என் மலர்
சென்னை
- தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
- இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர்.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தமிழகத்தில் முன்எப்போதும் இல்லாத வகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் களம் காண உள்ளனர். இதில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கிட்டத்தட்ட கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளுடனும் போட்டியிட உள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அரசியலில் களம் கண்டு முதல் தேர்தலை எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் தற்போது வரை தனித்து போட்டியிடும் சூழலில் தான் உள்ளது. இருப்பினும் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் இவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில், சட்டசபையில் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். நாளைய தினம் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டத்தில் இடும்பாவனம் கார்த்தி அறிமுகப்படுத்தப்படுகிறார்.
- கோபாலகிருஷ்ணன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.
- கேரளாவில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான 'எம்புரான்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து சர்ச்சை வசனம் இடம் பெற்றதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை நினைவு கூரும் வகையிலும், இந்துக்கள் குறித்தும் இந்த திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
இந்த திரைப்படத்தை 4 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் கோகுலம் நிதி நிறுவன அதிபர் கோகுலம் கோபாலகிருஷ்ணனும் ஒரு தயாரிப்பாளர் ஆவார். இவருடைய கோகுலம் நிதி நிறுவனத்தின் கிளைகள் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது.
அதன்பேரில் அப்போது இந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத்துறைக்கு வருமான வரித்துறை சார்பில் தகவல் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.
கோபாலகிருஷ்ணன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இந்த புகாரின் அடிப்படையில் அவருடைய கொச்சி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் கோகுலம் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நீலாங்கரையில் உள்ள கோபாலகிருஷ்ணனின் இல்லமும் அமலாக்கத்துறை சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.
கேரளாவில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
இந்த நிலையில் கோகுலம் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
- தொற்று பரவல் அதிகரித்து, உடல் சோர்வை உண்டாக்கும்.
- பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.
சென்னை:
தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:-
தக்காளி காய்ச்சல், சுகாதாரமின்மையால் பரவுகிறது. எப்போதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள், ஒவ்வொரு முறை நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போதும், கை, கால், முகம் கழுவுவது அவசியம். தக்காளிக் காய்ச்சலை பொறுத்தவரையில் ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகி விடும். அதே நேரம் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை பெறுவது அவசியம்.
இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொற்று பரவல் அதிகரித்து, உடல் சோர்வை உண்டாக்கும். எனவே அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது!
- ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்!
2024-25 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது!
அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.
அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது.
ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- விண்ணப்பப் படிவங்களை cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்பிக்கலாம்
- ஆவண நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்களை இணையதளம் வாயிலாக சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 9.6.2025
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறயிருப்பதாவது:-
தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு எனும் வகையின் கீழ், அண்ணா பல்கலைக் கழகத்தின் பல்கலைக்கழக வளாகங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி பி.இ., பி.டெக், பி.பிளான் பட்டப்படிப்பிற்கான இணையதள விண்ணப்பப் படிவங்கள் 2025-26-ம் ஆண்டு வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்கள், கல்வி சம்பந்தப்பட்ட ஆவண நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்களை இணையதளம் வாயிலாக சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 9.6.2025.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொடர்ந்து ஏற்றத்திலேயே பயணித்து வந்த தங்கம் விலையில் நேற்று அதிரடி சரிவு இருந்ததை காண முடிந்தது.
- வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 2 வாரங்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கடந்த 28-ந்தேதி ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்தையும், 31-ந்தேதி ரூ.67 ஆயிரத்தையும், அதனைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி ரூ.68 ஆயிரத்தையும் கடந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் உயர்ந்து, ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 480 ஆக அதிகரித்து, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தங்கம் விலை தொட்டது.
இப்படியே விலை ஏறிச்சென்றால் எப்படி தங்கம் வாங்குவது? என ஏழை-எளிய, நடுத்தர மக்களின் மனக்குமுறலாக இருந்ததோடு, விலை உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது.
தொடர்ந்து ஏற்றத்திலேயே பயணித்து வந்த தங்கம் விலையில் நேற்று அதிரடி சரிவு இருந்ததை காண முடிந்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 2000 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
04-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,200
03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480
02-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080
01-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080
31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
04-04-2025- ஒரு கிராம் ரூ.103
03-04-2025- ஒரு கிராம் ரூ.112
02-04-2025- ஒரு கிராம் ரூ.114
01-04-2025- ஒரு கிராம் ரூ.114
31-03-2025- ஒரு கிராம் ரூ.113
- தர்பூசணி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
- சதீஷ்குமார் பேச்சால் தர்பூசணி விற்பனை அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து இருந்தனர்.
சென்னை:
சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் போஸ் சென்னை மண்டலத்தை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்பூசணியில் ரசாயனம் சேர்க்கப்படுவதாக சதீஷ்குமார் கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள், பாதிக்கப்பட்டுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
மேலும், சதீஷ்குமார் பேச்சால் தர்பூசணி விற்பனை அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து சதீஷ்குமார் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
- தற்போதுதான் மக்களுக்கு மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு, இயற்கை உணவுகள் மீதான ஆர்வமும் - அக்கறையும் அதிகரித்து வருகிறது.
சென்னை :
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தர்பூசணி குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதால், விற்பனை குறைந்து தர்பூசணி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
ஒரு சில விசமிகள் தர்பூசணியில் செயற்கை இரசாயனம் கலக்கின்றனர் என்ற புகாரில், ஒட்டுமொத்த தர்பூசணி விவசாயிகளும் பாதிக்கப்படும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
கோடைக்காலத்தில் மட்டுமே நடைபெறும் பெருமளவு விற்பனையை நம்பியே நுங்கு, இளநீர், பதநீர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட தாகம் தணிக்கும் இயற்கை பானங்களையும் - பழங்களையும் உள்நாட்டு ஏழை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.
நம் நாட்டில் உடலுக்கு கேடு விளைவிக்கும், விலை அதிகமான பன்னாட்டு பெருநிறுவனங்கள் தயாரிக்கும் செயற்கை குளிர்பானங்கள் குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறையில் பளப்பளப்பாகப் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டு விவசாயிகள் வெயிலிலும், மழையிலும் வெம்பாடுபட்டு விளைவிக்கும் இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி போன்றவை இன்றளவும் தெருவோரத்தில் கிடக்கிறது என்பதுதான் வேதனை நிறைந்த உண்மை.
தற்போதுதான் மக்களுக்கு மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு, இயற்கை உணவுகள் மீதான ஆர்வமும் - அக்கறையும் அதிகரித்து வருகிறது. உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது, நலம்தரும் சத்துகள் நிறைந்த இயற்கை பானங்களையும், பழங்களையும் அதிகளவில் விற்பனையாக ஊக்கப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமையாகும். ஆனால், அதற்கு நேர்மாறாக இயற்கையாக விளைவிக்கப்படும் பழங்களில் செயற்கை இரசாயனங்கள் கலக்கப்படுவதாக அரசு அதிகாரிகளே வதந்தியைப் பரப்பி, மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி, தர்பூசணி விளைவித்த விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியருப்பது சிறிதும் அறமற்ற கொடுஞ்செயலாகும்.
தவறு செய்பவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதை விடுத்து தமிழ்நாட்டு தர்பூசணி விவசாயிகள் அனைவரையும் அரசு தண்டித்திருப்பது எவ்வகையில் நியாயமாகும்?
அரசு அதிகாரிகளின் இத்தகைய அவதூறு பரப்புரைகளுக்குப் பின்னால் பன்னாட்டு செயற்கை குளிர்பான நிறுவனங்களின் திட்டமிட்ட சதி இருப்பதாக தமிழ்நாட்டு விவசாயிகள் சந்தேகிப்பது மிக மிக நியாயமானதாகும்.
ஆகவே, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் பொய்ப்பரப்புரையால் தர்பூசணி விற்பனை பெருமளவு குறைந்து பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
- இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது?
சென்னை:
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த பிறகுதான், தமிழக மீனவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் கடலுக்குள் சென்று மீனவர்கள் கரை திரும்பும் சூழல் உள்ளது.
அந்தவகையில் தற்போது கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டசபையில் தனித்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் சமீபத்தில் சூடுபிடித்தது. இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களும் காத்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதாவது, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி வரையிலான நிலவரப்படி, எவ்வளவு மீனவர்கள் பிடிபட்டார்கள்? அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் விவரங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, 2015-ம் ஆண்டில் இருந்து கடந்த மார்ச் 22-ந்தேதி வரையில் கடந்த 11 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 870 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் கடந்த ஆண்டில் (2024) மட்டும் 526 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளி விவரங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, இலங்கை கடல் பகுதிகளில் கடந்த 11 ஆண்டுகளில் 104 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
தமிழகம் மட்டுமல்லாது, பிற பகுதிகளில் இருந்து அதாவது, இந்திய மீனவர்களாக எல்லை தாண்டி கடந்த 11 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களில், 2 ஆயிரத்து 919 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதே ஆண்டுகளில் 346 மீன்பிடி படகுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன.
இதுபோக, 22.3.2025 வரையிலான நிலவரப்படி, 86 இந்திய மீனவர்கள் (தமிழக மீனவர்கள் உள்பட) இலங்கை சிறையில் இருக்கின்றனர். அதேபோல், 225 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- மார்ச் 24-ந் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.
- அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
சென்னை:
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து மார்ச் 24-ந் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ஏப்ரல் 30-ந் தேதி வரை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது, ஒரு நாள் முன்பாக அதாவது, ஏப்ரல் 29-ந் தேதியுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.
29-ந் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகிறார். துறை ரீதியான அறிவிப்புகளையும் அவர் வெளியிட இருக்கிறார்.
- நாளை மதியம் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
- அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஏப்ரல் 05, 2025 ஆம் தேதி) நடைபெற உள்ள "IPL 2025" கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் (both Digital & Physical) தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
எந்த மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரெயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் 23:27 மணிக்கு புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:59 மணிக்கும் மற்றும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:44 மணிக்கும் புறப்படும்.
புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.
- மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு. தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?
கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
*கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு,
*ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
*மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.
* மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.
*1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான்.
*1999ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.
*அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை.
*அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால். இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.
*இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன.
* குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு. எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?
*கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு. கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது.
*எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம். ஒன்றிய பா.ஐ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.
*கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு.
*நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய பிரதமர் மோடி கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும்.
*இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க, பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு.
*நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும், தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.
*போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த. இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
*இலங்கை செல்லும் நம் ஒன்றிய பிரதமர், 'கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்' என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம், தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.






