என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu Religious Endowments Department"

    • சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும்.
    • மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.

    சென்னை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மணிகண்டன் 3-வது தெருவில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில், 17.30 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்ய உள்ளதாக அறநிலையத்துறை அறிவித்தது.

    திருப்பணியில் ஒரு பகுதியாக கோவிலில் உள்ள 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், திருப்பணி என்ற பெயரில் கோவிலின் தல விருட்சமான 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.கே. ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெகநாதன், அரச மரத்தை அப்பகுதி மக்கள் புனிதமாக கருதுவதால், அதை அகற்றக்கூடாது என்று வாதிட்டார்.

    இந்து அறநிலையத்துறை சார்பில், சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும். பசுமையான சூழலைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விழிப்புடன் உள்ளனர். மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

    • நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் கயவர்களால் களவாடப்பட்டுள்ளது.
    • தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை.

    மருதமலை கோவிலில் வெள்ளிவேல் திருட்டு நடக்கவில்லை என்றும் அடிவாரத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபத்தில் திருட்டு நடந்துள்ளது என்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவை மாவட்டம், மருதமலை. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஐள குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருட்டு என்று சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவருகின்றன.

    கோவை மாவட்டம், பேரூர் வட்டம் மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் கயவர்களால் களவாடப்பட்டுள்ளது.

    இது தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபம் ஆகும். இதன் நிர்வாகியாக குருநாதசாமி என்பவர் இருந்து வருகிறார்.

    இந்த தியான மண்டபத்தில் வெள்ளி வேல் மட்டுமே இருந்து தியானம் செய்யப்பட்டு வந்துள்ளது.

    மேற்கண்ட தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை.

    மேலும், இந்த சம்பவம் மருதமலை திருக்கோயிலில் நடைபெறவில்லை என கோவை மண்டல இணை ஆணையர் பி.ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • கோவில் நிர்வாகங்களுக்கு 39 அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
    • உணவு அல்லது பணத்திற்காக பிச்சை எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.

    கோவில் யானைகளை பாராமரிப்பது தொடர்பாக, கோவில் நிர்வாகங்களுக்கு 39 அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

    யானைகளை உறுதியான மண் அல்லது புல் தரையில் நிறுத்தி வைக்கவும், காற்றோட்டத்துடன் கான்கிரீட் கொட்டகை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், யானையின் எடை, வயதுக்கு ஏற்ப உணவுகளை உள்ளூர் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்க வேண்டும்.

    யானையின் கால், நகக்கண், தந்தங்களில் தோக்கா மல்லி எண்ணெய் விட்டு பராமரிக்க வேண்டும்.

    யானைக்கு வெப்பம் அதிகரிக்கும்போது, சங்கிலியால் கட்டி தேவையான உணவு, தண்ணீர் அருகில் வைக்க வேண்டும். மது அருந்தியவர்களை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

    கோயில் யானைகள் அருகே பக்தர்களை அனுமதிக்கக் கூடாது. அருகே நின்று, செல்பி, புகைப்படம் எடுக்கவும் விடக் கூடாது.

    உணவு அல்லது பணத்திற்காக பிச்சை எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.

    வாரத்திற்கு நான்கு முறையும், கோவை காலத்தில் தினமும் யானையை கட்டாயம் குளிப்பாட்ட வேண்டும்.

    யானைக்கு தினமும் 10 கி.மீ தூரத்திற்கு நடைபயிற்சி அளிக்க வேண்டும் என அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

    சென்னை கபாலீசுவரர் கோவிலில் மரகத மயில் சிலை கையாடல் செய்யப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் கைது செய்யப்பட்டார். #KapaleeshwararTemple
    சென்னை:

    தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு பழமையான சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டு நியமித்துள்ளது. அவர் ஓய்வுபெற்ற நிலையில் மேலும் 1 ஆண்டுக்கு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டும் மறுத்துவிட்டது. இந்தநிலையில் ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள பொன் மாணிக்கவேல் மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார்.

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர் தங்க சிலையை போலியாக செய்த வழக்கில் இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

    இந்தநிலையில், மற்றொரு பெண் அதிகாரியான இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகளும் (வயது 53) நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை கபாலீசுவரர் கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரகத மயில் சிலை மற்றும் ராகு, கேது சிலைகள் கையாடல் செய்யப்பட்டதாக திருமகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு கபாலீசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கபாலீசுவரர் கோவில் வளாகத்தில் புன்னைவனநாதர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மிகவும் அரிதான மரகதத்தால் செய்யப்பட்ட மயில் சிலை ஒன்று இருந்தது.

    பார்வதிதேவி மயில் வடிவில் வந்து ஈஸ்வரனுக்கு மலர்களால் பூஜை செய்த காட்சியை நினைவுபடுத்தும் வகையில் அந்த மரகத மயில் சிலை அமைக்கப்பட்டிருந்தது. மயில் சிலையின் வாயில் மலர்கள் இருப்பது போன்று அந்த பழமையான சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

    அந்த சிலை சேதமடைந்துவிட்டதாக கூறி, கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, புதிதாக செய்யப்பட்ட மயில் சிலை அங்கு வைக்கப்பட்டது. பழமையான மரகத மயில் சிலை அகற்றப்பட்டது. அந்த சிலையோடு சேர்த்து ராகு, கேது சிலைகளும் சேதமடைந்ததாக கூறி அகற்றப்பட்டன. ராகு, கேது சிலைகளும் புதிதாக வைக்கப்பட்டன.

    பழமையான மரகத மயில் சிலையின் வாயில் மலர்கள் இருப்பதுபோன்ற தோற்றம் காணப்பட்டது. ஆனால் புதிதாக வைக்கப்பட்ட மயில் சிலை வாயில் மலர்களுக்கு பதில் பாம்பு இருப்பது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டது.

    இவ்வாறு புதிய சிலைகள் வைக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பேரில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சென்னை கபாலீசுவரர் கோவிலுக்கு 2 முறை சென்று விசாரணை நடத்தினார்.

    2004-ம் ஆண்டு கபாலீசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, தற்போதைய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் நிர்வாக அதிகாரியாக இருந்தார். திருமகளிடமும் விசாரணை நடைபெற்றது.

    ராகு, கேது சிலைகளை மாற்றுவதற்கு சிபாரிசு செய்த முத்தையா ஸ்தபதியிடமும் விசாரணை நடந்தது. 2004-ம் ஆண்டு அப்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக இருந்த தனபாலிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    விசாரணைக்கு பிறகு திருமகள், முத்தையா ஸ்தபதி, தனபால் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது திருமகள் பல்வேறு தவறான தகவல்களை போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

    புன்னைவனநாதருக்கு திருப்பணியே நடைபெறவில்லை என்று திருமகள் கூறியதாக தெரிகிறது. மேலும் புன்னைவனநாதர் சன்னதியையே நான் பார்க்கவில்லை என்றும், சிலை மாற்றப்பட்டதற்கும், தனக்கும் தொடர்பு இல்லையென்றும் போலீஸ் விசாரணையில் திருமகள் கூறினாராம்.

    ஆனால் புன்னைவனநாதர் சன்னதியிலும் திருப்பணிகள் நடந்ததற்கான வீடியோ ஆதாரத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வீடியோ காட்சியில் புன்னைவனநாதருக்கு நடந்த திருப்பணியில் அதிகாரி திருமகள் கலந்துகொண்டது கண்டறியப்பட்டது.

    மேலும் திருப்பணிகள் நடந்தது தொடர்பான ஆவணங்களை கேட்டபோது அவற்றை அழித்துவிட்டதாகவும் திருமகள் பதில் அளித்தார். மாற்றப்பட்ட பழமையான மரகத மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் எங்கே போனது? என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அந்த சிலைகளை பூமிக்குள் புதைத்துவிட்டதாக கோவில் அர்ச்சகர்கள் சிலர் கூறினார்கள். ஆனால் அதிலும் உண்மை இல்லை என்று சந்தேகம் உள்ளது.

    மாற்றப்பட்ட மரகத மயில் சிலைகள் உள்ளிட்ட 3 சிலைகளும் வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. அதுபற்றி விரிவான விசாரணை நடக்கிறது.

    இந்தநிலையில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் உண்மைகளை மூடி மறைத்த குற்றத்திற்காகவும் அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகளை நேற்று அதிகாலையில் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட திருமகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதி, தனபால் ஆகியோர் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர்.

    மயில் சிலையை மாற்ற சிபாரிசு செய்த கேரள ஜோதிடர் ஒருவரையும் இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். #KapaleeshwararTemple

    ×