என் மலர்
சென்னை
- சுங்கத்துறை துணை கமிஷனர் அஜய் பிடாரி, உதவி கமிஷனர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை விமானநிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உள்பட உயரதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி சுங்க இலாகா முதன்மை கமிஷனராக பணியாற்றி வந்த ரமாவதி சீனிவாச நாயக், சென்னை வடக்கு சரக்கு மற்றும் சேவை வரித்துறை முதன்மை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று, கூடுதல் துணை கமிஷனர் பெரியண்ணன், சுங்க இலாகா துணை கமிஷனர்கள் சரவணன், பனீந்திர விஷ்சபியாகாதா, அஸ்வத் பாஜி, பாபுகுமார் ஜேக்கப், சுங்கத்துறை துணை கமிஷனர் அஜய் பிடாரி, உதவி கமிஷனர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சென்னை-1 கமிஷனராக பணியாற்றி வந்த தமிழ்வளவன் பதவி உயர்வு செய்யப்பட்டு, சென்னை விமானநிலையத்தின் புதிய சுங்க இலாகா முதன்மை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று டெல்லி, கொல்கத்தா, விஜயவாடா, செகந்திரபாத், வதோதரா. பாட்னா, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வந்த 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வமான உத்தரவை மத்திய அரசின் துணை செயலாளர் ஷீரேஷ் குமார் கவுதம் பிறப்பித்துள்ளார்.
- பொருத்தமற்ற பாடப் பகுதிகளை நீக்கி சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கான பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை 2017-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்கள்தான் தற்போது வரையில் நடைமுறையில் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் புத்தகங்களில் பாடப் பகுதிகள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் மாணவ- மாணவிகள் படிப்பதில் சிரமத்தை சந்திப்பதாகவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் கல்வித்துறை வசம் வந்து சேர்ந்தன. இதனையடுத்து அந்த பாடப் பகுதிகளை குறைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியது.
குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப் பகுதிகளை குறைக்கவும், பொருத்தமற்ற பாடப் பகுதிகளை நீக்கி சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் அடிப்படையில் அதற்கான வல்லுனர்கள், பாடநூல் உருவாக்க குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு 1, 2-ம் வகுப்பு பாடநூல்களில் உரிய திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3, 4 மற்றும் 5-ம் வகுப்பு பாடநூல்களில் அதிக பக்கங்கள் கொண்ட பாடப்பகுதிகளை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.அதேபோல், 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 9 இயல்களை 8 ஆகவும், 9, 10-ம் வகுப்பு பாடநூல்களில் 9 இயல்களை 7 ஆகவும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பாடநூல்களில் உள்ள 8 இயல்களை 6 ஆகவும் குறைத்து இருக்கின்றனர்.
அவ்வாறு சீரமைக்கப்பட்ட 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கான பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், 2025-26-ம் கல்வியாண்டு முதல் இந்த பாடப் புத்தகங்கள் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ஆட்சியின்போது மக்களுக்கு இலவசமாக வழங்கிய வண்ண தொலைக்காட்சி பெட்டி.
- பாமரமக்களின் அறியாமையை போக்குவதற்கான மந்திரக்கோல்.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ஆட்சியின்போது மக்களுக்கு இலவசமாக வழங்கிய வண்ண தொலைக்காட்சி பெட்டியை மக்கள் இன்னமும் தங்களின் வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
இலவசம் என்றார்கள்...
பொழுதுபோக்கு என்றார்கள்...
கலைஞருக்கு மட்டுமே தெரிந்தது அது,
பாமரமக்களின் அறியாமையை போக்குவதற்கான மந்திரக்கோல் என்று,
பெண்கள் வெளியுலகை எளிதில் எட்டி பார்ப்பதற்கு உதவும் ஜன்னல் என்று.
உலக செய்திகளை, உலகத்தின் வளர்ச்சியை, மனிதனின் படைப்புகளை தமிழர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஒளிக்கீற்று என்று.
தமிழினத்தை உலகம் போற்றும் மாபெரும் இனமாகவும் தமிழ்நாட்டை உலகே வியந்து பார்க்கும் வளர்ச்சியின் விளைநிலமாகவும் மாற்றக் கூடிய அற்புத விளக்கு என்று.
இலவசம் இல்லங்க அது.
மக்கள் நல திட்டம்.
பொழுதுபோக்கு இல்லைங்க அது,
பொது அறிவுப் பெட்டகம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.
- சென்னை அணியை தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கேப்டனாக களம் இறங்கினார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக களம் இறங்கினார். டேவன் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டியை தோனியின் பெற்றோர் கண்டுகளித்து வருகின்றனர். அவர்களுடன். தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் அவர்களது மகளும் போட்டியை கண்டு வருகின்றனர்.
சேப்பாக்கத்தில் தோனியின் பெற்றோர் முதல்முறையாக அவரது ஆட்டத்தை நேரில் காண வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் புதிய ஐடியா இல்லை. அது ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான்.
2029 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.
பின்னர் அவர் உரையாற்றியதாவது:-
பாராளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் நடக்கும் தேர்தல் முறையே ஒரே நாடு ஒரே தேர்தல்.
ஒரே நாடு ஒரே தேர்தல் புதிய ஐடியா இல்லை. அது ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான்.
அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கண்மூடித்தனமாக எதிர்க்காமல் இருப்பது நல்லது.
2029 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
- கடந்த 10 ஆண்டுகள் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது எட்ட முடியாத வளர்ச்சி.
தமிழ்நாட்டின் வளர்ச்சி 9.69 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. 9.69 சதவீதம் என்பது கடந்த 10 ஆண்டுகள் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது எட்ட முடியாத வளர்ச்சி" என்றார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69% என்ற குறிப்பிடத்தக்க உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது.
இது அனைத்து மாநிலங்களைவிட மிக உயர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளில் வலிமையானது .
மாநிலத்தின் பொருளாதாரம் நிலையான விலையில் ரூ. 14.53 லட்சம் கோடியாகவும், தற்போதைய விலையில் ரூ. 23.64 லட்சம் கோடியாகவும் விரிவடைந்துள்ளது - இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த அளவைக் குறிக்கிறது.
இந்த சிறந்த சாதனை, மக்கள் நலன், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக் கதையை முன்னெடுத்துச் சென்ற நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குத் தலைமைக்கு ஒரு சான்றாகும்.
அவரது வழிகாட்டுதலின் கீழ், சேவைகள் துறை 12.7% மற்றும் தொழில்துறை 9% வளர்ச்சியுடன், பல்வேறு துறைகளில் விதிவிலக்கான வேகத்தைக் கண்டுள்ளோம்.
தமிழ்நாடு வேகமாக வளரும் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நோக்கம், மீள்தன்மை மற்றும் கூட்டு முயற்சியுடன் வளரும் பொருளாதாரத்தையும் உருவாக்கி வருகிறது.
1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான எங்கள் லட்சிய இலக்கை நோக்கி நாங்கள் உறுதியாகப் பயணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
- எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஞானசேகரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்தாண்டு டிச. 25-ந்தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
தொடர் விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் ஏ.மோகன்தாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழ்நாடு போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கோ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ மாற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஞானசேகரன் மனுத்தாக்கல் செய்து இருந்தார். மனுவில், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.
அல்லிகுளம் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக ஞானசேகரன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஞானசேகரன் மனு மீது 7-ந்தேதி அரசு தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
- சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும்.
- மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.
சென்னை:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மணிகண்டன் 3-வது தெருவில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில், 17.30 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்ய உள்ளதாக அறநிலையத்துறை அறிவித்தது.
திருப்பணியில் ஒரு பகுதியாக கோவிலில் உள்ள 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், திருப்பணி என்ற பெயரில் கோவிலின் தல விருட்சமான 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.கே. ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெகநாதன், அரச மரத்தை அப்பகுதி மக்கள் புனிதமாக கருதுவதால், அதை அகற்றக்கூடாது என்று வாதிட்டார்.
இந்து அறநிலையத்துறை சார்பில், சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும். பசுமையான சூழலைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விழிப்புடன் உள்ளனர். மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
- தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் புதிய மாற்றங்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.
- வருகிற 11-ந்தேதி சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த மாத இறுதியில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இந்த 2 சந்திப்புகளும் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாக போவதாக பரபரப்பாக பேசப்பட்டது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டால் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் என்று ஏற்கனவே அண்ணாமலை கூறி இருந்தார். இதை அமித்ஷாவை சந்தித்த போது சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி விரைவில் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்றினால்தான் கூட்டணி பற்றி அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விலக செய்து விட்டு வேறு ஒருவரை நியமிப்பது தொடர்பாக டெல்லியில் அமித்ஷா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் அண்ணாமலை நேற்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, "தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை" என்று கூறினார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, "போட்டியில்லாத ஒரு போட்டியில் நான் போட்டியிடவில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார். இது தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலை பதவி தொடர்பாக கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்ணாமலை பதவியில் நீடிப்பதை மனதில் வைத்து சூசகமாக இப்படி பேசியிருக்கலாம் என்று தமிழக பா.ஜ.க.வினரிடம் தகவல் பரவி உள்ளது. தமிழக பா.ஜ.க. நிலவரம் பற்றி சமீபத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, சந்தோஷ் ஆகிய மூவரும் தீவிர ஆய்வு செய்தனர். அப்போது கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய செல்வாக்கை அண்ணாமலை ஏற்படுத்தி தருவார் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடனும் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விலக்கும் பட்சத்தில் அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று ஒருசாரார் வலியுறுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் புதிய மாற்றங்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வருகிற 11-ந்தேதி சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய மந்திரி கிஷண்ரெட்டி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வர உள்ளார்.
அந்த கூட்டத்தில் புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களிடம் புதிய மாநில தலைவராக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி கலந்துரையாடல் நடத்தப்படும்.
இதன் அடிப்படையில் 11-ந்தேதி அல்லது 12-ந் தேதி தமிழக பா.ஜ.க. தலைவர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
அண்ணாமலைக்கு பதில் வேறு ஒருவர்தான் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி உள்ளது.
- சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கனமழையின் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரம் மதிய வேளைகளில் 34 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும்.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இன்று முதல் 11-ந்தேதி வரை சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
- தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
- இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர்.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தமிழகத்தில் முன்எப்போதும் இல்லாத வகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் களம் காண உள்ளனர். இதில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கிட்டத்தட்ட கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளுடனும் போட்டியிட உள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அரசியலில் களம் கண்டு முதல் தேர்தலை எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் தற்போது வரை தனித்து போட்டியிடும் சூழலில் தான் உள்ளது. இருப்பினும் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் இவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில், சட்டசபையில் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். நாளைய தினம் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டத்தில் இடும்பாவனம் கார்த்தி அறிமுகப்படுத்தப்படுகிறார்.
- கோபாலகிருஷ்ணன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.
- கேரளாவில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான 'எம்புரான்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து சர்ச்சை வசனம் இடம் பெற்றதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை நினைவு கூரும் வகையிலும், இந்துக்கள் குறித்தும் இந்த திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
இந்த திரைப்படத்தை 4 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் கோகுலம் நிதி நிறுவன அதிபர் கோகுலம் கோபாலகிருஷ்ணனும் ஒரு தயாரிப்பாளர் ஆவார். இவருடைய கோகுலம் நிதி நிறுவனத்தின் கிளைகள் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது.
அதன்பேரில் அப்போது இந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத்துறைக்கு வருமான வரித்துறை சார்பில் தகவல் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.
கோபாலகிருஷ்ணன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இந்த புகாரின் அடிப்படையில் அவருடைய கொச்சி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் கோகுலம் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நீலாங்கரையில் உள்ள கோபாலகிருஷ்ணனின் இல்லமும் அமலாக்கத்துறை சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.
கேரளாவில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
இந்த நிலையில் கோகுலம் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.






