் சொத்துகளை மட்டும் முஸ்லிம் அல்லாத மற்றவர்களையும் கொண்டு நிர்வாகம் செய்ய இந்த அரசு முயற்சிப்பது ஏன்? அவர்களிடம் இருக்கும் சொத்துக்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு அவர்களைப் பொருளாதார தற்சார்பு அற்றவர்களாக ஆக்கி அடிமைப்படுத்தி இரண்டாம்தர குடிமக்களாக்க வேண்டும் என்பதே பாஜகவின் உள்நோக்கம் ஆகும். பா.ஜ.க.வின் இந்த பாசிச செயல்திட்டத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.

    இந்நிலையில் வெகு மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஏப்ரல் 8-ந்தேதி அன்று மாவட்டந் தோறும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளோடு அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டுமாறு அழைக்கிறோம்.

    அத்துடன், வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வி.சி.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×