என் மலர்
சென்னை
- 'தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது' என்று இருக்கிறார் இ.பி.எஸ்.
- நீட் விலக்கிற்குப் பிறகுதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம் என்று முதுகெலும்போடு அறிவிப்பாரா?
நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,
'தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது' என்று கூட்டணிக்காக ஏங்கி நிற்கும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், "#NEET விலக்கிற்குப் பிறகுதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம்" என முதுகெலும்போடு அறிவிப்பாரா? என்று கேட்டிருக்கிறேன்.
விரைவில் விடை கிடைக்கும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகிய இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகிய இந்திய மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்கும் எம்.ஏ.பேபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிபிஐ(எம்) பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள தோழர் எம்.ஏ. பேபிக்கு வாழ்த்துக்கள்.
மாணவர் தலைவராக அவசரநிலையை சவால் செய்வதில் இருந்து, முற்போக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கேரளாவின் கல்விக் கொள்கையை வடிவமைப்பது வரை, அவரது பயணம் நோக்கத்தையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது.
மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் போன்றவற்றில் வலுவான உறவுகளை திமுக எதிர்நோக்குகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சந்தித்தால் சந்திதேன் என்று சொல்லப்போகிறேன். எனக்கு என்ன பயமா? என்ன தயக்கமா?
- நான் தனித்து போட்டியிட போகிறேன் என்று தெரியும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* சந்தித்தால் சந்திதேன் என்று சொல்லப்போகிறேன். எனக்கு என்ன பயமா? என்ன தயக்கமா?
* நீங்களா சந்தித்தாரா? சந்தித்து இருப்பாரா? என்று சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி?
* ரஜினி என்ன பா.ஜ.க.வா? நான் அவரை அன்பின் நிமித்தமாக, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று சொல்லி விட்டேன்.
* ஒவ்வொன்றையும் நீங்களாக கற்பனை செய்து கொள்கிறீர்கள்.
* நேற்று நீங்கள் தான் சொன்னீர்கள். வேதாரண்யத்தில் வேட்பாளரை அறிவித்ததாக சொன்னீர்கள்.
* நான் தனித்து போட்டியிட போகிறேன் என்று தெரியும். கூட்டணி வைப்பவன் நான் ஏன் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டால்தான் வேளாண்மை லாபம் தரும் தொழிலாக மாறும்.
- ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2024-25-ம் ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 9.69 சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில், அதைவிட அதிகமாக சேவைத்துறை 12.7 சதவீதம், உற்பத்தித்துறை 9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன.
ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக திகழக் கூடிய முதன்மைத் துறையான வேளாண் துறையோ, சேவைத்துறையின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்கை மட்டுமே எட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பொருளாதார உற்பத்திக்கு, வெறும் 14 சதவீதத்திரை மட்டுமே கொண்ட சேவைத்துறை 53 சதவீத பங்களித்துள்ளது. 26 சதவீதத்தினரைக் கொண்ட உற்பத்தித்துறை 37 சதவீதம் பங்களித்துள்ளது.
ஆனால், 60 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக திகழும் வேளாண்துறை வெறும் 10 சதவீதம் மட்டுமே பங்களித்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்குமே தவிர குறைக்காது.
2024-25-ம் ஆண்டில் நிலையான விலைமதிப்பின் படி தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.17,23,698 கோடி என்றால், அதில் வேளாண்துறையின் பங்களிப்பு ரூ.1,72,369.8 கோடி மட்டும் தான்.
அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் வேளாண்மையை நம்பியுள்ள நான்கரை கோடி மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.38,304 மட்டும் தான்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2,29,826 ஆகும். இரண்டுக்கும் இடையிலான இடைவெளி மலைக்கும், மடுவுக்குமானது ஆகும்.
வேளாண்துறை முன்னேற வேண்டுமெனில், ஆண்டுக்கு சராரியாக 4 சதவீத வளர்ச்சி எட்டப்படவேண்டும். ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டால்தான் வேளாண்மை லாபம் தரும் தொழிலாக மாறும். அதை இலக்கு வைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
வேளாண்துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதற்காக அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தல், குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைத்தல் போன்றவற்றுக்காக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படவேண்டும். அதன் மூலம் வேளாண்துறை வளர்ச்சியையும், உழவர்களின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வக்பு திருத்த மசோதாவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன.
- வழிபாடு, சொத்துக்கள், சட்டங்களில் யாரும் தலையிடக்கூடாது.
சென்னை:
பிரதமர் மோடி தமிழகம் வருகையை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இந்தியா கூட்டணி கட்சிகள் இதில் பங்கேற்கும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார்.
அதன்படி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே போலீஸ் அனுமதி அளித்து இருந்தது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்க வந்து கொண்டு இருந்ததாகவும், வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-
மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இஸ் லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வரு கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக உடைத்து மாநில அந்தஸ்தை பறித்தது.
பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முயற்சிப்பது என்று இஸ்லாமியர்களுக்கு எதிரான நட வடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இப்போது கொண்டு வரப்பட்டுள்ள வக்பு திருத்த மசோதாவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இது முற்றிலும் அரசியல் சட்டத்துக்கு எதிராக அமைந்து உள்ளது.
உதாரணமாக முன்பு மதரசாக்களுக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்க முடியும். இதை சுப்ரீம் கோர்ட்டும் அங்கீகரித்தது.
ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்த சட்டம் மூலம் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வழங்க முடியும்.
இதே போல வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இந்து கோவில் அறங்காவலர்களாக இஸ்லாமியர்களை நியமிக்க முடியுமா?
ஒரு மதத்தினர் வழிபாடு, சொத்துக்கள், சட்டங்களில் யாரும் தலையிடக்கூடாது. இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு வந்தது போல வருங்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடங்கி விடுவார்கள்.
இந்து ராஷ்டிரம் என்ற தவறான கொள்கையை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் திணிக்க முயற்சிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் வக்பு திருத்த சட்டம் செல்லாது என்று நிச்சயம் அறிவிப்பு வரும்.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

ஆர்ப்பாட்டத்துக்கு முத்தழகன் முன்னிலை வகித்தார். முன்னாள் காங்கி ரஸ் தலைவர் தங்கபாலு, கருணாஸ், பொன்குமார், வன்னியதேவன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அசன் மவுலானா எம்.எல்.ஏ., கோபண்ணா, உ.பலராமன், ரங்கபாஷ்யம், வக்பு வாரிய உறுப்பினர் எஸ்.கே. நவாஸ், தளபதி பாஸ்கர், ஹசினா சையத், பி.வி.தமிழ்ச்செல்வன், அகரம் கோபி, மயிலை தரணி உள்பட பலர் கலந்து கெண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் திறந்து வைத்து ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
- எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து இன்று புறப்பட்டு தமிழ்நாடு வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் திறந்து வைத்து ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், முன்னான் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரிய நிலையில் அனுமதி அளிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரதரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 11 மாவட்டத் தலைவர்கள், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
- திடீர் விருந்து நிகழ்ச்சி கட்சியினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சென்னை:
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை வந்தார். இரவு சென்னையில் தங்கினார்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் விழுப்புரம் கோட்டத்தில் உள்ளடங்கிய கட்சியின் மாவட்ட தலைவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்களுக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டது.
அதில், இன்று காலை 8.30 மணிக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் காலை விருந்து வழங்குவதாகவும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இன்று காலையில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை மாவட்டத் தலைவர்கள் சஞ்சீவி, பாஸ்கர், லதா சண்முகம், குமார், பாலாஜி, கிரி, நாகராஜ் மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ், கபிலன், சாய் சத்யன், கிருஷ்ண குமார், தனசேகர், மனோகர் ஆகியோரும் விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 11 மாவட்டத் தலைவர்கள் மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
இவர்களுடன் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், கோட்ட பொறுப்பாளர்கள் கரு.நாகராஜன், வினோஜ் செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் கட்சியினருடன் அமர்ந்து உணவருந்தி கலந்துரையாடினார்.
இந்த திடீர் விருந்து நிகழ்ச்சி அழைப்பு கட்சியினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, "இன்று கட்சியின் தொடக்க நாள் ஆகும். எனவே அதை யொட்டி விருந்து கொடுப்பதாகவே நினைக்கிறோம்" என்றார்கள்.
கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று கட்சியின் ஸ்தாபன நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கட்சி கொடியேற்றினார். கட்சியின் மூத்த நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
- கூட்டணி இல்லை என கூறி வரும் சீமானை கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ.க. விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வருகிறார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிர்மலா சீதாராமன் - சீமான் சந்திப்பு நடந்துள்ளது. தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
கூட்டணி இல்லை என கூறி வரும் சீமானை கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ.க. விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அடினோ வைரஸ் என்ற வைரஸ் பாதிப்பால் ஏற்படுகிறது.
- தும்மல், இருமல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.
சென்னை:
சென்னையில் மெட்ராஸ் - ஐ கண்நோய் பாதிப்பு வேகமாக பரவுகிறது. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் - ஐ பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கோடை காலம் தொடங்கி இருப்பதால் தற்போது சென்னையில் மெட்ராஸ் - ஐ எனப்படும் கண் தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கண் எரிச்சல், வெளிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் இருந்து நீர் வந்து கொண்டே இருப்பது, இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் ஆகியவை மெட்ராஸ்-ஐ பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், சென்னையில் கண் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் - ஐ பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் யஷ்வந்த் ஆர்.ராஜகோபால் கூறியதாவது:-
மழை மற்றும் வெயில் காலத்தில் காலநிலை மாறும்போது மெட்ராஸ் - ஐ பாதிப்பு பரவுகிறது. அடினோ வைரஸ் என்ற வைரஸ் பாதிப்பால் இது ஏற்படுகிறது. தும்மல், இருமல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.
நோய் பாதிப்பு ஏற்பட்டவரின் கண்களை பார்ப்பதால் இந்த நோய் பரவாது. தொடுதல் மூலமாகவே பரவும். மெட்ராஸ்-ஐ தொண்டை மற்றும் கண் ஆகிய 2 உறுப்புகளையும் பாதிக்கும்.
10 முதல் 14 நாட்களில் இது தானாகவே சரியாகிவிடும். இதை தடுக்க கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிவது, சத்தான உணவுகளை எடுத்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
மெட்ராஸ் - ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. சிலர் கண்களுக்கு தாய்ப்பால் ஊற்றினால் சரியாகிவிடும் என்று நினைத்து அதை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு செய்தால் பாதிப்பு அதிகரித்துவிடும்.
கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லுவதை தவிர்க்க வேண்டும். தற்போது பள்ளி மாணவர்கள் மூலம் அதிகமாக பரவுகிறது. எனவே, மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிப்பது அவசியம். மெட்ராஸ் - ஐ பாதிப்பு அறிகுறி தெரியும் பட்சத்தில் அவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.
- கட்சி தலைமை அனுமதியின்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த மாதம் சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.
அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்டோர் அமித்ஷாவை சந்தித்து சென்ற நிலையில் செங்கோட்டையனும் தனியாக சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார். சென்னை சோழா ஓட்டலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக கூறப்பட்ட சூழலில் சென்னையில் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார். கட்சி தலைமை அனுமதியின்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் மீண்டும் சந்தித்துள்ளது அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
- அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை காணப்படும்.
சென்னை:
வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை காணப்பட்டது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை பகுதியில் 19 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் பகுதியில் தலா 15 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
- சுங்கத்துறை துணை கமிஷனர் அஜய் பிடாரி, உதவி கமிஷனர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை விமானநிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உள்பட உயரதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி சுங்க இலாகா முதன்மை கமிஷனராக பணியாற்றி வந்த ரமாவதி சீனிவாச நாயக், சென்னை வடக்கு சரக்கு மற்றும் சேவை வரித்துறை முதன்மை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று, கூடுதல் துணை கமிஷனர் பெரியண்ணன், சுங்க இலாகா துணை கமிஷனர்கள் சரவணன், பனீந்திர விஷ்சபியாகாதா, அஸ்வத் பாஜி, பாபுகுமார் ஜேக்கப், சுங்கத்துறை துணை கமிஷனர் அஜய் பிடாரி, உதவி கமிஷனர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சென்னை-1 கமிஷனராக பணியாற்றி வந்த தமிழ்வளவன் பதவி உயர்வு செய்யப்பட்டு, சென்னை விமானநிலையத்தின் புதிய சுங்க இலாகா முதன்மை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று டெல்லி, கொல்கத்தா, விஜயவாடா, செகந்திரபாத், வதோதரா. பாட்னா, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வந்த 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வமான உத்தரவை மத்திய அரசின் துணை செயலாளர் ஷீரேஷ் குமார் கவுதம் பிறப்பித்துள்ளார்.






