என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஞானசேகரன் மனு தாக்கல்
- ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
- எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஞானசேகரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்தாண்டு டிச. 25-ந்தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
தொடர் விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் ஏ.மோகன்தாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழ்நாடு போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கோ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ மாற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஞானசேகரன் மனுத்தாக்கல் செய்து இருந்தார். மனுவில், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.
அல்லிகுளம் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக ஞானசேகரன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஞானசேகரன் மனு மீது 7-ந்தேதி அரசு தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.






